— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
பாராளுமன்றத்தில் 12. 11. 2020 அன்று பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச்சட்டமூல விவாதத்தில் உரையாற்றும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம். ஏ. சுமந்திரன் பா.உ. ‘[12. 11. 2020 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சட்டரீதியற்றது’ என்றும், ‘மேல் மாகாணத்தில் உள்ள எவரும் மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முடியாது என்ற உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி (15.11.2020) வரையில் இந்த உத்தரவு அமுலில் இருக்கும்’ என்று இராணுவத்தளபதி பிறப்பித்துள்ள அரசகட்டளைக்குச் சட்ட அங்கீகாரம் உள்ளதா? என்றும், இன்று நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு, சட்டத்துக்கு முரணானது என்றும், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்? அவரால் எவ்வாறு கட்டிடத் திறப்பு விழாவிற்குச் செல்ல முடிந்தது? எந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்த அனுமதிகள் வழங்கப்பட்டன என்றும் கேட்டிருந்தார்.
இந்த விடயங்கள் குறித்த சட்ட வியாக்கியானங்கள் எதற்குள்ளும் இப்பத்தி செல்ல விரும்பவில்லை. இப்பத்தியின் நோக்கமும் அதுவல்ல. ஆனால் இவ் விடயங்களைப் பற்றி பாராளுமன்றத்தில் இவ்வாறு கேள்விகள் எழுப்புவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகளுண்டு என்பதே இப்பத்தி எழுப்பும் கேள்வியாகும்.
அண்மையில், பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20வது அரசியல் சட்டத் திருத்தத்திற்கும் எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது. மட்டுமல்லாமல் பின்னர் இதற்கு ஆதரவாக அரசாங்கத் தரப்பிற்கு வாக்களித்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கண்டனம் தெரிவித்திருந்த சுமந்திரன், இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும்படி அக்கட்சியின் தலைவர்களையும் ஊடகங்கள் வாயிலாகக் கேட்டிருந்தார்.
இப்பத்தி சுட்டிக்காட்ட விரும்புவது என்னவெனில் இக்கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன்தான் இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். மேலும், இந்த விடயம் இக்கட்சிகளின் உள் விவகாரங்கள்; இக்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் சார்ந்த விவகாரங்கள். அக்கட்சிகள் என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கட்சிகளுக்குக் கட்டளையிட என்ன அதிகாரமுண்டு. இக்கட்சிகளின் உள்விவகாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூக்கை நுழைப்பது அரசியல் நாகரீகமுமல்ல. அன்றியும் 20வது அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வாக்களித்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதனைச் சாதித்துள்ளது?
கடந்த ‘நல்லாட்சி’க் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்த போதும் பாராளுமன்றத்தைக் கலைத்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்றம் வரை சென்று ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தையும் பாதுகாத்தது. இந்த விடயத்தில் காட்டிய அதீத அக்கறையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1987 இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களைத் தனித்தனி மாகாண நிர்வாகங்களாகப் பிரிக்க வேண்டுமென்று 2006இல் ஜே.வி.பி. கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தபோது ஏன் காட்டவில்லை?
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாத்ததன் மூலம் தமிழ் மக்கள் அடைந்த நன்மைகளென்ன? இவ்விடயமானது “குழவி அழ அதைத் தவிர்த்து கிழவியைத் தூக்கி மடியில் இருத்தி பாலூட்டித் தாலாட்டிய கதையாக”வல்லவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது.
இவர்களைப் பாதுகாப்பதை விட வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த அதிகாரப் பகிர்வு அலகைப் பாதுகாப்பதுதானே தமிழ் மக்களுக்கு அதி முக்கியமானது.
அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இப்பத்தி விடுக்கும் வினயமான வேண்டுகோள் என்னவெனில் எதிர்காலத்திலாவது தமிழர் தரப்பில் நின்று தீர்மானங்களையெடுக்கும் போது தன்னிச்சையாக எடுக்காமல் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் மக்களிடையே உள்ள தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்ப்பும் ஈடுபாடுமுள்ள துறைசார் நிபுணர்களையும் கலந்தாலோசித்து தீர்மானங்களையெடுங்கள் என்பதே.