காலக்கண்ணாடி 10 (நினைவு கூரும் உரிமை)

காலக்கண்ணாடி 10 (நினைவு கூரும் உரிமை)

 — அழகு குணசீலன் —

எனது  மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்” 

                      – ஒரு மாவீரரின்  தந்தை- 

கார்த்திகை 27.   

பல தசாப்தங்களாக உலகத்தமிழர்களால் அனுட்டிக்கப்படுகின்ற மாவீரர் நினைவு நாள். 

ஒரு நாளில் ஆரம்பிக்கப்பட்டு,  மாவீரர் வாரமாக பரந்தும் விரிந்தும் நிற்கும் ஈழப்போராட்ட வரலாற்றுப்பதிவு. 

ஈழ தேசம் அரசியல் பலம் இழந்து, பாராளுமன்ற அரசியலில் தொங்கிக் கொண்டிருக்கின்ற சமகால  அரசியல் கொரோனாவுடன், தொற்று நோய்க் கொரோனாவும் சேர்ந்து தமிழர் தம் உரிமைக்கு தடைபோடுகின்ற துயரம். 

சட்டத்தின் முன் சகலரும் சமம் என்றும் இன, மத, மொழி வேறுபாடுகள் காட்டப்படமாட்டாது என்றும் கூறுகின்ற வெள்ளைத் தாளில் கறுப்பு மையினால் எழுதப்பட்ட அரசியல் அமைப்பு. 

சட்டரீதியான அடிப்படை மனித உரிமை மறுக்கப்படுகிறது என்று, தாராசின் தட்டுக்களை பக்கம் சரியாது தூக்கி நிற்கின்ற நீதி தேவதையின் நீதிமன்றங்களை நாடினால், வீட்டுக்குள் செய்யத்தான் எங்கள் அதிகாரம், அதற்குமேல் முடியாது என்று கையை விரிக்கும் நிலை. 

மாவீரர் குடும்பங்களினதும் மட்டுமன்றி, உலகம் எங்கும் பரந்து வாழ்கின்ற உலகத் தமிழினத்தின் துயரங்களையும், துன்பங்களையும், கண்ணீரையும் கண்டுகொள்ளாத மனிதத்தை சாகடிக்கும் கற்பிதங்களும், கனவில் கண்டுகொண்ட காரணங்களும். 

இந்த சூழலில் மாவீரர் தந்தையின் அந்த வார்த்தைகள் – இதயத்தை தொடுகின்றன. துயரத்தின் கனதி நெஞ்சை அழுத்துகின்றது . ஈழதேசத்தின் இன்றைய துயரைக்காட்டும் காலத்தின் கண்ணாடி இது. 

இன்றைய பதிவுக்கு இது தான் தலைப்பு என்று என் இதயம் சொன்னது. 

ஒரு மனிதனுக்கு ஒரு மண்ணில் பிறப்பதற்கு இருக்கின்ற உரிமை இறப்பதற்கும் உள்ளது. இந்த பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே அவன் எப்படி வாழ்ந்தான் என்ற வாழ்க்கை வரலாறு வேறுபட்டதாக இருக்கலாம். தாய் நாட்டிற்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதும் வேறுபடலாம். 

ஆனால், வாழ்வின் போது அவர்கள் தங்கள் பிறந்த நாளை தமது விருப்பிற்கேற்ப கொண்டாட முடியும். மரணத்தின்  பின்…..? 

அவர்களின் கடந்த கால சமூக, பொருளாதார, அரசியல் பார்வையையும், அவர்கள்  அடையாளம் கண்டுகொண்ட  அந்த இலக்கை அடைவதற்கு அளித்த பங்களிப்பும், மரணத்தின் பின் சமூகத்தினால் மதிப்பிடப்படுகிறது. அவர்களின் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று இந்த வட்டம் விரிவடைந்திருக்கும். 

ஆக, ஒரு இலட்சியத்திற்காக புறப்பட்டு, அந்த தேசபக்திக்கு தங்கள் இன்னுயிரை ஈய்ந்த அந்த உள்ளங்களை,நெஞ்சில் சுமந்து, அவர்களோடு உள்ளத்தால் உறவாடி வணக்கம் செலுத்துவதற்கு மறுக்கப்படும் உரிமை மானிட நேயத்திற்கு மாறானது. 

இங்கே நான் குறிப்பிட்டுள்ள “மாவீரர் அறிவிழி”யின் தந்தை வேறு யாருமல்ல. 

உலகத் தமிழர்க்கு நன்கு அறிமுகமான “பசீர் காக்கா” என்று ஈழப்போராட்ட வரலாற்றில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக   பல தடங்கள் பதித்தவர். அண்மையில் அவர் மக்களுக்கு விடுத்திருந்த வேண்டுகோளில் உள்ள பக்குவம், சமகால ஜதார்த்தம், காலத்திற்கு இசைந்த அணுகுமுறை, அனுபவம் கற்றுக்கொடுத்த பாடங்கள் என்றும் இல்லாதவாறு என்னைத் தொட்டு அசைத்துவிட்டதன் விளைவே இந்தப் பதிவு.  

சிவகுமாரனும் மற்றைய போராளிகளும்: 

ஈழ விடுதலைப் போராட்டம் வெவ்வேறுபட்ட அரசியல் சூறாவளிகளையும், சுனாமிகளையும், அன்று கண்டது. இன்று அரசியல் கொரோனாக்களையயும் சந்தித்துள்ளது. இவை எல்லாம் போராட்ட வரலாறுகள். எமது போராட்டத்தில் மட்டுமே இவை இடம்பெற்றன என்று சொல்லவும் முடியாது.   

ஈழப்போராட்ட வரலாற்றில்  மாவீரர் சிவகுமாரன் “சயனைட்” உண்ட முதல் மாவீரர். இருந்தும் அவர் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்ட வகையில் நினைவுகூரப்படவோ, மாவீரராக இணைத்துக் கொள்ளப்படவோ இல்லை. ஆனால் இன்றைய அங்கிகாரம் காலம் கடந்த ஒன்றாக இருப்பினும் முன்மாதிரியானது. மாவீரர்நாள் என்பது விடுதலைப்புலிகளின் மாவீரர்களை நினைவு கொள்ளும் வகையில் உருவாக்கம் பெற்றது என்பதில் கருத்து வேறுபாடில்லை. 

ஆனால், சகல போராட்ட அமைப்புக்களும் ஈழம் என்ற இலக்கைத்தான் அடிப்படையில் கொண்டிருந்தன. காலப்போக்கில் ஏற்பட்ட மேலேகுறிப்பிட்ட சூறாவளிகள், சுனாமிகள், கொரோனாக்களால் சில தலைமைகள் தவறிழைத்து விட்டதன் விளைவால் போராட்டம்  திசைமாறியது என்பதையும் மறுப்பதற்கல்ல. 

இந்த தலைமைத்துவங்களை நம்பி போராட்டத்தில் இணைந்த போராளிகள் ஈழ வேட்கையால் இணைந்தவர்களே அன்றி இயக்கங்களை, அவற்றின் கொள்கைகளை, தலைமைகளின் குணாம்சங்களை, சரியாக அறிந்து, புரிந்து இணைந்தவர்கள் அல்ல. அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கவில்லை. தலைமைகளின் தவறுகளுக்காக பலிக்கடாவாக்கப்பட்டவர்களாக இன்றைய சமூகத்தின் ஒரு அங்கமாக அவர்கள். 

உதாரணமாக ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில் வீரச்சாவடைந்த சோபா. இவர் தன் இன்னுயிரை ஈழ விடுதலைக்காக இடவில்லை என்று யாரும் வாதிட முடியுமா…..? 

பாராளுமன்ற கதிரைகளுக்காக எதிர்-எதிராக ஆயுதம் ஏந்தி சகோதர இயக்கப் போராளிகளை சுட்டுக் கொன்றவர்கள் இன்று அந்த கூட்டமைப்பு, இந்தக் கூட்டமைப்பு என்று அங்கிகரிக்கப்பட்ட அரசியலில் ஒன்றாக ஈடுபடலாம் என்றால், இந்த தரகு முதலாளிகளால் ஏமாற்றப்பட்ட ஆயிரமாயிரம் போராளிகளை மாவீரர்களாக அறிவித்து ஈழதேசத்திற்கான ஒரு பொது மாவீரர் நாளாக  இதனைப் பிரகடனம் செய்தால் என்ன?  

ஈழத்தமிழர்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு எட்டப்பன், துரோகி, ஒட்டுக்குழு, காட்டிக் கொடுத்தவன் என்ற வார்த்தையாடல்களை தாங்கிக் கொள்ளப்போகிறார்கள்? இங்கு ஈரோஸ் போராளிகள் மாவீர்களாக அங்கிகரிக்கப்பட்ட முன்மாதிரியை கடைப்பிடிக்க முடியும் அல்லவா? 

கருணாவின் பிரிவின் பின்னரான வாகரை சமரில் மாண்ட போராளிகள், கொழும்பில் நஞ்சூட்டப்பட்டு சாகடிக்கப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் கந்தன் கருணைக் கொலைகள், சுழிபுரம் கொலைகள், சந்ததியார், சுந்தரம், வாசுதேவா இவர்கள் அனைவரும் ஈழத்திற்குத்தானே போராடினார்கள். ஆகக்குறைந்தது தலைவர்கள் தவறு விடும் நாள் வரையாவது போராடினார்கள் என்று கொள்வோமா? 

தலைமையின் தவறுகளுக்கு இவர்களை தண்டிப்பது நியாயமா? 

விடுதலைப்புலி போராளிகளும் மற்றைய அமைப்புக்களால் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் நிறையவே உண்டு.  வெலிக்கந்தை தாக்குதல்கள் உள்ளிட்ட பலவற்றை பட்டியல் படுத்த முடியும். 

ஜே.வி.பி. ஈழப்போராட்டத்தை ஒரு போதும் அங்கிகரித்ததில்லை. ஆனால் அந்தப் போராளிகளின் உயிர் இழப்புக்களையும்,  சிங்கள தாய்மாரின் கண்ணீரையும் எம்மால் உணர்வுபூர்வமாக அங்கிகரிக்க முடிகிறது. ஜே.வி.பி.யும் பாராளுமன்ற அரசியலில் நுழைந்து, அதிகாரவர்க்கத்தின் பங்குதாரராகி இனவாதத்தைக் கக்கியது என்பதுதானே உண்மை. 

ஆக, ஒரே இலட்சியத்திற்கான, இணைந்த விடுதலைப் பயணத்தில் அருகருகே பயணித்த மாற்று இயக்கப் போராளிகளின் இழப்பையும், அவர்களின் தாய்மாரின் கண்ணீரையும் அங்கிகரிப்பதில் உள்ள அரசியல் மனிதாபிமான பிரச்சினை என்ன? 

மற்றவர்களிடம் இருந்து மனிதத்தை எதிர்பார்க்கின்ற நாம். மனிதம் இன்னும் மரணித்து விடவில்லை என்று மரணத்துள் வாழ்விலும் வழிகாட்ட முடியாதா…? 

ஜே.வி.பி. தாய்மார்களுக்கான அழைப்பு: 

1971 சேகுவேரா கிளர்ச்சி என்ற பெயரில் அழைக்கப்பட்ட அந்த புரட்சியில், பத்தாயிரத்திற்கும் அதிகமான சிங்கள இளைஞர்கள் மரணத்தைத் தழுவினர். 

இந்த அழைப்பு, ஒரு முக்கியமான அரசியல் சிந்தனை மாற்றமும், அணுகுமுறையுமாகும். இந்த அரசியல் புரிந்துணர்வு தமிழர் தரப்பிற்கு ஆரம்பத்தில் இருந்திருக்குமாயின் தென்னிலங்கை இடதுசாரி போராட்டச் சக்திகளின் ஆதரவை  எமது போராட்டத்திற்கு பெற்றிருக்க முடியும். 

“தமக்குள்ள உரிமை எமக்கும் உள்ளது என்பதை இரு புரட்சிகளின் போதும் உயிர்நீத்த ஜே.வி.பி. உறுப்பினர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.” 

“கண்ணீரில் வேறுபாடு காட்டச் சொல்லும் சட்டங்கள் பொருத்தப்பாடானவை அல்ல”.  

இந்த வார்த்தைகள்  மனிதநேயத்தின் வெளிப்பாடாகின்றது. எங்கள் இழப்புக்கும், உங்கள் இழப்புக்கும், தமிழ்த்தாயின் கண்ணீருக்கும்,சிங்களத்தாயின் கண்ணீருக்கும் ஒரே நிறம்தான் என்று இந்தச் செய்தி தெரிவிக்கின்றது. 

கதிர்காமத்தில் வன்புணர்வுக்கு உட்படுத்தி சிறிலங்கா இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட மனம்பெரிக்கும், அதே இராணுவத்தால் வெல்லாவெளி – பாலையடிவட்டையில் அதேபாணியில் கொலை செய்யப்பட்ட கோணேஸ்வரிக்கும் எங்களால் என்ன வித்தியாசத்தைக் காணமுடியும்?.. 

ஒரு விடயம் இங்கு தெளிவாகி இருக்கிறது. சிங்கள அதிகாரபீடத்தைக் காப்பாற்றும் கூலிப்படைக்கு சிங்களவர் தமிழர் என்ற வேறுபாடில்லை. இதை எம்மவர் பலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. 

சிங்கள இளைஞர்கள் தெருத்தெருவாக நாயிலும் கேவலமாக சிங்களப் படைகளால் சுட்டுத்தள்ளப்பட்போது தமிழர் அரசியல் கைகட்டி, வாய்பொத்தி, அதிகாரவர்க்கத்திற்கு சேவகம் செய்தது. ஆனால் அவர்கள் தங்கள் கதவுகளும் விரைவில் தட்டப்படும் என்று நினைக்கவில்லை. 

ஜே.வி.பி.யை அடக்க இந்திராகாந்தி சிறிமாவுக்கு கைகொடுத்தார். 

நாங்கள் முரண்பட்டபோது ராஜீவ் ஜே.ஆர்.க்கு கைகொடுத்தார். 

ஆதிக்க ஆளும் வர்க்கம் தங்கள் ஆதிக்க அதிகாரத்தை தக்க வைக்க வர்க்கம் வர்க்கத்தோடு சேரும்/ சேர்ந்தது. 

மே 18 . 

இந்த நாள் தமிழர் போராட்ட வரலாற்றிற்கு மட்டும் உரித்தானதாக இல்லை. 

சர்வதேசத்தை புரட்சியால் மாற்ற புறப்பட்ட அந்த புரட்சியாளனின் தாய் மரணித்த நாள். 

ஆஸ்த்துமா நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அந்த வீரனுக்கு முதன்முதலாக பெரும் மூச்சு இழுப்பு ஏற்பட்டநாள். 

கியூபாவில் இருந்து பொலிவியாவுக்கு புரட்சிக்காக வந்த சேகுவேரா குறியீட்டு CODE மொழியில் இறுதியாக பிடல்கஸ்ரோவுக்கு எழுதிய கடிதமும் மே 18 ஆம் திகதி இடப்பட்டது. 

“நாங்கள் நான்கு போராளிகளை இழந்து தவிக்கிறோம். பெஞ்சமின், கார்லோஸ் இருவரும் பொலிவியர்கள். ஆற்றைக் குறுக்கறுக்கும்போது வெள்ளத்தில் மூழ்கிவிட்டார்கள்.  

பீலிக்ஸ் J.S.G, மற்றும் ரொலாண்டோ S.L., இருவரும் எதிரியுடனான மோதலில் வீரச்சாவு.”  இது மணிலாவுக்கான நீண்ட அந்த கடிதத்தின் ஒரு துளி. 

கியூபா தலைநகர் கவானா. சே தனது இரகசிய மொழியில் மணிலா என்றுதான் குறிப்பிடுவார். 

முள்ளி வாய்காலுக்கும் மே 18.! 

“உடலம் நீளப்பாட்டில் தலை சற்று சரிந்திருக்க கிடத்தப்பட்டிருந்து. 

நீலக்கண்கள் முன்னுக்குத் தள்ளியபடி முற்றிலும் திறந்திருந்தன. 

உதடுகள் சற்று திறந்திருந்தமை ஒரு புன்முறுவலை நினைவூட்டியது. 

நீண்ட சுருள் முடி தோள்பட்டையில் படர்ந்திருந்தது. ஒருவகையில் பார்க்க அந்த மாவீரன் ஒரு இந்திய குரு – துறவி போல் இருந்தான்.” 

“உடலின் மேல் பாகத்தில் ஆடைகள் இல்லை. மெல்லிய தவிட்டு நிற மேனியில் துப்பாக்கி ரவைகள். துழைத்த இரு துவாரங்கள் தெரிந்தன. 

கீழ் உடம்பில் இரத்தமும் அழுக்கும் நிறைந்த  ஒலிவ் பச்சை நிற கிழிந்த நீளக்காற்சட்டை. ஒரு கால் முழங்கால் வரையும் நிர்வாணமாக இருந்தது. 

மற்றக்கால் இயந்திரத்துப்பாக்கியால் சிதைக்கப்பட்டிருக்கவேண்டும். பாதங்கள் எதையும் அணிந்திருக்கவில்லை ஆனால் பார்க்க சுத்தமாக இருந்தன”… 

இந்தக் காட்சி விவரணம் சர்வதேசப் புரட்சியாளன் சேகுவேராவுக்கு மட்டுமல்ல, சண்டையில் வீரச்சாவைத் தழுவிய பெரும்பாலான விடுதலைப்போராளிகளுக்கும் பொருத்திப் போகும்.. 

யாருக்காக இந்த மரணத்தை தேடிக்கொண்ட, யாரை நாங்கள் நினைவுகூருகின்றோம் என்பதற்கு இது ஒரு கண்ணாடி. 

ஈழப்போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு, தாயகத்தின் விடுதலைக்காக இன்னுயிரைக் கொடையாக வழங்கிய சகல  போராளிகளுக்கும், சகல அமைப்புக்கள் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால், இந்த யுத்தம் பலி கொண்ட அனைத்து மக்களுக்கும், 

வீரவணக்கம்.