இலங்கையின் புதிய அரசியலமைப்பு அ முதல் ஔ வரை ( பாகம் 2)

இலங்கையின் புதிய அரசியலமைப்பு அ முதல் ஔ வரை ( பாகம் 2)

— மல்லியப்புசந்தி திலகர் —

உருவாக்கப்படப்போவது சட்டரீதியான அரசியல் அமைப்பா அரசியல் ரீதியான அரசியல் அமைப்பா?

முதலாம் பாகத்தில் முன்வைக்கப்பட்ட கேள்வியைப் போலவே  இரண்டாம் பாகத்தில் இப்படியான ஒரு கேள்வியை  முன்வைத்து எனது விவாதத்தை முன்னகர்த்த முனைகிறேன். அது  என்ன சட்டரீதியான அரசியல் அமைப்பும்  அரசியல் ரீதியான அரசியல் அமைப்பும் எனும் கேள்வி? 

இலங்கையில் இப்போது அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைபொது மக்களிடமும் பொது அமைப்புகளிடமும் கோரி இருக்கும் நிறுவனம் எது? நீதி அமைச்சு. இதன் மூலம் வெளிப்படும் கருத்து என்ன? இது சட்ட உருவாக்கவேலை  என்பதாக புரிந்து கொள்ளலாம்.  

ஆனால், சட்டத்தை உருவாக்கும் வேலை பாராளுமன்றத்தின் பணியல்லவா? அதனால்தானே ‘சட்டவாக்க சபை’  என்கிறோம்.  

அந்தச் சட்டவாக்க சபையை அரசியலமைப்புப் பேரவையாகவும்  இயங்கச் செய்து அதன் ஊடாக அரசியலமைப்பை  உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன ஆனது? என்ற வினாவை எழுப்பாமல் இந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளை யாரும் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.  

2016 -2019 காலத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை  உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியில் மூன்று அறிக்கைகள் அரசியலமைப்பு பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளன.  அவையாவன, 

  1. மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை – சட்டத்தரணி  லால் விஜேநாயக்க தலைமையில் இதற்கென ஒரு  நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் மாவட்டம் தோறும் சென்று மக்கள்கருத்துக்களைக் கேட்டு  ஆய்வுக்குட்படுத்தி சமர்ப்பித்த அறிக்கை 
  2. அரசியலமைப்பு பேரவையின் உபகுழுக்களின் அறிக்கை – இந்த அறிக்கையின்படி ஆறு (6) உபகுழுக்களின் இறுதி  அறிக்கை அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. 1. அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு அறிக்கை  2. நீதித்துறை தொடர்பான உபகுழு அறிக்கை 3. நிதிதொடர்பான உபகுழு அறிக்கை 4. சட்டம், ஒழுங்கு தொடர்பான உபகுழு  அறிக்கை 5. பொதுச்சேவைமறசீரீக்கம் தொடர்பான உபகுழு  அறிக்கை 6. மத்திய – சுற்றயல் உறவுகள்  தொடர்பான உபகுழு  அறிக்கை
  3. வழிப்படுத்தல் குழுவின் அறிக்கை.  

    இந்த மூன்று அறிக்கைகளையும் தயார் செய்வதற்கு கணிசமான காலம் எடுத்தது. அந்த அறிக்கைள் அனைத்தும், இப்போது கோரப்பட்டுள்ள கோரிக்கை விளம்பரத்தின் அத்தனை விடயங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியே உள்ளன. உதாரணமாக, 

    அ. அரசின் தன்மை – வழிப்படுத்தல் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கம் பெற்றது ஆ. அடிப்படை உரிமைகள்,  ஏ. அதிகாரத்தைப் பன்முகப்படுத்துதல் / அதிகார பரவலாக்கம்/  அதிகார பகிர்வு, ஐ.நீதித்துறை, ஒ. பகிரங்க நிதி- போன்ற விடயங்கள் உபகுழுவில் ஆராயப்பட்டுள்ளன. 

    இங்கு, அரசின் தன்மை எனும் ‘அ’ விடயத்தை எடுத்துக்  கொள்வோம், இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டு தமது  ஆலோசனைகளை சமர்ப்பிக்கும் பலர், பல அமைப்புகள் இருக்கலாம். ஆனால் அந்த முன்மொழிவுக்கு என்ன நடக்கும்? என்பதற்கான விடை இப்போதே நமக்குத் தெரியும். எனவே இங்கே, இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் என்றோ அல்லது இலங்கை ஒரு  பௌத்த நாடு என்றோ முன்மொழிவு செய்வோர் அடையும் திருப்தியும், மதச்சார்பற்ற நாடு என முன்மொழிவு செய்வோரின்  திருப்தியும் அடிப்படையில் வேறுபாடு ஏற்படும் போது அரசியலமைப்பு தொடர்பான தப்பபிப்ராயங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. 

    உண்மையில் 1972 ஆம் ஆண்டுதான், அதாவது 48 ஆண்டுகளுக்கு முன்புதான் இலங்கையின் அரசியல் அமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற பதம் கொண்டுவரப்பட்டது  என்று புரிந்து கொள்வதற்கு கூட சிலர் தயாராக இல்லை. இலங்கை பாரம்பரியமாகவே ஒரு பௌத்தநாடு எனும்  புரிதல் 1972 ஆண்டுக்குப் பின்னர் இன்றுவரையான நிகழ்வுகள் உருவாக்கியுள்ளன.   

    1972 ஆம் ஆண்டுவரை நடைமுறையில் இருந்த சோல்பெரி  அரசியலமைப்பில் நாம் காலனித்துவ நாட்டிற்கு அடிமையானவர்கள் போல உள்ளோம். நாம் அப்படியல்ல.  சுதந்திரம் பெற்ற, இலங்கைக் குடியரசு என்பதை வலியுறுத்த கொண்டு வந்த பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற  நிலைப்பாடு, இலங்கையில் உள்ள ஏனைய இந்து, இஸ்லாமிய, கிறித்தவம் உள்ளிட்ட ஏனைய மதங்களை விட  பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும் எனும் அர்த்தப்படுத்தலுக்குள் வந்துவிட்டது. எனவே, குறைந்த பட்சம் இலங்கை மதச்சார்பற்ற  நாடு என்பதை ஏற்றுக் கொண்டு அரசியல் அமைப்பில்  சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, இலங்கையில்  அனைத்துமதங்களுக்கும் சம உரிமை உண்டு என்றுதானும்  கொண்டுவர முடியுமா? என்றால், முடியாது என்றே  பதில் கூறவேண்டி உள்ளது.  

    இதேபோல ஒற்றை ஆட்சியா? சமஷ்டியா ? என்ற  வரையறைகளைச் செய்து கொள்வதில் எல்லாம் முடிந்த முடிவுகள் இலங்கையில் தயாராகவே இருக்கின்றன. கடந்த  நல்லாட்சி அரசாங்க காலத்தில் தயாரிப்பில் இருந்த அரசியலமைப்பில் வழிப்படுத்தல் குழுவில்  பரிந்துரைக்கப்பட்ட ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்லாடல் மூலம் எழுந்த சர்ச்சை நாம் அறிந்ததே. ‘ஒருமித்த நாடு’ என்பது ஒற்றை ஆட்சிக்கு உரிய அதே  
    பண்புகளை அப்படியே கொண்டிருந்த போதும், ‘ஒருமித்த நாடு’ என்பதற்கு சமஷ்டி என்பதான அர்த்தம் பரவலாக எதிர்த்தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்டது.  

    ஒருவகையில் இலங்கையில் இப்போது இருப்பது முழுமையான  ஒற்றையாட்சி முறைமை இல்லை என வாதிடவாய்ப்பு  உண்டு. மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்கள் இல்லை  என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு பார்த்தால் இலங்கையில் ஒன்பது மாகாண அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. (இப்போது சபைகள் இல்லாத போதும்  ஆளுநரும் அதிகாரிகளும் கொண்ட நிர்வாகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது). இந்த நிலைமையை உணர்ந்ததால்தான் ஆரம்பத்திலேயே மாகாண ‘சபை’ (Council) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில்  உள்ளூராட்சி அரசாங்கங்கள் (தமிழில் மன்றங்கள் என சொல்லிக்கொண்டாலும் ) (Local Government) என ஆங்கிலத்தில் சொல்லப்படுவது உண்டு.  

    ஆனால் மாகாண அரசாங்கங்கங்கள் (Provincial Government) என சொல்லப்படுவது இல்லை. இருந்தபோதும்  அரசாங்கத்தின் தன்மைகளை (அதிகாரம்குறைந்த) அவை கொண்டு  இயங்குகின்றன. (மாகாண அமைச்சு, திணைக்களங்கள், அதிகார சபைகள் இயங்குகின்றன). 

    அத்தகைய மாகாண சபைகளின் நிதி அதிகாரங்களை மத்திய  அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளதால் மாகாண சபை (அரசாங்கங்கள்) சில எல்லைகளுக்கு அப்பால் இயங்க முடியாது உள்ளது. காணி, பொலீஸ் அதிகாரங்கள் வேண்டும் என பேசப்படும் அளவுக்கு மாகாண சபைகளுக்கான நிதி அதிகாரம் குறித்து அழுத்தமாக பேசப்படுவது இல்லை. அத்தகைய நிதி அதிகாரங்கள் (வரி திரட்டும் அதிகாரம்) பெருமளவில் இல்லாததால் மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்தின் பிடியை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.  

    எனவே இலங்கையில் முழுமையான ஒற்றையாட்சி ஒன்று  இல்லை என வாதிட்டு ஒற்றையாட்சிக்கும் சமஷ்டிக்கும் இடையிலான அரசாட்சி முறை ஒன்றைக் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. ஆனால், தனிநாட்டு கோரிக்கையுடன் ஒரு போராட்டம் நடந்து முடிந்த நிலையில் தாங்கள் ஒற்றையாட்சியை நிறுவி விட்டதாக (யுத்ததின் மூலமாகவும்  வடகிழக்கு மாகாண சபையை வடக்கு , கிழக்கு மாகாண சபைகளாக இரண்டாக பிரித்துவிட்டதனாலும்) எண்ணிக்கொள்ளும் மனநிலை, ஒற்றையாட்சி என்ற சொல்லையும் அந்த  முறையையும் தக்கவைப்பதில் உறுதியாக உள்ளது. 

    இந்த இரண்டாம் பாகத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்களில்  இருந்து பொது மக்களிடம் / அமைப்புகளிடம்ஆலோசனைக்  கோரப்பட்டாலும் சில ‘முடிந்த முடிபுகள்’ எடுக்கப்பட்ட  நிலையிலேயே இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்க முனைப்புகள் காட்டப்படுவது தெளிவு. அதுவும் கடந்த அரசாங்கத்தில் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் பாரிய  மாற்றங்களைக் காணாத இன்னுமொரு அரசியலமைப்பு ஒன்று உருவாக்க கணிசமான தூரத்தைக் கடந்தும் அதனை  நிறுத்தி புதிய அரசாங்கம் வந்துவுடன் நடைமுறையில் பேணப்பட்டு வந்த அதிகார பரவலாக்க நடைமுறைகளை (19 வதுதிருத்தம்) சவாலுக்கு உட்படுத்தி மீண்டும் அதிகார  குவிப்புக்கான திருத்தத்தை (20 வது திருத்தம்)  நிறைவேற்றிக்கொண்டு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புதிதாக ஆரம்பிப்பது என்பது  அரசியல் ரீதியானஅரசியலமைப்பு அதுவும் கட்சி  அரசியல்மயப்பட்ட (Politicized) அரசியலமைப்பை உருவாக்குவதற்கே  என்பது தெளிவாகிறது. அதற்கு உதாரணமாகவே முதலாம் பாகத்தில் அரசியலமைப்பு சபை யின் பெயர் தொடர்பிலான திருத்தம் ஆட்சி மாறும்போது மாற்றம் பெறுவது அழுத்தமாக  சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது, Constitution Council ஆகவும் Parliamentary Council ஆகவும் ஆட்சி மாற்றங்களின் போது கடந்த இருபது ஆண்டுகளில் நான்கு முறை மாற்றப்பட்டுள்ளது. இதனை விரிவாகப் புரிந்து கொள்ள முதலாம்பாகத்தை மீளவும் வாசித்துக்கொள்ளலாம். 

    இனி தேர்தல் முறைமை மாற்றமே அரசியல் அமைப்பு  உருவாக்கம் எனும் பெயரில் இடம்பெறும். அதனை  அடுத்தபாகத்தில் விவாதிக்கலாம். 

    (தொடரும்)