இலங்கையின் புதிய அரசியலமைப்பு – நாம் செய்ய வேண்டியவை!

இலங்கையின் புதிய அரசியலமைப்பு – நாம் செய்ய வேண்டியவை!

  — எம் . பௌசர் —

இலங்கையின்  இன்றைய  அரசியலதிகாரம், ஒரு குறிப்பிட்ட  குடும்பத்தின் ஏகபோக அதிகாரத்தின்கீழும் ஏதோச்சதிகாரமிக்க இனவாத, இராணுவ அதிகாரத்தின் பிடியிலும்  வந்துவிட்டது. பாராளுமன்ற குறை  ஜனநாயகமானது, நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் மேலும் சீரழிந்து  அதன் பலத்தையும், அதன் அடிப்படை விழுமியங்களையும்  இழந்து  நிற்கிறது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20வது  திருத்தத்தின்  மூலம் இந்த நிலை மேலும் வலுப்பெற்றாலும்,   இலங்கையின் இன்றைய ஆளும் குழுமம், தமது ஏதோச்சதிகாரத்தினை மேலும் உத்தரவாதப்படுத்தி முன் செல்வதை நோக்காகக் கொண்டு, புதிய  அரசியலமைப்பு ஒன்றினை அவசர அவசரமாக கொண்டு வர தீவிரமாகசெயலில் இறங்கிவிட்டது. 

ஏன் இன்றைய நிலையில் இந்த புதிய அரசியலமைப்பு  உருவாக்கப்படல் வேண்டும் என்கிற கேள்விக்கான  பதிலில்,  ஆபத்துக்குள்ளாகி உள்ள இலங்கையின் இறைமையைக்  காப்பதற்கும், எதிரிகளிடமிருந்து  மக்களை பாதுகாப்பதற்காகவும் இலங்கையின் அரசுத் தலைவருக்கு  அதி கூடிய அதிகாரங்களை  வழங்குவதும் இன்றியமையாதது  என்று சொல்லப்படுகிறது. அதற்காகவே இந்த புதிய அரசியலமைப்பினை கொண்டுவந்து நாட்டை காக்கப் போகிறோம்  என்கிறார்கள். 

புதிய அரசியலைப்பினை உருவாக்கி,நிறைவேற்று அதிகாரமிக்க  ஜனாதிபதிக்கு  மேலும் மட்டற்ற  அதிகாரங்களைக் கொடுத்து, சர்வதேச ரீதியாகவும், பிராந்திய  ரீதியாகவும், உள்ளூரிலும் எந்த எதிரிகளிடமிருந்து இலங்கையை  காக்க போகிறார்கள் எனப் பார்த்தால், அவர்கள் கபடத்தனமாக முன் நிறுத்திகின்ற எதிரிகள் யார் என்பது மிகத் தெளிவாக  உணரக்கூடியதே!. 

சர்வதேச ரீதியாகவும், பிராந்திய  ரீதியாகவும் பார்த்தால், அமெரிக்கா,  சீனா, இந்தியா என்பவையே இன்று  இலங்கைக்குள் தமது நலனை உறுதிப்படுத்த மேலும் மேலும்  வியூகங்களையும் திட்டங்களையும் வகுத்து செயற்பட்டு வருகின்றன. இது இலங்கை மக்களின்  சுயாதீனமான இருப்புக்கும்,  இலங்கையின் எதிர்காலத்திற்கும்  பாதகமான தன்மையை  கொண்டிருக்கிறது என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.  

ஆனால் இன்றைய இலங்கையின்  ஆளும் குழுமம், தனது  வெளிவிவகாரக் கொள்கைகளில்  இந்த சர்வதேச, பிராந்திய  ஆதிக்கத்தினை ஒரு எதிர்  நிலையான விடயமாக கொள்ளாமல்,  இந்த சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டும்,  இலங்கையின் வளங்களை நாளுக்கு நாள்  இவர்களிடம் தாரை  வார்த்துக்கொண்டும் , இவர்களது பொருளாதார உதவிகள்,  கடன்களில் தங்கி இருந்து  கொண்டுமே தமது அதிகாரத்தினை  பாதுகாத்து ஆட்சி செய்து  வருகின்றனர். ஆகவே இந்த ஆளும்   குழுமத்தின் வெளி நாட்டுக்கொள்கை அணுகுமுறையின் அடியாகப் பார்த்தால், இந்த இலங்கையின்  ஆளும் குழுமம், இந்த சர்வதேச, பிராந்திய ஆதிக்க சக்திகளை எதிரிகளாக முன் நிறுத்த  தயாரில்லை அல்லது அதற்கான வலு நிலை இல்லை என்று சொல்லலாம். ஆகவே, இலங்கையின் இறைமைக்கு எதிராக இவர்கள்  சுட்டும் எதிரிகள் என்போர் இலங்கைக்குள்தான்  உள்ளார்கள்.  

யார் இவர்கள்? 

* இலங்கை மக்களின் அடிப்படை  உரிமைகளை வலியுறுத்தும்   அனைத்து இனங்களையும் சார்ந்த  ஜனநாயக சக்திகள்,  அமைப்புகள்.  

* இலங்கையின் பல்லினத்  தன்மையை வலியுறுத்துபவர்கள்.  அதனை காக்க வேண்டுமெனக்  கோருவோர். 

* பவுத்த மேலாதிக்கத்தினையும்,  சிங்கள இனவாதத்தினையும்  எதிர்ப்போர். 

* குடும்ப ஆதிக்கத்தினையும்,  இராணுவ மேலாதிக்கத்திற்கும்  தடையாக இருப்போர். 

* தமிழ் முஸ்லிம், மலையக மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்  கோருவோர் . 

*  நீண்டகாலமாக ஒடுக்கப்படும்  தமிழ், முஸ்லிம், மலையக மக்கள்.  

* தமது அடிப்படை உரிமைகளைக்  காக்க அணிதிரளும் சிங்கள மக்கள்.  

ஆகியோரைத்தான் இலங்கையின்  இறைமைக்கு எதிரான பிரிவினராக இவர்கள் அடையாளப் படுத்துகின்றனர். இவர்களிடமிருந்து இலங்கையைப் பாதுகாக்க, ஒரு  அரசனைப் போன்ற அதிகாரமிக்க  நவீன துட்டகைமுனுவை  உருவாக்குவதே இந்த புதிய அரசியல் அமைப்பின் அடிப்படையாகும்.

”இந்த அரசியலமைப்பின் வழியான  சர்வாதிகார, எதோச்சதிகார  அதிகாரக் குவிப்பு” நிகழ்ந்தால்  இலங்கையின் ஜனநாயக  அடிக்கட்டுமானம் மோசமாக  நசுக்கப்படப் போவதுடன்,  ஒடுக்கப்படும் மக்கள் மீதான  ஒடுக்குமுறைகள்  மேலும்  வலுப்பெறும். இன்னொரு வகையில் சொன்னால் இந்த அரசியலமைப்பு  அதிகாரத்தின் வழியாக  இலங்கையின் ஒடுக்கப்படும் தமிழ் முஸ்லிம், மலையக மக்கள் மிக  மோசமாக ஒடுக்கப்படவும், நசுக்கப்படவும் போகிறார்கள். 

இந்த புதிய அரசியலமைப்பின்   அடிப்படைகளாக எவை  இருக்கப் போகின்றன? 

  • 1956இன் பண்டாரநாயக்காவின்  சிங்கள இனவாத, தேசியவாத  அடிக்கட்டுமானம். 
  • 1978 ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின்  நிறைவேற்று அதிகாரமிக்க  அரசியல் அமைப்பு 

     
  • அதன் 18வது, 20வது அரசியலமைப்புத் திருத்தங்கள்.. 

     
  • கோதாவின் மிக வெளிப்படையான தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மீதான வெறுப்பும், இராணுவவாத அணுகுமுறையும்…. 

இதனை தடுப்பதற்கும், இந்த  ஆபத்துக்களையிட்டு மக்களை  அரசியல் மயப்படுத்துவதும், இந்த ஜனநாயக விரோத,  அழித்தொழிப்பிற்கு எதிரான  குரல்களாக முன் செல்வதும்  முற்போக்கு ஜனநாயக  சக்திகளினதும், ஒடுக்கப்படும்   சிங்கள,  தமிழ், முஸ்லிம், மலையக மக்களினதும் கடமை எனக்  கருதிகிறோம். அதன்  அடிப்படையில்தான் நாம் சில சிறிய பணிகளை செய்து வருகின்றோம்.  

எமது பணிகள் எவை? 

எமது கவனக்குவிப்பும் இலக்கும்  இலங்கையின் சிவில் சமூகங்களை அடிப்படையாகக் கொண்டது.  உள்ளூரிலும்,  வெளிநாடுகளிலும் வாழும் மக்களை இலக்காகக்  கொண்டது.  இந்த விடயத்தில்  அனைத்து மக்களினதும்,  இனங்களினதும்  கோரிக்கைகளை திரட்டுவதும், அதனை மக்கள்  மயப்படுத்துவதும் ,இந்த  நிலைமைக்கு எதிராக செயற்பட்டு,  குரல்தரும் அமைப்புகள்,  சிவில் சமூக சக்திகளுடன் கூட்டிணைந்து முன் செல்வதுமே எமது அரசியல் நம்பிக்கையாகும். இதன் அடிப்படையில்தான் கடந்த இரண்டு வாரங்களாக  இந்தப்பணியில் நாம் முழுமூச்சுடன் செயற்பட்டு  வருகிறோம். 

  •  தமிழ், முஸ்லிம், மலையக  மக்களின் சிவில் சமூகப்  பிரதிநிதிகள் மற்றும்  அமைப்புகளுடன்  உரையாடல்களை தொடர்ச்சியாக நடாத்தி கோரிக்கைகளைத்  திரட்டி ஒரு முன்வைப்பு  ஆவணமாக்கி வருகிறோம். 
  • சிங்கள சிவில் சமூகப்  பிரதிநிதிகள், அமைப்புகளுடன்  பேசி வருகிறோம். நாங்கள்  இதுவரை தயாரித்துள்ள  ஆவணப்பிரதிகளை  அவர்களுடனும், அவர்களது  ஆவணங்களை எம்முடனும்  பரஸ்பரம்  பகிர்ந்து  செம்மையாக்கம்  செய்து வருகிறோம். 

     எமது முன்வைப்பு ஆவணத்தின் தன்மையும்,  அதனை என்ன  செய்யவும் போகிறோம்? 

    எம்மால் தயார்படுத்தப்படும் இந்த ஆவணமானது, ஒரு இனத்தினதோ, ஒரு பிராந்தியத்தினதோ  கோரிக்கைகளை  மட்டும் உள்ளடக்கி இருக்காது என்பது  இந்த ஆவணத்தின் மிகச்  சிறப்பான பண்பாக இருக்கும்.   நாங்கள் அனைத்து  மக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும்,  குறிப்பாக இலங்கையின் இனவாத அரசியலால் நீண்ட காலமாக  ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லிம்,  மலையக தேசிய இனங்களின்  கோரிக்கைகளையும்   நிலைப்பாடுகளையும்,  இலங்கையின் அடிப்படை  ஜனநாயக உரிமைகளுக்கான,  அனைத்து மக்களின்  காப்பீடுகளையும், ஒட்டு மொத்த  இலங்கையின் நலன்களையும்  முன் நிலைப்படுத்தியுமே, எமது  இந்த ஆவணம் அமைய வேண்டும் என்பதில் தெளிவாகவும் அரசியல் உறுதியாகவும்  இருக்கிறோம்.  

    நாங்கள் ஒரு குறிக்கப்பட்ட  இனத்தினை, சமூகத்தினை மட்டும்பிரதிநிதித்துவப் படுத்துபவர்களல்ல. தமிழர்,  முஸ்லிம், மலையக மக்கள் விசேடமாக கோர வேண்டிய  தமக்குரிய சில விடயங்கள்  உள்ளன  இவற்றை பகுதி  பகுதியாகவும், இம்மக்களிடையே பொதுவாக கூட்டாக முன்  வைக்கக் கூடிய  கோரிக்கைகளையும் ஒரு  ஆவணத்தில் உள்ளடக்கி,  இலங்கையின் ஒடுக்கப்பட்ட  மக்களின் அரசியல் சமூகத்  தளத்தில் நின்று பொதுக்  கோரிக்கையாக, முன்னெடுத்து,  சிங்கள மக்களின் ஒருமைப்பாட்டையும் ஆதரவையும்திரட்டிச் செல்வதே எமது இலக்கும் நோக்குமாகும். 

     
  • இலங்கையின் ஆட்சி அதிகாரத்  தரப்புக்கு இந்த ஆவணத்தினை கையளிக்க உள்ளோம். 

     
  • ஒடுக்கப்படும் மக்களிடையே ஒரு பொதுவான கருத்தியல்  உடன்பாட்டை உருவாக்கவும்,  பரஸ்பரம் பொதுத் தளத்தினான  உரையாடல்களுக்கும்  ஐக்கியத்திற்குமான தளத்தினை  இனம் காணவுமான வழியாகப்   பார்க்கிறோம். 

     
  • மக்களின் கோரிக்கைகளை,  அதிகாரத்தின் முன்பலம்  பொருந்திய குரல்களாக முன்  கொண்டு செல்ல  முயற்சிக்கிறோம். எமது இந்த  ஆவணத்தினை அடிப்படையாகக் கொண்டு, உள்ளுரிலும்,  வெளிநாடுகளில் வாழும் சிவில்  சமூக மக்கள் மத்தியில், இந்த புதிய அரசியலமைப்பின்  ஆபத்துக்கள் குறித்த அரசியல்  உரையாடல்களை நடாத்துவதுடன்,சிவில் சமூகங்களின் அரசியல் குரல்களுக்கு துணையாகவும்,  பக்க பலமாகவும் இருக்க  நினைக்கிறோம். 

     
  • ஆட்சியாளர்களின்  எதோச்சதிகாரப் போக்கினையும், ஒடுக்கப்படும் மக்களின்  குரல்களையும், சர்வதே தளத்திற்கு  கொண்டு செல்ல இருக்கிறோம். 

இந்த பணியில் தம்மை ஈடுபடுத்த  விரும்புவோரும், இது இக்கால கட்டத்தில் முக்கியமான பணி  இது  எனக் கருதுவோரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியத்திலும்  அவசியமாகும். இறுதி  செய்யப்படவுள்ள  எமது பொது  ஆவணத்தின் ஆங்கில, தமிழ்  மொழிப் பிரதிகள் தேவையானோர் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்! 

மின்னஞ்சல் eathuvarai@gmail.com 

Mobile 0044 7817262980