கொரொனா தடுப்பு மருந்தும் அதன் அரசியலும்

கொரொனா தடுப்பு மருந்தும் அதன் அரசியலும்

— மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம் —

டிசம்பர் முதல் வாரமளவில் இங்கிலாந்தில் கொரோனாவுக்கான வக்சின்(தடுப்பு மருந்து) வழங்கும் செயற்பாடு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா வக்சின் பற்றிய பல அறிவியல் விடயங்களும், அதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் விடயங்களும் ஆராயப்பட வேண்டியவை. 

முதலில் வக்சின் என்றால் என்ன

ஒருவருக்கு ஒருதடவை அம்மை நோய் வந்தால் இன்னொரு தடவை வராது என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் அப்படி? முதல் தடவை அம்மை நோய் ஏற்படும் போது உடம்பு செயற்பட்டு தனது நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி நோயில் இருந்து பாதுகாக்கும். உருவான அந்த நோய் எதிர்ப்பு சக்தி உடம்பிலே சேமிக்கப்படும். அடுத்த முறை அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றினால் ஏற்கனவே உருவாகி சேமிக்கப்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக தொழில் பட்டு அந்த வைரஸ் நோயை ஏற்படுத்த முன்பே அதனை அழித்துவிடும். இது இயற்கையான செயற்பாடு. 

மனிதனுக்குத்தானே குறுக்குப்புத்திக்கு குறைவில்லை. அந்த இயற்கையான செயற்பாட்டை குறுக்கு வழியில் உருவாக்குவதே இந்த வக்சின் . 

அதாவது, அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸை செயற்பட முடியாத அளவுக்கு, அதாவது உடம்பினுள்ளே போனாலும் நோய் ஏற்படாத அளவுக்கு (வீரியமற்றதாய்) மாற்றிவிட்டு உடம்பினுள்ளே செலுத்தினால் என்ன நடக்கும்? 

அப்பாவியான நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு வந்திருக்கிற வைரஸ் மனிதன் உருவாக்கின நோயை ஏற்படுத்தாத நோஞ்சான் வைரஸ் எனத் தெரியாமல் அதை அழிப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் உருவாக்கும். அப்படி உருவாகுபவை வழமைபோல சேமிக்கப்படும்.  

பிறகு ஒரு காலத்தில் உண்மையான வைரஸ் தொற்றினாலும் ஏற்கனவே ஏமாற்றி உருவாக்கி வைத்திருந்த நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக தொழிற்பட்டு நோய் ஏற்படாமல் பாதுகாத்துவிடும். 

பல வைரஸ்கள், பற்றீரியாக்களுக்கு இப்படி வக்சின்கள் உள்ளன.  

கொரோனா வைரசுக்கு இப்படி ஒரு வக்சின் சாத்தியமா

ஆம் சாதித்தியம். 

இந்த பெருந்தொற்று தொடங்கியதுமே பல மருத்துவ கம்பனிகள் இதற்கான வக்சின் தயாரிப்பதில் இறக்கிவிட்டன. ரஷ்யா, அமேரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா, பெல்ஜியம் என பல நாடுகளில் இதற்கான ஆய்வுகள் முனைப்பாக எடுக்கப்பட்டு பல நாடுகளில் இவை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.  

ஒரு வக்சின் பாவனைக்காக அனுமதிக்கப்பட முன் பல படிமுறைகளைத் தாண்டி வரவேண்டும். அதற்கு பல வருடங்கள் தேவைப்படும். ஆனாலும் நிலைமையின் தீவிரத்தால் சில படிமுறைகள் விரைவுபடுத்தப்பட்டே இந்த வக்சின்கள் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன. 

சோதனைப்படிநிலைகள் 

ஒரு வக்சின் உருவாக்க முன் முதல் கட்டமாக Preclinical எனப்படும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதாவது அது மனிதனுக்கு வழங்க உகந்ததா என்ற ஆய்வு. அடுத்ததாக அது முதல் கட்ட (phase 1) மனித ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதாவது ஒரு சிலருக்கு அந்த வக்சின் வழங்கப்படும். அது வெற்றி அளித்தால் இரண்டாம் கட்ட(phase2) ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன்போது நுற்றுக்கணக்கோனோருக்கு வக்சின் வழங்கப்படும். அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதபோது மூன்றாம் கட்ட (phase3) ஆய்வு தொடங்கும். அதன்போது பல ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கப்படும். அதுவும் வெற்றி அளித்தால் அந்த ஆய்வு முடிவுகளை ஒரு சுயாதீனமான குழு ஆராய்ந்து பாதுகாப்பானது என உறுதியளிக்க வேண்டியது அடுத்த கட்டம். 

அதன் பின்பே அந்த வக்சின் பாவனைக்கு உகந்தது என உறுதியளிக்கப்படும். அவ்வாறு உறுதியளிக்கப்பட்ட பின் அதை தயாரித்த நிறுவனம் விற்பனைக்காக வக்சினை உற்பத்தி செய்யத் தொடங்கும். 

கொரோனாவுக்கான வக்சின் தயாரிப்பில் பல படிமுறைகள் வேகமாக்கப்பட்டுள்ளன. சில மீறப்பட்டும் உள்ளன. 

குறிப்பாக இரண்டாம் கட்ட ஆய்வும், மூன்றாம் கட்ட ஆய்வும் வேகமாக்கப்பட்டுள்ளன . 

இதுவரை மார்க்கெட்டுக்கு வருவதற்கு சாத்தியமுள்ளதாக கருதப்படும் வக்சின்கள் 30000 தொடக்கம் 60000 பேரில் பரிசோதிக்கப்பட்டு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது ஒரு ஆறுதலான விடயம். 

அடுத்ததாக, ஒரு வக்சின் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்பே விற்பனைக்கான உற்பத்தி தொடங்கும். ஆனால் கொரோனா வக்சின் தயாரிப்பில் அதற்கு முன்பே விற்பனைக்கான வக்சின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டது. பல நாடுகள் தங்கள் மக்களுக்காக வக்சின்சிகளை ஓர்டர் செய்தும் விட்டன.  

இருந்தாலும் யாருக்கும் ஆபத்து வரவில்லை என்பதும், இவை 90 வீதத்துக்கும் அதிகமான வெற்றிகரமானவை என்பதும் நம்பிக்கை அளிக்கிறது. 

இதுவரை எத்தனை வகையான வக்சின்கள் தயாரிப்பில் இருக்கின்றன என சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். 

ஆம், 48 வகையான வக்சின்கள் ஆய்வில் இருக்கின்றன. சீனாவின் வக்சின் தான் போட்டியில் முதலாவதாக உள்ளது. 

ஆனாலும் சீனாவின் வக்சின் மேலைத்தேய பாதுகாப்பு பொறிமுறைகளை மீறி மேலைத்தேயத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதில் பல சிக்கல்கள் உள்ளன. 

பிபைசர், பயோ என்டெக், மாடர்னா போன்ற கம்பனிகள் தங்களுடைய மூன்றாம் கட்ட சோதனை முடிவடைந்து உள்ளதாக அறிவித்துள்ளன. அடுத்த கட்டிடமாக அந்த ஆய்வு முடிவுகள் சுயாதீனமாக ஒரு குழுவினால் ஆராயப்பட்டு அனுமதி பெற வேண்டியதே மிச்சமாயிருக்கிறது.  

Pfizer அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருந்து உற்பத்தி கம்பனி. அது பயோ என்டெக் என்ற சகோதர நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்த வக்சின் 95 வீதம் சக்தி வாய்ந்தது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது 100 பேருக்கு அந்த வக்சின் கொடுக்கப்பட்டால் 95 பேருக்கு பாதுகாப்பு கிடைக்கும்.  

இந்த வக்சின் 43000 பேரில் ஆய்வு செய்யப்பட்டது. அதிலே அரைவாசி பேருக்கு உண்மையான வக்சின் வழங்கப்பட்டது. அரைவாசி பேருக்கு எந்த மருந்தும் இல்லாத போலியான ஊசி போடப்பட்டது. உண்மையான வக்சின் போடப்படடவர்களில் 8 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றியது. ஆனால் உண்மையான வக்சின் பெறாதவர்களில் 162 பேருக்கு கொரோனா தொற்றியது. இதன் மூலம் இந்த வக்சின் வெற்றிகரமானது என புரியும். இந்த நிறுவனம் அவசரகால நிலைமையின் கீழ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

அதேபோல் இன்னொரு அமெரிக்கா வக்சின் ஆன மொடர்னா வக்சின் 94.5 வீதம் பாதுகாப்பு அளிக்கக்கூடியது என அறியப்படுகின்றது. இது 30000 பேரில் மேலே சொன்ன அதேமுறையில் சோதிக்கப்பட்டது. இதற்கு போட்டியாக இப்போது இருக்கும் வக்சின் இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் AstraZeneca என்ற நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்திருக்கும் வக்சின். 

இந்த வக்சினின் மூன்றாம் கட்டட ஆய்வு முடிவுகள் இன்னும் சில நாட்களுக்குள் வெளியிடப்படலாம் என நம்பப்படுகின்றது. அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுக்கும் என்பதால் இங்கிலாந்து தங்கள் நாட்டு மக்களுக்குத் தேவையான வக்சின் தேவையை பூர்த்தி செய்ய சொந்த தயாரிப்பில் முனைப்புக் காட்டுகிறது. இருந்தாலும் இங்கிலாந்து அமெரிக்க நிறுவனங்களிடம் 45 மில்லியன் வக்சின்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளது. சொந்தத் தயாரிப்பு வெற்றிகரமானால் இங்கிலாந்து தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான வக்சினை பூர்த்தி செய்யும் நிலை உருவாகும். 

Pfizer தன் ஆய்வு முடிவை வெளியிட்டு 48 மணி நேரத்தின் உள்ளேயே ரஸ்யா தன்னுடைய தயாரிப்பான Sputnik வக்சினின் முடிவை அறிவித்தது. இது 92 வீதம் பாதுகாப்பு அளிக்கக்கூடியது என ரஸ்யா அறிவித்து உள்ளது. 

Sinovac என்பது சீனா தயாரித்துள்ள வக்சின். தன்னுடைய தயாரிப்பு விநியோகத்துக்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்த போட்டியில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது.  

Serum Institute of India in Pune இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான வக்சினை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் இந்தியாவின் பாரத் பயோ டெக் நிறுவனம் தன்னுடைய சொந்த தயாரிப்பான வக்சினை முதல், இரண்டாம் கட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு மூன்றாம் கட்ட ஆய்வைத் தொடங்கியுள்ளது. 

இவ்வாறு உலகத்தின் வல்லமை மிக்க நாடுகள் எல்லாம் வக்சின் தயாரிப்பில் போட்டி போடுகின்றன . 

கொரோனா வக்சின் அரசியல்  

கொரோனா வக்சினை மையமாக வைத்து இப்போதே பல அரசியல் சதுரங்க ஆட்டங்கள் தொடங்கிவிட்டன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்றவை தங்களுக்கு தேவையான வக்சினை தயாரித்துக்கொள்ளும். 

இங்கிலாந்து தங்கள் சொந்த தயாரிப்பு உட்பட 350 மில்லியன் வக்சின்களுக்கு முன்பதிவு செய்துள்ளது. 

இந்தியா, இங்கிலாந்து கண்டுபிடித்த வக்சினை தயாரிக்கும் ஒப்பந்தத்தின்படி தயாரிக்கும் வக்சின்களில் அரைவாசி இந்தியாவின் பயன்பாட்டுக்கு போக மிச்சமாக இருக்கும் 50 வீத தயாரிப்பு மூன்றாம் உலக நாடுகளுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலமாக கொடுக்கப்பட வேண்டும். அது போக இந்தியாவின் சொந்த தயாரிப்பு ஒன்றும் ரெடி.  ஆனால் குறைந்த விலையில் இந்தியா தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். 

இதிலேயே சீனாவின் ஆதிக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பதே மிகப்பெரிய கேள்வி. 

சீனா தன்னால் தற்போதே வருடத்திற்கு 300 மில்லியன் வக்சின்களை விநியோகிக்க முடியுமென அறிவித்துள்ளது. அநேகமாக இது சீனாவின் சொந்த தேவைக்கு மேலதிகமான உற்பத்தியாகவே இருக்கும். 

சீனாவின் வக்சின் அங்கிகரிக்கப்பட்டால், உலகத்தில் கொரோனா வக்சின் விநியோகத்தில் இப்போதைக்கு சீனாவே முதலிடம் வகிக்கும். 

அமெரிக்க நிறுவனம் இப்போது 50 மில்லியன் வக்சின்களை தயாரிக்கவே திட்டம் போட்டாலும் அடுத்த வருடம் 1.3 பில்லியன் வக்சின்களை தயாரிக்கத் திட்டமிடுகிறது, அப்படிப் பார்த்தால் அடுத்த வருடம் மீண்டும் அமெரிக்கா வக்சின் அரசியலில் முன்னணி பெறும் சந்தர்ப்பம் உள்ளது. 

ஆனாலும் விலையில் சீனாவோடு போட்டி போட முடியுமா என்பது அடுத்த கேள்வி. சீனா மூன்றாம் உலக நாடுகளை குறிவைத்து குறைந்த விலையில் கொடுக்க முயற்சிக்கும். 

சீனாவின் வக்சின் பற்றி இங்கிலாந்து இதழான டெலிகிராப் தெரிவிக்கும் போது,  “சீனாவின் வக்சினின் தரம் சந்தேகத்துக்கு இடமானது. அந்த வக்சின் போதிய ஆய்வுகளின் முன்னே மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. சீனா ஆய்வு பற்றி தெளிவற்ற கருத்துக்களை வழங்குகிறது. இந்த வக்சின் ஐரோப்பா. அமெரிக்காவின் வக்சின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமைப்புக்களின் பரீட்சையில் பாஸ் பண்ணுமா?என்று செய்தி வெளியிட்டு உள்ளது. அதே பத்திரிகை வெளியிட்டுள்ள இன்னொரு முக்கியமான விடயத்தை அப்படியே தருகிறேன். However, some are concerned about the quality of the vaccines and that they are being used to gain political leverage. அதாவது சீனா தன்னுடைய வக்சினை அரசியல் ரீதியாக மற்ற நாடுகளை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம் என இப்போதே மேலைத்தேயம் கவலைப்பட தொடங்கியுள்ளமை தெளிவாகின்றது. 

சீனா ஆய்வு முடிவுகளுக்கு முன்பே வக்சினை தன் மக்களுக்கு கொடுத்தது என்பதன் மூலம், சீனா விரைவில் கொரோனாவில் இருந்து மீள இந்த வக்சின் உதவியதா என்பதும் நியாயமான சந்தேகமே. 

எது எப்படியோ பல முக்கிய நாடுகள் தங்கள் மக்களுக்கான வக்சினை உறுதிப்படுத்துவதில் கவனமாக இருக்க, இலங்கை போன்ற நாடுகள் வளமை போல அசட்டையாகவே உள்ளன.  

இலங்கை மக்கள் அனைவருக்கும் அரசாங்கம் சொந்த செலவில் வக்சின் கொடுப்பதென்பது இப்போதைய பொருளாதார நிலையில் சாத்தியமில்லை.  

அண்மைய வரவு செலவுத் திட்டத்தில் இதுபற்றி எந்த முன் மொழிவுமே இல்லாத அளவுக்கு நிலைமை உள்ளது. எப்படியும் இலங்கை மக்களின் ஒரு தொகுதியினருக்கு தொண்டு நிறுவனங்களின் வக்சின்கள் கிடைக்கும். சீனா அல்லது இந்தியா நன்கொடையாக கொஞ்சம் கொடுக்கலாம். மற்ற மக்களுக்கு சீனா கடனாக கொடுக்கப்போகிறதா? இந்தியா கடனாகக் கொடுக்கப்போகிறதா? அல்லது இலங்கை வேறு எங்காவது கடன் வாங்கி வக்சின் வாங்கப்போகிறதா? என்பது சுகாதார அமைச்சருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

எது எப்படியோ வக்சின் பற்றிய செய்திகள் ஓரளவு நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கின்றன. அண்ணளவாக வக்சின் கொடுக்கப்பட்டு 28 நாட்கள் அளவில் பூரண நோய் எதிர்ப்பு சக்தி உருவாகின்றது. அந்த வகையில் டிசம்பர் அளவில் வக்சின் கொடுக்கத் தொடங்கும் நாடுகள், சில மாதங்களில் தங்கள் குடிமக்கள் அநேகம் பேருக்கு வக்சின்  கொடுத்தால், இன்னும் சில மாதங்களில் அந்த நாடுகள் மீண்டும் வழமைக்குத் திரும்பலாம். 

எடுத்த எடுப்பிலேயே எல்லோருக்கும் இந்த வக்சின் கொடுக்குமளவுக்கு உற்பத்தி நடைபெறாது. கட்டம் கட்டமாகவே கொடுக்கப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் வயதானவர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், கர்ப்பிணிகள் முன்னுரிமை பெறுவார்கள். 

இனிவரும் தேர்தல்களில் இந்த வக்சின் முக்கிய பங்காற்றும். தங்கள் நாட்டு மக்களுக்குத் தேவையான வக்சினை பெற்றுக்கொடுக்கவில்லை என்ற குற்றசாட்டிலிருந்து தப்பிக்கொள்ள பல நாட்டின் தலைவர்கள் பாரிய அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.

இலங்கையில் பொதுமக்களுக்கு கொடுக்கத் தொடங்கும்போது இனரீதியான பாகுபாடுகள் பார்க்கப்படாது என நம்புவோம்.