சொல்லத் துணிந்தேன்—41

சொல்லத் துணிந்தேன்—41

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக்பொம்பியோ, இலங்கையின் இராணுவத் தளபதியாக இப்போது இருக்கின்ற சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட அமெரிக்காவிற்கான விசா மறுப்பு தொடரும் எனக் கூறியிருந்ததைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்று ஊடகங்களில் அறிக்கையிட்டுள்ளது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகக் கருதப்படும் சுமந்திரன் வழமைபோல் முந்திரிக் கொட்டையாக முந்திக்கொண்டு அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் ஒரு படி மேலே சென்று ஊடக நேர்காணலொன்றில் பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசு அமெரிக்காவிடமிருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார். தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இலங்கையில் உள்ள ஐநா அலுவலகம் இணையவழியூடாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலொன்றான ‘ரெலோ’ வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் கூட்டாக ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். இவர்களது ஆட்சேபம் ஊடகங்களில் பதிவாகியிருந்தன. இந்த மூன்று நிகழ்வுகளும் அண்மைக் காலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்தவை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்கூறப்பெற்ற செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு விளைந்த அல்லது விளையப் போகின்ற நன்மைகள் என்ன? எதுவுமேயில்லை. 

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தையும் ஆட்சியதிகாரத்திலுள்ள ராஜபக்ஷாக்களையும் சிங்கள மக்களையும் ஆத்திரமூட்டுமே தவிர, தமிழ் மக்களுக்குச் சாதகமான எந்தச் சூழலையும் ஏற்படுத்தமாட்டாது. தமிழ் மக்களுக்கான அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறுபிள்ளைத்தனமாகவே தொடர்ந்து நடந்து கொள்கின்றது. இத்தகைய தங்கள் முட்டாள்தனமான செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இராஜதந்திர நகர்வுகள் என பெயர் சூட்டினாலும் இவற்றில் ராஜதந்திரமும் இல்லை; இராஜ தர்மமும் இல்லை.  

மாறாக அரசியல் மதியீனத்தின் உச்சக்கட்டமே வெளிப்படுகிறது. இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியாக இருந்திருந்தால் அதுவே தமிழர்களுக்கு நன்மையானது. ‘நுணலும் தன் வாயால் கெடும்’, ‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்பதாகத் தமிழர் அரசியல் போய்விடக்கூடாது. 

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலமும்–பின்னர் 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்ததன் மூலமும்–2015/2020 காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட ‘நல்லாட்சி’ அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்ததன் மூலமும்– ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்ததன் மூலமும்–உயர் நீதிமன்றம் வரை சென்று ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவியைப் பாதுகாத்ததுடன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவியதன் மூலமும்–2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை ஆதரித்ததன் மூலமும்– 20 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்ததன் மூலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக இராஜபக்ஷாக்களை ஆத்திரமூட்டும் அரசியலையே முன்னெடுத்து வருகிறது. 

 தமிழர் தரப்பு கண்ணை மூடிக்கொண்டு இராஜபக்ஷாக்களை ஆதரிக்க வேண்டுமென்று இப்பத்தி கூற முற்படவில்லை. ஆனால், இராஜபக்ஷாக்களைத் தொடர்ந்து ஆத்திரமூட்டுவதால் தமிழ் மக்கள் அடைந்த மற்றும் அடையப் போகின்ற நன்மைகள் என்ன? என்பதே இப்பத்தி எழுப்பும் கேள்வியாகும். பகைவனுக்கு அருளும் மனப்பக்குவம்கூட வெற்றிகளைக் கொணர்ந்த வரலாறுகள் உண்டு. இன்று நிலவும் தென்னிலங்கை மற்றும் இந்து சமுத்திரப் பிராந்திய அரசியற் சூழலை வைத்துப் பார்க்கும் போது குறைந்தபட்சம் இன்னும் பத்து வருடங்களுக்காவது இராஜபக்ஷாக்கள்தான் அதிகாரத்தில் இருக்கப் போகிறார்கள். இந்த யதார்த்தத்தைக் கணக்கிலெடுத்துத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் தேவைகளை வென்றெடுக்கும் வகையில் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, வெறுமனே கவசமின்றிப் ‘போர்க்கோலம்’ பூண்டு, அரசியலமைப்பு வியாக்கியானங்களை முன்வைத்துத், தங்கள் வித்துவத்தை வெளிப்படுத்தி விளம்பரம் தேடுவதாலோ–பாராளுமன்றத்தில் காரசாரமாக உரையாற்றுவதாலோ–பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதனாலோ ‘வேண்டாப் பெண்டாட்டிக்குக் கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்’ என்பதுபோல் எடுத்ததற்கெல்லாம் ராஜபக்ஷக்களை எதிர்ப்பதனாலோ மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாது. 

கட்சி அரசியல் ‘சாக்கடை’ க்குள் மூழ்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் அதிலிருந்து வெளியேறி மக்களுக்கான அரசியலை நோக்கித் திசை திரும்ப வேண்டும். 

சுதந்திர இலங்கையின் கடந்த 70 வருட கால அரசியலைப் படித்து மலையகத் தமிழர்களிடமிருந்தும் முஸ்லிம் சமூகத்திடமிருந்தும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் தந்திரோபாயங்கள் அதிகம் உண்டு.