மாம்பழம் – இன்சுவை முதல் ஆணவம் வரை…

மாம்பழம் – இன்சுவை முதல் ஆணவம் வரை…

— துலாஞ்சனன் விவேகானந்தராஜா —

மிளகாய்த்தூளோடு அல்லது உப்புத்தூளோடு பச்சை மாங்காய் சாப்பிட்ட பால்ய கால அனுபவம் நம் எல்லோருக்குமே இருக்கும். மாங்காய் தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம். “Mangifera Indica” என்பது தாவரவியற் பெயர்.  

“மங்கோ” என்ற ஆங்கிலச்சொல் “மாங்காய்” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. ஆனால் ஆங்கில சொற்பிறப்பியல் அகராதியில் பார்த்தால், அது மலையாளச் சொல்லிலிருந்து வந்தது என்று போட்டிருக்கும். மலையாளத்திலும் மாங்காய் “மாங்ஙா” தான். ஆரம்பகால காலனித்துவக் குறிப்புகளின் படி மாங்காய் என்பது மலபார் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்த சொல். அப்போது மலபார் என்பது மலையாளிகளை மாத்திரமன்றி தமிழர்களையும் சேர்த்தே குறித்தது. 

இலங்கை பற்றிய பழைய ஐரோப்பியக் குறிப்புகளில் சிங்களீஸ் மற்றும் மலபார் என்று இரண்டு மொழி இங்கு பேசப்படுவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் தனித்துவமான தேசவழமைச் சட்டம், மலபார்களுக்கான சட்டமாகவே இன்றுவரை உத்தியோகபூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன் பொருள் இலங்கையில் இருந்தவர்களும் இருப்பவர்களும் மலையாளிகள் என்பதல்ல; காலனித்துவ காலத்தில் மலபார் என்பது தமிழரையும், அரைத்தமிழரான மலையாளிகளையும் ஒட்டுமொத்தமாகக் குறித்தது என்பதே சரியான பொருள்கோடல். 

சமகாலத்து பொதுவழக்கில் மலபார் என்பது மலையாளி என்று சுருங்கிவிட்டதால், பழைய ஆங்கில சொற்பிறப்பியல் அகராதியை மீள்பதிப்புச் செய்தவர்கள், மலபார் எல்லாவற்றையும் மலையாளம் என்று மாற்றிவிட்டார்கள். அதனால் மங்கோவின் மூலமொழியும் மலையாளம் ஆகிவிட்டது. 

ஏகாம்பர ஈஸ்வரர் 

மா, வடமொழியில் ஆம்ரம் என்று அழைக்கப்படுகிறது. ஒற்றை மாமரத்தின் (ஏக+ஆம்ரம்) அடியில் வீற்றிருந்த சிவனுக்கு வடமொழியில் ஏகாம்ர ஈஸ்வரர் என்று பெயர். தமிழில் மகர மெய்க்கு அருகே ரகர வர்க்க எழுத்து வராது என்பதால் ஏகாம்ரம் என்பது ஏகாம்பரம் ஆகிவிட்டது. அதை ஏகம்பம் என்றும் சொல்லுவார்கள். இதே இலக்கணப்படி சிம்ரன் என்ற பெயர் சிம்பிரன் என்று தான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். சரி, எதுக்கு சிம்ரன் அதெல்லாம்! நாம் மீண்டும் மாமரத்துக்கே போவோம்.  

தென்னை, பனை, என்பது போல மா என்ற சொல்லை நாம் மரத்துக்கான தனிச்சொல்லாகப் பயன்படுத்துவது குறைவு.  ஆனால் பேச்சு வழக்கிலேயே மா பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாந்தோட்டம், மாங்காடு, மாந்தீவு, மாவடிச்சேனை, மாவடிவேம்பு என்றெல்லாம் இங்கு பல ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன.  

சிங்களத்தில் மாவை “அம்ப” என்கிறார்கள். கறுத்தக்கொழும்பான் என்பது இலங்கையின் உள்ளூர் மா இனங்களில் ஒன்று. அதற்கு சிங்களத்திலும் அதே பெயர் தான். வெள்ளைக்கொழும்பானும் உண்டு. இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்புக்குச் சொல்லப்படும் சிங்களச் சொற்பிறப்புகளில் ஒன்று அதை கொலம்ப தோட்ட = பச்சை மாமரங்கள் (கொல+அம்ப) அடர்ந்திருந்த துறைமுகம் (தோட்டம்) என்கிறது. திருக்கேதீச்சரம் அமைந்திருந்த மாந்தைத் துறைமுகமும் மாதோட்டம் தான். தெற்கே இருக்கும் மாத்துறையையும் சில சிங்கள நூல்கள் மாதோட்ட என்று அழைக்கின்றன. இன்னொரு விதத்தில் மாத்துறை-மாதோட்ட இரண்டுக்கும் ஒரே பொருள். பெரிய துறைமுகம். 

சங்க இலக்கியத்தில் மா! 

தமிழ்ப்பண்பாட்டில் மாமரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. சங்க இலக்கியங்களிலிருந்தே அதற்கு தொடர்ச்சியான இலக்கியப்பதிவு இருக்கிறது. மா முக்கனிகளில் ஒன்று. அன்றிலிருந்து இன்றுவரை பொதுவான உடம்பு நிறத்தைச் சொல்ல தமிழில் “மாநிறம்” என்ற சொல் தான் பயன்படுகிறது. மாந்தளிர் நிறம். சங்ககால நாயகிகள் மாமை நிறம் கொண்டவர்கள். “திதலை அல்குல் என் மாமைக்கவினே”என்பது புகழ்பெற்ற குறுந்தொகை வரி. 

கலித்தொகையின் ஓரிடத்தில் பெண்ணொருத்தியின் கண்ணை வருணிக்க,”இளமாங்காய் போழ்ந்தன்ன” என்ற உவமை கையாளப்பட்டிருக்கிறது. பிளந்த மாங்காய். அரிதான உவமை தான். “கனிகளிலே அவள் மாங்கனி”, “குண்டுமாங்காத் தோப்புக்குள்ள”, “மாம்பழமாம் மாம்பழம்” என்றெல்லாம் தமிழ்த் திரையுலகமும் மாம்பழத்தை புகழ்ந்து பாடித்தான் வந்திருக்கிறது. 

வேறு இனக்குழுக்களில் மாம்பழம் 

தமிழுக்கும் வெளியே பண்பாட்டு ரீதியில் நிறைய இனக்குழுக்களிடையே மா முக்கியத்துவம் பெறுகிறது. தென்னகம்,  வங்கம் போன்ற பகுதிகளில், நிறைகுடங்கள் மாவிலை வைத்துத்தான் அலங்கரிக்கப்படுகின்றன. மங்கல – அமங்கல நிகழ்வுகளில் மாவிலையைத் தோரணமாகக் கட்டுவது அங்கெல்லாம் பொதுவாகக் காணக்கூடிய அலங்காரம். 

மாம்பூ மன்மதனின் ஐங்கணைகளில் ஒன்று. அதற்கு மதனம் என்று பெயர். மதனத்தை மன்மதன் தன் கரும்புவில்லில் பூட்டி காதலரின் மார்பில் எய்யும் போது அவர்களுக்கு “விப்பிரயோகம்” எனும் அவஸ்தை உண்டாகுமாம். விப்பிரயோகம் என்றால் பிரிவாற்றாமை. 

பௌத்ததில் மாமரம் 

பௌத்தத்தில் மாமரத்தையும் புத்தரையும் இணைத்து பல ஜாதகக் கதைகள் இருக்கின்றன. பெயரில் மாவைக் கொண்ட “ஆம்ரபாலி” எனும் நாட்டியமங்கை பற்றிய கதை அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. இலங்கையின் தமிழ் – சிங்கள தொன்மங்களின் படி பத்தினி கண்ணகி மாங்கனியில் தோன்றியவள். தெய்வம், பெண்ணாகத் தோன்றிய அதே மாங்கனி காரணமாக, இன்னொரு பெண் பேயாகி இருக்கிறாள். அது காரைக்காலம்மையார். 

தன் கணவன் தந்த மாம்பழமொன்றை அடியவர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டு, இறைவனருளால் இன்னொரு மாம்பழத்தை வரவழைத்துக்கொடுத்ததால் கணவன் அவள் மீது அச்சம் கொண்டு கைவிட, அதனால் பேயாக மாறிய அபலைப் பெண் தான் காரைக்காலம்மை.  

மாம்பழத்தால் பரமசிவன் குடும்பத்தில் கலவரம் 

மாம்பழத்தால் மண்ணில் இப்படி சம்பவங்கள் நடக்க, விண்ணிலோ, ஒரு தெய்வக்குடும்பத்தில் பயங்கர கலவரம் ஏற்பட்டிருக்கிறது. “ஞானப்பழம்!”. 

ஞானப்பழம் கிடைக்காத காலத்திலிருந்தே முருகனுக்கு மா எதிரி தான் போல. சூரபதுமனை முருகன் அழிக்கும் போது அவன் கடல் நடுவே போய் மாமரமாகத் தான் நிற்கிறான். முருகனின் வேல் அம்மரத்தை இருகூறாக்கும் போது சேவலும் மயிலுமாக மாறி முறையே முருகனின் கொடியும் வாகனமும் ஆகின்றான்.  

சரி, இப்போது ஏன் இந்த’மா’புராணம்? 

நம் பண்பாட்டை உற்றுப்பார்த்தால், அங்கு முக்கியத்துவம் பெறும் தாவரங்கள் அல்லது விலங்குகள் பற்றிய ஒரு உண்மையைக் கண்டுகொள்ளலாம். அவை நம் மண்ணுக்கே உரித்தான உயிரினங்கள். முக்கனிகளான மா,பலா, வாழை தென்னகத்தில் பிறந்தவை. தெய்வங்களோடு பெரும்பான்மையாக இணைத்துச் சொல்லப்படும் மாடு, சுண்டெலி,  மயில், நாகபாம்பு, யானை, கோழி, செம்பருந்து/கலுழன் (கருடன்), குரங்கு எல்லாமே இந்தியத் துணைக்கண்டத்தை முதன்மையான தாயகமாகக் கொண்டவை. இவற்றின் அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு இனங்கள் உலகின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும், தொன்மங்களிலும் சித்தரிப்புகளிலும் சொல்லப்படுவது உள்ளூர் இனங்கள் தான். 

ஏனென்றால், அவை தான் நம்மோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருபவை. நம் பாட்டன், முப்பாட்டன்,  கொள்ளுப்பாட்டன் முதல் நூறு நூறு தலைமுறைகளாக நம்மோடு கூடி வாழ்கின்றவை. அந்த உறவைப் புரிந்துகொள்ளாமல் சில மெத்தப்படித்தவர்கள் மொண்ணைத்தனமாகக் கேட்பார்கள். “அது ஏன் நம் தெய்வங்கள் உள்ளூர் மிருகங்களோடும் தாவரங்களோடும் தான் சம்பந்தப்படுகிறார்கள், ஏன் கடவுளரின் வாகனமாக கங்காருவோ பென்குயினோ இல்லை; ஒலிவ் மரத்தையோ டியூலிப் மரத்தையோ அம்மனாக வெள்ளைக்காரன் ஏன் வழிபடவில்லை?” என்று. 

இந்தச் சமயம் – இந்த வாழ்வியல் – இந்த மண்ணில் பிறந்தது. இந்த மண்ணின் உயிர்ப்பல்வகைமையோடு தான் இந்தப் பண்பாடு ஒத்துப்போகும். இந்த மண் இல்லாமல் நாம் இல்லை. இப்படி அன்றாட வாழ்வியலிலும் வழிபாட்டிலும் அதே மண்ணின் உயிர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் அவற்றை மதிக்கிறோம். மரியாதை செலுத்துகிறோம். வாழ்த்துகிறோம். நன்றி செலுத்துகிறோம்.  

இப்போது கந்தசஷ்டி நோன்பு நோற்கப்படுகிறது. அதன் முத்தாய்ப்பாக நிகழும் சூரன் போரில் கடலுக்கு நடுவே நிற்கும் சூர மாமரம் முருகனால் இரு கூறாக்கப்பட்டது நடித்துக் காட்டப்படும். சூரபதுமன் சைவ சித்தாந்த நோக்கின் படி மூன்றாவது மலமான ஆணவம். இலக்கியத்தில் இனிமை, அழகு, ஞானம், கற்பு என்று பல படிமங்களாக உருவகிக்கப்படும் மா, இங்கு முழுமையான ஆணவத்தின் குறியீடாக கிளைபரப்பி நிற்கிறது. அளவுக்கு மீறிய அமுதம் நஞ்சல்லவா? அளவுக்கு மீறிய அழகும் அறிவும் கல்வியும், ஆணவமாகத் தானே மாறிவிடுகின்றன? 

சேவலும் மயிலும் 

ஆனால் முழுத்த ஞானத்தின் வடிவான வேலால் பிளக்கப்பட்டதும், மாமரம் சேவலும் மயிலுமாக மாறுகிறது. சேவல் சூரியன் வரவை அறிவிப்பது. மயில் மழையின் வரவில் மகிழ்வது. அது செம்மை. இது கருமை. அது விடிவானம். இது இருள்மேகம். முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிரான முரண் இருமை. 

தூய ஞானம், ஆணவத்தை இருகூறாக்கிவிடும். ஞானத்தால் ஆணவம் வலிகெட்ட ஆன்மா, தன் இருமையைக் கண்டுகொள்கிறது. அந்த ஆன்மாவை இறைவன் அன்போடு அணைக்கிறான். சேவலைக் கொடியாக்கி மயிலை வாகனமாக்குகிறான். ஆன்மாவின் ஒளியறிவு கொடியாக உயர்ந்து பட்டொளி வீசுகிறது. இருளறிவில் இறைவனே ஏறி அமர்ந்து வழிநடத்துகிறான். 

இரண்டையும் ஒன்றே எனக் கண்டுகொள்ளும் மனநிலைக்கு சித்தாந்தத்தில் கலைச்சொல் ஒன்று உண்டு. இருவினையொப்பு. இன்று ஒப்பாரி வைத்து அழுத ஒரு சம்பவத்தை எண்ணி கொஞ்ச நாட்களுக்குப் பின் விழுந்து விழுந்து சிரிப்போம். அன்புக்குரியவரோடு மகிழ்ந்திருந்த நாட்கள், அவர் நம்மை விட்டு விலகிய பின் துன்பம் தரும் நாட்களாகி விடுகின்றன. எனவே நன்மையும் தீமையும் நிரந்தரமல்ல; நல்வினையோ தீவினையோ இரண்டும் ஒத்தவை என்று சொல்வது தான் இரு-வினை-ஒப்பு. 

இன்று முருகனை வழிபடும் எல்லா அடியாரும் சேர்த்தே வழிபடுவது அவனது கொடியும் வாகனமுமாக வீற்றிருக்கும் அவன் எதிரி சூரபதுமனையும் கூட. அவனைப்பிளந்த வேல் கூட அருகே தான் தோளில் சார்த்தி இருக்கும். இறைவன் என்றால் அப்படித்தான். அவனுக்கு எதிலும் பேதமில்லை. எல்லாமே ஒன்று தான். சைவசித்தாந்தம் சொல்லும் இறைவன் அவன் தான். “கரைந்து கை தொழுவாரையும் காதலன், வரைந்து வைதெழுவாரையும் வாடலன்” உருகி கைகூப்புவோர் மீது அதிக அன்பு கொண்டவன்; ஆனால் அதற்காக திட்டி ஏசுவோர் மீது கோபம் கொள்ளாதவன். ஏனென்றால் அதுதான் இறைவனின் குணம். “அனாதிபோதன்” என்று சொல்வார்கள். இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவன் என்று பொருள். இறைவனின் இக்குணத்தை வியந்த மெய்யடியார்கள் தான் இருமையாய் நிற்கும் சூரபதுமன் எனும் ஆணவத்துக்கும், அதை வலுக்குறைத்த மெய்ஞ்ஞான வடிவான வேலுக்கும் ஒருசேர வணக்கம் செலுத்துகிறார்கள். “சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றி போற்றி” என்று! 

இப்படி முரண்களைக் கடந்த இறைவன் வீற்றிருக்கும் இடமும் வியப்பளிப்பது தான். மாமரத்தின் கீழ். மாமரமொன்றைப் பிளப்பித்தவன் வீற்றிருக்கும் இடமும் ஒரு மாமரத்தடி தான். காஞ்சிபுரத்து மாமரத்தடி. காஞ்சி மாவடி. 

மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி 

ஏவரும் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி – காஞ்சி 

மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி – அன்னான் 

சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி” – என்கிறது கந்தபுராணம்.