ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும்… (இறுதிப்பகுதி 8)

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும்… (இறுதிப்பகுதி 8)

—  பேராசிரியர்சி. மௌனகுரு —

முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் சம்பந்தமான ஆலோசனைகள் 

 வரலாறு எழுதுதல் 

கிடைக்கின்ற ஆதாரங்களை வைத்துக் கொண்டு கட்டி எழுப்பப்படுகின்ற ஒரு கருத்துருவே வரலாறாகும். வரலாறு எப்போதும் ஒரு கருத்து நிலை சார்ந்ததாகவே இருக்கும். ஆளும் வர்க்கமே முதலில் வரலாற்றை எழுத ஆரம்பித்தது. அதிகாரத்திற்கும், ஆட்சியை மற்றவர் ஏற்பதற்கும் வரலாறு ஆளும் வர்க்கத்திற்கு அவசியமாயிற்று. அரசவையிலே வரலாற்றைப் பொறிக்கும் அல்லது எழுதும் அறிஞர்கள் இருந்துள்ளனர். இதனால் அரச குடும்பங்களினதும் அவர்கள் புரிந்த போர்களினதும் அவர்கள் செய்த செயல்களினதும் வரலாறாகவே வரலாறு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இவ்வகையில் ஈழத் தமிழர் வரலாறும் அரசர்களினதும், உயர் குலங்களினதும் வரலாறாகவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 

டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுக்குட்பட்ட சரித்திரவியலாளர் வரலாற்றைச் சுழலேணி முறையிற் கண்டனர். இதன்படி ஒன்றிலிருந்து ஒன்று கூர்ப்படைந்து உன்னதத்தை நோக்கிய வரலாறாக வரலாறு எழுதப்பட்டது. 

சமூகத்தை மாற்றி அமைக்க வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை 19ஆம் நூற்றாண்டில் மாக்ஸியம் தந்தது. ஆளுவோர் ஆளப்படுவோர் எனப் பிரிந்து நின்ற சமுதாயத்தில் ஆளப்படுவோர் பற்றிய வரலாறும் எழுதப்படலாயிற்று. 

ஆளப்படுவோர் மத்தியில் பெண்கள் மேலும் ஒடுக்கப்படுவதற்கான கருத்துக்கள் மேனிலை பெற்றன. பெண்ணியல் நோக்கில் வரலாறு எழுதப்படலாயிற்று. 

ஆளப்படும் குழுக்களான பழங்குடி மக்கள், நாடோடிக் குழுக்கள், பிற்பட்ட சாதியினர் ஆகிய விளிம்பு மக்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலை தோன்றியதால் அவர்களிலும் வரலாற்று எழுத்தியல் தீவிர கவனம் செலுத்தியது. 

இவற்றுடன் மாணவர்கள், சிறுபான்மை இனங்கள் அடக்கப்பட்டோர் வரலாற்றில் பெறும் முக்கியங்கள் வரலாற்றில் இடம்பெறலாயின. 

மானிடவியல், சமூகவியல் கல்வி நெறிகள் இச்சிந்தனைகள் வளர உதவியமை மாத்திரமின்றி இம்மக்கள் பற்றிய தகவல்களையும் தந்தன. மக்கள் பல்வகையினராகப் பிரிந்துள்ளனர் என்ற பன்மைத் தன்மை (Theory of difference) பின் நவீனத்துவ வாதிகளால் முன்வைக்கப்படுகின்றது. இதனால் வரலாற்றை ஒற்றை நோக்கில் பரிணாம வளர்ச்சியின் பிரதான சொல்லாடலாகப் பார்க்காமல் இதன் பன்மைத் தன்மையைச் சீர்தூக்கிப் பார்க்கும் சிந்தனைகளும் உருவாகின்றன. 

வரலாறு உருவாக்கப்படும் ஒரு கருத்தோட்டமே. உருவாக்கம் அதிகார மையப்படாது அமைதல் அவசியம். 

 ஆலோசனைகள் 

ஈழத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாறு எனக் கட்டமைக்கப்படுகின்றபோது அது யாழ்ப்பாணத் தமிழர் வரலாறாக அன்றி இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களினதும் வரலாறாகக் கட்டியமைக்கப்பட வேண்டும். முக்கியமாக இவ்வரலாற்றினுள் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேச வரலாறுகளும் அப்பிரதேசங்களில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களான இஸ்லாமியர் வரலாறும் உள்ளடக்கப்பட வேண்டும் (தமிழ்ப் பேசும் பறங்கியர் இன வரலாறும் உள்ளடக்கப்பட வேண்டும்). 

பிரதேச வரலாறாக எழுதப்படும் மட்டக்களப்பு வரலாற்றிலும் சமூகத்தின் உயர் குடியினரதும், உயர் குழாத்தினரதும் வரலாறே கட்டமைக்கப்படுகின்றது. முக்குவர் பற்றிய சாதி வரலாற்றில் முக்குவ வன்னிமைகளும், சீர்பாதகுல வரலாற்றில் சீர்பாதத் தேவியும் உடன் வந்த பெரும் பிரதானிகளும், முஸ்லீம்களின் வரலாற்றில் வன்னிமைகளும் போடிமாருமே முக்கியம் பெறுகின்றனர். அச்சாதியினருள் உள்ள குடிகளுக்குள் இருக்கும் அதிகாரம் குறைந்த குடிகள் பற்றியோ, வறுமைமிக்க மக்கள் பற்றியோ வரலாற்றாசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை. கிழக்கிலங்கையில் தமிழர் மத்தியில் முக்கிய இனக் குழுக்களாக வேளாளர், முக்குவர், கரையார், சீர்பாதக்காரர் அமைகின்றனர். இவர்களுள் முதல் மூன்று சமூகமே ஜனத்தொகை அதிக மிகுந்த சமூகமானமையினாலும் பொருளாதார பலம் மிக்க சமூகங்களானமையினாலும் அவர்கள் அரசியல் அதிகாரத்தில் மட்டக்களப்பில் முக்கிய இடம் வகிக்கின்றனர். ஆனால் மட்டக்களப்புச் சமூகம் இம்மூன்று சமூகத்தினை மாத்திரம் உள்ளடக்கியதன்று, ஏனைய இடைநிலை, அடிநிலைச் சமூகங்களுமுண்டு. அவற்றிற்கென்ற தனித்துவங்களும் வரலாறுகளும் பண்பாடுகளுமுண்டு. மட்டக்களப்பில் போர்த்துக்கேய வருகையின் பின் வந்த பறங்கியரும் மட்டக்களப்பில் வாழும் ஓர் இனக்குழுமமாகும். தமக்கெனத் தனித்த பண்பாட்டுடன் அவர்கள் வாழ்கின்றனர். கிழக்கிலங்கையில் சிங்கள மக்களும் வாழ்வது குறிப்பிடத்தக்கது.  

இவ்வனைவரினதும் ஊடாட்டம் இவர்கள் அனைவரையும் மட்டக்களப்புச் சமூகமாக்கியுள்ளது. 

இவ்வடித்தள மக்களினது வரலாறும் பண்பாடும் ஏடுகளிலும் ஆவணங்களிலுமில்லை. அவை வாய்மொழி மரபுகளிலேதானுள்ளன. அவர்களின் கோயில்கள், சடங்குகள், விழாக்கள், பழங்கதைகள், வழங்கும் கதைகள், பழமொழிகள், விடுகதைகள் இவற்றிலேதான் அவர்கள் வரலாறு புதைந்து கிடக்கின்றது. மட்டக்களப்பு வரலாறு இவை அனைத்தையும் உட்கொண்டு, கட்டி அமைக்கப்பட வேண்டும். 

சமூகம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது. மேற்குலகில் வர்க்கங்களாகவும் இனங்களாகவும் பிரிந்து கிடந்தால் கிழக்குலகில் சாதிகளாகவும், குழுக்களாகவும், இனங்களாகவும் பிரிந்து கிடக்கின்றது. இப்பிரிவினைகளைக் களைந்து மனிதரோடு மனிதரை இணைக்கும் வகையில் வரலாறு எழுதப்பட வேண்டும். 

தனக்குள்ள உரிமை மற்றவருக்கும் உண்டென்ற உயரிய எண்ணம் அனைவருக்கும் வரும் வகையில் சரித்திரம் எழுதப்பட வேண்டும். 

மட்டக்களப்பு வரலாறு மாத்திரமல்ல இலங்கை வரலாறும் இதனையே வேண்டி நிற்கின்றது.