புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் (விவாதக் களம் – 3)

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் (விவாதக் களம் – 3)

— வி. சிவலிங்கம் —

வாசகர்களே! 

இவ் விவாதக் களம் திறக்கப்பட்டதன் பின்னர் மிகவும் ஆரோக்கியமான வகையில் விவாதங்கள் நகர்கின்றன. குறிப்பாக எனது மதிப்பிற்குரிய நண்பரும், தோழருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ‘மல்லியப்புசந்தி’ திலகர் அவர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தின் நடைமுறைகளினூடாக மாற்றங்களின் தேவைகளை வலியுறுத்தும் வகையில் ‘இலங்கையின் அரசியலமைப்பு ‘அ’ முதல் ‘ஒள’ வரை’ எனும் தலைப்பில் விவாதங்களை ஆரம்பித்துள்ளார். மேலும் பலர் முகநூல் வழியாக விவாதிக்கின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இவ் வகை விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா? என்பதை விட இவை பற்றிப் பேசாமல் இருப்பது அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே பிரதான கவலையாக உள்ளது.  

கடந்த 1ம், 2ம் விவாதங்களில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் உள்ளார்ந்த போக்கும், அதன் விளைவுகள் குறித்தும் பேசியதோடு, இதன் விளைவாக எழுந்துள்ள தமிழ் – குறும் தேசியவாதம் எந்த மக்களின் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுப்பதாகக் கூறுகிறதோ அந்த மக்களைப் பிளவுபடுத்திச் செல்லும் உட்கருவைச் சுமந்து செல்வதை அடையாளம் காட்டினோம். குறிப்பாக தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீட்டெடுத்தல் என்ற போர்வையில் பாராளுமன்ற ஆசனங்களை நோக்கியதாக குறுக்கப்பட்டுள்ள நிலமைகளையும் காண முடிந்தது. தமிழ்த் தேசியத்திற்கான குரல் பரந்த மக்களின் நலன்களைப் பேசாது தொடர்ந்தும் தமக்குள்ளேயே எதிரிகளைத் தேடியதால் பரந்த தமிழ்த் தேசியத்தின் கூறுகள் அதாவது  ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற பரந்த அடையாளம் மிகவும் குறுகிச் சென்றது.  

புறந்தள்ளப்பட்ட சமூகப் பிரிவுகள் 

இதன் விளைவாக தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் காணப்பட்ட பொருளாதார அடிப்படையில் நலிவடைந்துள்ள சமூகப் பிரிவினர் படிப்படியாக எவ்வாறு ஒதுக்கப்பட்டார்களோ அவ்வாறே பரந்த தமிழ்த் தேசியத்தின் பிரதான கூறுகளாக அமைந்த முஸ்லீம் மக்களும், மலையக மக்களும் இன்று பிரதேச அடிப்படையில் கிழக்கு மாகாண மக்களும் அவ்வாறே உணரும் நிலைக்கு அப்பரந்த நீரோட்டத்திலிருந்து தனித்து விடப்பட்டார்கள். இவ்வாறான நிலைக்கு வெறுமனே தமிழ் – குறும் தேசியவாத்தினைக் குறை கூற முடியுமா? இதர தமிழ் பேசும் சமூகங்கள் இப் பிரச்சனையில் வகித்த பாத்திரமென்ன? என்ற கேள்வி எழலாம். ஆனால் தமிழரசுக் கட்சி அல்லது கூட்டமைப்பு என்ற அமைப்புகள் மட்டுமே  ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற பரந்த தளம் பற்றிப் பேசின. அதிக பாராளுமன்ற ஆசனங்களையும் பெற்றனர். ஏனையோர் அவ்வாறான நிலைப்பாடு நோக்கிச் சிந்திக்கவில்லை அல்லது செல்லவில்லை.  

உதாரணமாக, ‘தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி’ என்ற பெயரில் வட்டுக்கோட்டை மாநாடு முடிவு செய்த வேளையில் பங்களித்திருந்த மலையகத்தின் தொண்டமானும், கிழக்கின் தேவநாயகம் போன்றவர்களும் தனிநாட்டுக் கோரிக்கையின் விளைவாகவே இணைந்து செல்ல முடியவில்லை. பிரிவினையை வற்புறுத்திய தமிழ்த் தலைமைகளால் பாராளுமன்ற வாய்ப்புகளைக் கைவிட முடியவில்லை. உதாரணமாக வட அயர்லாந்தில் செயற்பட்ட ஐ ஆர் ஏ என அழைக்கப்பட்ட அயர்லாந்து விடுதலை ராணுவமும், அதன் அரசியல் பிரிவான ‘சின்பெய்ன்’ கட்சியும் வட, தென் அயர்லாந்தின் பிரிவுகளை இணைத்து குடியரசு ஒன்றினை ஸ்தாபிப்பதையே கொள்கையாகக் கொண்டிருந்தன. இதனடிப்படையில் வட அயர்லாந்தினை பிரித்தானிய குடியேற்றி ஆட்சியாளரிடமிருந்து தமது பிரதேசத்தை விடுவிக்க குடியரசு ராணுவம் என்ற பெயரில் பல காலம் போரிட்டார்கள். அவ்வாறு போரிட்ட அதேவேளையில் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டார்கள். வெற்றி பெற்றார்கள். ஆனால் பிரித்தானிய வெஸ்ற்மின்ஸ்ரர் பாராளுமன்றத்திற்குச் சென்று பதவிப் பிரமாணம் எடுக்கவில்லை. அவர்கள் இன்றுவரை அப் பாராளுமன்றத்திற்குச் செல்லவில்லை. அவர்கள் குடியரசு அரசியல்வாதிகள். முடிக்குரிய ஆட்சியை நிராகரித்தார்கள். மகாராணியின் ஆட்சியை இன்றுவரை நிராகரிக்கிறார்கள். அவர்கள் பதவியை விட தமது கொள்கையில் இறுக்கமாக இருந்தார்கள். இன்றுவரை செயற்படுகிறார்கள்.   

பதவிக்காக சமரசம் செய்த குறுந்தேசியவாதிகள்  

இங்கு எம்மவர்கள் தமது சலுகைகளை அனுபவிப்பதற்காக இரண்டு வகையான நொண்டிச் சாட்டுகள் இதுவரை முன்வைக்கின்றனர். அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகள் அப்பாத்திரத்தை வகிப்பது ஆபத்தானது என்ற வாதமும், தற்போது தமிழர் நிலையை சர்வதேசத்திற்கு உண்மை நிலையை உணர்த்தும் உண்மையானவர்கள் தாமே என்ற வாதமுமாகும். ஆனால் இதே குறும்தேசியவாதிகளே உள்நாட்டுப் போருக்குத் தலைமை தாங்கி நடத்திய ராணுவத் தலைவரான சரத் பொன்சேகா அவர்களை நாட்டின் ஜனாதிபதியாகக் காண விரும்பிய நிகழ்வும் நடந்தது. இம் முடிவுகள் சர்வதேசத்திற்கு எவ்வாறான செய்தியை வழங்கியிருக்கும்? சர்வதேசம் நாட்டுப் பிரச்சனைகளை இவர்கள் மூலம்தான் அறிய முடியும் என்ற வாதம் போலியானது.   

எனவே தமிழ் – குறும் தேசியவாதம் பல வகைகளில் பரந்த தமிழ்பேசம் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகவே செயற்படுகிறது. குறிப்பாக கடந்த 2020 பொதுத் தேர்தலின் விளைவுகளின் பின்னணியில் அவதானிக்கும்போது உள்ளுர் அரசியலில் பாரிய பிளவுகளும், தமிழ், முஸ்லீம், மலையக அரசியல் என்பது தொடர்பற்ற ஒன்றாக பிளவுபட்டுச் செல்வதையும் காண முடிகிறது. சுதந்திரத்திற்குப் பின்னரான ஆரம்ப காலத்தில் காணப்பட்ட இணக்க நிலமைகள் தற்போது விரிசலடைந்தமைக்குத் தமிழ் – குறும் தேசியவாதமே பிரதான காரணியாக அமைந்தது.  

சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் காரணியாக அமையவில்லையா? எனக் கேள்வி எழுகிறது. பரந்த முற்போக்கான தேசியவாத போக்கினைத் தமிழ்த் தலைமைகள் கடைப்பிடித்திருந்தால் இறுக்கமான இணக்கம் ஏற்பட்டிருக்கும். சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தமிழ் அரசியலில் தனது மூக்கை நுழைக்க வாய்ப்பு இருந்திருக்காது.  

இதுவரை தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தமிழ் – குறும் தேசியவாதத்தின் பிளவுபடுத்திச் செல்லும் உட்கூறுகள் பற்றியதாக அமைந்தன. குறிப்பாக தமிழ்க் – குறும் தேசியவாதம் என்பது பாராளுமன்ற பதவிகளை மையமாக வைத்த அணுகுமுறைகளாகவும், அவற்றின் அடிப்படையில் எதிரிகளை உற்பத்தி செய்து பிளவுகளை ஏற்படுத்தும் போக்காகச்  சுருங்கியதால், ஜனநாயக உரிமைகள் குறித்த இலக்குகளை அவை தொலைத்துவிட்டன என்பதையே அடையாளம் காட்டப்பட்டது. இனி இவ்வாறான நடைமுறைகள் எவ்வாறு அரசியல் தீர்வுகளை எட்ட முடியாதவாறு தடுத்துள்ளன? என்பதை நோக்கிச் செல்லலாம்.  

சமஷ்டி அரசியல் 

சமஷ்டி அரசியல் அணுகுமுறை குறித்து சிங்கள அரசியல் ஒரு வகையாகவும், தமிழ் அரசியல் இன்னொரு வகையாகவும் திரிபுபடுத்திச் செல்வதால் அதன் அடிப்படைத் தன்மைகளை மறைத்துச் செல்வதாகவே நாம் காண வேண்டும். இரு தரப்பினருமே சமஷ்டி அரசியலின் ஜனநாயக அரசியல் அடிப்படைகளைத் தத்தமது குறுகிய உள் நோக்கங்களுக்காக மிகவும் மறைத்தே செல்கின்றன. சிங்கள பௌத்த பெரும் தேசியவாதம் சமஷ்டி அரசியலின் உட் பண்புகளை நன்கு அறிந்திருந்தும், திட்டமிட்டே அவற்றின் உள்ளடக்கத்தினைத் திரித்து பிரிவினையுடன் இணைத்து தமது இனவாத அரசியலை நடத்துகின்றனர்.  

அதே போலவே தமிழ் – குறும் தேசியவாதம் சிங்கள அரசியலோடு பேரம் பேசும் ஒவ்வொரு வேளையிலும் பிரிவினை அரசியல் கோஷத்தை வலியுறுத்தியே தனது பேரத்தைப் பேச விழைகிறது. உதாரணமாக, போர்க் காலங்களில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது தமது கோரிக்கைகளுக்கு அண்மித்த அளவிலான தீர்வுகளை முன்வைக்குமாறு அரசைக் கோரின. நாடு சமூக அளவில் மிகவும் பிளவுபட்டு சென்றிருந்த வேளையில், தமிழ் அரசியலும் அதன் ஜனநாயகப் பண்புகளை இழந்து அராஜகத்தின் பிடியில் சிக்கியிருந்த வேளையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் வெறுமனே எழுத்து வடிவில் அமையாது செயல் வடிவில் உருப்பெற வேண்டுமெனில் பயமுறுத்தும் பின்னணியில் தீர்வுகளை எட்ட முடியாது. ஆனால் தமிழ் அரசியல் என்பது விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டால் தமது அரசியல் வாழ்வு அதாவது பாராளுமன்ற அரசியல் அஸ்தமனமாகிவிடும் என்ற அடிப்படையில்தான் தீர்வுக்கான முனைப்புகள் காணப்பட்டன.  

இதற்கான உதாரணத்தை நாம் பார்க்கலாம். 1995இல் சந்திரிகா தலைமையிலான அரசு செயற்பட்டது. அவ் வேளையில் அவர் சமாதானத்தை ஏற்படுத்தும் வலிமையான கோஷங்களுடன் சிங்கள, தமிழ் மற்றும் இதர சமூகங்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்தார். ஆனாலும் அவரது கட்சிக்குள் காணப்பட்ட சிங்கள பௌத்த பேராதிக்க சக்திகளின் அழுத்தங்கள் அவரது சமாதான முயற்சிகளுக்குப் பெரும் இடையூறாக அமைந்தன. இவ் வேளையில் எதிர்க்கட்சியாகிய ஐ தே கட்சியுடன் இணைந்து ஓர் தேசிய அரசை உருவாக்குவதற்கான முயற்சிகள் திரைமறைவில் எடுக்கப்பட்டன. இதன் பின்னணியில் பிரித்தானிய கன்சவேட்டிவ் கட்சியின் தலைவராகச் செயற்பட்ட டாக்டர். லியம் பொக்ஸ் (Liam Fox) செயற்பட்டார்.  

இதன் பிரகாரம் சந்திரிகா தலைமையிலான பொதுஜன முன்னணி அரசிற்கும், எதிர்க்கட்சியாகிய ஐ தே கட்சிக்குமிடையே புதிய அரசியல் யாப்பு வரைவதாகவும், அதில் வடக்கு, கிழக்கிற்கான பரந்த அதிகார பரவலாக்க அடிப்படையிலான தீர்வும் ஏற்கப்பட்டது. ஆனாலும் இத் தீர்வினைத் தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய அமைப்புகள் நிராகரித்தன. ஏனெனில் சந்திரிகா அவர்களால் தனித்து முன்வைக்கப்பட்ட அரசியல் பொதியை விட இப் பொதியில் பல பகுதிகள் நீக்கப்பட்டிருந்தன என்பதே குற்றச்சாட்டாக அமைந்தது.  

இத் தீர்வு தொடர்பாக தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளில் மூன்று அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றன.  

1.      அதிகார பரவலாக்கத்திற்கான பிரதான அலகு 

2.      இலங்கை அரசுக் கட்டுமானத்தின் வடிவம். 

3.      அரச காணிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் 

என்பனவாகும். இதில் அதிகார பரவலாக்கத்திற்கான பிரதான அலகு குறித்த விவாதங்களின்போது வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்புக் குறித்த விவாதங்கள் எழுந்தன. அதில் இரு மாகாண சபைகளும் பிரிக்கப்பட்டே இருத்தல் வேண்டும் எனவும், அதற்குப் பதிலாக இரண்டு சபைகளையும் இணைத்த இடைக்கால நிர்வாகம் ஒன்றினை ஐந்து வருடங்களுக்கு மட்டும் செயற்படுவதாகவும், அந்த 5 வருடங்களின் பின்னர் இணைவு தொடர்பாக கிழக்கில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்துவதெனவும் முடிவு செய்தார்கள்.  

ஆனால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடுவதை தமிழ்க் கட்சிகள் ஏற்காதது மட்டுமல்ல இணைப்பு என்பது பேரம் பேசுவதற்கான காரியம் அல்ல எனவும், அது தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதில் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை எனவும் தெரிவித்திருந்தது.  

இப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் கட்சிகள் பங்குதாரிகளாக இல்லாத போதிலும் பிரதான இரு கட்சிகளின் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாகக் காணப்பட்ட நிலைப்பாடுகள் கவனத்திற்குரியன. அரசுக் கட்டுமானம் தொடர்பான வாதங்களில் சந்திரிகா அவர்களின் தீர்வுப் பொதியில் ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என வர்ணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஐ தே கட்சி அவ்வாறான விளக்கத்தை எதிர்த்தது.  

சந்திரிகா அவர்களால் முன்வைக்கப்பட்ட அரசியல் பொதி மிகவும் முன்னேற்றகரமானது என இன்று வர்ணிக்கும் தமிழ்க் கட்சிகள் வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பான பிரச்சனையைக் காட்டி அவருக்கு ஆதரவளிக்க மறுத்தனர். ஆனாலும் தமிழ்க் கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலும் அல்லது மறுத்தாலும் பரவாயில்லை. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக அவர் தெரிவித்தார். அவ்வாறு அவர் சமர்ப்பித்த வேளையில் ஐ தே கட்சியினர் கிழித்து எறிந்தனர்.  

தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்த முயற்சிகளில் மிகவும் முன்னேற்றகரமான தீர்வு எனக் கருதப்படும் இவை தமிழ்க் கட்சிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டன? இதே போலவே 13வது திருத்தம் தொடர்பாக தெளிவான நிலைப்பாடு இதுவரை இல்லை. அதன் காரணமாக மாகாண நிர்வாகங்கள் முழுமையாகச் செயற்பட முடியாத அளவிற்கு முடக்கப்பட்டன. இன்றுவரை பிரிக்கப்பட்ட நிலையில் தொடரும் வடக்கு, கிழக்கு நிர்வாகங்கள் குறித்து குறிப்பாக சட்ட சிக்கல் காரணமாகப் பிரிக்கப்பட்டதாகக் கருதும் இவ் வேளையில் சட்டச் சிக்கல்களை நீக்க எடுத்த முயற்சிகள் என்ன? சிறந்த நிர்வாகத்தை வழங்க முடிந்ததா? ஏன்? 

இன்று வரை தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளில் சந்திரிகாவின் பொதியின் அம்சங்களையும் உள்ளடக்கிய தீர்வுகளை முன்வைப்பதாக் கூறும் தமிழ் தரப்பினர் அன்று அதனை ஏன் எதிர்த்தார்கள்? இதற்கான ஒரே பதில் பாராளுமன்ற பதவிகள் பறிபோகலாம் என்ற அச்சத்தின் விளைவேயாகும். தமிழ் – குறும் தேசியவாத அரசியல் நிர்ணயமான தீர்வு குறித்த சந்தர்ப்பங்களில் அதன் பரந்த உள்ளடக்கத்தின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொள்ளாது ஏன் எதிர்த்தார்கள்? தமிழர்கள் மத்தியில் காணப்படும் குறும் தேசியவாதம் என்பது தமிழ் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதைத் தவிர வேறு முடிவுக்குச் செல்ல முடியவில்லை.  

சமஷ்டி அடிப்படைகள் 

சமஷ்டிக் கோரிக்கை என்பது நாட்டைப் பிளவுபடுத்த உதவவதாகவும், சிங்களப் பெரும்பான்மையினர் அதனை ஏற்கமாட்டார்கள் எனவும், எனவே மாற்றுத் தீர்வுகளை நோக்கிச் செல்லுமாறு சில தரப்பினர் வற்புறுத்துவதைக் காண முடிகிறது. இவ் விவாதங்களில் காணப்படும் யதார்த்த நிலமைகள் என்ன?  

இக் கோரிக்கையில் இரு சாராரும் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் சமஷ்டிக் கோரிக்கைக்கு எதிராகவே செயற்படுகின்றனர். முதலில் சமஷ்டியைக் கோரும் தமிழ் – குறும் தேசியவாதிகள் அக் கோரிக்கையின் உள்ளடக்கம் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. சமஷ்டி என்பது பல்லினங்கள் வாழும் சமூகத்தில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைத் தவிர்க்கும் ஜனநாயக அணுகுமுறை என வர்ணிக்கப்படுகிறது. சமஷ்டி என்பது ஜனநாயகத்தினைப் பலப்படுத்தும் வழிமுறை என்பதால் அவ்வாறாக முன்வைக்கும் சக்திகள் மத்தியில் ஜனநாயக நெறிமுறை ஏனையோரை விட அதிக அளவில் பின்பற்றப்பட வேண்டும். இதர சமூகங்களுடனான இணைப்புக் குறித்து அதிக ஆர்வம் காட்டப்பட வேண்டும். பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் சகல சமூகங்களும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளும்போதுதான் சமஷ்டியும் செயற்பட முடியும்.  

சமஷ்டி என்பது சுய நிர்ணய உரிமைக்கான அடிப்படை விளக்கத்தைத் தருகிறது. ஒரு நாடு குறிப்பாக பல்லினங்களைக் கொண்டிருக்கும் நாட்டில் எண்ணிக்கைப் பெரும்பான்மையுடைய இனம் இதர சிறுபான்மை இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் வகையில் ஜனநாயக நெறிமுறைகளைத் தவறான முறையில் பயன்படுத்துமாயின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் அத் தேசிய இனங்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இங்கு எண்ணிக்கைப் பெரும்பான்மையினரின் பல்லின விரோத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டமாகவே அது அமைகிறது. சகல மக்களினதும் ஜனநாயகப் பாதுகாப்பே சமஷ்டி அரசியலாகும்.    

ஒரு தேசத்திற்குள் வாழும் பல்லின சமூகம் இவ்வாறான நெருக்கடிச் சூழலில் தனது சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இங்கு ஜனநாயகம் என்பது எண்ணிக்கை சார்ந்தது அல்ல. அது ஒவ்வொரு தனி மனிதனதும், கூட்டு மக்கட் பிரிவினரதும் சுயநிர்ணய உரிமை சார்ந்ததாகும். ஒரு தேச உருவாக்கமும், அரச உருவாக்கமும் இணைந்த ஜனநாயகப் பயணமே சமஷ்டி அரசியலாகும். இலங்கை என்பது அங்கு வாழும் சகல இனப் பிரிவுகளுக்குமான ஜனநாயக அடிப்படைகளைப் பாதுகாக்கத் தவறும் போது சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாத பாதையாகிறது. இங்கு சமஷ்டி என்ற சொற்பதம் என்பதை விட அதன் உள்ளடக்கம் என்பதே முக்கியத்தவம் பெறுகிறது. ஆனால் தமிழ் – குறும் தேசியவாதம் அதன் உள்ளடகத்தை எப்போதோ தொலைத்து வெறுமனே வார்த்தையில் தொங்கி நிற்கிறது. 

இலங்கை என்ற ஒருமித்த நாட்டிற்குள் வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிப்பதோடு மட்டுமல்லாமல், அம் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளைப் புதைக்கும் வகையில் இரத்த ஆறுகளை ஓட விடுவதும், ராணுவத்தை ஏவி அந்நியர்களை அழிப்பது போல் துவம்சம் செய்வதும், அம் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை ராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தி அந்நியர்களைத் தோற்கடித்ததாக மகிழ்ச்சி கொள்வதும் போன்ற நிகழ்வுகள் ஒரே நாட்டிற்குள் வாழ முற்படும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை. இவை எண்ணிக்கைப் பெரும்பான்மைத் தீர்மானங்களின் மூலம் அணுக முடியாதவை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல, ஆறில் ஐந்து பெரும்பான்மையானாலும் ஜனநாயக விரோதமானது. 

பல்தேசியங்கள் வாழும் இலங்கையில் மேற்குறிப்பிட்டவாறான ஜனநாயக மீறல்களின் பின்னணியில் இவ்வாறான ஒடுக்குமுறையிலிருந்து விடுபட விரும்பும் மக்கள் சமஷ்டி அடிப்படையில் சுயநிர்ணய உரிமையைக் கோருவது எண்ணிக்கைப் பெரும்பான்மையினரின் அமைதியைக் குலைக்குமெனில் அவர்களே அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வெறுமனே எண்ணிக்கைப் பெரும்பான்மை என்ற காரணத்தால் தமது சிங்கள பெருந்தேசியவாத சிந்தனைகளுக்கு இதர தேசிய இனங்கள் இடையூறாக இருப்பதாகக் கருதினால் தவறு அவர்களுடையதே தவிர பல்லினங்களின் தவறு அல்ல.                   

தமிழ் – குறும் தேசியவாதம் இவ்வாறாக கோட்பாட்டு அடிப்படையில் மிகவும் இறுக்கமான வகையில் செயற்படாமலும்,  இதர தேசியங்களின் நலன்களைக் கவனத்தில் கொள்ளாது செயற்படுவதால் எண்ணிக்கைப் பெருந் தேசியவாதம் இலகுவாகவே இதர இனங்களையும் ஒடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று முஸ்லீம் மக்கள் அவ்வாறான பலவீன நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெறுமனே அம் மக்களின் அரசியல் தலைவர்களைக் குறை கூறுவதில் பலனில்லை. ஏனெனில் பௌத்த சிங்கள பெருந்தேசியவாதம் தனது தேவைக்கு ஏற்றவாறு நெருங்கியும், பிரிந்தும் தனது சூழ்ச்சி அரசியலை நடத்தி வருகிறது.  

வாசகர்களே! 

சமஷ்டி அரசியல் என்பது ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை சார்பானது. அதனைச் சிங்கள பௌத்த பெரும் தேசியவாதத்தின் சம்மதத்திற்காக விட்டுக் கொடுக்க முடியாது. இவை தேசத்தின் சகல இனக் குழுமங்களின் அடிப்படை ஜனநாயக உரிமை சம்பந்தமானது. இப் பிரச்சினையில் தமது போக்கை மாற்ற வேண்டியவர்கள் பௌத்த சிங்கள பெருந்தேசியவாதிகளே தவிர ஜனநாயக சக்திகள் அல்ல.  

இப் பிரச்சனையில் தமிழ் – குறும் தேசியவாதிகள் மாபெரும் தவறிழைத்து வருகிறார்கள். சமஷ்டி, சுயநிர்ணய உரிமை எனும் ஜனநாயக அடிப்படைகளைத் தமது  பிழைப்புவாத அரசியலிற்கே தமிழ் – குறும் தேசியவாதிகள் பயன்படுத்துகின்றனர். சமஷ்டிக் கோரிக்கையை பிரிவினைவாத அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதும்,  அதனடிப்படையில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளையும் பிரிவினைக் குரலோடு உரத்து ஒலிப்பதும் ஜனநாயக விரோத செயல்களாகும். இங்கு ஜனநாயகமற்ற சமஷ்டிக் கோரிக்கை என்பது சந்தர்ப்பவாத அரசியலாகும்.   

இன்று காணப்படும் அரசியல் பின்புலத்தில் குறிப்பாக இலங்கையில் காணப்படும் ஜனநாயக விரோதச் சூழலில் சமஷ்டி என்பது ஒட்டுமொத்த தேசத்தில் வாழும் சகல இனப் பிரிவுகளினதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கோருவதாக அமைதல் அவசியமானது. சுயநிர்ணய உரிமை என்பது மக்களின் இறைமை அதிகாரம் தொடர்பானது. ஆட்சியாளர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகிறார்கள். ஆனாலும் இறைமை அதிகாரம் தொடர்ந்தும் அந்த மக்களிடமே உள்ளது. ஆனால் இன்று மக்களிடம் ஆணைபெற்ற அதிகார வர்க்கம் அந்த மக்களின் இறைமை அதிகாரத்தை மீறும்போது இழந்த சுயநிர்ணய உரிமையைப் பெறுவது தவிர்க்க முடியாததாகிறது.  

(தொடரும்.)