(மூத்த செய்தியாளர் பி.கே பாலச்சந்திரனின் குறிப்பு தமிழில் சீவகன் பூபலாரட்ணம்)
இலங்கையால் கொவிட் பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க, செல்வந்த வரி, அரச முதலீடு மற்றும் பற்றாக்குறை நிரப்பு நிதி ஆகியவற்றை பொருளாதார வல்லுனர் அமைப்பு ஒன்று பரிந்துரைத்துள்ளது.
கொரொனாவால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றில் தங்கியிருக்கக்கூடாது என்று பொருளாதார ஜனநாயகத்துக்கான கூட்டமைவு (Collective for Economic Democracy (CED)) என்ற அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையின் வரவு செலவுத்திட்டத்துக்கு முன்னதான அறிக்கை ஒன்றிலேயே அந்த அமைப்பு அவ்வாறு பரிந்துரைத்துள்ளது.
இவற்றுக்கு பதிலாக பற்றாக்குறையை நிரப்புவதற்கான உள்ளூர் நிதி ஏற்பாடு, அரச முதலீடு, எதிர்பாராத உள்ளூர் மற்றும் உலக நெருக்கடியை முகங்கொடுக்க உள்ளூர் முதலீடு மற்றும் உள்ளூர் தேவையை கையாழுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
இலங்கை மிகவும் மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதனை சரியான வழியில் செலுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தின் புதிய வரவு
செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டாக வேண்டும்.
‘இந்த பொருளாதார நெருக்கடி இலங்கையில் உள்ளூரிலும் உலக மட்டத்திலும் இருக்கும் நீண்டகாலப் போக்கை பிரதிபலிக்கின்றது. இலங்கையை பொறுத்தவரை 1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அறிமுகம் செய்யப்பட்ட நவதாராளவாதக் கொள்கை, இதுவரை எட்டப்படாத உலக சந்தையை தொடமுடியும் என்ற உத்தரவாதத்தை இலங்கை மக்களுக்கு கொடுத்தது. ஆனால், இன்று நாற்பது வருடங்களுக்கு பின்னர் பார்க்கின்ற போது இந்த நவதாராளவாதக் கொள்கை செல்வந்த இலங்கையர்களுக்கு மாத்திரமே பொருந்திப்போயிருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது. அதற்குப் பின்னர்கூட அது ஒப்பீட்டளவில் சுபீட்சம் மிக்க பூகோள சூழலில் மாத்திரமே செயற்படும் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், கொவிட் 19 தொற்றுநோயால் உலகம் பீடிக்கப்பட்ட சூழ்நிலையில் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் அந்தக் கொள்கை முற்றாக வேலைசெய்ய முடியாத நிலையை எட்டியுள்ளது.’ என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
நவதாராளவாதத்தின் மூன்று தூண்கள்
நவதாராளவாத காலகட்டத்தில், 1990 களில் உலக பொருளாதாரம் மூன்று முக்கிய தூண்களில் கட்டியமைக்கப்பட்டது. (1) சுதந்திர வர்த்தகம் (2) நிதிமயமாக்கல் மற்றும் (3) தனியார் மயப்படுத்தல் ஆகியவையே அவை. ஆனால், இந்த மூன்றுமே இன்று ஆட்டம் கண்டுள்ளன.
சுதந்திர வர்த்தகம் – சுதந்திர வர்த்தகத்தைப் பொறுத்தவரை, நவதாராளவாதத்தின் கீழ் பூகோள வர்த்தகம் எதிர்பார்க்கப்பட்டதை விட மிக மோசமாக ஸ்திரமற்றுக் காணப்படுகின்றது. ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டால், ஏற்றுமதி வளர்ச்சி கண்ட சீனா போன்ற நாடுகளைப் பொறுத்தவரை, கடன்களால் உந்தப்பட்ட அமெரிக்காவின் வாடிக்கையாளரின் வாங்குதிறனில் அவை தங்கியிருந்தன. உண்மையான ஊதியம் மந்தமாக இருந்த போதிலும் அமெரிக்க வாடிக்கையாளர்கள் பெருமளவு பணத்தை கடனாக பெற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால், இலங்கையைப் போன்ற ஏற்றுதியை அதிகரித்த நாடுகளுக்கு அந்தக் காலகட்டம் ஒப்பீட்டளவில் ஒளிமயமான காலம் போலத் தென்பட்டது. தமது நாட்டில் தொழிலாளர்களின் ஊதியங்களை குறைத்து, தயாரித்த பொருட்களை அவர்கள் மேற்கத்தைய நாடுகளில் விற்க நேர்ந்தது. ஏனெனில் அவர்களின் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அவற்றை வாங்கும் சக்தி இருக்கவில்லை.
எப்படியிருந்த போதிலும் முதன் முதலாக 2008இல் பிரச்சினை மெதுவாக வெடிக்கத் தொடங்கியது. அமெரிக்க வாடிக்கையாளரின் கடன்கள் நிலைத்திருக்க முடியாத நிலை தெளிவுபடத்தொடங்கியது. அங்கு வீட்டுச் சந்தையும் வீழ்ச்சியடைந்தது. 1930இன் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு அடுத்தபடியாக அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா மீண்டும் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது.
நிதிமயமாக்கல் – பொருளாதார வீழ்ச்சியை நிதிமயமாக்கல் அதிகரிக்கச் செய்தது. இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைக்கும் என்று பூகோள மயமாக்கல் கோடிட்டுக் காட்டினாலும், யதார்த்தத்தில் அப்படியான உதவிகளுக்கு மேற்கத்தைய நாடுகளையே எல்லோரும் எதிர்பார்க்க நேர்ந்தது. சீனா போன்ற மிகச் சில ஆசிய நாடுகள் மாத்திரமே அந்த உதவும் பட்டியலில் இருந்தன. அதேவேளை, நிதி எதிர்வுகூறல் செய்பவர்கள் முதலீட்டுச் சந்தையை ஊக்குவிக்காமல், பணத்தை உள்ளே கொண்டுவந்து அதனை உடனடியாக அந்த நாடுகளில் இருந்து வெளியே கொண்டு செல்லத்தொடங்கிவிட்டனர்.
எதிர்வுகூறலை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான முதலீடுகள் வீட்டுமனை வணிகத்திலேயே செய்யப்பட்டன. ஏனைய துறைகள் ஒரு ஸ்திரமான அடிப்படையை உருவாக்கத் தவறிவிட்டன. அவசரப் பணம் காரணமாக பல இடங்களில் பொருளாதார வீழ்ச்சிகள் பதிவாகத் தொடங்கின. 1982இன் மெக்சிகோ நெருக்கடி, 1997இன் ஆசிய நிதி நெருக்கடி மற்றும் 2000 ஆம் ஆண்டின் ஆர்ஜண்டீனா நெருக்கடி போன்று அந்த நெருக்கடிகள் உருவெடுத்தன. இப்போது கொவிட் 19 தொற்று நோயும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல் இலங்கையும் இப்படியான பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இது இலங்கையை ‘சவரின் டெப்ட் பபிள்’ நிலைக்கு கொண்டு சென்றது. (அதாவது ஒரு நாடு தனது கடனை கட்ட முடியாத நிலையை எட்டுவதுதான் அது. அதேவேளை, அது ஒரு நாளில் ஏற்படும் நிலை அல்ல. படிப்படியாக ஏற்பட்டுவரும் நிலை. ஆனால், அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அரசியல் காரணங்களுக்காக அந்த நிலையை பொருட்படுத்தாமல் தொடர்ந்தால் அது மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு நாட்டை இட்டுச் செல்லும்)
தனியார் மயப்படுத்தல் – நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான ஏற்பாடாக அரச நிறுவங்களை தனியார் மயப்படுத்தும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. தாங்க முடியாத கடனில் இருந்த மேற்கத்தைய நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற சக்திமிக்க சர்வதேச நிறுவனங்கள், வலி மிகுந்த கட்டமைப்புச் சமரசங்களை பரிந்துரைத்தன. முடிந்த நாடுகள் தமது கடன்களை கட்டுவதற்காக, செலவுகளை வெட்டுமாறு அவை பரிந்துரைத்தன. இலவச சமூக சேவைகள் வெட்டப்பட்டன. அத்துடன் 2008 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் யூரோ நெருக்கடி ஆகியவற்றால் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சினையானது.
எப்படியிருந்தபோதிலும் சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் அண்மைக்காலமாக தமது பழைய பரிந்துரைகளில் இருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளன. இலங்கை போன்ற நாடுகளில் நிதி ஒருங்கிணைத்தல் என்ற அடிப்படையில், அரசாங்க பற்றாக்குறையை குறைத்து, கடனை ஒருங்குபடுத்துவதற்கு ஓரளவு பரிந்துரைத்தாலும், அந்த சர்வதேச நிறுவனங்கள் ‘தமது பரிந்துரைகள்’, ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை விட மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று உணரத்தொடங்கியுள்ளன.
2019இல் 47 வீதமான இலங்கையின் வெளிக்கடன்கள் நிதிச் சந்தையிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் தனியார் நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்தே பெறப்பட்டுள்ளன.
இது சிரமம் என்று இலங்கை கண்டால், கடனை திரும்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதனை திரும்பிச் செலுத்துவதற்கான வேறு வகையான ஏற்பாடுகளை இரு தரப்பு பேச்சுக்கள் மூலமாக சீனா போன்ற கடன் வழங்கியவர்களிடம் செய்துகொள்ள முடியும்.
உலக மட்ட பொருளாதர வீழ்ச்சி இந்த சர்வதேச நிறுவனங்களின் உதவிகளையும் சுருங்கச் செய்யும்.
கொவிட் 19இன் தாக்கம் – மேலே சொன்ன பொருளாதார போக்குகளை கொவிட் 19 தொற்றும் அதன் மூலமான பொருளாதார வீழ்ச்சியும் தீவிரப்படுத்தியுள்ளன. உலகம் மீண்டும் ஒரு தீவிர பொருளாதார சீர்குலைவை நோக்கிச் செல்கிறது. உண்மையில் இது ஒரு முதலாளித்துவ நெருக்கடிக்கான குணாதியசத்தை காண்பிக்கிறது. தொற்றுநோயின் தீவிரத்தால் அது மேலும் மோசமடைகிறது.
இதன் விளைவாக உலக ஒழுங்கு பெரும் மாற்றத்தை கண்டு வருகின்றது. தனது எல்லைக்குள் கொவிட் 19 பரவலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தருணத்துக்காக சீனா காத்திருக்கிறது. 2020 இல் சாதகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 4 வீதமாகவும் அது பேணி வருகின்றது.
எப்படியிருந்த போதிலும் தனது வெளிநாட்டு பட்டுப்பாதை திட்ட ஏற்பாடுகள் மற்றும் தனது பாரிய உள்ளூர் சந்தை ஆகியவற்றுக்கு மத்தியில் உலகெங்கும் தனது முதலீடுகளை அதிகரிக்க, மேலதிக முதலீடு சீனாவுக்கு தேவைப்படுகின்றது. உலகெங்கும் மக்களின் செலவு செய்வதற்கான தகமை குறைந்துவரும் அண்மைய காலத்தில் சீனப் பொருளாதாரத்தின் மீதும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
இலங்கைக்கான தீர்வு – பொருளாதார ரீதியாக இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் மிகவும் அவசரமானவை. இலங்கையின் பொருளாதாரம் உள்நோக்கியவகையிலும் வெளிநோக்கிய வகையிலும் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றது.
முன்னெப்போதும் இல்லாத கடன் சுமையை இலங்கை எதிர்கொள்கிறது. அண்மைகாலத்தில் இலங்கையின் மொத்தக் கடன் அதன் மொத்த உள்ளூர் உற்பத்தியில் 87வீதம்(2019). வரும் ஆண்டில் அது கிட்டத்தட்ட 100 வீதமாக அதிகரிக்கும். அதன் விளைவாக, வருடவருடம் தனது மொத்த உள்ளூர் உற்பத்தியில் 6 முதல் 7 வீதத்தை இலங்கை கடனாக கட்டியாக வேண்டிய நிலைவரும். அதாவது வட்டி மாத்திரமே இந்த தொகை, கடன் முதல் அப்படியே இருக்கும். கடன் கழியாது. 2020/2021 வருட வருமானத்தில் மொத்த உள்ளூர் உற்பத்தியில் பெரும் தொகையாக 10 வீதம் கடனாக மாத்திரம் கட்டியாக வேண்டும். இந்த நெருக்கடி வருவதற்கு முன்னதாகவே அரசாங்க வருமானம் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. அதன் பின்னர், அந்தப் போக்கு மேலும் தீவிரமடையும்.
வெளிவட்டார நிலையை எடுத்துக்கொண்டால், இலங்கையின் சுமார் 50 வீதமான அரசாங்க கடன் வெளி மூலங்களில் இருந்தே பெறப்பட்டதாகும். அத்துடன், இலங்கையின் இறக்குமதி அதன் ஏற்றுமதியை விட இரு மடங்காகும். அது பெரும் அழுத்தத்தை கொடுக்கப்போகிறது. சிலவேளை கடன்களை முற்றாக கட்ட முடியாத நிலைக்கே இலங்கை தள்ளப்படலாம். இந்த நிலைமைகளோடு, சுற்றுலாத்துறை மூலமான வருமானம் கிட்டத்தட்ட பூச்சியமான நிலைமை, வெளிநாட்டு வருமானம் குறைதல், ஆகியவையும் சேர்ந்துகொள்ளும். அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வணிகச் சமனின்மை இதற்குக் காரணம்.
இதன் காரணமாக ‘கடன் பெறு தகமையை கணிப்பிடும் நிறுவனங்கள்’ இலங்கையை தமது பட்டியலில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளன. இதனால், இலங்கை இந்த விடயத்தில் இருதரப்பு மற்றும் பல் தரப்பு கொடையாளிகளின் உதவிகளை நாடியாக வேண்டும். இது முடியாமல் போனால், பழைய கடன்களுடன், புதிய கடன்களையும் சேர்த்துக்கொள்வது பெரும் சிரமமாகிவிடும்.
இலங்கையின் பொருளாதாரம் 5-10 வீதத்துக்குள் சுருங்கும் வாய்ப்பு உள்ளது. அரசாங்கத்தின் முன்னைய மதிப்பீடுகள் குறைத்துப் பார்க்கப்படும் அல்லது புறக்கணிக்கப்படும்.
கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத்தைவிட 9 வீதம் மாத்திரமே குறைவாக, இந்த வருடத்தில் 947 மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறுகின்றது. இவை மேலதிக பதிவுகள்; வழங்கலில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக முழுமையான பதிவாக இருக்க முடியாது என்றும் இனிமேல்தான் நெருக்கடியின் உண்மையான வடிவத்தை அதிகாரிகள் உணர்வார்கள் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இலங்கை தனது வருமானத்தில் 80 வீதத்தை மறைமுக வரிகள் மூலமே பெறுகின்றது. வாங்குதலை அடிப்படையாகக்கொண்ட ஏயுவு வரி ஆகியவை அதில் அடக்கம். இதன் அர்த்தம் பொருளாதாரம் இறங்குமுகத்தை சந்தித்து மக்கள் குறைவாக செலவு செய்யத்தொடங்க, அரசாங்க வருமானமும் குறைந்துபோயுள்ளது என்பதாகும்.
அத்துடன், வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதற்கான வெளிநாட்டு நாணயக் கையிருப்பு வெளியில் ஏற்படும் பொருளாதார அதிர்வுகளால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, இறக்குமதிக்கு இலங்கை சில தடைகளை போட்டுள்ளது. இந்தத் தடைகள் காரணமாக இலங்கையின் வருமானத்தில் பெரும்பகுதியாக இருந்து வரும் இறக்குமதி தீர்வைகள் மூலமான வருமானமும் அழுத்தங்களை சந்திக்கின்றது.
முதலீட்டுக்கான தேவை – அடுத்த வருடத்துக்கான வளர்ச்சி பற்றி பெரும் அழகான பெறுமானங்கள் மக்களுக்கு காண்பிக்கப்பட்டாலும், போதுமான மேலதிக முதலீடுகள் இல்லாமல், பாதகமான தாக்கங்கள் ஒருமித்து எதிர்கால பொருளாதார வளர்ச்சியை தாமதப்படுத்தும். வேலை இழப்புக்கள் காரணமான வாடிக்கையாளரின் வாங்கும் திறன் குறைவதால், உள்ளூர் பொருளாதாரம் ஒரு மோசமான சுற்றை உருவாக்கும்.
பொருளாதார அழுத்த காலங்களில் தனியார் முதலீடுகள் வராவிட்டால், அரசாங்கந்தான் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் நிதியை இடம்மாற்றி முதலீடு செய்ய வேண்டும். தனது செலவீனங்கள் மற்றும் முயற்சிகள் மூலம் அது அதனை செய்தாக வேண்டும். குறிப்பாக தற்போது மொத்த உள்ளூர் உற்பத்தியில் 7 வீதமாக இருக்கும் விவசாயத்துறையில் இப்படியான முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். பொருளாதார வீழ்ச்சி மற்றும் தொற்று நோய் ஆகியவை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உணவுப் பிரச்சினையை தீர்க்கவும், உணவுப் பாதுகாப்புக்கும்
விவசாயத்துறையிலான முதலீடு மிகவும் அவசியமாகும்.
வருமானம் குறித்த கேள்விக்கான ஒரு தீர்வாக செல்வ மற்றும் சொத்து வரியை அதிகரிக்கலாம். ஆனால், ஊழியர்களின் 20 வீத பங்களிப்பில் உருவான ஊழியர் சேமலாப நிதி போன்றவற்றில் கைவைக்கக்கூடாது. ஆகவே நிதியை வேறு எங்காவது தேட வேண்டும்.
செலவு வெட்டு ஒரு தீர்வல்ல – மிகவும் நெகிழ்வு நிலையில் உள்ள மக்கள் பட்டினியால் பாதிக்கப்படும் நிலை உருவாவதற்கான சாத்தியங்கள் இருக்கையில், தற்போதைய நெருக்கடிக்கு ‘செலவு வெட்டு’ ஒரு தீர்வாக இருக்க முடியாது. அதேவேளை, அரசாங்கம் தனது வணிக முக்கியஸ்தர்களின் செல்வந்த சமூகத்தை அந்நியப்படுத்தவும் பயப்படுகின்றது. ஆனால், யதார்த்தம் என்னவென்றால் முதலாளித்துவம் நெருக்கடி நிலையை எட்டும்போது, முதலாளிகள் ஒருவர் மற்றவரின் சந்தைப் பங்கை பாய்ந்து பறித்துக்கொள்ளும் நிலையை தடுக்கவும், பொருளாதார வீழ்ச்சியை தடுக்கவும் ‘வியத்தகு முறையிலான மறுசீரமைக்கப்பட்ட உற்பத்திதான்’ ஒரே வழியாக அமையும். அதற்கு முதலீட்டை ஊக்குவிக்கவும் உள்ளூர் தேவைகளுக்கு மானிய அடிப்படையில் உதவவும் பெருமெடுப்பிலான அரசாங்க தலையீடு அவசியமாகும்.
ஜனநாயகத் தீர்வு – இவற்றுக்கு நீண்ட கால அடிப்படையிலும் உடனடியானதுமான தீர்வுகளை இலங்கையின் வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்க வேண்டும். நேரமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. அரசாங்கத்துக்கு பின்வரும் இரண்டில் ஒரு வழிதான் இருக்கிறது.
அதாவது…
- செல்வந்தர் வரி போன்றவற்றை அதிகரிப்பதற்கும், மக்களின் உண்மையான தேவைகளை இலக்கு வைத்தும் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவும் பெருமெடுப்பிலான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும்.
- அல்லது; காலவதியாகிப்போன வெளிநாட்டு முதலீட்டுக்கான கோரிக்கைகள் மற்றும் ஏற்றுமதியை மையப்படுத்திய வளர்ச்சி போன்ற விடயங்களை பேசிக்கொண்டு பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டியதுதான்.