— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
“இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
வாசிகசாலையின் கட்டுமானப் பணிகளுக்குக் காசு தேவைப்பட்டது. தென்னம் கிடுகினால் ஓர் அறையோடு கூடிய மண்டபமாக சின்ன அளவிலே முதலில் அமைப்பது என்று தீர்மானித்தோம். ஆரம்பச் செலவுகளுக்காக ஊரில் இருந்த உத்தியோகத்தர்களையும், உழைக்கும் அண்ணன்மார்களை நாடினோம். இப்போதையைப் போல படித்தவர்கள், பணக்காரர்கள், வர்த்தகர்கள், வள்ளல் குணம் கொண்டவர்கள் அப்போது ஊரில் அதிகம்பேர் இருந்ததில்லை.
பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்களிப்புச் செய்தார்கள். பண உதவிகள் சிறிய தொகை 50 சதங்களாகவும் பெரிய தொகை இரண்டு ரூபாக்களாகவும் இருந்தன. ஒருநாள் நாங்கள் பழைய பஸ் நிலையத்தடியில் தெருவோரம் நின்று பணம் சேகரித்துக்கோண்டிருந்தபோது அருகேயிருந்த மிளகாய் அரைக்கும் கடையடியில் யாருடனோ பேசிக்கோண்டிருந்த ஆறுமுகவடிவேல் அண்ணனைக் கண்டோம் நேரே அவரிடம் சென்று விடயத்தை எடுத்துச் சொன்னோம். எம்.ஜீ.ஆர் மன்றம் அமைப்பதற்கு காசு சேகரிக்கிறோம் என்று நாங்கள் வாய்திறந்ததுதான் தாமதம், உடனேயே, “இதுக்குக் குடுக்காம வேறென்னத்துக்கு குடுக்கிற” என்று சொல்லிக்கோண்டே இரண்டு ரூபாய்த் தாளைச் சட்டைப்பையிலிருந்து எடுத்துத்தந்தார். அந்த நாட்களில் இரண்டு ரூபாய் அன்பளிப்பாகக் கிடைப்பது விந்தையான விடயம்! சந்தோசத்தில் எங்களின் உள்ளம் மகிழ்ந்தது. சகலருக்கும் உற்சாகம் பிறந்தது.
ஆறுமுக வடிவேல் அண்ணன் கூட்டுறவுப் பரிசோதகராக இருந்தார். அவர் ஒரு கணிதப் புலி. அவரிடம் பலர் தூயகணிதம் படித்தார்கள். எப்போதும் அவர் சுறுசுறுப்பாகவே இருப்பார். எனக்கு அவரிடமும், அவருக்கு என்னிடமும் இனம்புரியாததோர் மரியாதை எப்போதும் இருந்து வந்தது. எம்.ஜீ.ஆர். மன்றத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அரங்க அண்ணனும், எங்கள் கலைப் பயணத்தில் பிற்காலத்தில் இணைந்துகொண்ட புலேந்திர அண்ணனும், ஆறுமுகவடிவேல் அண்ணனுக்கு மிகவும் அன்னியோன்னிய நண்பர்களாக இருந்தார்கள். ஆறுமுக வடிவேல் அண்ணனை அவர்கள் “குரு” என்றுதான் அழைப்பார்கள்.
எம்ஜீஆர் மன்றம் அமைத்தபின்னர், அதனை நடத்துவதற்கும், எத்தனையோ உதவிகளை ஆறுமுக வடிவேல் அண்ணன் இன்முகத்தோடு, இயன்றவரை செய்துள்ளார். அவற்றின் தொடர்பாக, இளம் நாடகமன்றத்தில் நான் எழுதி இயக்கிய “அளவுக்கு மிஞ்சினால்” என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் அவர் நடித்தும் இருக்கிறார். முன்னர் ஒருபோதும் நாடகங்களில் நடித்திராத அவர் முழுநேரத் தொழில் முறை நடிகரைப்போலத் திறம்பட நடித்தார். அந்த விபரங்கள் அவ்வப்போது பொருத்தமான இடங்களில் இந்த நினைவுப் பதிவில் இடம்பெறும்.
* * * * * *
களுவாஞ்சிகுடி ஊர் முழுவதும், வீடு வீடாகச் சென்று தென்னம் கிடுகுகளை அன்பளிப்பாகப் பெற்றோம். இழைத்த கிடுகுகள் கைவசம் இல்லாதிருந்தவர்கள் இரண்டு மூன்று நாட்களில் வரசொல்லி இழைத்துத் தந்தார்கள். நாங்கள் வயதில் மிகவும் சின்னவர்கள் என்றாலும், நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் என்று எங்களுக்கு நல்லபெயர் ஊருக்குள் இருந்ததாலும், ஊரில் இருந்த பல இளைஞர்கள் எங்கள் முயற்சியில் ஊக்கத்தோடு இணைந்திருந்ததாலும் மாத்திரமன்றி, எம்ஜீஆர். என்ற பெயரில் மன்றம் அமைக்கப்படுகிறது என்பதாலும் எங்கள் ஊரில் நூல்நிலையம் ஒன்று உருவாகப்போகின்றது என்பதாலும் தங்களின் பேராதரவை ஊர்மக்கள் தயங்காமல் தந்தார்கள்.
வீடுவீடாகக் கிடைக்கப் பெற்ற கிடுகுகளை வீதியோரங்களை அண்டியிருந்த சில குறிப்பிட்ட வீடுகளில் சேகரித்து வைத்தோம். மாலை வேளையில் மன்றம் அமையும் இடத்திற்கு மாட்டு வண்டிகள் மூலம் ஏற்றிவந்து, இறக்கினோம். திட்டப்படியான நூலகக் கட்டிடத்திற்குத் தேவையான அளவுக்கும், அதிகமாகவே தென்னம் கிடுகுகள் சேர்ந்திருந்தன.
அடுத்ததாக மரங்கள் தேவைப்பட்டன. கட்டிடத்திற்குத் தேவையான உறுதியான மரங்கள் பற்றி கலந்துரையாடியபோது, என் உறவினரும், ஆசிரியருமான அமரர் வீரசிங்கம் அவர்களுடைய வீட்டைச்சுற்றிப் பல மரங்கள் இருப்பது பேச்சுக்கு வந்தது. பட்டிருப்புச் சந்தியடியில் மிகப் பெரிய காணியின் மத்தியில் அவரது வீடு இருந்தது. சுற்றிவரச் சோலையாகப் பாரிய மரங்கள் நின்றன. வீரசிங்கம் மாமா (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) மிகவும் நல்லவர். அதனால் அவரிடம் சென்று கேட்கலாம் என்று முடிவு செய்தோம். அன்று பிற்பகல் அவரிடம் சென்று கேட்டோம். “தேவையான அளவு வெட்டிக்கொண்டு போங்க மக்காள்!” என்று சிரித்த முகத்தோடு சொன்னர்.
அடுத்த இரண்டு மூன்று நாட்களில் தேவையான மரங்கள் அவரது வளவில் இருந்து வெட்டி எடுத்துவரப்பட்டன. மரங்களைத் தறிக்கும்போது அவரும் கூடவே எங்களுடன் நின்று உதவிசெய்தார். மனைவியார் மூலம் பாணும் தேநீரும் பரிமாறச் செய்தார்.
எனது வீட்டில் கிணற்றைச் சுற்றிவர இருந்த கமுகு மரங்களில் சில தறிக்கப்பட்டு சிலாகைகளாகச் சீவி எடுக்கப்பட்டன. நீளமான மண்டபமும், பின்னால் ஓர் அறையும் என்பதால் இரண்டு பகுதியினது நீளத்திற்கும் அமைவாக முகட்டுக்கைகளாக வைப்பதற்கு முழுநீள மரங்கள் மூன்று தேவைப்பட்டன. “அது பிரச்சினை இல்லை. அதை நான் கொண்டுவாறேன்” என்று கருணா(கரன்) சொன்னான். தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் தம்பிகளில் ஒருவரான சங்கரப்பிள்ளை அவர்களின் மூத்த மகனே கருணாகரன். ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் என்னோடு ஒன்றாகப் படித்தவன்.
திருமதி. லீலா இராசமாணிக்கம் அவர்களது காணியொன்று இப்போது பொதுச்சந்தை இருக்கும் இடத்திற்குத் தெற்குப்பக்கம், வீதிக்கும் வண்ணான் குளத்திற்கும் இடையே பட்டிருப்புச் சந்திவரை நீண்டுகிடந்தது. அப்போது, உயர்ந்த தென்னை மரங்களும், வளர்ந்த பல்வகை மரங்களும், அடர்ந்த புற்களும் நிறைந்து பச்சைப் பசேலென்ற பகுதியாக அது இருந்தது. இப்போது அந்த இடமெல்லாம் கட்டிடங்களும், கடைகளும் நிறைந்துமக்கள் அலைமோதும் வர்த்தகப் பகுதியாக மாறியுள்ளது.
கருணாவும், சிவநாதனும் இன்னும் சிலரும் சேர்ந்து அந்தக் காணிக்குள் வானுயர நீண்டு வளர்ந்து நின்ற தேக்கு மரங்களில் மூன்றை அடியோடு வெட்டி, கிளைகளை அகற்றிவிட்டு தேவையான கட்டைகளை தூக்கி வந்து சேர்த்தார்கள். அவர்களின் செயலை எல்லோரும் பாராட்டினோம். வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் விலைப்பெறுமதி மிக்கவை என்பதை விடலைப் பருவத்திலிருந்த நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தேக்கு மரத்தின் பெறுமதி தெரியாத பருவம்!
எம்ஜீஆர் மன்றத்தின்கட்டிடவேலைகள் மிக விரைவாக நடைபெற்றன. இரண்டே வாரங்களுக்குள் நூலகம் எழுந்து நின்றது. பொன்மொழிகளும், நன்மொழிகளும் எழுதப்பட்ட வண்ணப் பலகைகள் நூலகத்தினுள்ளே பொறிக்கப்பட்டன. எம்ஜீஆர் மன்றம் அமைந்திருந்த இடத்திற்கு வரும் பாதை “எம்ஜீஆர் மன்ற வீதி” எனப் பெயரிடப்பட்டது.
ஒழுங்கை தொடங்கும் பஸ் நிலையத்தடியிலும், அது வளைந்து சென்று கிறவல் வீதியாக மாறிப் பாடசாலையடியில், பட்டிருப்பு வீதியில் ஏறுகின்ற இடத்திலும் வண்ணத்தில் பெயர் பொறித்த அலுமினியப் பலகைகள் வைக்கப்பட்டன. மாபெரும் ஓவியராகத் திகழ்ந்த அமரர், இ. புவனகேசரி அவர்களின் மகன், புவனேந்திர அண்ணன் வண்ணப் பலகைகளின் எழுத்து வேலைகளை எங்கள் எண்ணம்போல வடிவமைத்து உதவினார்.
சிறப்பாக நூலகத் திறப்பு விழாவைச் செய்வதற்கு முனைப்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அழைக்கப்படும் பிரமுகர்கள், விருந்தினர்கள், பேச்சாளர்கள், அவர்களுக்கான, அழைப்பிதழ்கள் எல்லா விடயங்களும் கச்சிதமாகக் கவனிக்கப்பட்டன. மன்றத்து வாசலில் வாழை மரங்கள் நாட்டப்பட்டன. பல வண்ணக் கொடிகளால் பந்தல் அலங்கரிக்கப்பட்டது. மாவிலையாலும், மஞ்சல் நிறத் தென்னங்குருத்தாலும் வனப்பான தோரணங்கள் தொங்கவிடப்பட்டன. வாடகைக்கு எடுக்கப்பட்ட கதிரைகள் மன்றத்தைச் சுற்றிவர, வளவு முழுவதும் போடப்பட்டன. திறப்பு விழா மிகவும் விமரிசையாகப் பெரியதொரு திருவிழாவைப்போல நடைபெற்றது.
பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கைத் தமிழசுக்கட்சித் தலைவரும், எங்கள் அன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவருமான அமரர் சி.மூ.இராசமாணிக்கம் பா. உ. அவர்கள் எமது பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார்.
சிறப்பு விருந்தினராக எமது கிராமத்திற்குப் பெருமை சேர்த்த கல்விமானாகத் திகழ்ந்த அமரர் திரு. கு.தருமரெத்தினம் அவர்கள் கலந்துகொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக, களுவாஞ்சிகுடி ஆலய பரிபாலனசபைத்தலைவரும், அனைத்துக் குடிகளின் முகாமையாளர்களும் கலந்துகொண்டனர். திறப்பு விழாவுக்கு வருகைதந்த விருந்தினர்கள், பிரமுகர்களுக்கு மட்டுமன்றிப் பார்வையாளர்களுக்கும் சிற்றுண்டிகளும், குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
திரு. சி.மூ.இராசமாணிக்கம் பா. உ. அவர்கள் எங்களையும் எங்கள் முயற்சிகளையும் மிகவும் மெச்சினார். அவரது உரையின் போது திருக்குறள் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாராட்டியதை என்னால் என்றும் மறக்க முடியாது. நூலகத்தில் நாங்கள் வைத்திருந்த பதிவேட்டிலும் அந்தக் குறளை மேற்கோள் காட்டிக் குறிப்பொன்றை எழுதினார். பின்னர் பலமுறை அந்தக் குறிப்பேட்டை நான் வாசித்தமையால் அதுவரை எனக்குத் தெரிந்திராத அந்தக்குறள் அப்போதே எனக்கு மனப்பாடமாகிவிட்டது.
“கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.”
என்பதே அந்தத் திருக்குறள்.
அதன் பொருள்,
“காட்டில் உள்ள சின்னஞ் சிறிய முயல் ஒன்றின்மேல் அம்பை எய்து அதனைக் கொன்று விடுவதில் கிடைக்கின்ற வெற்றியைவிட, பென்னம் பெரியதோர் யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பி யானை கொல்லப்படாமல், பிழைத்துவிட்டாலும் அதுவே இனிமையான வெற்றியாகும்.”
அதாவது, ஒரு சிறிய செயலில் ஈடுபட்டுப் பெறுகின்ற வெற்றியைவிட, செய்வதற்கு அரிதான பெரிய செயலில் இறங்கி, அதில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்தாலும் அதுவே உயர்வானதாகும்.
எப்போதும் நமது எண்ணங்களும், செயல்களும் உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டனவாக இருக்க வேண்டும் என்பதே இந்தக்குறளின் மூலம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் வழங்கும் அறிவுரை.
இளமைப் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கும் எங்களைப் பார்த்து, தலைவர் இராசமாணிக்கம் அவர்கள் இந்தக்குறளையும், நூல்நிலையம் அமைக்கும் எங்கள் உயர்ந்த செயலையும் ஒப்பிட்டுப் பேசியமை மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது.
***** ***** ***** *****
ஆழமாக என் நெஞ்சில் பதிந்துவிட்ட காரணத்தால், அந்தக் குறளைச் சில வருடங்களுக்குப் பின்னர் “ஆலம்பழம்” என்ற நாடகத்தில் நகைச்சுவையாக பயன்படுத்தினேன்! அந்த நாடகத்தில் நானும், சா.ஸ்ரீயும் வரும் ஒரு காட்சி.
நான்:- “கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது” எண்டு வள்ளுவர் சொல்லியிருக்கிறார் மச்சான்.
சா.ஸ்ரீ:- அப்பிடியெண்டா?
நான்:- அப்பிடியெண்டா ஒரு முயலுக்கு எய்து அதைப் பிடிக்கிறதை விட, பிடிக்க முடியாமல் போனாலும் ஒரு யானைக்கு எய்யுறதுதான் மேல்.
சா.ஸ்ரீ:- அப்பிடியெண்டா?
நான்:- அப்பிடியெண்டா….ஒரு சின்ன முயற்சியில இறங்கி அதில வெற்றியடையுறதக் காட்டியும், ஒரு பெரிய முயற்சியில இறங்கி அதில தோல்வியடையிறது மேல். அதுதான் நல்லது, உயர்ந்தது.
சா.ஸ்ரீ:- அப்பிடியெண்டா…மச்சான், ஒரு கோழியக் களவெடுத்திற்று வாறதக் காட்டியும், கோழியக் கூட்டோட களவெடுக்கப் போய்ப் புடிபடுறது மேல் எண்டு சொல்லு…
நான்:- அடேய் என்ர அருமை மைத்துனா! உங்களையெல்லாம் அந்த வள்ளுவரே நேரில வந்தாலும் திருத்தவே முடியாதுடா..
***** ***** ***** *****
எம்ஜீஆர் மன்றத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றியமற்றொரு முக்கியமான மனிதர் அமரர் திரு. கு.தருமரெத்தினம் அவர்கள். சுவாமி விபுலானந்த அடிகளின் ஆசிரியரான திரு. குஞ்சித்தம்பி ஆசிரியர் அவர்களின் மகனான திரு கு. தருமரெத்தினம் அவர்கள், மேல் நாடுகளில் உயர்பதவிகளை வகித்தவர். எந்தவித ஆடம்பரமும் இல்லாத இனியவர். ஊரிலும் ஊர் மக்களிலும் மிகவும் பாசம் கொண்டவர்.
நீண்டகாலம் நாட்டுக்கு வெளியில் பணிபுரிந்தமையால், பலருக்கு அவரின் உயர்ந்த பண்புகளை உணர்ந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டது. சில நாட்கள், அவரோடு பேசக்கிடைத்த சில நிமிடங்களே உள்ளத்தால் சிகரம் தொடும் உயர்ந்த பண்பாளர் அவர் என்பதை மிகவும் துல்லியமாக என்மனம் பதிவுசெய்து கொண்டது. எனக்குத் தெரிந்த வகையில் எங்கள் ஊரில் அவர் எந்த விழாவிலும் பேசியதில்லை. எங்கள் ஊரில் அவர் பேசிய ஒரேயொரு விழா எம்ஜீஆர் மன்றத் திறப்பு விழாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவர் தனது உரையில், “நாங்களெல்லாம் நினைத்துக் கூடப் பார்த்திராத நல்ல விடயத்தை, இன்று இந்த இளைஞர்கள் நடத்திக்காட்டியிருக்கிறார்கள். இவர்களது இந்த செயற்பாட்டால் இந்த ஊர்மட்டுமல்லாமல், இந்தப் பகுதி முழுவதும் பயன்பெறும். எதிர்காலத்தில் இவர்கள் பல சாதனைகளைச் செய்வார்கள் என்பது இப்பொழுதே தெரிகிறது. அவர்களை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.
திறப்பு விழாவின்போது பல நூல்களும், சஞ்சிகைகளும் நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. விழா முடிந்த பின்னர் இன்னும் பல சஞ்சிகைகள் நூலகத்தில் இடம்பிடித்துக் கொண்டன. உத்தியோகம் பார்க்கும் சில அண்ணன்மார் அந்தச் சஞ்சிகைகளுக்குச் சந்தாசெலுத்தி உதவினார்கள். தினகரன், தினபதி, வீரகேசரி, மித்திரன்வாரமலர் ஆகிய இலங்கைச் செய்தித் தாள்களும், குமுதம், கல்கி, ஆனந்தவிகடன், கல்கண்டு, ராணி, இராணிமுத்து, பொம்மை, கலைக்கதிர் முதலிய இந்திய சஞ்சிகைகளும், நூல் நிலையத்தில் கிடைக்கப் பெற்றன.
ஒவ்வொரு சஞ்சிகையும் ஒவ்வோர் உபயகாரரின் உதவிமூலம் வாங்கப்பட்டன. நூலகம் நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருந்தது. நூலகத்தைத் திறப்பது, மூடுவது, பராமரிப்பது ஆகிய நாளாந்தப் பணிகளை நான் செய்துகொண்டிருந்தேன். காலையிலும் மாலையிலும் இளைஞர்கள் வருவார்கள், சஞ்சிகைகளை வாசிப்பார்கள், பலதும் பத்தும் கதைப்பார்கள். கலந்துரையாடுவர்கள், விவாதிப்பார்கள். அதுதான் களுவாஞ்சிகுடியில் அமைக்கப்பட்ட முதலாவது நூல்நிலையம்.
அது அரசாங்க உதவியுடன் அமைக்கப்படவில்லை. உள்ளூராட்சி மன்றத்தால் உருவாக்கப்படவில்லை. எனது முன்னெடுப்பினாலும், தோள் கொடுத்த நண்பர்களின் உழைப்பினாலும், ஊர்மக்களின் உதவியினாலும், எம்ஜீஆரின் பெயரிலே அமைக்கப்பட்டது. எங்கள் ஊரில் பல சமூகநலப் பணிகளில் ஈடுபடுவதற்கு எம்ஜீஆர் மன்றம் எங்களின் ஆரம்பக் களமாக அமைந்தது.
வசதி குறைந்த மக்களில் வீடுகளுக்கு கூரை வேய்வதிலிருந்து, மழைக்காலத்தில் குடி நீரைச் சுத்தம் செய்வதற்காக ஒவ்வொரு வீட்டுக் கிணற்றிலும் குளோரீன் பொடி போடுவது வரை பல்வேறு பணிகளில் ஈடுபட்டு உள்ளம் மகிழ்ந்திருந்தோம்.
அப்போதுதான், 1970 ஆம் ஆண்டு, மேமாதம் 27 ஆம் திகதி அகில இலங்கைப் பொதுத் தேர்தல் வந்தது.
(நினைவுகள் தொடரும்)