ஊடகவியலாளர் பிரியத் லியனகே காலம் ஆகினார்

ஊடகவியலாளர் பிரியத் லியனகே காலம் ஆகினார்

— மூத்த செய்தியாளர் நடராஜா. குருபரன் —

மூத்த பத்திரிகையாளரும் பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் ஆசிரியரும், கலைஞரும் எம் ஊடக நண்பருமான பிரியத் லியனகே திங்களன்று இரவு (16.11.20) தனது 61 வயதில் இங்கிலாந்தில் காலமானார். சிறிது காலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொழும்பு, றோயல் கல்லூரியின் பழைய மாணவரான “பிரியத்”, விஜயா பத்திரிகை ஸ்தாபனத்தில் (Wijeya Newspapers) புகைப்படக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார். மேலும் பிரசன்ன விதானகேயின் ‘ஈரா மடியாமா’ (the screenwriter of several controversial films such as Prasanna Vitanage’s ‘Ira Madiyama’.) போன்ற பல சர்ச்சைக்குரிய திரைப் படங்களின் திரைக்கதை எழுத்தாளராகவும் விளங்கினார். அத்துடன் வசந்தா ஒபீசேகர இயக்கிய ‘தாதயாமா’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படக் குழுவின் புகைப்படக்கலைஞராகவும் செயற்பட்டவர். (the Unit Still Photographer of the iconic film ‘Dadayama’, directed by Wasantha Obeysekera.)

1980 களின் பிற்பகுதியில் லண்டனில் பிபிசி உலக சேவையில் பணியாளராக இணைந்து, 1997 ஆம் ஆண்டில் சிங்கள சேவையின் ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு பிபிசியின் மூத்த தயாரிப்பாளராகவும் விளங்கியவர். பிபிசி உலக சேவைக்காக பிரியாத் லியனகே உருவாக்கிய ‘உலகப் போரின் முந்தைய குரல்கள்’ என்ற விவரன சித்திரம் (‘Ghostly Voices of the World War One’ ) சிறந்த வானொலி விவரணத்திற்கான சர்வதேச விருதை பெற்றுக்கொண்டது. 17 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசியின் சிங்கள சேவையில் ஆசிரியராக பணியாற்றிய பிரியத் பிபிசி சிங்கள சேவையில் இருந்து 2014 ல் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஞாபகங்கள்

பிரியத் நான்கு ஐந்து மாதங்களுக்கு முன் என நினைக்கிறேன் ஒரு முக்கிய விடயம் குறித்து அவருக்கு அழைப்பொன்றை எடுத்திருந்தேன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஓய்வு எடுப்பதாகவும் தெரிவித்த அவர், அழைத்த விடயம்
குறித்து வேறு ஒருவருடன் பேசுமாறும் கேட்டு இருந்தார். அத்துடன் தன்பற்றிய நினைவுகளுடன் அவருக்கு அழைப்பு எடுத்தமை குறித்தும், மிகவும் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டிருந்தார்.


பிபிசியின் சிங்கள சேவையின் யாழ் செய்தியாளராக இருந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் மரணத்திற்கான நீதிகோரலிலும், அவருக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பதிலும், நிதி சேகரித்தலிலும் முக்கிய பங்காற்றி இருந்தவர்

இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தங்களின் போது நடுநிலையானதும் உண்மையானதுமான செய்திகளை வெளிக்கொணர்வதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள் சிலவற்றில் அவர் செய்தியாளராக கலந்துகொண்ட போது ஆரம்பித்த நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. அவருடைய அமைதியான பேச்சும், தன்னடக்கமும் அன்பும், நட்பும் இன்றும் நினைவில் தொடர்கிறது.

நோயின் கொடுமையில் இருந்து விடுபட்டு அமைதி கொள்ளுங்கள். சென்றுவாருங்கள்…

(அன்னாருக்கு “அரங்கம்” நிறுவனத்தின் சார்பிலும், முன்னாள் சகா என்ற வகையிலும் நான் எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது இரங்கல்கள். ஆசிரியர் – சீவகன் பூபாலரட்ணம்)