— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
கடந்த இரு தடவைகளிலும் (சொல்லத் துணிந்தேன்—38, 39), ‘அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் பரிசோதனை முயற்சிகள்—கள நிலை அறிந்த அணுகுமுறைகள்–உபாயங்களை வகுத்து அதன் அடிப்படையில் அமைந்த வியூகங்கள் தேவை. இதனைத் தமிழர்தரப்பு அரசியலுடன் பொருத்திப் பார்ப்பதே இப்பத்தியின் நோக்கம்’ என்ற முத்தாய்ப்புடன் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் 2012ல் ஜெனிவாவில் இலங்கை குறித்து அமெரிக்கா கொணர்ந்த தீர்மானம் பற்றியும் 2018 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு பற்றியும் கூறியிருந்தேன்.
இம்முறையும் அதே முத்தாய்ப்பின்கீழ் சில அரசியல் விடயங்களைக் கூறத் துணிந்துள்ளேன்.
2010 ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைத் தோற்கடித்து, மீண்டும் வெற்றியீட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது இரண்டாவது பதவிக் காலத்தின்போது ( 2010–2014) தான் மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் இலங்கையின் அரசியலமைப்புக்கான 18வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றினார். பின்னர் மைத்திரிபால ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவி வகித்த ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் (2015–2019) 19 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அது மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. 19 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு அளித்தது. இப்பத்தொன்பதாவது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட, ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது–இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது–மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான வயதெல்லை 30 லிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டமை என்ற விதிகள் உண்மையிலேயே ராஜபக்சஷாக்களைக் குறிவைத்தே கொண்டு வரப்பட்டன. இது சிறு பிள்ளைக்கும் விளங்கும். இதன் விளைவு என்ன?
மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக மீண்டும் 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடுக்கப்பட்டார். அதனால் ராஜபக்ஷாக்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ஷ தனது இரட்டை குடியுரிமைகளிலொன்றான அமெரிக்க நாட்டுக் குடியுரிமையை ரத்துச் செய்து விட்டுத் தேர்தலில் போட்டியிட்டு, இப்போது ஜனாதிபதியாகவும் ஆகிவிட்டார். நிலைமை உண்மையில் நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ராஜபஷாக்களில் ஒருவர்தான் ஜனாதிபதியாகப் போகிறார் என்றால் ஒப்பீட்டளவில் கோத்தபாயவைவிட மகிந்த ராஜபக்ஷ அல்லது பசில் ராஜபக்ஷ அல்லது சமல் ராஜபக்ஷ பரவாயில்லை என்பதுதான். ஏனெனில் கோத்தபய ராஜபக்ஷ இராணுவ மனப்போக்கும் நடத்தையும் ஒப்பீட்டளவில் ஏனையவர்களை விடப் பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனைகளைக் கூடுதலாகவும் உடையவர். மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் அரசியல் சிந்தனையும் நெகிழ்ச்சிப் போக்கும் உடையவர்கள். முன்னையவரைவிட பின்னையவர்களையே ஒப்பிட்டளவில் தமிழர்கள் விரும்புவார்கள். இதனைக் கெடுத்தது 19 ஆவது அரசியல் சட்டத் திருத்தம். அதற்குத் துணை போனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஆப்பிழுத்த குரங்கான த.தே.கூ மற்றும் ஐ.தே.க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த அரசியல் தீர்மானமும் இதுவரையில் இறுதி விளைவாக அது பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களுக்குச் சாதகமான பெறுபேறுகள் எதனையும் பெற்றுத்தந்ததாக வரலாறு இல்லை. 2019 ஏப்ரல் குண்டுவெடிப்புக்குப் பின்னர் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘நல்லாட்சி’ அரசாங்கத்திற்குத் தொடர்ந்து முட்டுக்கொடுத்தும் தமிழர்களுக்கு எந்தப் பயனும் விளையவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா–பிரதமர் ரணில் விக்கிரமசிங்க–இரா சம்பந்தன் எல்லோரும் இணைந்துதான் 19 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். ராஜபக்ஷக்களின் பல்லைப் பிடுங்கி விட்டதாகவும் எண்ணிக் கொண்டார்கள். ஆனால் அதிலிருந்த ‘ஓட்டை’யைப் பயன்படுத்தி ராஜபக்ஷக்கள் அதிகாரத்திற்கு வந்து விட்டார்கள். கோத்தபாய ராஜபக்ஷ தனது அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகவும் ஆகிவிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ‘ஆப்பிழுத்த குரங்கு’ ஆக ஆகிவிட்டன.
உண்மையில் 19ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தில் இரட்டைப் பிரஜா உரிமையுள்ள இலங்கையர் ஒருவர் தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவர் தனது வெளிநாட்டுப் பிரஜாவுரிமையை ரத்துச் செய்து, இத்தனை ஆண்டுகளின் பின்னரே (அதாவது மூன்று அல்லது ஐந்து வருடங்கள்) தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஷரத்துச் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப தேர்தல் சட்டங்களும் திருத்தப்பட்டிருந்திருக்குமேயானால் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாமல் போயிருந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவோ அல்லது தினேஷ் குணவர்தனவோ அல்லது பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்சோ அல்லது பேராசிரியர் திஸ்ஸ விதாரணவோ நிறுத்தப்படும் சூழல் உருவாகியிருந்திருக்கும். ஒப்பிட்டளவில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அது பரவாயில்லாமல் இருந்திருக்கும்.19 ஆவது அரசியல் சட்டத்திருத்த வரைபை வரைந்தவர்களுக்கும் அதற்குத் துணை புரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டத்தரணிகளுக்கும் இந்த அரசியல் நுட்பம் தெரியாமல் போனதேனோ?
கிழக்கு தமிழரை புறக்கணித்து ஐ.தே.கவுக்கு ஆதரவளித்த த. தே.கூ
மேலும், 2019 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை வகிக்கப் போகிறோம். தமிழ் மக்களைத் தமது மனச்சாட்சிப்படித் தாம் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சொல்லப் போகிறோமென்று கதையளந்துகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைசி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தது. கிழக்கு மாகாணக் களநிலையைக் கருத்தில் கொள்ளாது கிழக்குத் தமிழர்களின் எதிர்கால இருப்பின் மீது கரிசனை கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தவறான தீர்மானம் இதுவாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்றால் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தமிழர்களுக்கு எதிரான போக்கு மேலும் தீவிரமடையும் என்று நன்கு தெரிந்திருந்தும் கூடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரித்தமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் நலன்களை விடவும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் நலன்கள்தான் அதிமுக்கியமானவை என்பதையே வெளிப்படுத்துகிறது.
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ச் சமூகம் சார்ந்த சிந்தனையைவிடத் தமது ஏகாதிபத்திய எஜமான் சார்ந்த சிந்தனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெகுவாக ஆட்கொண்டிருக்கிறது.
அண்மையில் 20 ஆவது சட்டத் திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதிலிருந்து முஸ்லிம் அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தென்னிலங்கை அரசியல் நீரோட்டத்தையும் முஸ்லிம் சமூகத்தின் தற்காப்பையும் சமூக பொருளாதார நலன்களையும் மிகத் துல்லியமாகக் கணித்து, அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.
பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் கெடுபிடிகள் ஒருபுறமிருந்தாலும் தமிழர்களின் பின்னடைவுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வினைத்திறனற்ற அரசியல் செயற்பாடுகளும் பிரதான காரணங்களிலொன்றாகும்.