ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் …. பகுதி 7

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் …. பகுதி 7

—  பேராசிரியர்சி. மௌனகுரு — 

நூல் – 03 

அக்கரைப்பற்று வரலாறு (1990) 

ஏயாரெம் சலீமினால் எழுதப்பட்ட இந்நூல் முஸ்லீம்களின் வரலாற்றை மாத்திரம் கூறும் நூல் அன்று; மாறாக அக்கரைப்பற்றில் வாழ்ந்த பல இனங்களினதும் வரலாற்றையும், பண்பாட்டையும் அவ்வினங்கள் அக்கரைப்பற்றில் குடியேறிய விபரங்களையும் கூறும் நூலாகும். ஆயினும் முஸ்லீம்களின் வரலாறும் பண்பாடும் ஏனைய விபரங்களும் சற்று விரிவாகவும் அழுத்தமாகவும் கூறப்படுகின்றன. 

இப்பகுதியின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்கள் எனக் கூறி, அவர்களின் குடியேற்ற விபரங்களையும் வரலாற்றையும் கூறும் நூலாசிரியர், முஸ்லீம்களின் அக்கரைப்பற்று வரவினை போத்துக்கீச ஆட்சியுடன் தொடர்புபடுத்துகின்றார். போத்துக்கேயர் தமக்கு வியாபாரத்தில் போட்டிக்குழுவாக இருந்த முஸ்லீம்களைத் துன்புறுத்தினர் என்றும் இதனால் சேனரதன் (1605 – 1635) தன்னாட்சிக் காலத்தில் முஸ்லீம்களை அட்டாளைச்சேனையில் பரமன்சேனை, பாலனோடை எனும் இடங்களிற் குடியேற்றினான் என்றும் குறிப்பிடுகின்றார். 

மட்டக்களப்பு மான்மியமும், நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டும் கூறும் அவுக்கன் என்பானை அபூபக்கர் எனக் குறிப்பிடும் ஆசிரியர், அவுக்கன் தலைமையிலிருந்த இஸ்லாமியக் குழுவினர் இங்கு குடியேறியிருந்த பொன்னாச்சிக்குடி, இராசம் பிள்ளைக்குடி, சீனிக்கருடன்குடி, வரிசைநாச்சிகுடி, அரசனாச்சிகுடி, முகாந்திரநாச்சி குடிகளுடன் உறவு கொண்டாடி சிறைக் குடி களையும் கேட்டுப் பெற்று அவர்களுடன் கலந்து வாழத் தொடங்கினர் எனக் கூறி, இருதிறத்தாரும் (தமிழரும் முஸ்லீம்களும்) சமய விழாக்களிலும் சமூகச் சடங்குகளிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வந்தமையைக் கூறுகின்றார். 

சிங்களக் கிராமங்களிலிருந்தும் மாடுகள் பழக்கும் முஸ்லீம்கள் இங்கு பின்னால் குடியேறியமையும் அவர்கள் போத்துக்கேயர் காலத்தில் வன்னிமைகளாக நியமனம் பெற்றமையும் கூறப்பட்டு, கோழியன் ஆராய்ச்சியின் மகன் சின்ன லெவ்வை ஆராய்ச்சியும், சேகுலெவ்வை ஆராய்ச்சியின் மகன் அகமதுப்போடியும் பரமன் எனும் தமிழனின் சேனைக் காட்டுக்குள் சென்று அவனுடைய சம்மதத்துடன் காடுகளை வெட்டி சேனையின் தென்பகுதியில் வதிவிடமமைத்து வாழ்ந்தமையும் கூறப்படுகின்றது. 

நக்கரா 

பின்னர் அங்கு தொடர்ந்து வந்த முஸ்லீம் இன ஞானிகளால் அப்பகுதி பெருமை பெற்றமையும் கூறப்படுகின்றது. அதன்பின் அட்டாளைச் சேனை முஸ்லீம்களின் விழுமியங்கள், சமூகம், கலாசாரம், வேளாண்மைச் செய்கை,  வித்தியாலயம், போக்குவரத்து சாதனங்கள், கல்வி என யாவும் கூறப்படுகின்றன. அட்டாளைச் சேனை முஸ்லீம்களின் தனித்துவம் அழுத்தப்படுகின்றது. தனித்துவங்களில் ஒன்று நக்கரா ஆகும். 

“இங்குள்ள சின்னப் பள்ளிவாசலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ‘நக்கரா’ எனும் ஒரு முரசு” ஐவேளை பாங்கு சொல்வதற்கு முன் கொட்டப்பட்டு வந்தது. பெரும்பாலும் இரு குறுந்தடிகளால் இம்முரசில் மாறிமாறிக் கொட்டுவர்.  அதைக்கேட்ட சனங்கள் தொழுகைக்கு ஆயத்தப்படுத்துவர். அதன் பின்னர் பாங்கு சொல்லப்பட்டு தொழுகை ஆரம்பமாகும். இது நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்து, சில வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. லுஹருக்கு அடித்து விட்டதா? சுபஹ”க்கு நக்கரா அடித்து விட்டதா? என்று ஒருவரிடம் மற்றவர் கேட்கும் வழக்கம் இன்றும் மாறாமல் உள்ளது. இவ்வூரைத் தவிர இலங்கையின் ஏனைய பகுதிகளில் லுஹருக்கு பாங்கு சொல்லி விட்டதா? சுபஹ”க்குப் பாங்கு சொல்லிவிட்டதா? போன்ற கேள்விகளே கேட்கப்பட்டு வந்தன. இந்த நக்கரா எனும் முரசொலி, தமிழ் மக்களின் இணைப்பினால் ஏற்பட்டதொன்றாயிருக்கலாம். அது உண்மையாயின் தமிழ் மரபொன்று இஸ்லாமியமயமானமைக்கு அது உதாரணமாகும். இதேபோல் முஸ்லீம் மக்களின் பல வழக்கங்கள் தமிழ் மயமாகின. 

ஒன்றாக கலந்து வாழ்ந்த இரு இனங்கள் 

தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் தமக்குள் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தமையும் ஒரு சமூகத்தின் விசேட தினத்தில் மற்ற இனம் உரிமையோடு கலந்து கொண்டமையும் இரு பிரிவினதும் சமூக கலாசாரப் பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்கள் இரண்டறக் கலந்திருந்தமையும் கண்ணகி அம்மன் கொம்பு முறித்தல் விளையாட்டில் முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டமையும் இவ்விறுக்கமான பிணைப்பினால் தமிழரின் பழக்க வழக்கங்கள் முஸ்லீம்கள் மத்தியிலும் கலந்தமையும் கூறப்பட்டு அவை யாவை என விளக்கவும்படுகின்றன. 

‘ஒருவரையொருவர் கண்ணியப்படுத்துவதிலும் உதவி செய்வதிலும் உளம் பூரித்து நிற்கின்றனர். தமிழ் முஸ்லீம்  மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்று விளையாடி விருந்துண்டு மகிழ்ந்திருந்தனர். என உணர்வு பூர்வமாக ஆசிரியர் வர்ணிக்கின்றார். 

1980களுக்குப் பின்னால் கிழக்கிலங்கை வரலாற்றில் தமிழ்ப் போராளிக் குழுக்கள் அரசியல் நிலை காரணமாக எழுவதைக் காணலாம். இலங்கை அரசியல் போக்கு தமிழர்-முஸ்லீம்களிடையே (முக்கியமாக கிழக்கு மாகாண) பெரும் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. பிரிவினைக்கும் பகைக்குமான அடித்தளங்கள் இருசாரார் மத்தியிலும் போடப்படுகின்றன. இந்நிலையில் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆற்றும் பணி முக்கியமானதாகும்.  அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனம் என்ற அமைப்பு பயங்கரமான வேளைகளிலும் மிகவும் காத்திரமான முறையில் இந்திய அமைதிகாக்கும் படையினரிடமும் தமிழ்ப் போராளிக் குழுக்களுடனும் நல்லுறவைப் பேண எடுத்த முயற்சிகள் அநேகம்’ என்று குறிப்பிடுகின்றார். 

இந்நூல் அக்கரைப்பற்று மக்கள் பற்றிக் கூறினாலும் முஸ்லீம் மக்களின் வரலாறு, தனித்துவம், பழக்க வழக்கங்கள் என்பவற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றது. அதேவேளை முஸ்லீம் – தமிழ் உறவை அது அதிகமாக அழுத்துகின்றது.  நெருக்கமாக இருந்த ஓர் உறவில் ஏற்பட்ட பெரு விரிசல் பற்றிய துயரம் நூலிலே இழையோடுகிறது. 

நூல் – 04 

மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) 

முன்னைய இருநூல்களும் சாதி பற்றியவையாகவும், அடுத்த நூல் ஊர் பற்றியதாகவும் அமைய இந்நூல் இனம் பற்றிய நூலாக அமைகின்றது. குறிப்பாக மட்டக்களப்பிலும் சிறப்பாக சாய்ந்த மருதுவிலும் குடியேறிய முஸ்லீம்களின் வரலாற்றை கர்ண பரம்பரைக் கதைகள், சரித்திரச் சான்றுகள், ஊகங்கள், நடைமுறை வாழ்க்கை என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டு சொல்ல ஆசிரியர் இந்நூலில் முயன்றுள்ளார். 

இஸ்லாம் மதம் அறிமுகமாவதற்கு முன்னாலேயே முஸ்லீம்கள், மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்புக்கு வந்தனர் என்பது ஆசிரியர் கூற்று. இலங்கையின் வாசனைத் திரவியங்கள் மன்னர்களின் பூதவுடலை அழியாது பாதுகாத்து வைக்கும் தன்மை கொண்டதனால் விலைமதிப்பற்ற இப்பொருட்களைப் பெற்று வியாபாரம் செய்ய மத்திய கிழக்கு வாசிகள் கூட்டம் கூட்டமாக இலங்கை வந்தனர் என்று முஸ்லீம்களின் வருகைக்கான காரணம் கூறப்படுகின்றது. 

“தரைமார்க்கமாக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானூடாக இந்தியாவிற்குள் வந்து அங்கிருந்து மன்னார், யாழ்ப்பாணம் ஊடாக மட்டக்களப்பு வந்து இரத்தினபுரியைத் தரிசித்துச் சென்றனர்.” என்று கூறும் ஆசிரியர், மத்திய கிழக்குவாசிகள் ஆப்கானிஸ்தானூடாக வங்காளதேசம் வந்து பாய்க்கப்பல் மூலம் வடகீழ்ப் பருவப்பெயர்ச்சி காற்றின் உதவியுடன் மட்டக்களப்பு வாவிக்குள் வந்து சம்மாந்துறையில் கப்பல் கட்டிவிட்டு அங்கிருந்து இரத்தினபுரி சென்றனர் என்று விபரிக்கின்றார். 

இரத்தினபுரிக்கு அவர்கள் சென்றது ஆதாமின் மலை எனக் கூறப்படும் சிவனொளிபாத மலையைத் தரிசிக்கவே. இதன் மூலம் முஸ்லீம்களுக்கும் இலங்கைக்குமிருந்த பண்டைய உறவு கூறப்படுகிறது. 

மட்டக்களப்பில் முஸ்லீம்களின் குடியேற்றம் பற்றிக் கூறும் போது ஆசிரியர் ‘மட்டக்களப்பின் வாவிக்குள் வந்த மத்திய கிழக்குவாசிகள் கல்லாறு வழியாக மண்முனை அடைந்து அங்கு தரிக்கின்றனர்’ – என்கிறார். 

தமது தரிப்பிடத்தை மருதூருக்கு (சாய்ந்தமருது) இடம் மாற்றியதும் தமது பழைய இடத்தை பண்டூர் என அழைத்தனர் எனவும் அதுவே திரிந்து இன்று மண்டூர் ஆகியது என்று கூறுவதன் வாயிலாக மண்டூரை இஸ்லாமியரின் பழம்பதி என்று கூற முனைகின்றார். 

மண்டூர் முஸ்லீம்களுக்குரிய ஊர்தான் என்பதை நிறுவ அங்கு இன்றும் வழங்கும் சில வழமைகளை ஆதாரம் காட்டுகின்றார். 

இவ்வண்ணம் மட்டக்களப்பில் குடியேறிய மத்திய கிழக்கு வாசிகள் மட்டக்களப்பில் நிலவிய முக்குவ – திமில சண்டையில் பிரதான பாத்திரம் வகிப்பதும் அதன் மூலம் முக்குவருக்கு வெற்றி தேடிக் கொடுப்பதும் கூறப்படுகின்றது. 

“குடியமர்த்தப்பட்டது மாத்திரமல்ல அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளித்து, மத்திய கிழக்குவாசிகள் ஏறாவூரிலும் மருதூரிலும் இருந்து பாதுகாத்தனர்.” என்று முஸ்லீம்கள் முக்குவருக்குப் பாதுகாப்பு அளித்தமை கூறப்படுகிறது. 

முக்குவர் மத்தியகிழக்கு வாசிகளைக் கெளரவப்படுத்தத் தமது ஏழு குடிகளில் ஏழு அழகான பெண்களை மத்திய கிழக்கிலிருந்து வந்த ஏழு கப்பல் தலைவர்கட்கும் திருமணம் செய்து கொடுத்தனர் எனக் கூறப்படுகின்றது. 

“இந்த ஏழு குடிகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஏழு பெண்களும் வீரமும், செல்வமும் அழகும் மிக்க கப்பல் தலைவர்களான மத்திய கிழக்கு வாசிகளோடு வாழ்வதைப் பெருமையாகவும் பேறாகவும் கருதினர். இப்பெண்களுக்குச் சேவகம் செய்வதற்காக திராவிடர்களின் 18 சாதிகளில் இருந்தும் 18 குடும்பங்களை இவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது மாத்திரமல்ல மத்தியகிழக்குவாசிகளைக் கண்ணியப்படுத்தவே இந்தப் பதினெட்டுச் சாதிகளான பள்ளன், பறையன், தட்டான், வண்ணான், அம்பட்டன், குயவன், நளவன் போன்றோர் ஊரின் ஒரு அந்தத்தில் குடியமர்த்தப்பட்டனர்.” என்பது ஆசிரியர் கூற்று. 

வீரமுனையில் 8ஆம் நூற்றாண்டில் குடியேற்றம் ஏற்பட்ட தென்றும், கி.பி. 1605 – 1635 க்குமிடையில் சேனரதன் தன் காலத்தில் போத்துக்கேயரின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்த முஸ்லீம்களை மட்டக்களப்பில் குடியேற்றி அவர்கள் வியாபாரம் செய்வது கஷ்டம் எனக்கண்டு விவசாயம் செய்யக் காணிகள் கொடுத்தான் என்றும் ஆசிரியர் கூறுகிறார். 

விவசாயம் செய்து நிலைபதியாக வாழ்ந்த இச்சமூகத்தினரின் தனித்துவமான கலைகளும், பண்பாடும் வலியுறுத்தப்படுகின்றன. முஸ்லீம் மக்களிடையேயுள்ள 17 வகையான பண்பாட்டுக் கோலங்களும் அவை பற்றிய விளக்கங்களும் தரப்படுகின்றன. குரவை, நாட்டார் பாடல், யுனானி வைத்தியம், மருதோன்றி இடுதல், பொல்லடி சிலம்படி, வாள் விளையாட்டுகள், பக்கீர்மாரும் றபானும், ஆடை அணிகலன்கள், கல்யாண சம்பிரதாயங்கள், தவளமுறை, குடிவழிமரபுகள் என்பன இவற்றுள் அடங்கும். மட்டக்களப்பில் வாழும் தமிழ்ச் சமூகம் போல தனித்துவமான கலாச்சார பாரம்பரியங்கள் முஸ்லீம்களுக்கு உண்டென்பது இதன் மூலம் அழுத்தப்படுகின்றது. நாட்டார் பாடல் பற்றிக் கூறுகையில் மட்டக்களப்பிலே திராவிடர்கள் பாடும் நாட்டார் பாடல் சாயல் வேறு டியூனும் வேறு, முஸ்லீம்கள் பாடும் நாட்டார் பாடல் சாயல் வேறு டியூனும் வேறு என்று கூறி மட்டக்களப்பு முஸ்லீம்கள் மத்தியிலே நாட்டார் பாடல் விசேட இடம்பெற்றிருப்பதை அழுத்துகிறார். 

“மனவருத்தமானதும் மறக்க வேண்டியதுமான ஓர் அத்தியாயம்” என்ற தலைப்பிலமைந்த 9ஆம் அத்தியாயத்தில் நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டுப் பற்றி எப். எக்ஸ். சி. நடராஜா எழுதிய கட்டுரையை விமர்சிக்கும் ஆசிரியர் மட்டக்களப்பில் முஸ்லீம்கள் வசம் இருக்கின்ற காணிகள் திராவிடரால் அன்பளிப்புச் செய்யப்பட்டவை என எடுத்துக்காட்டும் முயற்சி அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும் அவுக்கன் எனக் குறிப்பிடப்பட்ட முஸ்லீம் மரியாதையில்லாமல் குறிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஒரு குடி மகனல்ல. ஒரு வன்னியன் என்றும் வாதிடுகிறார். அத்தோடு பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் முஸ்லீம்கள் தனியொரு இனமல்ல என்று கூறியதைச் சாடுகின்றார். 

1980களுக்குப் பின் நடைபெற்ற சம்பவங்களை எடுத்துக்காட்டி முஸ்லீம்கள் தமிழரால் படுகொலை செய்யப்பட்டதை வரிசைப்படுத்தியபின் பின்வருமாறு கூறுகின்றார். 

‘ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு எங்களால் வாழ முடியாது அப்படி நாங்கள் வாழவும் இல்லை. எனவே நடந்தவைகளை மறந்து நாம் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும். ஒற்றுமையைப் பலப்படுத்தப் பல திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மான்மியக் கருத்துக்களையும் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு மட்டக்களப்பு அறிஞர்கள் முஸ்லீம்கள் பற்றிக் கூறிய கருத்துக்களையும் முஸ்லீம்கள் ஒரு தேசிய இனமல்ல என்று கூறும் யாழ்ப்பாணத் தமிழரான பொன்னம்பலம் இராமநாதனின் கூற்றினையும் விமர்சிப்பது தொடக்கம் மட்டக்களப்புக்கு வரலாற்றாரம்ப காலத்திலேயே முஸ்லீம் குடியேற்றம் இருந்ததென்பதைக் கூறி, மட்டக்களப்பின் வரலாற்றோடு அவர்கள் இணைந்தமையை விளக்கி முஸ்லீம்களின் பெருமைகளையும் அவர்களின் தனித்துவமான கலாச்சாரங்களையும் காட்டுவதன் மூலமாக மட்டக்களப்பின் வரலாற்றில் முக்கியமான இடம் முஸ்லீம்களுக்கு உண்டென நிறுவ முயல்கிறார் ஆசிரியர். ஒழுங்கான முறையில் இந்நூல் இவற்றைக் கூறாவிடினும் ஆசிரியர் கூறவரும் கருத்துக்கள் மேற்சொன்னவைதாம். 

முன்னரே கூறப்பட்ட மட்டக்களப்பின் இரு சாதி வரலாற்று நூல்களும் முஸ்லீம்கள் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை.  மட்டக்களப்புக் குகன்குல முற்குக வரலாறும் மரபுகளும் எனும் நூல் திமிலரைத் துரத்துவதற்கும் உதவியாக அபுகானஸ்தானத்திலிருந்து வியாபாரத்திற்கு வந்த பட்டாணிகளைத் தமக்குத் துணையாகச் சேர்த்தமையையும் அவர்கட்குப் பெண் கொடுத்தமையையும் ஏறாவூரில் குடியேற்றியமையையும் கூறி அம்பாறைப் பிரிவில் தற்போது வாழும் முஸ்லீம்கள் இவர்கள் சந்ததியினரே என்றும் கூறுகின்றது. 

மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை எனும் இந்நூலில் இச்செய்திகளைக் கூறுவதுடன் முஸ்லீம்கள் நேரடியாகவே மட்டக்களப்பு வாவியினூடாக வந்து படுவான்கரை பகுதியில் வாழ்ந்தமையும் பின்னர் சாய்ந்தமருதுக்குக் குடியேறிமையும் கூறப்பட்டு, தாம் ஒரு நீண்ட வரலாற்றையுடைய இனம் என்று கூறப்படுகின்றது. அத்தோடு மட்டக்களப்பின் வரலாற்றுடனும் தம்மைப் பிணைத்துக் கொள்வதுடன் தமிழர் – முஸ்லீம் உறவுகளும் அழுத்தப்படுவதும் முக்கியமான ஓர் அம்சமாகும். 

சிங்கள இன மையம் கொண்ட இலங்கை வரலாற்றில் யாழ்ப்பாணம் உரிமை கோருவது போல, யாழ்ப்பாண மையங் கொண்ட தமிழர் வரலாற்றில் மட்டக்களப்பு உரிமை கோருவது போல, மட்டக்களப்பு மையம் கொண்ட வரலாற்றில் முஸ்லீம்கள் உரிமை கோரும் குரல் இந்நூலில் ஒலிக்கிறது. 

அக்கரைப்பற்றில் இருந்து வெளிவந்த நூலுக்கும் சாய்ந்த மருதுவில் இருந்து வெளிவந்த நூலுக்குமிடையே காணப்படும் வேறுபாடுகள் பாரியவை. முன்னதில் அனைவரையும் இணைத்ததும், முஸ்லீம்கள் அக்கரைப்பற்றில் 16 ஆம் நூற்றாண்டில் குடியேறியமையும் கூறப்பட பின்னையது முஸ்லீம்களின் தனித்துவத்தைக் கூறி சாய்ந்த மருதுவில் முஸ்லீம்களின் குடியேற்றம் மிகப் பழமையானது என அழுத்துகின்றது. 

இரண்டிலும் தென்கிழக்குப் பகுதியில் முஸ்லீம்களின் வரலாறும் தனித்துவங்களும், அழுத்தப்படுவதும் – இரண்டு நூல்களிலும் தமிழ்-முஸ்லீம் உறவுகள் வற்புறுத்தப்படுவதும் பொது அம்சங்களாகும். 

கலாசார அமைச்சின் கீழ் இயங்கிய முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 1990களுக்குப் பின் இலங்கை முஸ்லீம்கள் பற்றி நூல்களை வெளியிட ஆரம்பிக்கின்றது. களுத்துறை,  அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை, கண்டி,  கம்பகா, புத்தளம் முஸ்லீம்களின் வரலாறு, பண்பாடு, குடிப்பரம்பல் பற்றி நூல்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் எனும் நூல் 

‘அம்பாறை மாவட்டம் என்று அடையாளப்படுத்தப்படும் முஸ்லீம்கள் தென்கிழக்கின் கரையோரப்பகுதி சார்ந்து வாழ்வதால் இம்முஸ்லீம்களை தென்கிழக்கு முஸ்லீம்கள் என்று அழைப்பது ஏற்புடைத்தாகும்.’ என உணர்த்தும் இந்நூல் தென்கிழக்கு முஸ்லீம்களின் தனித்துவமான வரலாறு என்ற எண்ணக்கருவை வைக்கின்றது. 

இலங்கை வரலாற்றில் தமிழர் உரிமை கோருவது போல முஸ்லீம்களும் உரிமை கோரும் போக்கு அண்மைக்காலமாகப் பெரிய அளவில் வளர்ந்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். 

 பதிற்குறி (Response) தரும் முறைமை 

இலங்கை வரலாற்றுருவாக்கலில் இங்கு வாழும் பெரும்பான்மை இனத்தினரின் வரலாறே வரலாறாக கட்டமைக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், தமிழ் இனத்தின் வரலாறாக யாழ்ப்பாண அரசர்களினதும் வரலாறே மறுதலையிற் கட்டமைக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சூழ்நிலையில், கிழக்கிலங்கையிலிருந்து வரலாற்றில் தமது இடங்களை வலியுறுத்தும் நூல்களும் வெளிவருகின்றன என்பதனையே நாம் இங்கு மனதில் கொள்ள வேண்டும். 

மட்டக்களப்பின் வரலாறு முக்குவரின் வரலாறாக கட்டமைக்கப்படும் ஒரு சூழலில் இங்கு மேனிலையாக்கம் பெற்ற சீர்பாதகுலம் தமது இடத்தையும் அவ்வரலாற்றுக்குள் இணைக்க முயலும் முயற்சியாக சீர்பாதகுல வரலாறு அமைகிறது. 

யாழ்ப்பாண வரலாறே தமிழர் வரலாறாக கட்டமைக்கப்படும் தளத்தில் முக்குவரின் வரலாறாக மட்டக்களப்பு வரலாறும் உண்டு என்பதனை உணர்த்துவதாக முக்குகர் வரலாறு அமைகிறது. 

மட்டக்களப்பின் வரலாறு மட்டக்களப்புத் தமிழ் மக்களின் வரலாறு என்று கட்டமைக்கப்படும் சூழலில் அது தென்கிழக்கு முஸ்லீம்களினது வரலாறும் ஆகும் என்று உணர்த்துவதாக அக்கரைப்பற்று வரலாறும், ‘மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை’ எனும் நூலும் அமைகின்றன. 

ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வரலாறென்பது யாழ்ப்பாணத் தமிழரின் வரலாறு மாத்திரமல்ல. அதில் மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களதும் இஸ்லாமிய மக்களதும் வரலாறும் இருக்க வேண்டும் என்பதனையே இச்சாதி – இன வரலாற்று நூல்கள் மறைமுகமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் தெரிவிக்கின்றன. 

(தொடரும்)