— சிக்மலிங்கம் றெஜினோல்ட் —
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்படும் விடயங்களில் இரட்டைக் குடியுரிமை என்பது புலம்பெயர்ந்திருப்போருக்கு ஒரு பெரிய கதவு திறப்பு. இனி அவர்கள் அரசியலில் ஈடுபட முடியும். இங்கே நாட்டில் முதலீடுகளைத் துணிந்து செய்யலாம். அதற்கு இடர்ப்பாடுகள் குறைவு. இங்கே உள்ள குடிமக்களுக்கிருக்கும் அத்தனை உரிமைகளும் இவர்களுக்கும் கிடைப்பதால் இனி எந்தத் தொழில் முயற்சிகளையும் ஆரம்பிக்கலாம். சொத்துகளை வாங்கலாம். விற்கலாம். இங்கும் அங்குமாக விரும்பிய இடத்தில் விரும்பியவாறு வாழலாம். இப்படிப் பல சாத்தியங்கள்.
இவர்களுக்கு இப்போதுள்ள ஒரேயொரு பிரச்சினை, கொரோனாதான். இல்லையென்றால், பலர் இப்போது இங்கே ஊர்களில் முகாமிட்டிருப்பார்கள். முன்பு அரசியலமைப்பும் சூழலும் தடையாக இருந்தது. இப்பொழுது கொவிட் 19 தடையாக இருக்கிறது.
ஆனாலும் இதையெல்லாம் கடந்தும் ஒரு சிக்கல் உண்டு. “அகழ்” இணைய இதழில் “காலம்” செல்வம் அருளானந்தத்தின் நேர்காணலைப் படித்தபோது, அதுவேறொரு கோணத்தில் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகிறது. இரட்டைக்குடியுரிமை, அது வழங்கும் சாத்தியங்கள், ஊரில் வாழும் ஆசை, கனவு, முயற்சி எல்லாவற்றுக்கும் மாறுதலான ஒரு யதார்த்தத்தை – உண்மையை செல்வம் சொல்கிறார்.
“என்னுடைய ஊர் (சில்லாலை) முற்றாகச் சிதைந்து விட்டது. நாங்கள் எதிர்பார்த்தது, நினைத்திருந்தது வேற. இங்கு (கனடாவில்) உழைத்து கொஞ்சம் காசோடு (ஊருக்கு) வந்து எங்களுடைய வீட்டை கல்வீடாக கட்டி ஒரு நவீன வாழ்க்கை வாழுகின்ற ஒரு கனவு தான் அப்ப இருந்தது. இதை நினைக்க யுத்தமும் வந்து விட்டது. இது எல்லாம் முடிந்து ஊருக்கு போய் சந்தோஷமாய் இருக்க முடியும் என்ற கனவு இருந்தது.
எனக்கு சாகும்போது அங்கே (ஊரில்) செத்தால் நல்லது என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இப்ப இலங்கையில் வாழ்வது என்றால் வெறுப்பாக இருக்கு. நான் விட்டுட்டு வந்த இடத்தைத் தானே யோசிப்பேன். இங்கால பொன்னு மாமி, அங்கால பொன்ராசா மாமா, அங்கால அவை, இங்கால இளம் வயதில் பார்த்த பெண்கள் இப்படித்தானே நாங்கள் நினைப்போம். இப்ப அது தலைகீழாக போய் விட்டதே.
அது வேறுமாதிரி போய்விட்டது. பலதடவை ஊருக்குப் போய் வந்துவிட்டன். பதினெட்டு குடிகளும் நாய்களும்தான் எங்கள் குறிச்சியில் உலாவித் திரியினம்.
நான் என்னுடைய ஊருக்கே ஒரு அந்நியன் போலத்தான் போகின்றேன். என்னுடைய அம்மா காலத்து ஆட்களும் இல்லை; என்னுடைய காலத்து ஆட்களும் இல்லை. எனக்கு பிறகுக்கு பிறகு வந்த ஆட்கள்தான் இருக்கின்றார்கள். அவர்கள் என்னை ஒரு புது ஆளாகத்தான் பார்க்கின்றார்கள். ஊருக்குப் போய் யாருடன் வாழ்வது? ஊருக்குள் ஒரு அந்நியன் போல் தான் போக வேண்டும்” என்று.
செல்வம் கூறுவது உண்மை. ஊருக்கு வரவேணும் என்ற தசாப்த காலக் கனவு இப்படித் துயரம் தரும் விதமாக பலருக்கும் கருகி விட்டது. ஊருக்குத் திரும்பி வாழும் விருப்பம் உள்ளே நெருப்பாகத் தகித்தாலும் புறத்தில் உள்ள யதார்த்தம் அதற்கு மாறாகவே உள்ளது. இழந்த வாழ்க்கையை எந்த வகையிலும் ஈடு செய்யவே முடியாது. இழந்தது, இழந்ததுதான்.
ஆனால், இது வாழ்க்கையை நோக்கும் விதத்தைப் பொறுத்தது. செல்வத்தைப்போல வாழ்க்கையை லாபநட்டக் கணக்கில் மட்டும் பார்க்காமல், அதன் ருசிகளோடு உணர்வுபூர்வமாகப் பார்க்கின்றவர்களுக்கு இது பெருந்துயரமே. செல்வம், கவிஞர், எழுத்தாளர் என்றபடியால் அவர் இந்த விசயத்தைச் சென்ஸிற்றிவ்வான கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார். அவருக்கு இது நெகடிவ்வாகத் தெரியும். ஆனால், பொருளாதாரம் மற்றும் தொழில் சார்ந்தும் அரசியல் ஈடுபாடு சார்ந்தும் யோசிப்பவர்களின் மனநிலை வேறு. அவர்களுடைய முடிவும் தேர்வும் வேறாக பொஸிற்றிவ்வாக இருக்கும் என்கிறார் ஒரு நண்பர்.
வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும் என்பது உண்மையே. ஆனால், அது ஒன்றும் பொதுப்போக்காகி விடாது என்பது யதார்த்தம். அந்நியத் தன்மையுடன் ஊரில் ஒட்டி வாழவே முடியாது. என்பதால் இவர்களுக்கு இரட்டைக்குடியுரிமை பயன் தரப்போவதில்லை.
இந்த நிலையை ஒத்த “Scent of Apples”அப்பிள்களின் வாசனை என்ற பிலிப்பைன்ஸ் கதையை அண்மையில் படித்தேன். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த Bienvenido N Santos என்ற எழுத்தாளருடையது. ஒரு கூட்டத்தில் சாண்டோஸ் கலந்து கொள்கிறார். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயி ஒரு கேள்வியைக் கேட்கிறார். அந்த விவசாயியும் பிலிப்பைன்ஸை விட்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பாக வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருப்பவர். அவர் நீண்ட நாட்களாகப் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரைக் கூட நேரில் சந்திக்கவில்லை. அதற்காகவே அவர் சாண்டோஸின் கூட்டத்தை அறிந்து வந்ததாகச் சொல்கிறார்.
அவர் சாண்டோஸிடம் பிலிப்பைன்ஸில் இப்போது நிலைமை எப்படி? அங்கே பெண்கள் முன்பு போல இருக்கிறார்களா அல்லது மாறிவிட்டார்களா? அங்கே நடந்திருக்கும் மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் கேட்கிறார். இதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று சாண்டோஸிற்குத் தெரியவில்லை. அவர் முன்பு அங்குள்ள நிலைமையை நீங்கள் விரிவாகச் சொன்னால் உங்கள் கேள்விக்கான பதிலை நான் சொல்ல முடியும் என்கிறார்.
அதற்கு அந்த விவசாயி அந்தக்காலத்தில் அங்கே இருந்து சூழலையும் பற்றிச் சொல்கிறார்.
தொடர்ந்து சாண்டோஸூக்கும் அந்த விவசாயிக்குமிடையில் உரையாடல் நடக்கிறது. சாண்டோஸ் பல விதமாக விவசாயிக்கு நிலைமைகளை விளக்குகிறார். சாண்டோஸின் விளக்கத்தில் விவசாயி மகிழ்ச்சியடைகிறார். நிகழ்ச்சி முடிந்தபிறகு சாண்டோஸை அந்த விவசாயி ஒரு நாள் தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார். தன்னுடைய மனைவி நீண்டகாலமாகப் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவேயில்லை. நீங்கள் வீட்டுக்கு வந்தால் அவள் மிகவும் சந்தோஷப்படுவாள் என்கிறார்.
விவசாயியின் அழைப்பை சாண்டோஸ் ஏற்றுக் கொண்டு ஒரு நாள் அங்கே செல்கிறார் சாண்டோஸ். போகும் வழியில் வழியில் நிறைய அப்பிள் மரங்களைப் பார்க்கிறார். அந்த மரங்கள் அவரது இளமைக்காலத்தை நினைவூட்டுகின்றன. அவர் திடீரெனத் தனது சொந்த ஊரைத் தனது பூர்வீக வீட்டை நினைத்து ஏங்குகிறார்.
விவசாயியின் வீட்டில் விவசாயியைச் சந்தித்த போது அவரும் அந்த அப்பிள் மரங்களைக் காணும் போது ஊரை நினைவுகொள்வதாகச் சாண்டோஸூக்குச் சொல்கிறார். அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த போதும் இருவரும் தங்கள் இளமைக்காலத்தை நினைவில் வைத்திருக்கிறார்கள். இதுதான் ஊரின் நினைவிற் திளைத்தல் என்பது. இளையராஜாவின் ஒரு பாடலில் வருவதைப்போல, “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா? அட எந்த நாடு என்றாலும் அது நம்ம நாட்டுக்கு ஈடாகுமா..” என்பது இந்தத் திளைத்தலின் வெளிப்பாடே.
ஆனால் வெளியே இருந்து நினைப்பதைப்போல ஊரில் எதுவும் இருக்காது. அங்கே இப்பொழுது எல்லாமே மாறிவிட்டது. ஆட்களே மாறி விட்டார்கள். இதையிட்டு இருவருக்கும் வருத்தமாக இருக்கிறது.
விவசாயியிடம் விடைபெறும் போது தான் சொந்த ஊருக்குப் போகத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார் சாண்டோஸ். அவனுக்காக ஏதாவது செய்தி கொண்டு செல்லவேண்டுமா எனக்கேட்கிறார்.
அப்போது “வேண்டாம். ஊரில் யாரும் என்னை நினைவில் வைத்திருக்கமாட்டார்கள். நான் வெளியேறிப்போன ஒருவனாக அடையாளமற்று இருந்துவிடுகிறேன்” என்கிறான் விவசாயி. ஊர் என்பது இருவரது மனதிலும் தான் இருக்கிறது. நிஜம் என்பது வேறு. மாற்றங்களை மனது ஏற்றுக் கொண்டாலும் நினைவு அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
செல்வத்தைப்போல இந்த விவசாயியும் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறான். அவனுடைய மனதிலும் இன்னும் பழைய உலகிற்கும் பழைய வாழ்க்கைக்கும் திரும்பிப் போக வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அவனால் அங்கே போக முடியாது. அப்படிப் போவது சாத்தியமில்லை என்று அறிந்து வைத்திருக்கிறான். இதுதான் நிலைமையைப் புரிந்து கொண்டு அதை மீற முடியாமல் தத்தளிப்பது என்பது.
இதுவே உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர்ந்தோரின் நிலைமை. நாடு, இனம், மொழி என்ற வேறுபாடுகள் எதுவும் இங்கே செல்வாக்குச் செலுத்த முடியாது. எல்லோருக்கும் ஒரே விதிதான்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பயணமொன்றின்போது முதிய முஸ்லிம் ஒருவரைச் சந்தித்தேன். யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவிட்டுப் புத்தளத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்றவர் மறுபடியும் ஊரை வந்து பார்த்து விட்டுச் செல்கிறார்.
“யாழ்ப்பாணத்திற்கு திரும்ப வரப்போகிறீர்களா?” என்று கேட்டேன்.
“எனக்கும் மனைவிக்கும் அதுதான் விருப்பம். ஆனால், பிள்ளைகளுக்கு விருப்பமில்லை. அவங்களுக்கு அங்கே – புத்தளம்தான் சொந்த ஊராகிப்போச்சு. அவங்கட பள்ளிக்கூடம், நண்பர்கள், பழக்கம் எல்லாம் புத்தளத்தில எண்டதால தாங்கள் வரமாட்டம் என்கிறாங்க. வேணுமெண்டா என்னையும் மனைவியையும் அங்க (யாழ்ப்பாணத்தில) போய் இருங்க வாப்பா. ஏதாச்சும் உதவியெண்டா நாங்க அங்க வருவம் என்கிறாங்க. ஆனால், எனக்கு யாழ்ப்பாணம்தான் எல்லாமே. என்னோட இளமைக்கால நண்பர்கள், நாங்க தொழில் பார்த்த இடம், படம்பார்த்த தியேட்டர், நம்முடைய பள்ளிக் கூடம், பள்ளிவாசல் எல்லாமே யாழ்ப்பாணத்திலதான். எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல” என்றார். கண்கள் நிரம்பி வழிந்தன.
இதுதான் செல்வம் சொல்லும் உண்மையும் யதார்த்தமும். விருப்பங்கள் வேறாக இருக்கலாம். நிலைமை வேறு. அதுதான் பிடிவாதமாக நின்று வெற்றியைப் பெறும்.
புலம்பெயர்ந்திருப்போரில் பலருக்கும் இங்கே (ஊருக்கு) வந்து வாழவே விருப்பம். ஆனால், அதற்குப் பிள்ளைகள் அனுதிப்பதில்லை. அல்லது பிள்ளைகளை விட்டு விட்டு வர முடியாத அவதி. இதனால் அவர்கள் அங்கே அறைகளில் முடங்கி வீட்டுச் சிறையிலிருக்கின்றனர். ஊர் நினைவு அவர்களை ஆட்டிப்படைக்கிறது.
சிலர் பிள்ளைகளோடு புலம்பெயர் சூழலில் கொஞ்சக் காலம் இருந்து பார்த்து விட்டு தாக்குப் பிடிக்க முடியாமல் ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். இவர்களில் அநேகர் பிள்ளைகளால் அழைக்கப்பட்டு விருந்தாளிகளாகச் சென்றவர்கள். ஆகவே இவர்களுக்கு பெரிய சிக்கல்களில்லை. ஒன்றேயொன்றுதான், முதுமையில் பிள்ளைகளின் துணையில்லை என்பது. பிள்ளைகளுக்கும் பெற்றோரை அவர்களுடைய இறுதிக்காலத்தில் வைத்துப் பராமரிக்க முடியவில்லை என்ற கவலை. இதனால் அவர்களைப் பராமரிப்பதற்கு ஆட்களைத் தேடுகிறார்கள். அயலவர்களின் உதவியை நாடுகிறார்கள். வேறு வழியில்லை. இப்படித்தான் இவர்களுடைய வாழ்க்கை இருக்கும்.
மற்ற அணி, இளவயதில்அங்கே சென்று உழைத்துச் சம்பாதித்து, திருமணம் முடித்துப் பிள்ளைகளைப் பெற்றவர்கள். இவர்கள்தான் செல்வம் சொல்வதைப்போல நாட்டுக்குத் திரும்பி, ஊரில் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று கனவு கண்டவர்கள். யுத்தம் முடிந்த கையோடு முதலில் ஊருக்கு ஓடி வந்தவர்களும் பெரும்பாலும் இவர்கள்தான். வந்து, ஊரில் காணிகளைத் திருத்தி, வீடுகளைப் பெருப்பித்துக் கட்டினார்கள். சிலர் புதிதாகக் காணி வாங்கி வீடு கட்டியதும் உண்டு. சிலர் சிறிய அளவில் தொழில் முயற்சிகளில் முதலீடுகளைச் செய்ததும் உண்டு.
ஆனால், இவர்கள் இங்கே – நாட்டுக்கு – வந்து வாழ்கிறார்கள் என்றில்லை. அப்படியொரு ஐடியாவோடு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கேனும் ஒன்றிரண்டு பேர் – அபூர்வமாக ஊரில் வந்து தங்கியிருக்கலாம். அப்படியென்றால் அவர்கள் நிச்சயமாகத் தொழில் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அல்லது அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்கின்றார்கள். மற்றப்படி வந்து போகின்றவர்களாகவே பலரும் உள்ளனர். கொரோனா அதையும் தடுத்து விட்டிருக்கிறது.
ஆனாலும் இவர்கள் எல்லோருக்கும் தாய் மண்ணுடனான ஈடுபாடு மட்டும் குறையாது. எப்படியும் சொந்த மண்ணுக்குத் திரும்பும் ஆவல் உள்ளே துடித்துக் கொண்டும் தகித்துக் கொண்டுமிருக்கும். இவர்களுடைய வருகை நிரந்தரமானதா? அல்லது ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கிற விடுமுறையில் ஊருக்கு வந்து அதைக் கொண்டாடி விட்டுப்போவதோடு முடிந்து விடப்போகிறதா? அல்லது இங்கே மறுபடியும் வேர்விடுமா? அல்லது இன்னொரு பதியமாகத்தான் மாறுமா?