— அழகு குணசீலன் —
தமிழர் அரசியல் பரப்பில் மழையும், குடையும் ஒன்றும் புதியவை அல்ல.
தமிழர் அகிம்சை அரசியலில் இந்த வார்த்தைகள் சார்பு-எதிர்ப்பு தரப்புக்களால் நிறையவே பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மழை பெய்தால் யாழ்ப்பாணத்தில் குடை பிடித்த கதைகளும் இதற்கு மாறாக யாழ்ப்பாணத்தில் மழை பெய்தால் சென்னையில் குடை பிடித்த கதைகளும் நாம் அறியாதவை அல்ல. இது திராவிடர் அரசியலில் ஒருபகுதி. ஆயுதப் போராட்ட வளர்ச்சியில் இது வெறும் அரசியல் முதலீடாகவன்றி உணர்வு, திராவிட இன அடையாளத்துள் ஒருங்கிணைதல் என்ற பரிணாமவளர்ச்சியைப் பெற்றது.
இந்த மழையும், குடையும் அண்மையில் லண்டனுக்கும், ஏறாவூருக்கும் இடம்மாறியிருக்கிறது. லண்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி மீள்மனு தாக்கல் செய்யப்பட்ட செய்தி அறிந்து, ஏறாவூரில் அரசியல் கட்சி ஒன்று விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்று கோரிக்கையும், எதிர்ப்பும் தெரிவித்த அரசியல் நகர்வு பற்றியது இந்தப் பதிவு.
ஜனநாயக மக்கள் கட்சி-சிறிலங்கா, என்ற அந்த DPP, முஸ்லிம் மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயற்படும் ஒரு கட்சி. ஒரு சிறு தொகை ஆதரவாளர்கள் ஒன்று கூடி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து பிரித்தானியா மீளாய்வு செய்யவேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.
இது விடயமாக காலக்கண்ணாடி காட்சிப்படுத்த உள்ள பின்னணி இந்தக் கட்சியின் பலம், பலவீனம் அல்லது தடைநீக்க மீள் மனுமீதான வெற்றி தோல்வி என்பவற்றிற்கு அப்பால் கட்சி அரசியல் நலன் சார்ந்த சிறு சிறு சலசலப்புக்கள் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்-முஸ்லீம் மக்களுக்கு இடையிலான இன உறவில் ஏற்படுத்தப்போகும் ஆழ, அகன்ற கிடங்கு பற்றியதாகும்.
விடுதலைப்புலிகளாலும், மற்றைய தமிழ் அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளால் வடக்கிலும், கிழக்கிலும், எல்லைக்கிராமங்களிலும் முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட உயிர், உடமை இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாதவை.
அது போன்று முஸ்லீம் ஊர்காவல்படையினராலும், மற்றும் வன்முறையாளர்களாலும் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட உயிர், உடமை இழப்புக்களும் ஈடுசெய்ய முடியாதவை. இவற்றில் எதையும் ஒன்றில் இருந்து ஒன்றைக்கூட்டி அல்லது குறைத்து மதிப்பிடுவது அரசியல் அநாகரிகம்.
இந்த வன்முறைகளினால் தமிழ், முஸ்லீம் மக்கள் இழந்ததைத்தவிர பெற்றது எதுவும் இல்லை. மனிதம், இருதரப்பு சுய அரசியலுக்காக குழிதோண்டிப் புதைக்கப்பட்ட இக் கொடூரத்தின் விளைவை இந்த தலைமுறை மட்டுமன்றி வருங்கால தலைமுறையும் சுமக்க வேண்டிய நிலையில் இருசமூகங்களும் கீரியும் பாம்புமாய் வாழத்தான் வேண்டுமா?
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்:
விடுதலைப்புலிகளின் ஆயுத மௌனிப்பு கே.பி.யால் அறிவிக்கப்பட்டு சில ஆண்டுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டது. புலிகள் மீதான தடை 2001 இல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தடைநீக்கக் கோரிக்கை எழக்காரணம் என்ன?
1. ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளது. இதன் 28 உறுப்பு நாடுகளிலும் இத்தடை அமுலில் உள்ளது. இதில் இங்கிலாந்தும் ஒன்று.
தற்போது இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறி இருப்பதனால் இது குறித்து சுயமாக முடிவு எடுக்கமுடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்த நாடுகடந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
2. இங்கிலாந்து சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு மீதான தடையை 2016 இல் நீக்கி உள்ளது. இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது.
3. இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் விடுதலைப்புலிகளின் துணைஅமைப்புக்களாக புகலிட நாடுகளில் செயற்படும் 16 அமைப்புக்களையும், 424 செயற்பாட்டாளர்களினதும் மீதான தடையை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. சமகாலத்தில் இலங்கையே தடையை நீக்க தயாராகிறது என்று இச் சந்தர்ப்பத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பயன்படுத்தமுடியும்.
4. அமெரிக்க இரட்டைக்கோபுரதாக்குதலுக்குப் பின்னரான பயங்கரவாத சட்டத்தைத் தழுவிய சட்டத்தின் கீழ்தான் இத் தடைகள் மேற்கொள்ளப்பட்டன. ட்ரம்ப் ஆட்சியில் நாடுகள் மீதான யுத்தம் தவிர்க்கப்பட்டு, அமெரிக்க பொருளாதார நலனே முன்னெடுக்கப்படுகிறது. ட்ரம்ப் ஆட்சி பயங்கரவாதம் பற்றிய, அதை ஒழிப்பது பற்றிய தனது வெளிநாட்டுக் கொள்கையில் ஆர்வம் குறைந்ததாகவே கடந்த நான்கு ஆண்டுகளில் செயற்பட்டது.
5. இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபடவில்லை என்ற வாதமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பொதுவாக முன்வைக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட சமகால பூகோள அரசியல் மாற்றங்களை உள்வாங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த பரீட்சையில் இறங்கி இருக்கிறது.
ஜனநாயக மக்கள் கட்சி-சிறிலங்கா:
இந்தக் கட்சியானது அரசியலில் பெரிதாக அறியப்பட்டதோ, முஸ்லீம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றதோ என்பதற்கில்லை.
ஒரு கடிதத்தலை-பனர் கட்சி என்று சொல்லமுடியும். இப்படியான சிறிய பெயரளவிலான கட்சி ஒன்று சர்வதேசமட்டத்தில் பேசப்படுகின்ற லண்டன் சமாச்சாரம் ஒன்றில் தலையைப் போடக் காரணம் என்ன?
முஸ்லீம் காங்கிரஸ், தேசிய மக்கள் காங்கிரஸ் போன்ற இன்னும் சில கட்சிகள் முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவம் படுத்துகின்ற நிலையில் இவை எல்லாம் இதில் தலையைப் போடாமல் இருக்க ஜனநாயக மக்கள் கட்சியின் கவனயீர்ப்பை இந்த தடைநீக்க விவகாரம் பெற்றது ஏன்?
1. முஸ்லீம்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனத் துவேஷத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் பெறுவது.
2. ராசபக்ச அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற முஸ்லீம்களில் இருந்து விலகி நிற்கின்ற நிலைப்பாட்டில் இப்படியொரு தூண்டிலைப் போட்டுப் பார்த்தல். கொத்தினால் படும் .கொத்தாவிட்டாலும் நட்டம் இல்லை.
3. மற்றைய முஸ்லீம் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் மிக மலிவான விளம்பரம் ஒன்றை முஸ்லீம்கள் மத்தியில் பெறமுடியும்.
4. இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது அரபுநாடுகளின் கவன ஈர்ப்பைப் பெறுமாயின் அதனூடாக சில உதவிகளைப் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
இங்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் என்னவெனில் தடையை நீக்கக்கோரும் தரப்பிற்கு இருக்கின்ற எள்ளளவும் குறையாத உரிமை தடையை நீக்க வேண்டாம் என்று கோரும் தரப்பிற்கும் உண்டு. அதுவும் விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஏகபோகமற்ற, பலகட்சி ஜனநாயக அரசியலில்- ஒன்று கூடும், கருத்துசுதந்திர மனித உரிமைகள் சார்ந்த விடயம் இது.
ஏறாவூர்:
தமிழ்மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய திருப்பு முனையொன்றில் ஏறாவூர் என்ற பெயர் இடம் பெற்றுவிட்டது. இது ஒரு தனிநபர் சார்ந்த விடயம் என்பதும் அதற்காக ஊர் மீது பழிபோடக் கூடாது என்பதும் அறிந்த விடயம் தான்.
ஆனால் வரலாற்றில் தனிநபர்களோடு சேர்ந்து அவர்கள் சார்ந்த ஊரும் நல்லதற்கும் சில வேளைகளில் கெட்டதற்கும் இழுபட்டுப்போவதுண்டு.
இங்கு நடந்தது நல்லதா? கெட்டதா? என்பதை ஒரே முடிவாகத் தீர்மானிக்க முடியாது.
ஒரே விடயம் ஒரு பிரிவினருக்கு நல்லதாகவும், இன்னொரு பிரிவினருக்கு கெட்டதாகவும் இருக்கலாம். அது அவரவர் பார்வை சார்ந்தது.
ஆக, நல்லதற்கோ, கெட்டதற்கோ இங்கு மீண்டும் ஏறாவூர் இழுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஈடுபட்டவர்கள் ஒரு கையளவு ஆட்கள்தான். இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஒருங்கிணைந்த – வேற்றுமையிலும் ஒற்றுமையை விரும்புகின்ற ஏறாவூரின் பெரும்பாலான மக்களுக்கும் இந்த நடவடிக்கைக்கும் தொடர்பில்லை என்பது தெளிவான ஒரு விடயம்.
முன்னையது விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரிவதற்கு ரணில் விக்கிரம சிங்க வகுத்த திட்டம் ஏறாவூர் அலிசார் மௌலானாவால் நிறைவேற்றப்பட்டது என்பது.
பின்னையது விடுதலைப்புலிகளின் தடை நீக்கக்கோரிக்கைக்கு எதிராக ஏறாவூரில் எதிர்ப்பு காட்டப்பட்டது என்பது.
முன்னைய நிகழ்வு தமிழ்மக்களின் ஒருசாராரிடம் முஸ்லீம் மக்கள் மீதான பகை உணர்வை ஏற்படுத்தி இருக்கிற நிலையில், அந்த காயம் ஆறுவதற்கு முன் இன்னொரு சம்பவம் இடம்பெற்றிருப்பது இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவில் மீண்டும் மீண்டும் ஆழக்குழி தோண்டுவதாகவே அமையும்.
காத்தான்குடி:
உயிர்த்த ஞாயிறு தினத்தில் காத்தான்குடியை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு குழுவினர் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் ஏற்படுத்திய அழிவுகளிலும் அதிர்ச்சியிலும் இருந்து, இலங்கைச் சமூகங்கள் இன்னும் மீளவில்லை. இது கூட முழு முஸ்லீம் மக்களுக்கும், காத்தான்குடியின் சாதாரண மக்களுக்கும் அவமானத்தையும் கவலையையும் அளிக்கின்ற விடயமாகவே இருந்தது.
விடுதலைப்புலிகளால் காத்தான்குடி பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும், இந்த தேவாலயத் தாக்குதலுக்கும் எந்த வகையிலும் வேறுபாடுகிடையாது. இரு குழுக்கள், இரு சமூகங்களைச் சார்ந்தவர்கள் என்பதைத்தவிர.
இது போன்று பல தமிழ்-முஸ்லீம் எல்லைக்கிராமங்கள் ஏட்டிக்குப் போட்டியான இருதரப்பு வன்முறைகளில் சிக்குண்டதும், அதனால் தமிழ்-முஸ்லீம் இன உறவில் ஏற்பட்ட ஆறாத வடுக்களும் நாம் அறியாதவை அல்ல. பாவற்கொடிச்சேனை, சவளக்கடை, தியாவட்டவான் என பல ஊர்கள் இந்த இருதரப்பு வன்முறைக்கு சாட்சியங்கள்.
பிட்டும் தேங்காயப்பூவும்:
இது சொல்லிச் சொல்லி, எழுதியெழுதி, பேசிப்பேசி அலுத்தும், உழுத்தும் போன வார்த்தையாடல்தான். ஆனால் எங்களது இருசமூகங்களினதும் ஒருங்கிணைந்த வாழ்வைக் காட்டுவதற்கு இதுபோன்ற கனதியும், காத்திரமும், உயிரோட்டமும், மண்வாசனையும் கொண்ட ஒரு வார்த்தை கிடைப்பது அரிது.
மட்டக்களப்புத் தேசம் என்று அழைக்கப்பட்ட கிழக்கின் பெருநிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் நாம். ஆம்! முஸ்லீம்கள், தமிழர்கள் ஆகிய நாம். இந்த மண்ணில் ஆதியைக் கொண்டவர்கள் நாம்.
நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த இணைந்த வாழ்வியலை விட்டு நாம் ஓடிப்போய் விட முடியாது.
நூறுவீதம் சகல விடயங்களிலும் நாம் கட்டாயமாக இணங்கித்தான் போகவேண்டும் என்பதல்ல. அது நடைமுறை சார்ந்த ஜதார்த்தமும் அல்ல.
இன உறவில் ஏற்கனவே இருதரப்பாலும் தோண்டப்பட்ட ஆழ, அகன்ற கிடங்கு இன்னும் அப்படியே கிடக்கிறது.
அது தூர்ந்துபோனது போல் சில சந்தர்ப்பங்களில் தெரிந்தாலும் அது உண்மையான தோற்றம் அல்ல.
அது ஒரு நீறு பூத்த நெருப்பு. எந்த நேரத்திலும் சுவாலை விட்டு எங்கள் உறவை எரித்துவிடும்.
இந்தக் கிடங்கை – அகழியை சந்தேகம், வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, இன-மதவாதம், சுய அரசியல் இலாபம், வன்முறை போன்ற இன நல்லிணக்கத்தின் அனைத்து தடைகளையும் அந்த அகழியில் போட்டு அதனை மூடுவோம்.
எமது மண்ணில் விதைக்கப்பட்டது மனிதம் அல்ல. மரணதண்டனை. வன்முறை.
ஆக, அறுவடை அதுவாகத்தானே இருக்கும்.
இனியாவது மனிதம் விளையட்டும்.
முடிவாக, என் இதயத்தை தொட்ட லெனினின் இந்த வார்த்தைகள்.
“மூன்று இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ,
முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரை,
மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும்.
முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழித்தொழித்தபின்
மூன்றாவது இனத்திற்கும் அதேகதிதான் நடக்கும்”
தமிழ்- முஸ்லீம் உறவுகளுக்கு இது சமர்ப்பணம்.