— மல்லியப்புசந்தி திலகர் —
இலங்கையில் வரப்போவது புதிய அரசியலமைப்பா? இலக்கமில்லா இன்னுமொரு திருத்தமா?
இலங்கையில் அடுத்து வரவுள்ளதாக சொல்லப்படும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அதற்கான அறிவித்தல்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பொதுமக்கள், பொது அமைப்புகள் அந்த அறிவித்தலின் பிரகாரம் ஆலோசனைகளை வழங்கலாம். அதற்காக ‘அ’ முதல் ‘ஒள’ வரை பிரமாணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஆங்கிலத்தில் A- Z என சொல்வதுபோல புரிந்து கொள்ளலாம்.
அந்த அறிவிப்பின் கோரிக்கை இதுதான்,
‘கீழே குறிப்படப்பட்டுள்ள ஒவ்வொரு விடயத்தையும் புதிய பக்கமொன்றில் ஆரம்பிக்கவும்’
அ. அரசின் தன்மை
ஆ. அடிப்படை உரிமைகள்
இ. மொழி
ஈ. அரச கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகள்
உ. நிறைவேற்றுத்துறை ( ஜனாதிபதி, அமைச்சரவை, பகிரங்க சேவை)
ஊ. சட்டவாக்கத்துறை
எ. வாக்களிப்புத் தத்துவம் மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு உள்ளடங்களாக தேர்தல்கள்
ஏ. அதிகாரத்தைப் பன்முகப்படுத்தல் / அதிகார பரவலாக்கம் / அதிகார பகிர்வு
ஐ. நீதித்துறை
ஒ. பகிரங்க நிதி
ஓ. பொதுமக்கள் பாதுகாப்பு
ஒள. மேலே குறித்துரைக்கப்படாத அக்கறையுள்ள வேறு ஏதேனும் விடயம்
‘சமர்ப்பணங்கள் இயன்றளவு சுருக்கமாகச் செய்வது விரும்பத்தக்கதாகும்’
இப்படி சுருக்கமாக சமர்ப்பணங்களை செய்வதே சுகமானது என அரசாங்கம் அறிவித்தல் விட்டிருக்கும்போது, நாம் விரிவாக விவாதிப்போம் என தோழர் வி.சிவலிங்கம், “அரங்கத்தின்” ஊடாக ஆரம்பித்து வைத்திருக்கும் தொடரில் நானும் இணைந்து கொள்கிறேன்.
அதற்கான வெளியை அரசாங்கம் ‘ஒள’ ஊடாக வழங்கி இருப்பதாக நாம் ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்வோம். அரசாங்கம் அப்படி புரிந்து கொள்ளாவிட்டாலும்.
ஏனெனில், ‘அ’ முதல் ‘ஒள’ வரை ஒவ்வொரு விடயத்தையும் புதிய பக்கம் ஒன்றில் ஆரம்பிக்கவும் என அரசாங்கம் கேட்டிருக்கிறது. நாம் எழுத நினைக்கும் அரசியலமைப்பின் புதிய பக்கத்துக்கும் அரசாங்கம் கோரிநிற்கும் புதிய பக்கத்துக்கும் அடிப்படை கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் சொல்வது ஒரு புதிய A4 தாளை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
ஆனால், எமது சிந்தனைகள் இந்த ‘அ’ முதல் ‘ஒள’ வரை ஒவ்வொரு விடயத்திலும் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கும் எண்ணம் கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவற்றை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கலாசாரம்தான் எம்மிடையே உண்டா?, அதனை முன்னகர்த்தும் அரசியல் அமைப்புகள் எம்மிடையே உண்டா?,அத்தகைய கட்சிக் கட்டமைப்புகளை நாம்கொண்டிருக்கிறோமா?, என்பன போன்ற பல கேள்விகளை நாம் எமக்குள் கேட்டுக் கொண்டே அல்லது சுயவிமர்சனம் செய்து கொண்டே விவாதிப்போம்.
ஏனெனில் விவாதிப்பது எமது வேலை. எமது பணி. உரையாட மறுத்தால் நாம் உறங்கிப் போவோம் அல்லது உறங்க வைக்கப்படுவோம். ஆகவே, உரத்துப் பேசிக் கொண்டே இருப்போம்.
எங்கள் நாட்டின் தாய்ச்சட்டத்தில் எந்தெந்த ஏற்பாடுகளையெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று இப்போதும், எதிர்பார்த்தோம் என எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்வதற்காகவாவது விவாதிப்போம், உரையாடுவோம்.
எனது உரையாடலை நான் இப்படியான ஒரு வடிவத்துக்குள் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். ‘இலங்கையில் வரப்போவது புதிய அரசியலமைப்பா? இலக்கமில்லா இன்னுமொரு திருத்தமா? ‘
இது என்ன கேள்வி? புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரத்தானே ஆலோசனைக் கேட்கிறார்கள் என இன்னுமொரு விவாதக்குரல் எழலாம். எழும். எழவேண்டும். அப்போதுதானே நான் விடையளிக்கலாம்.
இவ்வாறு இந்த விவாதத்திற்குள் நான் பிரவேசிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கம் என சொல்லப்பட்ட 2015-2019 காலத்தில் நான் பாராளுமன்ற உறுப்பினர். அந்த காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் சில முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றன.
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின்( 1978) 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. (இந்த திருத்தத்தின் பாராளுமன்ற காலம் 2010 – 2019 இல் அமைந்த 7 வது பாராளுமன்றின் இறுதி காலம் என்பது கவனிக்கத்தக்கது).
பாராளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையும்
அதனையடுத்து எட்டாவது பாராளுமன்றில் (2015 செப். ஒன்று முதல் 2020 மார்ச்சு 2 வரையான) பாராளுமன்றத்தை ‘அரசியலமைப்புப் பேரவையாக’ வும் மாற்றியமைக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த அரசியலமைப்புப் பேரவை என்றால் என்ன? எனும் விளக்கம் இல்லாமலே அதற்கு ஆதரவாக கையுயர்த்தியவர்களும் உளர். பின்னர் விளக்கம் கேட்டவர்களும் உளர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்களூடாக மக்களின் கருத்தைப் பெற்று அதனை உள்வாங்குவது என்ற அடிப்படையில் பாராளுமன்ற கட்டடத்தை (கூடத்தை அல்லது அவையை) அரசியலமைப்பு பேரவையாகவும் இயங்கவைப்பது இதன் நோக்கம்.
அரசியலமைப்புபேரவை கூடுவதும் பாராளுமன்றம் கூடுவதும் ஒரே தன்மை கொண்டதாக வெளியே தெரிந்தாலும், அரசியலமைப்புப் பேரவை கூடும் நாளில் ‘செங்கோல்’ உரிய இடத்தில் வைக்கப்படாது. செங்கோல் உரிய இடத்தில் இல்லாத அந்த அவை ‘பாராளுமன்றம்’ அல்ல. ‘குழுநிலை’. ( committee stage).
அதனால்தான் செங்கோலை அகற்றி பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றில்லை எனும் நிலைப்பாட்டை காட்டுவதற்காக அதனை யாரேனும் ஒரு உறுப்பினர் தூக்கிக் கொண்டு ஓடுவார். படைக்கல சேவிதர்கள் அதனை பாதுகாக்க பிரயத்தனம் செய்வார்கள். அவ்வாறு செங்கோலைத் தூக்கிக்கொண்டு ஓடும் உறுப்பினர்கள் எத்தனை பேருக்கு இந்த தாற்பரியம் தெரிந்து செய்தார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.
அதேநேரம், அந்தச் செங்கோல் பிரித்தானிய அரசாட்சி காலத்தில் நமக்கு விட்டுப்போன அடையாளம் என்பதையும் ( பரிசு என்பதையும்) அதில் பெறுமதிமிக்க வைரக்கற்கள் பதிக்கப்படுள்ளதை அறிந்திருந்தால் தூக்கிக் கொண்டு ஓடும் ஆர்வத்தை எந்தளவு ‘தூரத்துக்கு’ செய்திருப்பார்கள் / செய்வார்கள் என்பதும் எனது எதிர்பார்ப்பு.
இந்தத் தகவல் இந்த விவாதத்தில் தேவைதானா ஒரு வாதம் எழும்பும். ஆம் என்கிறேன். இந்த அரசியலமைப்புப் பேரவைதான் நல்லாட்சிக் காலத்தில் கொண்டு வரப்படவுள்ளதாக சொல்லப்பட்ட ‘அரசியலமைப்பை உருவாக்க’ உருவாக்கப்பட்ட அமைப்பு. இப்போது இதே அரசியலமைப்புப் பேரவை ஊடாக, தற்போதைய (2020 இன் 9 வது பாராளுமன்றத்தில்) அரசாங்கத்தில் உருவாக்கப்படப்போவதாக சொல்லப்படும் அரசியலமைப்பு உருவாகுமா? எனும் கேள்விதான் அதற்கு காரணம்.
இந்தக் கேள்வியை நண்பர் ஒருவரிடம் முன்வைத்த போது, இல்லை, அரசியலமைப்பு பேரவை ஊடாக நடைபெறாது ஏனெனில், ‘அரசியலமைப்பு பேரவை’யைத் தான் ‘பாராளுமன்ற சபை’ என இருபதாவது திருத்தத்தில் மாற்றிவிட்டார்களே என்றார்.
இவ்வாறு நமது நண்பர்கள் குழம்பிக் கொள்வதில் நியாயம் இல்லாமல் இல்லை. இருபதாவது திருத்தத்தில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்று அரசியலமைப்பு சபையை பாராளுமன்ற சபையாக மாற்றியமைத்தது. அரசியலமைப்புப் பேரவையை அல்ல.
இப்போது இதனை வாசிக்கும் நண்பர்கள் குழம்பிப் போகாமல் இருக்க ஆங்கிலத்தைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன். இருபதாவது திருத்தத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டது Constitutional Council. அதனை மாற்றி இப்போது Parliamentary Council ஆக்கிவிட்டார்கள். இது கூட புதியதல்ல. 18 வது திருத்ததின் பின் இருந்ததுதான். 18 வது திருத்ததிற்கு முன்பு இதுவே Constitutional Council ஆக இருந்ததுதான். அது 2000 ஆம் ஆண்டு 17 வது திருத்ததில் கொண்டுவரப்பட்டதுதான். மீளவும் 19ஆவது திருத்தத்தில் Constitutional Council ஆனது. இப்போது இருபதாவது திருத்ததில் மீளவும் Parliamentary Council ஆக நிற்கிறது.
(இவ்வாறு இந்த ஒரு சபையை நான் நீட்டி முழங்குவது ஏன் என இரண்டாம் பாகத்தில் எழுதுகிறேன்)
இப்போதைக்கு இந்த அரசியலமைப்பு சபைக்கும் (Constitutional / Parliamentary Council) அரசியலமைப்பு பேரவைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இங்கே Constitutional Council அல்லது Parliamentary Council என இருபதாண்டுகளாக இழுப்பட்டுக் கொண்டிருக்கும் சபை (Council) சுயாதீன ஆணைக்குழுக்களுக்களை நெறிப்படுத்துவதற்கான பத்துப்பேரைக் கொண்ட குழு. (இதன் பணிகளை வேறாக, விரிவாக பார்த்துக் கொள்ளலாம்)
ஆனால், Constitutional Assembly எனப்படும் அரசியல் அமைப்புப் பேரவை, அரசியல் அமைப்பை (Constitution) அமைப்பதற்கான (உருவாக்குவதற்கான) பேரவை. இது 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் எட்டாவது பாராளுமன்றின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் உறுப்பினர்கள். ஆக, அரசியல் அமைப்புக் குழுவில் அங்கத்தினராக நானும் இருந்திருக்கிறேன்.
அதற்கும் மேலாக அத்தகைய அரசியலமைப்பு பேரவையின் உறுப்பு அமைக்கப்புகளாக உருவாக்கப்பட்ட உபகுழுக்களில் (Sub Committee) ஒன்றின் அங்கத்தவர். இதில் 225 பேரும் உறுப்பினர்கள் இல்லை. இந்தக் குழுக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களே உள்வாங்கப்பட்டனர். அதில் நான் அகப்பட்டது ‘மத்தி மற்றும் சுற்றயல்’ (Centre & Periphery) எனும் உபகுழுவில். இந்தக் குழுதான் மத்திய அரசாங்கத்துக்கும் (Central Government) அதன் சுற்றயல் அதிகார பிரிவுகளுக்கும் (இலங்கையில் மாகாண சபை, உள்ளூராட்சி அரசாங்கங்கள்) இடையே அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படலாம் அல்லது பரவலாக்கப்படலாம் என்பது தொடர்பாக ஆராய்ந்த குழு.
இந்தக் குழுக்களை எல்லாம் வழிப்படுத்த பிரதான குழு இருந்தது அது Steering Committee என்றிருந்தது. சிலவிடயங்களை ஆராய Steering Committee ஆனது Sub committee யுடன் இணைந்து செயற்பட்டது.
முக்கிய விடயங்களை உப குழுக்கள் ஊடாக அல்லாது வழிப்படுத்தல் குழு தாமே வைத்துக் கொண்டது. உதாரணமாக (அ) அரசின் தன்மை (எ) வாக்களிப்புத் தத்துவம் அதாவது தேர்தல் முறைமை.
இப்போது அரசியலமைப்புப் பேரவைக்கு என்ன ஆனது அல்லது ஆகும்? என்பதை எண்ண வேண்டிய நிலையில் மக்கள் இருக்கும் இந்த நிலையில்தான் அரசாங்கம் பொதுமக்களிடம் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறது. நாம் விவாதிக்கிறோம்.
எனக்குள்ள புரிதல்களின்படி இலங்கையில் அடுத்துவரப்போவது புதிய அரசியலமைப்பா? அல்லது இலக்கமில்லாத (17-18-19-20 என ) இன்னுமொரு திருத்தமா? எனும் ஐயத்துடனேயே இந்த விவாதத்தில் இணைய விரும்புகிறேன். அது ஏன் என்பது, அடுத்த பகுதியில்…
(தொடரும் ‘அ’ முதல் ‘ஒள’ வரை)