எங்கள் ஊரை இசையால் மகிழ்வித்த காந்தி குடும்பம்

எங்கள் ஊரை இசையால் மகிழ்வித்த காந்தி குடும்பம்

— கலாபூசணம் “அரங்கம்” இரா. தவராஜா —

மட்டக்களப்பில் தடம் பதித்த இசைக் குடும்பம் 

இயல், இசை, நாடகமெனும் முத்தமிழையும் சங்கம் வைத்து வளர்த்த மதுரை மாநகரில், மேலமாசி வீதியில் 1920ம் ஆண்டு பிறந்தவர் சங்கரநாரயணன் கோபாலகிருஸ்ணன். 

இவருடைய தமக்கையார் சங்கரநாரயணன் கோமதி என்பவர் இலங்கையில் வசித்த நாராயணசாமி என்பவரை திருமணம் முடித்து, கண்டி கலகா நகரில் வசித்து வந்தார். 

கோபாலகிருஸ்ணன் அவர்கள் பல வாத்தியங்களைக் கையாளக் கூடிய சிறந்த இசை விற்பன்னராக இருந்தமையால் மதுரையிலிருந்து வெளிநாட்டில் நாடக சபாக்களுக்கு இசை வழங்குவதற்காக ரங்கூன், பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தன் திறமைகளை வெளிக்காட்டி வந்தார். 

அவ்வாறு இலங்கைக்கு வந்தபோது தன் தமக்கையார் கோமதியின் மகள் நாகலெட்சுமியை பெரியோர்களின் விருப்பத்துக்கமைய திருமணம் முடித்துக் கொண்டார்.  

திருமணத்தின் பின் இந்தியா செல்வதை விடுத்து,  கொழும்பில் அக்காலத்தில் இயங்கிய நாடக சபாக்களில் இசை வழங்குபவராக தொழில்ரீதியாக தன்னை இணைத்துக் கொண்டார். 

காலவோட்டத்தில் ச.கோபாலகிருஸ்ணனுக்கும் நா.நாகலெட்சுமிக்கும் பிறந்த பிள்ளைகள்,

ச.கோபாலகிருஸ்ணன்……    பிறப்பு:–1920

நா.நாகலெட்சுமி…                    பிறப்பு:–1928

திருமணம்……1948

01. கோ.பத்மநாதன் (காந்தி)     பிறப்பு:–10.10.1950. 

02. கோ.காந்திமதி (பாணுமதி)   பிறப்பு:–01.07.1955.

03. கோ.வளர்மதி

இவர்கள் ஒருவர் மீது ஒருவர் மிகப்பிரியமுள்ள குடும்பமாக கொழும்பு நாடக சபாக்களில் கோபாலகிருஸ்ணனுக்கு கிடைக்கும் வருமானத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்திக் கொண்டிருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் தென்னிந்திய திரைப்படங்களின் வருகை இலங்கைக்குள் நுழைய நாடகசபாக்களின் மொத்த மௌசும் குறையத் தொடங்கியது. 

இதனால் அடிமட்ட வறுமைக்குள் தள்ளப்பட்ட இக்குடும்பம்,  1970களில் மட்டக்களப்புக்கு வருகைதந்து, அன்றிருந்த பழைய பஸ் நிலையத்தில் உப்புத்தென்றல் உடம்பில் ஜில்லென வீச, மஞ்சள் நிறப்பூக்கள் கண்ணுக்கு காட்சியளிக்க, இதமான நிழலை தந்த பூவரசுமரத்தின் கீழ் செவிக்கினிய கீதங்களை வழங்க, இந்த இசைக்குடும்பம் அவ்விடத்தை தங்கள் இசை அரங்கமாக தெரிவு செய்து, மக்களுக்கென பாடல்களைப் பாடி, தங்கள் ஜீவனோபாயத்துக்கு தேவையான வருமானத்தை ஈட்டிக்கொண்டிருந்தனர்.  

இவர்கள் இரவு நேரத்தை கழிக்க முடியாமல் தவித்தபோது அன்றைய பிரயாணிகள் தங்குமிடத்தில் ”டைம்கீப்பராக” வேலை பார்த்த சூரியாலேனில் வசித்த செல்வரெட்ணம் என்பவர், இவர்களின் இக்கட்டான நிலையை அறிந்து தன் செல்வாக்கை பாவித்து பிரயாணிகள் தங்குமிடத்தில் பாதுகாப்பாக ஒரு இடத்தையொதுக்கி இக்குடும்பத்துக்கு தற்காலிகமாக வழங்கியிருந்தார். இக்குடும்பமும் சில நாட்கள் அந்நிலையத்திலேயே இரவைக் கழிப்பதும் பகலில் இசை வழங்குவதுமாக தங்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு செலுத்தினர். 

இவர்களின் வருகைக்கு முன்பு ஹார்மோணியம், மிருதங்கம்,  டோல்கி ஆகியவற்றை வாசிப்பதோடு, பாடகராகவும் இருந்த அந்தோணிப்பிள்ளை என்பவர் தலைவராக இருந்து ”பாடுமீன் இசைக் கழகம்” என்ற பெயரில் ஓர் இசைக்கழகத்தை நடாத்தி வந்தார். இதில்  கடம் வாசிப்பவராக மோர்சாத்பிட்டி குமாரசாமி, கோட்டைமுனையைச் சேர்ந்த ச.கிருஸ்ணப் பிள்ளை,  ”மோர்சங்” வின்சன் என்பவர் ”மென்ரலின்” இவைகளோடு மேலதிகமாக அக்காலத்திலிருந்த சின்னச்சின்ன வாத்தியங்களான சல்லாரி, சுருதிப்பெட்டி, கைச்சலங்கை போன்ற வாத்தியங்களை வாசிப்பவர்களும் அக்காலத்தில் இவ் இசைக்கழகத்தோடு இணைந்து செயற்பட்டனர். அந்தோணிப்பிள்ளையின் மரணத்திற்கு பின் இக்கழகம் செயல்பட முடியாமல் முடங்கிப்போனது. 

இவ் இசைக் கழகத்தில் இருந்த ச.கிருஸ்ணப்பிள்ளை என்பவரின் தம்பி ச.செபஸ்தியான் பிள்ளை என்பவர் 60களில் தேனமுத இலக்கிய மன்றத்தில் ஓர் முக்கிய நடிகராக இருந்தவர். கலையுணர்வு கொண்டவர் இவர் இ.போ.ச.வில் ”கொண்டக்டராக” கடமையாற்றி வந்ததினால், மேற்படி இசைக்குழுவின் நிலையைக் கண்டு தன் தமையனாரோடு பேசி இக்குடும்பத்தை தம்மோடு அழைத்து வந்து கிருஸ்ணப்பிள்ளை வசித்து வந்த வீட்டின் ஒருபகுதியை இவர்கள் தங்குவதற்கு ஒழுங்கு பண்ணிக்கொடுத்தார். 

இங்கிருந்து காலையில் வருவதும் நிகழ்ச்சியை நடத்துவதுமாக இக்குழு அன்றாட வாழ்க்கையின் பயணத்தைச் செலுத்திக் கொண்டிருந்தது.  

காந்தி ஹார்மோணியக்காரராகவும், பாடகராகவும், தந்தை கோபாலகிருஸ்ணன் டோல்கி வாசிப்பவராகவும், லெட்சுமியும்,   பாணுமதியும் பாடகிகளாகவும், சுட்டிப்பெண்ணான வளர்மதி காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டு பாட்டுக்கு அபிநயம் பிடித்து நடனம் ஆடுபவராகவும் தங்கள் குழுவின் திறமையைக் காட்டி மக்கள் மனதில் வளர்ந்து வந்தனர். தங்கள் வாழ்க்கையை நடாத்தி வந்தனர். 

இவர்கள் பாடிய பாடல்களில் என் நினைவிலிருக்கும் சில பாடல்கள் 

01. ஓ……ரசிக்கும் சீமானே வா… ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்…..  

02. ஆளையாளைப் பார்க்கிறார் ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளையாளைப் பார்க்கிறார்…. 

03. எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ…. 

04. உன்னைக் கண்தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே…..                   

இதுபோன்ற பாடல்களை லெட்சுமி அக்கா பாடுவார்.  

பாணுமதி  பின்வரும் பாடல்களை  பாடியதும் ஞாபகத்தில் இருக்கிறது. 

01. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்…ஆ..ஆ… 

02. கண்ணாண கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியல்லயா….  

காந்தியவர்கள் பாடிய பாடல்கள் ஏராளம் அவைகளில்…  

01. நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் ராத்திரிக்கு  தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்….. 

02. மலை சாய்ந்து போனால் சிலையாகலாம் மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்….. ஆகியவை. 

இதேவேளை லெட்சுமி அக்காவும் காந்தியும் ஜோடிக் குரலில் பாடும்  பாடலில்களில் நினைவில் நிற்பவை. 

01. ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்… ஆசை தரும் பார்வையிலேல்லாம் ஆயிரம் எண்ணம் வரும்….வரும்… 

02. தொட்டால் பூ மலரும்.. தொடாமல் நான் மலர்ந்தேன்…சுட்டால் பொன் சிவக்கும்…. 

இப்படியான பாடல்களை சிறப்பாக பாடிவந்தது. அக்காலத்தில் பாடசாலைகள் இருவேளை வகுப்புகள் நடைபெற்று, பி.ப மூன்று மணிக்குக் கலைய, ஆரையம்பதி, முகத்துவாரம், வலையிறவு, ஏறாவூர் போன்ற தூர இடங்களில் இருந்து வரும் சகல மாணவர்களும் பஸ் நிலையத்துக்கு வந்து இக்குழுவினரைச் சூழ்ந்துகொள்வார்கள். அப்போது காந்தி பின்வரும் பாடல்களைப் பாடுவார். 

01. நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே…… நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே….. 

02. தங்கங்களே நாளையத் தலைவர்களே …. 

03. சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப்போகும் வார்த்தைகளை நீ எண்ணிப் பாரடா…. 

இப்படிப்பட்ட பாடல்களை அன்றைய மாணவச் செல்வங்கள் விரும்பிக்கேட்பார்கள். பாடல்களின் ஒரு சுற்று முடிந்ததும். வளர்மதி ஒரு அலுமினியன் தட்டொன்றை எடுத்துக் கொண்டு கூட்டத்தின் மத்தியில் வலம் வருவார். மக்கள் அத்தட்டில் தங்கள் அன்புச் சில்லறைகளை போடுவார்கள். 

இக்குழுவினரின் இசையரங்கம் பூவரசு மரத்தின் நிழலில் என்று முன்பே சொன்னேன் அல்லவா?. இது எங்களது உணவகமான ”லெட்சுமி பவான்” முன்பாகவே இருந்தது. இவர்கள் எனது தந்தையாருடன் எப்போதும் மிக மரியாதையுடன் பழகுவார்கள். 

வளர்மதி தட்டைத்தூக்கிக் கொண்டு வலம் வருவதை என் தந்தையார் கண்டு காந்தியை அழைத்து “அந்தப்பிள்ளையை இப்படியான செயலுக்கு உட்படுத்தாதீர்கள். பின் வளர்ந்தபின் அப்பிள்ளை வெட்கப்படும். எதிர்காலத்தில் அது அப்பிள்ளைக்கு பெரிய இழுக்காகவும் இருக்கும்” என்று அறிவுரை கூறி, “இசைக்கச்சேரி நடத்தும் முன்றலில் ஒரு துவாயையோ? சீலையையோ விரித்து விடுங்கள் விரும்பியவர்கள் அதில் அவர்களின் அன்பளிப்பை செலுத்தட்டும். அது பிச்சையெடுப்பது என்ற தோற்றப்பாட்டை தவிர்த்து  உங்கள் இசைக் கச்சேரிக்கு வழங்கப்படும் கட்டணமாகவோ? அல்லது இசைக்கு செய்யும் காணிக்கையாகவோ, அல்லது இசைத்தாய்க்கு அர்ச்சனையாகவோ அவர்கள் கருதட்டும்” என்று தன் கருத்தைக் கூறினார். பின் எனது தந்தையார் சொன்ன நடைமுறையே கைக்கொள்ளப்பட்டது. 

இப்படியாக இவர்கள் காலமும் பொழுதும் கழிந்து கொண்டிருந்தவேளை, இவர்கள் வசித்த வீட்டிற்கருகில் அன்றைய பிரபல்யமான நாடக நடிகரும், ”டோல்கி” வாசிப்பதில் விற்பன்னருமான ச.அன்ரனி மகேசன் என்பவர், செ.ஞானப்பிரகாசம் அவர்களையும் காந்தியவர்களையும் சந்திக்க வைத்து, எல்லோரும் சேர்ந்து ஒரு புதிய இசைக்குழு ஆரம்பமானது. 

அவ் இசைக்குழு ஆரம்பத்தில் காத்தான்குடி, ஏறாவூர்,  மருதமுனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, சம்மாந்துறை, ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் நடைபெறும் இஸ்லாமிய சிறுவர்களின் சுன்னத்து என்றழைக்கப்படும் ”கத்னா”  வைபவங்களின் இரவு நேர இசை நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் பேசி அழைக்கப்பட அங்கெல்லாம் இவர்களின் பிரசன்னம் இருந்தது. அக்காலத்தில் சுன்னத்து வைபவங்களில் இப்படியான இசைக்குழுவை அழைத்து நிகழ்ச்சியை நடத்துவதை அவ்வீட்டார் மதிப்பாகவும், பெருமையாகவும் கருதி வந்தார்கள். 

ஆதவன் இசைக்குழு 

இந்நிலையில் பன்சாலை வீதியிலிருந்து பழைய வாடி வீட்டுத்தெருவில் வாடகை வீடொன்றைப் பெற்று இடம்மாறி இவர்கள் வாழத் தொடங்கினர்கள்.  

இக்குழு பரிணாம வளர்ச்சியடைந்து செ.ஞானப்பிரகாசத்தின் அயராத முயற்சியினால் இன்னும் பல இசைக் கலைஞர்களை இணைத்துக் கொண்டு ”ஆதவன்” என்னும் இசைக் கழகம் உருவானது. இக்குழுவில் ஹார்மோனியம் வாசிப்பவராக காந்தியும், முதல் பெண் பாடகியாக பானுமதியும் இடம்பெற்றனர். மட்டக்களப்பின் மதிப்பை பறைசாற்றும் பாடலாக திகழும் ”மாநகராம் மட்டுமாநகராம்” என்னும் பாடலை செ.ஞானப்பிரகாசம் பாட, ஹார்மோனியம் வாசித்து இசை வழங்கியவர் இந்த காந்திதான். 

தந்தை கோபாலகிருஸ்ணன் தாய் நாகலெட்சுமி ஆகியோர் இறையடி சேர்ந்த பின் பானுமதி ஏற்கனவே மா.நகரசபையில் வேலை செய்த சிற்றூளியரொருவரை திருமணம் முடித்து இருந்தமையால் இக்குடும்பம். 129, திருச்செந்தூர் கோவில் பிரதான வீதியில் வசித்து வந்தனர். வளர்மதி வண்டில் தொழிலாளியான சின்னவன் என்பவரை திருமணம் முடித்திருந்தார். பானுமதியின் கணவரும்,  வளர்மதியின் கணவரும் காலஞ்சென்றபின், வளர்மதியோடு திராய்மடுவில் வாழ்ந்து வந்த காந்தி என அழைக்கப்பட்ட பத்மநாதன் 03.04.2020ல் இவ்வுலகைவிட்டு இறையடி எய்தினார். 

உண்மையில் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலர் அறியாத இந்தக் குடும்பமும் மட்டக்களப்பில் இசை வளர்த்த ஒரு குடும்பந்தான். எங்களை இசையால் மகிழ்வித்த காந்தி குடும்பம்.