— சபீனா சோமசுந்தரம் —
தேவ் கைக்கடிகாரத்தை பார்த்தான் நேரம் நண்பகல் 12ஐ தாண்டிக் கொண்டிருந்தது. அவன் போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேர இன்னும் 20 நிமிடமாவது எடுக்கும். ஆனால் 12.15 அங்கு நிற்க வேண்டும். மனதை மாற்றிக் கொண்டு திரும்பி போகவும் முடியாது. அதே நேரம் தாமதம் ஆனாலும் அதற்கான விளைவுகள் மிக பாரதூரமாக இருக்கும் என்பதும் அவனுக்கு தெரியும்.
பிரதான சாலை வழியாக சென்று கொண்டிருந்தவன் சட்டென பிரேக் போட்டு, பைக்கை திருப்பி, வலது பக்கமாக இருந்த குறுக்குப் பாதைக்குள் விரைந்தான். கைபேசி சிணுங்கியது எடுத்துப் பார்த்தான் அவனுடைய காதலி “லயா” அழைப்பில் இருந்தாள். ‘நேரங்காலம் தெரியாமத்தான் “கோல்” எடுப்பாள் இவள்’ என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டு அழைப்பை அவசரமாக துண்டித்தான்.
மீண்டும் கைபேசி சிணுங்கியது, அவளேதான். எடுத்து காதில் வைத்து ‘பிளீஸ்டி கொஞ்சம் பொறு எடுக்கிறன்.. முக்கியமான ஒரு வேலையா இருக்கன்.. கோவிக்காத..’ என்று சொல்லி அவளின் பதிலுக்கு காத்திராமல் கைபேசியை அணைத்து விட்டு பைக்கின் வேகத்தை அதிகரித்தான் தேவ்.
அந்த பரபரப்பான ஆபத்தான நேரத்தில் மனதில் பல எண்ணஓட்டங்கள் வந்து ஆர்ப்பரிந்துக் கொண்டிருக்கையிலும் கூட லயாவின் நினைப்பு அவனுக்கு மனதில் ஒருவித இனிமையைத்தான் கொடுத்தது.
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தேவ்விற்கு அபிலயாவைத் தெரியும். இருவரது வீடுகளும் ஒரே தெருவில் தான் இருந்தன. அபிலயாவின் குடும்பம் ஓரளவுக்கு வசதியானவர்கள். லயாவின் தந்தை அந்த ஊரில் மிகப்பெரிய பல வியாபாரங்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். தேவ்வினுடைய குடும்பம் நடுத்தர வர்க்கம். அதனாலேயே அவன் பள்ளிக்காலம் முதலே லயா மீது தனக்கிருந்த காதலை அவளிடம் வெளிப்படுத்த தயங்கினான்.
இப்படியிருந்த போதுதான் பள்ளிப்படிப்பு முடிந்து அவன் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்தில் லயா அவனை சந்திக்க வேண்டும் என்று அழைத்திருந்தாள். அலுவலகம் முடிந்து அவன் பக்கத்து தெருவில் இருந்த பூங்காவிற்க்கு போய் சேர்ந்தபோது அவள் அவனுக்காக காத்திருந்தாள்.
‘சொறி லயா கொஞ்சம் லேட் ஆகிட்டு.. ஏதும் முக்கியமான விசயமா?’ என்றான்
வெடுக்கென முகத்தை திருப்பி அவனைப் பார்த்தவள் ‘ ஏன் முக்கியமான விசயம் என்டா தான் சேர் வருவீங்களோ.. ரொம்ப ஓவரா தான் போற நீ..’ என்றாள் லயா நக்கலாக.
‘இல்ல திடீர்னு வர சொன்னியா அதான் கேட்டன்..’ என வார்த்தைகளை மென்று விழுங்கி குரலை கொஞ்சம் தணித்து சொன்னான்.
‘இங்க பார் எதுக்கு நீ இப்ப என்ன அவய்ட் பண்ணுற? எனக்கு தெரியும் நீ என்ன லவ் பண்ணுறனு..’ என அவள் சொல்லிக்கொண்டு போக இடையில் தேவ் குறுக்கிட்டு
‘ஏய் அப்பிடி இல்ல…’ என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்,
‘இங்க யாரும் உன் பொய் கதையெல்லாம் கேக்க வரல சரியா? நான் சொல்லுறத மட்டும் கேளு.. எனக்கு தெரியும் நீ என்ன லவ் பண்ணுறன்னு.. நான் உன்ன ரொம்ப லவ் பண்ணுறன் சரியா? பியூச்சர்ல என்ன நடந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே சரி பண்ணலாம்.. மரியாதையா என்னோட ஒழுங்கா கதை.. ஐ மீன் லவ் பண்ணு.. அவ்வளவு தான்..’ என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்து விட்டு முகத்தை கோபமாக திருப்பிக் கொண்டாள்.
தேவ் சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்று ஒரு முறை நோட்டம்விட்டு மெதுவாக அவள் கையை பற்றி ‘சொறி.. லவ் யூ..லயா’ என்றான்.
கையை வேகமாக உதறிவிட்டு அவனை கோபமாக முறைத்து ‘ பெரிய பேரழகன் இவரு.. இவர் பின்னாடி நாங்க கெஞ்சிட்டு திரியணும்.. மூஞ்ச பாரு.. போடா போய் உன் வேலைய பாரு..’ என்று கோபமும் கவலையும் கலந்து சொல்லி விட்டு வேகமாக சென்று விட்டாள் லயா.
அவளை எவ்வளவு நோகடித்து விட்டேன் என்று தன்னைதானே நொந்து கொண்டு அவளை சமாதானப்படுத்த அவள் பின்னாலேயே வேகமாக சென்றான் அதற்க்குள் அவள் தனது ஸ்கூட்டியை ஸ்டாட் பண்ணிக் கொண்டு வேகமாகச் சென்று விட்டாள்.
பிறகு வந்த நாட்களில் அவளது அலுவலக வாசலிலும் அவளது வீட்டு தெருமுனையிலும் காத்திருந்து அவளிடம் கெஞ்சிக் கெஞ்சி சமாதானப்படுத்திய நாட்கள் இனிமையானவைதான் தேவ்விற்கு.
எதிரில் வந்த பஸ் ஒன்று ஹோர்ன் அடித்துவிட்டு செல்ல அந்த ஹோர்ன் சத்தம் அவனது தலைக்கவசத்தையும் தாண்டி காதுகளில் “கிண்”ணென்று அதிர காதலியின் நினைவிலிருந்து மீண்டான் தேவ்.
அவசரமாக மீண்டும் கைக்கடிகாரத்தை பார்த்தான் நேரம் 12.09 எனக் காட்டியது. பைக்கை லேசாக முறுக்கினான். வாகனங்களின் இரைச்சல் காதில் ஊவென்று ஊழையிடும் எதிர்காற்றின் சத்தம் என எல்லாவற்றையும் தாண்டி கைக்கடிகாரத்தின் முட்கள் ஓடும் சத்தம் அவன் காதுகளில் இடி முழக்கம் போல் ஒலித்துக் கொண்டிருந்தது. வாழ்நாளில் இப்படி ஒரு பதற்றத்தை அவன் அனுபவிக்கவில்லை. படபடப்பிலும் பதற்றத்திலும் காற்றின் குளிர்ச்சியையும் தாண்டி வேர்த்தது அவனுக்கு. வேர்வை தாடை விழியாக இறங்கி கழுத்தில் விழுந்து சில்லிட்டது தேவ்விற்கு.
எப்படியும் சரியான நேரத்திற்கு அங்கு போய் சேர்ந்து விட வேண்டும். வேலையை சரியாக முடிக்காமல் விட்டால் அதனால் ஏற்படும் விபரீதத்தை நினைக்கையில் தான் அவசரப்பட்டு அதை செய்ய வந்து விட்டேனோ என்று தோன்றியது அவனுக்கு. ஆனாலும் கண்முன்னே கடந்த காலம் வந்து ‘நீ செய்வது தவறில்லை’ என நினைவூட்டியது.
நேற்றுதான் அந்த பிரபல நிறுவனத்தில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்தது ‘நாளைய தினம் உங்களது வேலைக்கான நேர்முக தேர்வு நடைபெறவிருக்கின்றது. குறித்த நேரத்துக்கு கலந்து கொள்ளவும்’ என்று.
தேவையான ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தொலைபேசியில் அவர்கள் குறிப்பிட்ட விலாசத்தை கண்டுபிடித்து, ஒரு வழியாக சரியான நேரத்துக்கு நேர்முக தேர்வு நடக்கும் நிறுவனத்துக்கு வந்திருந்தான் தேவ். மட்டக்களப்பு மாநகரின் மத்தியில் அமைந்திருந்து அந்த மிகப்பெரிய நிறுவனம். இங்கு வேலை கிடைத்து விட்டால் நிச்சயம் எல்லாம் சரியாகி விடும் ஆனால் கிடைக்க வேண்டுமே என்ற எண்ணத்துடன் அங்கு வரிசையாக போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தான்.
அங்கு அவனைப்போல் இன்னும் பலர் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களை பார்க்கையிலேயே அவனுக்கு அடிவயிற்றை பிசைந்தது. ‘இவ்வளவு பேர் இருக்கக்குள்ள நமக்கு இந்த வேலை கிடைக்குமா?’ என அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் கண்ணாடி கதவைத்திறந்து கொண்டு உள்ளிருந்து ஒரு பெண் வந்தாள். எல்லோரிடமும் இருந்து அவர்களது சுயவிபரக் கோவையை வாங்கிகொண்டாள். தேவ்விடம் இருந்து அவனது சுயவிபரக்கோவையை வாங்கும்போது யாரும் பார்க்காத வண்ணம் அவன் கைகளில் ஒரு துண்டு பேப்பரை திணித்து விட்டு போனாள்.
அவன் புரியாமல் நிமிர்ந்து பார்க்க அவள் வேகமாக உள்ளே சென்று விட்டாள். அவன் அதை மெதுவாக பிரித்து படித்தான். அதில் ‘உனக்கு இந்த வேலை வேணும் எண்டால் முன்னால இருக்கிற படில ஏறி மேல வா..’ என பேச்சு வழக்கில் எழுதியிருந்தது. கொஞ்சம் நடுக்கமாக உணர்ந்தான் தேவ். யோசித்தான் ‘என்ன செய்யலாம்.. எனக்கு இப்ப இந்த வேலை ரொம்ப முக்கியம்.. அப்படி என்னவா இருக்கும்..’ என்று மனதுக்குள் குழம்பியவனுக்கு வீட்டுச் சூழ்நிலை கண்முன்னே வந்தது.
தேவ்கரண், 29 வயது இளைஞன். அவனுக்கு 17 வயதாக இருக்கும் போது அவனது தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டார். அதற்குப் பிறகு அவனுடைய தாய் ஒரு நிறுவனத்தில் துப்பரவு பணியாளராக வேலை செய்து அவனையும் அவனுடைய தம்பி தங்கை என பிள்ளைகள் மூவரையும் வளர்த்தார். 17 வயது வரை தந்தையின் நிழலில் வளர்ந்தவனுக்கு குடும்பப் பொறுப்பு என்று எதுவும் இருக்கவில்லை. ‘அப்பா பார்த்துக் கொள்ளுவார்தானே’ என்ற அலட்சியத்துடனே இருந்து விட்டான்.
திடீரென்று நிகழ்ந்த தந்தையின் இழப்பை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. வீட்டு பொருளாதாரமும் தாயின் கஸ்டமும் அவனை பெரிதும் பாதித்தன. அதனால் உயர்தரத்தில் நல்ல பெறுபேறுகளை அவனால் பெற முடியவில்லை. பல்கலைக்கழக அனுமதியும் கிடைக்கவில்லை. உயர்தரம் முடிந்த கையோடு அவனது தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பெற்றுக் கொடுத்திருந்தார்.
தேவ் கெட்டிக்காரன் தந்தையை போல் கடின உழைப்பாளி. அதனாலேயே வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திலேயே பதவி உயர்வைபெற்று குடும்பத்தை கொண்டு நடத்த கூடிய ஒரு நிலைக்கு வந்திருந்தான். வாழ்க்கை ஓரளவு சுமூகமாக போய்க் கொண்டிருந்தது.
விதி யாரை விட்டது? ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் நிம்மதியாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் விதி கொரோனா ரூபத்தில் விளையாடியது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைக்க மொத்த உலகமும் முடங்கியது. கடைகள் அரச தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. பலர் ஒரு நேர உணவுக்கும் பெரும் பாடுபட்டனர். தேவ் கரனுடைய குடும்பமும் அப்படி ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டது. காரணம் அவன் வேலை செய்த தனியார் நிறுனமும் மூடப்பட்டது.
வேலை இல்லை சம்பளம் இல்லை அவனிடம் பெரிதாக சேமிப்பு என்று எதுவும் வங்கியில் இருக்கவில்லை. மாதச் சம்பளம் மாதாந்த குடும்ப தேவைகளை நிவர்த்தி செய்வதற்கே சரியாக இருந்தது. அங்கு இங்கு என்று தெரிந்தவர்களிடம் உதவியும் கடனும் பெற்று கையில் இருந்த சேமிப்பையும் வைத்து மூன்று மாதங்கள் வீட்டில் சாப்பாட்டுப் பிரச்சினையை மட்டுமே அவனால் சமாளிக்க முடிந்தது.
இப்படியாக போய்க்கொண்டிருக்கையில் மூன்று மாதங்களில் இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. மக்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்கு வந்து கொண்டிருந்தது. தேவ் வேலை செய்த நிறுவனம் பாரிய அளவில் பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கியதால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் நிறுவனத்தை மொத்தமாக இழுத்து மூடினார்.
அவனுக்கு வேலை இல்லை, ஆனால் வாழ்க்கை வழமை போல ஓடிக் கொண்டிருந்தது. மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம், வீட்டு வாடகை, தம்பி தங்கைகளில் படிப்புச் செலவு என அனைத்தும் சேர்ந்து கொண்டே போனது.
நாடு வழமைக்கு திரும்பி ஒரு மாதம் ஆகியும் அவனுக்கு வேறு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. பைக்கிற்கு பெற்றோல் அடித்துக் கொண்டு ஒவ்வொரு நிறுவனமாக நேர்முக தேர்வுக்கு சென்று வந்தது தான் மிச்சம். ஆனாலும் பயனில்லை. இயலாமையில் கோபமும் வெறுப்பும் அதிகரித்தது. வீட்டில் அம்மா ஏதாவது சொன்னாலும் சரி, அபிலயா அழைத்தாலும் சரி அவனுக்கு விரக்தியாக மட்டுமே இருந்தது. குடும்பத்தை எப்படி காப்பாற்றப்போகிறோனோ என்ற எண்ணம் அவனை வாட்டி எடுத்தது.
பேசாமல் எங்காவது கூலி வேலைக்கு போய் விடுவமா? என யோசித்தான் தேவ். இந்நிலையில் தான் அவன் ஒரு மாதத்துக்கு முன் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஒரு நிறுவனத்தில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்தது, நேர்முக தேர்வுக்கு வரும்படி. இந்த வேலையாவது கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு நேர்முக தேர்வுக்கு செல்லத் தயாரானான்.
‘தம்பி கொஞ்சம் அப்பிடி சைட்டா நில்லுங்க..’ என்று கூறி அவன் முதுகில் தட்டினார் ஒருவர். அதில் கடந்த கால நினைவிலிருந்து மீண்டவன். மீண்டும் என்ன செய்வது என்று யோசித்தான். ஒவ்வொருவாக உள்ளே சென்று வந்து கொண்டிருந்தனர். ‘உள்ள போவமா.. இல்ல படில ஏறி மேல போவமா.. நமக்குன்னு இந்த ஏழரை எல்லாம் எங்கயிருந்து வருதோ தெரியல..’ என்று அலுத்துக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் எதிரே இருந்த படிகளில் ஏறி மேலே போனான் தேவ்.
மேலே ஏறிப்போனால் அது வெறும் ஒரு பெரிய மண்டபம் போல் காட்சியளித்தது. அங்கு யாரும் இருக்கவில்லை. இருப்பதற்கு ஒரு கதிரை கூட இல்லை. பின்னால் இருந்து அவனது முதுகில் யாரோ தட்டினார்கள் திரும்பிப் பார்த்தான் அங்கு நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றார். உடனே தேவ் அவரிடம்’சேர் இந்த பேப்பர்..’ என்று சொல்லி முடிக்கும் முன்னே
‘தம்பி தேவ்கரண் உனக்கு அப்பா இல்ல அம்மா வீட்ட இருக்கிறா தம்பியும் தங்கச்சியும் படிக்கிறாங்க.. சரி தானே..’ என்றார் அவர்.
‘இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? என அவன் ஆச்சரியத்தோடு கேட்க
‘இதில்ல தம்பி இன்னும் நிறைய தெரியும். யோசிச்சு பார் இப்ப நாடு இருக்கிற.. நாடு என்ன உலகம் இருக்கிற சூழ்நிலையில ஒரு வேலை எடுக்க ஏலுமா? உன்ர வீட்ட எவ்வளவு காசு பிரச்சினை.. இன்னும் கொஞ்ச நாள் நீ வேலை இல்லாம இருந்தா சாப்பாட்டுக்கே வழி இல்லாம போகும்.. விளங்குதா?’ என்று நீண்ட ஒரு கேள்வியை அவர் தேவ்விடம் கேட்டார்.
‘உங்களுக்கு எப்பிடி எங்கட வீட்டு விசயம் எல்லாம் தெரியுமெண்டு தெரியல.. ஆனா எனக்கு இந்த வேலை கட்டாயம் வேணும்.. நீங்க என்ன செய்யனும் எண்டு சொல்லுங்க நான் செய்யிறன்.. ஆனா எனக்கு வேல வேணும்..’ என்று ஒரு தீர்க்கமான குரலில் சொன்னான் தேவ்.
‘நான் சொல்லுறத நீ செஞ்சா இந்த வேல உனக்குத்தான். இந்த பெரிய கம்பனிட ஜென்ரல் மனேஜர்.. உன்ர சம்பளம் என்பத்தையாயிரம்.. விளங்குதா தம்பி?’ என்றார்.
அவனுக்கு இப்போது இருக்கும் ஒரே தேவை வேலை தான். குடும்பத்தின் எதிர்காலம் கண்முன்னே நிற்க. கொஞ்சமும் யோசிக்காமல் ‘ஓகே சேர்.. சொல்லுங்க என்ன செய்யனும்..?’ என்றான் தேவ்.
‘தம்பி.. இந்த வேலய செய்ய வேண்டியவன் வேற பிரச்சினைல மாட்டிட்டான்.. காலைல இருந்து யோசிச்சிட்டு இருந்தன்.. எப்பிடி இதக் கொண்டு போய் சேர்க்கிற என்டு.. இங்க வந்ததில இருந்து உன்ர முகத்தில இருந்த டென்ஸன பாத்தன்.. உனக்கு வேலை தேவை.. சோ எனக்கு நீ தேவை..’ என்று கூறி தோள்களை குலுக்கி தேவ்வை ஒரு அதிகார பார்வை பார்த்தார் அவர்.
‘சேர் இதில என்ன இருக்கு.. இத எங்க குடுக்கணும்..’ என்றான் அவனும்.
‘இந்த பக்கட்ல வைட் பௌடர் இருக்கு.. இத கொண்டு போய் நான் சொல்லுற ஆள்ட்ட குடுத்திட்டு வரனும் நீ.. இத நீ செய்யிறதுக்குரிய கூலியும் வேலைக்கான அக்ரிமெண்ட் லெட்டரும் நீ திரும்பி வரும் போது ரெடியா இருக்கும்..’ என சொல்லி தேவ்வினுடைய முகத்தை கூர்ந்து பார்த்தார்.
இப்பொழுது தான் தேவ்விற்கு புரிந்தது அவர் என்ன வேலை செய்ய சொல்கிறார் என்று. பக்கென்று இருந்தது அவனுக்கு. ஆனாலும் அவன் யோசித்தான்.
‘தம்பி நீ செய்யாட்டி நான் வேற ஒருத்தன வைச்சு இத செய்வன்.. ஆனா உனக்கு இந்த வேலை வேணும் என்டா நீ இத செய்யத்தான் வேணும்.
புத்திசாலிதனமான என்ன பொலிஸ்ட மாட்டிவிடலாம் என்டு எல்லாம் கனவு காணாத.. அது நடக்காது.. அதே மாதிரி இத எடுத்திட்டு நீ வெளில போன வேலைய செய்து முடிச்சிட்டு தான் வரனும்..
இடைல ஏதும் வேற பிளான் பண்ணின எண்டா பொருளோட சேர்ந்து நீ தான் பிடிபடுவ.. எனக்கு ஒன்டும் இல்ல..’ என சொல்லிக் கொண்டே போனார்.
தீர்க்கமாக யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்து. ‘சேர் எனக்கு இந்த வேல வேணும்.. இத எங்க குடுக்கணும் சொல்லுங்க..’ என்றான்.
அந்த மனிதர் தேவ்வுடைய கையில் ஒரு சிறிய பொதியை கொடுத்துவிட்டு. அவன் அதை கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டார். அதோடு ‘நான் சொன்ன இடத்தில நீ 12.15க்கு நிக்கணும்.. 12.15க்கு பொருள நீ கை மாத்திடனும்.. இல்லாட்டி தானாவே நீ பொலிஸ்ட மாட்டிக்குவ..’ என்றார்.
அவர் சொன்ன எல்லாவற்றையும் மனதில் பதித்துக் கொண்டு அவர் கொடுத்த பொதியை பெற்றுக்கொண்டு திரும்பி நடந்தவன் ஒரு நிமிடம் நின்று ‘நீங்க எனக்கு வேலை தராம ஏமாத்திட்டா.. நான் எப்பிடி உங்கள நம்பிறது..’ என்றான் தேவ்சரண்.
அமைதியாக புன்னகைத்து ‘தம்பி இது என்ட சொந்த கம்பனி.. இதில எதுவும் பிழைச்சால் எனக்கும் கொஞ்சம் நஸ்டம் தான்.. சோ சின்ன நஸ்டத்த கூட நான் விரும்ப மாட்டன்.. குடுத்த வேலைய நீ சரியா செய்தா குடுத்த வாக்க நான் காப்பாத்துவன்..’ என்றார் அவர். வேகமாக அங்கிருந்து வெளியேறி பைக்கை ஸ்டார் பண்ணி முறுக்கினான். அது அவன் சொல்கேட்டு புயலென பாய்ந்தது பிரதான வீதியில்.
காலையில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தவன் ‘நான் செய்யிறதில ஒரு பிழையும் இல்ல.. நியாய தர்மம் எல்லாம் பாத்தா என் குடும்பத்த யார் காப்பாத்துறது..’ என தீர்க்கமான ஒரு சமாதானத்தை தனக்குத்தானே சொல்லிக் கொண்டு விரைந்தான் தேவ்.
அந்த நிறுவனத்தின் முதலாளி சொன்ன இடத்துக்கு சரியாக 12.15 க்கு வந்து சேர்ந்து விட்டான் தேவ். பைக்கை நிப்பாட்டி விட்டு அவனுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி தலையிலிருந்த ஹெல்மெட்டை கழற்றி விட்டு கொண்டு வந்த தொப்பியை தலையில் அணிந்தான்.
‘ஹலோ இன்டவியூ முடிஞ்சா..’ என ஒரு குரல் கேட்டது பின்னாலிருந்து. திரும்பிப் பார்த்தான் தேவ் அங்கு ஒருவன் நின்றுகொண்டிருந்தான் தேவ்வை கேள்விகுறியாய் பார்த்தபடி. கிட்டத்தட்ட அவனுக்கும் தேவ்வினுடைய வயதாக தான் இருக்க வேண்டும் பார்க்க அப்படித்தான் இருந்தான்.
‘கடவுளே இவனுக்கு என்ன கஸ்டமோ.. நாட்டில முழுப்பேரும் வேற வேல கிடைக்காம இந்த வேலையாத்தான் திரியிறானுகள் போல..’ என தேவ் யோசிக்க வந்தவன் மீண்டும் ஒரு முறை ‘ஹலோ இன்டவியூ முடிஞ்சா..’ என்றான்.
‘செய்யிறது இல்லீகல் வேல.. இதுக்கு கோட் வேட் வேற.. ச்சேக்..’ என மனதுக்குள் அலுத்துக் கொண்டு அந்த பொதியை எடுத்து அவன் கையில் வைத்து விட்டு அவசரமாக தலைக்கவசத்தை மாட்டிக்கொண்டு வேகமாக அங்கிருந்து கிளம்பினான் தேவ்.
திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து வேகமாக வந்தவன் பைக்கின் வேகத்தை குறைத்து பெருமூச்சு விட்டான். இப்போது நிம்மதியாக இருந்தது அவனுக்கு. இவ்வளவு நேரமும் மூச்சுமுட்ட எங்கோயோ அடைந்து கிடந்த உணர்வு.
ஒருவித நிம்மதியுடன் மீண்டும் அந்த நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் உள்ளே வந்ததுமே வரவேற்பறையில் இருந்த பெண் ‘ உங்கள இந்த வேலைக்கு செலக்ட் பண்ணி இருக்காங்க.. இது உங்கட அப்பொய்ண்ட்மென்ட் லெட்டர்..’ எனச் சொல்லி ஒரு கவரை நீட்டி ‘சேர் உங்கள நாளைக்கு மீட் பண்ணுறதா சொன்னார்.. இந்த செக் உங்களுக்கு தர வேண்டியது.. இதையும் பிடிங்க..’ என சொல்லி ஒரு காசோலையையும் நீட்டினாள். வாங்கிப் பார்த்தான் அந்த காசோலை முப்பதாயிரம் ரூபாய்க்கு எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்டிருந்தது.
இரண்டையும் பெற்றுக் கொண்டு வெளியே வந்தவனுக்கு மனதுக்குள் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. ஆனாலும் வேலை கிடைத்துவிட்ட நிம்மதி அதற்கு மேலாக இருந்தது. பைக்கை ஸ்டார் பண்ணிக் கொண்டு நேராக அவனது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் டீ கடைக்கு வந்தான். ‘அண்ணா ஒரு டீயும் ரெண்டு சம்சாவும் தாங்க..’ என்று சொல்லிவிட்டு கைதொலைபேசியை எடுத்து பேஸ்புக்கை தட்டினான்.
சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடக்கும் இடமல்லவா இந்த முகப்புத்தகம். ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு போனவன் சட்டென நிறுத்தி வாசித்தான் அந்த செய்தியை. ‘நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதை பொருள் விற்று வந்த இளைஞன் கைது’ என்ற தலைப்பில் ஒரு செய்தி. அந்த செய்தியில் இருந்த கைது செய்யப்பட்ட இளைஞனை பார்த்ததும் தேவ்விற்கு தலைசுற்றியது கால்கள் தடுமாற சட்டென பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தான். உடலெங்கும் வியர்த்துக் கொட்டியது. காலையில் தேவ்விடம் இருந்து பொருளை வாங்கிக் கொண்டு போன அதேஇளைஞன் தான் அவன்.
குற்ற உணர்ச்சியில் குறுகிப் போனான் தேவ்கரண். ‘ச்சே.. என்ன வேலை செய்திட்டு வந்திருக்கன் நான்.. என்ர தங்கச்சியும் ஸ்கூல்ல படிக்கிறாளே.. வேல கிடைக்கல என்டு இப்பிடி ஒரு கேடுகெட்ட வேலைய செஞ்சிட்டு நிம்மதியா வேற வந்து நிக்கிறன்..’ என மனதிற்க்குள் புழுங்கினான்.
கடைக்காரர் வந்து ‘என்ன தம்பி இப்பிடி வேர்த்துப் போய் முகமெல்லாம் வாடிப் போய் இருக்கு.. சாப்பிடலயா இன்னும்..’ என்று அக்கறையோடு கேட்டு, டீயை கொடுத்தார். அவனுக்கு அவர் சொன்ன எதுவும் காதில் கேட்கவில்லை. மனம் அந்த செய்தியிலேயே நிலைத்தது. குற்ற உணர்ச்சியில் இருந்த பசியும் களைப்பும் போனது.
‘தம்பி..’ என்ற கடைக்காரரின் குரலுக்கு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு அப்போது தான் புரிந்தது நேரம் போனதே தெரியாமல் நீண்ட நேரமாக தான் யோசித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்று. எழுந்து சென்று பைக்கில் வைத்திருந்த கவரை எடுத்து வந்து அதில் இருந்த வேலைக்கான அனுமதிக் கடிதத்தையும் காசோலையையும் எடுத்து கிழித்து எரிந்து கொண்டிருந்த அடுப்பில் போட்டான்.
‘என்ன தம்பி பழைய பேப்பரா..’ என்றார் கடைக்காரர்.
‘இல்ல அண்ணா தேவையில்லாத பேப்பர்..’ என்று சொல்லிவிட்டு. கைதொலைபேசியை எடுத்து ஒரு இலக்கத்தை தட்டி அழைப்பை ஏற்படுத்தினான். எதிர்முனையில் குரல் கேட்டதும் ‘அண்ணா அந்த பக்ரில லோட் ஏத்துற வேலை இருக்கெண்டு சொன்னீங்களே.. இப்பவும் அதுக்கு ஆள் தேவையா..? என்றான். மறுபக்கம் பேசியவரின் பதிலைத் தொடர்ந்து ‘ அண்ணா ஒரு நாளைக்கு ஆயிரத்தி ஐந்நூறா.. ஒரு ஆயிரத்து எண்ணூறுக்கு கதைச்சு பாருங்களேன்.. ப்ளீஸ் அண்ணா..’ சரி சரி ஓகே.. நாளைக்கு காலைல 8.30 க்கு வேலைல நிப்பன்..’ என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
‘டீ சூப்பர் அண்ணா.. தாங்க்ஸ்..’ என்று கடைக்காரரிடம் சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி பைக்கை முறுக்கினான் தேவ்கரண்.
முற்றும்