காலக்கண்ணாடி – 11 (காணிநிலம் வேண்டும்..)

காலக்கண்ணாடி – 11 (காணிநிலம் வேண்டும்..)

— அழகு குணசீலன் —

காணிநிலம் வேண்டும் – பராசக்தி 

காணி நிலம் வேண்டும் ……!

இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியலை நிர்ணயிப்பவை எவை? என்ற கேள்வி எழுகின்றபோது. அதற்கான பதில் அன்று முதல் இன்றுவரை இவைதான். 

1. இனம் 

2. நிலம் 

3. மதம் 

4. மொழி 

5. பொருளாதாரம் 

450 ஆண்டுகளைக் கொண்ட மாறி மாறி வந்த ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியைத் தொடர்ந்து முடிக்குரிய – குடியேற்ற, சுதந்திர, குடியரசு நாடு என்று சில போர்வைகளை இலங்கை போர்த்திக்கொண்ட போதும் அதன் அடிப்படை அரசியல் அமைப்பையும், திட்டமிடல் கொள்கை வகுப்பையும் இந்த ஐந்து தூண்களுமே நிர்ணயித்தன. 

இந்த  தூண்களால்  கட்டப்பட்ட  ஒரு அரசியல் மடம் இலங்கை அரசியல். இந்த அரசியல் வாழவேண்டுமாயின் இவற்றில் ஒன்றில் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவற்றில் ஒரு கோணல் தேவை. 

அந்த  கோணல்  இப்போது மண் சார்ந்து மட்டக்களப்பு மேய்ச்சல் தரைப் பிரச்சினையாகவும், இனம் சார்ந்து கல்முனை வடக்கு  பிரதேச செயலகப் பிரச்சினையாகவும் உருப்பெற்றிருக்கிறது. 

இந்த கோணலின் தேவை சிங்கள பெருந்தேசியவாத அரசியலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப் பட்டதல்ல. மாறாக  தமிழ் /முஸ்லீம் குறுந்தேசியவாத்திற்கும் விரிவுபடுத்தப்பட்ட ஒன்று. பெருந்தேசிய  வாதம் இவற்றில் ஒன்றைப் பறிக்க அல்லது தடுக்க குறுந்தேசியவாதம் அதைப்பெற போராடுவது போன்ற எதிர் அரசியல்தான்  அது. இந்த ஐந்தில் கோணல்கள் அற்ற  நிலையில் இரு தரப்பும் அரசியல் பிழைப்பைத் தொடர்வது கஷ்டம். 

 இடையில் பெருந்தேசியவாதம் காலத்திற்கு காலம் இரு குறுந்தேசியங்களையும் மோதவிட்டு தனது பொறுப்பில் இருந்து தப்பிக்கொள்கிறது. அதுதான் கல்முனையில் நடப்பது. அது போல் மேய்ச்சல் தரை விடயத்திலும் சாதாரண அப்பாவி, அன்றாடம் அடுப்பெரிய வழியற்று இருக்கும் சிங்களவர்களும் தமிழர்களும் மோதவிடப்படுகின்றனர். இது வெறும் நிலம், இனம் சார்ந்தது என்பதை விடவும் பொருளாதாரம் சார்ந்தது. ஆனால் இதை இனவாத கண்ணாடி அணிந்தே இருதரப்பு அரசியலும் பார்க்கின்றது. 

கிழக்கு மாகாணத்தில் முதல் குடியேற்றத்திட்டமான கல்லோயாவில் இருந்து, கந்தளாயும், தொடர்ந்து மதுறுஓயாவும் வந்தன.    

 மட்டக்களப்பு தேசத்தின் தெற்கில்  இருந்து அம்பாறை மாவட்டமும்,  திகாமடுல்ல தேர்தல் மாவட்டமும் பிறந்தன. 

மட்டக்களப்பு தேசத்தின் வடக்கே மன்னம்பிட்டிவரை நீண்டிருந்த எல்லை புனாணை வரை குறுக்கப்பட்டது.  தமிழரசுக்கட்சியின் மு.  திருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சராக இருந்தபோது மன்னம்பிட்டியை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரித்து,  பொலனறுவை மாவட்டத்தோடு  இணைத்தார். திருகோணமலை நகரப்பகுதியை புனிதப்பிரதேசமாக்கும் விடயத்தில் அவர் தோல்விகண்டார். 

 அதேபோன்று இடம்பெற்ற மற்றொரு கொடுத்து வாங்கல் திருமலையில் மூதூரைக் கொடுத்து பொத்துவில் தொகுதியை  பெற்றார் அமிர்தலிங்கம். 

கொடுத்து வாங்கல் அரசியல் குறித்து இருதரப்பும் விமர்சனங்களைச் சந்தித்தபோதும் சம்பந்தப்பட்டவர்கள் இருதரப்பும் இதனை மாற்றுவழி அற்ற இணக்க அரசியலாகவும், ஒரு முற்காப்பு – தற்காப்பு அரசியலாகவும், சாணாக்கிய அரசியலாகவுமே மக்களை சாந்தப்படுத்தினர். இவை எல்லாம் பேசிக் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளுக்கான உதாரணங்கள். 

போராட்ட காலத்தில் யாழ்குடாநாட்டில் இருந்து இலட்சக் கணக்கானவர்கள் புலம்பெயர்ந்த காரணத்தினால் யாழ்மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்  குறைக்கப்பட்டது. மாறாக மக்கள் வன்னியில் குடியேறி சனத்தொகை அதிகரித்ததால் வன்னி பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டது. 

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலான எல்லை நிர்ணயங்களும், நில ஒதுக்கீடுகளும், காணிக்கொள்கையும் காலாவதியாகி இருக்கின்றன. இதனால் இலங்கையின் சமகால சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கக் கூடியவாறு மாற்றங்களும், நெகிழ்ச்சி தன்மையும் காலத்தின் தேவையாகும். 

 இது ஒரு இடியப்பச் சிக்கல் பிரச்சினை. முடிச்சுக்களை அழிழ்ப்பது இன்றைய அரசியல் சூழலில் அவ்வளவு இலகுவானதல்ல என்ற ஜதார்த்தத்தின் அடிப்படையிலும், அரசியல் மடத்தைத் தாங்கி நிற்கின்ற ஐந்து தூண்களும்  அரசியலில் கொண்டுள்ள பலம், பலவீனம் என்பவற்றையும் கருத்தில் கொண்டே கத்தி முனையில் நடப்பதாக இந்த விவகாரம் அணுகப்படவேண்டும். 

தென்புலப்பெயர்ச்சி: 

இலங்கையின் பண்டைய வரலாற்றை அறிந்தவர்களுக்கு வரலாற்றில் இடம்பெற்ற தென்புலப்பெயர்ச்சி அறியாதவிடயம் அல்ல. வரண்ட பிரதேசத்தில் இருந்து மக்கள் வடக்கு, தென்னிந்திய படையெடுப்பக்களுக்கு அஞ்சியும், வரண்ட பிரதேச காட்டுவிலங்குகளுக்குப் பயந்தும், கொடிய நோய்த்தாக்கங்கள் காரணமாகவும், விவசாயத்திற்கு பொருத்தமற்ற இப்பிரதேசத்தில் இருந்து ஈரவலயத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். 

இது சுதந்திரம் பெற்றகாலப்பகுதியில் வரண்டபிரதேசத்தில் பெருமளவான தரிசு நிலங்கள் பரந்து கிடக்கக்காரணமாயிற்று. மறுபக்கத்தில் ஈரவலயத்தில் சனச்செறிவு அடர்த்தியாகவும் வரண்ட வலயத்தில் சனச்செறிவு ஐதாகவும் இருந்தது. இது ஈரவலயத்தில் குறைந்த நிலப்பரப்பில் கூடியமக்களும், வரண்ட வலயத்தில் பாரிய நிலப்பரப்பில் குறைந்தளவான மக்களும் வாழும் நிலையை ஏற்படுத்தியது. இதன் கருவாகவே அரசாங்கங்கள் திட்டமிட்ட அரச உதவியுடனான குடியேற்றங்களை வரண்டபிரதேசத்தில் ஏற்படுத்தி பொருளாதார, சமூக அபிவிருத்திக் கொள்கையை  ஈரவலய சிங்கள மக்களைக் குடியமர்த்த முன்னெடுத்தன.  

இன்றைய இந்த சிங்களப் பிரதேச எல்லைகளில் இன்றும் தமிழ் முஸ்லீம் கிராமங்கள் அங்காங்கே காணப்படுகின்றன. பல கிராமங்கள் அழிக்கப்பட்டும், இன்னும் மக்கள் இடம்பெயர்ந்ததால் தூர்ந்து போயும், சனவிகிதாரம் மாற்றப்பட்டு உருமாற்றம் செய்யப்பட்டும் உள்ளன. அனுராதபுரம், பொலனறுவை அம்பாறை மாவட்டங்களில் காணப்படும் தமிழ், முஸ்லீம் கிராமங்கள் இதற்கு சான்றாகும்.  

மலையக மக்கள்: 

தேயிலைத் தோட்டங்களுக்காக இன்றைய மலையக மக்கள் பிரித்தானியரால் குடியேற்றப்பட்டார்கள். சிங்கள மக்கள் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்கள் தங்கள் நிலங்களை பறித்து விட்டார்கள் என்று நினைக்கிறார்கள். சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளிடமும், பெளத்த மேலாதிக்கத்திடமும் இந்த  இன, மதவாதக் கருத்து இன்றும் நிலவுகின்றது. இது இனமும், நிலமும், மொழியும்  சார்ந்த தூணாக தென் இலங்கை பெரும்பான்மை அரசியலைத் தாங்கி நிற்கின்றது. 

1983 கலவரத்திற்குப் பின்னர் மலையக மக்களை மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எங்கு அடிப்படைவசதிகள் இல்லை என்று உள்ளூர் தமிழ்மக்கள் குடியேறத் தயக்கம் காட்டினார்களோ,  அந்த தண்ணீர் இல்லாத காடுகளில்தான் மலையக மக்கள் குடியேற்றப்பட்டார்கள். ஒருவகையில் ஈழத்தின் எல்லைக்காவல் படையாக அப்பாவி மலையக மக்களை குடியேற்றும் முயற்சியாகவே இது இருந்தது. அது தோல்வியிலும் முடிந்தது. 

காந்தியத்தின் ஒரு முக்கிய எதிர்கால நிலப்பாதுகாப்பு வேலைத்திட்டமாக இது இருந்தபோதும், அந்த அமைப்பினால் வடக்கு, கிழக்குமக்களை அரசியல் மயப்படுத்தி இந்த உயரிய இலக்கை சாதிக்க முடியவில்லை. இது தமிழர் அரசியல் துரதிஷ்டம். இதனால் வன்முறையினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட மலையக மக்கள் தவித்தமுயல் அடித்த கதையாக வடக்கு-கிழக்கு தமிழர்களால் கஷ்டப்பிரதேசம் என்று அடையாளப்படுத்தப்பட்ட,  அடிப்படைவாதிகள் அற்ற இப்பகுதிகளில் குடியேற்றப் பட்டனர். 

குடியேற்றத்திட்டங்கள்: 

தமிழ், முஸ்லீம் மக்கள் செறிந்து வாழ்ந்த வடக்கு, கிழக்கு கரையோரப்பிரதேசம்,  யாழ்குடாநாடு, வன்னி மற்றும் கிழக்கின் திருகோணமலையை உள்ளடக்கிய வெருகல் ஆற்றுக் கொட்டியாரம் முதல் மட்டக்களப்பு தேசத்தின் தென் எல்லையான குமுக்கன் ஆறுவரையும், இன்றைய வடக்கு கிழக்கின் எல்லைப்பகுதியாக பின்னாளில் எல்லை வகுக்கப்பட்ட அநுராதபுரம், பொலனறுவை, அம்பாறை மாவட்டங்களும் இந்த வரண்டபிரதேசத்தைச் சேர்ந்தவை.  

கல்லோயா, கந்தளாய், மாதுறுஓயா குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபோது இங்கு குடியேறுவதற்கு சிங்களவர்கள் காட்டிய விருப்பத்தையும் ஆர்வத்தையும் தமிழர்களும், முஸ்லீம்களும் காட்டவில்லை. சிங்களவர்களுக்கு இருந்த நிலவுடமை அற்றநிலை தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இருக்கவில்லை. முஸ்லீம்களின் ஒரு பகுதியினர் வியாபாரத்தில் தங்கியிருந்ததும் இதற்கு ஒரு காரணம். 

திருகோணமலையின்  படுவான்கரை என்று சொல்லக்கூடிய கொட்டியாரப் பிராந்தியத்தில் பெருமளவான கிராமிய நிலங்களும், விவசாய நிலங்களும் ஏக்கர் கணக்கில் பரந்தும் விரிந்தும் கிடந்தன. பல பத்து ஏக்கர்களுக்கு தனி ஒருவர் சொந்தக்காரராக இருந்தார். பொதுவாக இந்த இரு சிறுபான்மையினரும் அருகருகே வாழ்வதற்கு காட்டிய ஆர்வத்தை சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வதற்கு வடக்கு கிழக்கில் காட்டவில்லை.  குடியேற்றத் திட்டங்களில் சென்று பாரம்பரிய கிராமங்களையும், உறவுகளையும் பிரிந்து வாழ இவ்விரு சமூகமும் தயாராய் இருக்கவில்லை. அன்றைய சிறுபான்மை இன அரசியல் தலைமைகளும், சமூக அமைப்புக்களும், ஆர்வலர்களும் கூட இதில் அக்கறை காட்டவில்லை.  இந்த நிலையானது பொதுவாக மாதுறுஓயா மகாவலி குடியேற்றத்திட்டங்களிலும் நிலவியது. இனம்களுக்கிடையிலான உறவு நிலை பாதிக்கப்பட்டு நம்பிக்கையீனம் அதிகரித்தபோது இந்த நிலை மேலும் மோசமடைந்தது. 

கல்லோயா திட்டத்தில் சிறுகையளவு  தமிழ் மக்களே நிர்பந்தத்தின் அடிப்படையில் குடியேறினர். இவர்கள் பட்டிருப்புத் தொகுதியின் எழுவான்கரைக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கிராமத்தில் நிலமற்ற பிரிவினராகவும், வேலைவாய்ப்பற்ற வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். இன்னொரு பிரிவினர் கல்லோயா நீர்ப்பாய்ச்சல் பிரதேசத்தில் ஏற்கனவே உள்ள சிறிய கிராமங்களில் வாழ்ந்த ஏழை விவசாயிகள். 

 படுவான்கரையைப் பொறுத்தவரை பாரம்பரிய கிராமங்கள் போதுமான நிலங்களைக் கொண்டிருந்தன. கிராமங்களில் நிரந்தரமாக வாழ்ந்த இந்த மக்கள் நெற்செய்கைக் காலத்தில் மட்டும் வாடிகளில் தங்கி தொழில் செய்தார்கள். இன்றும் படுவான்கரை மக்கள் தங்கள் நெல்வயல்கள் அமைந்துள்ள படுவான்கரைக் கிராமங்களுக்கும் மேற்காக உள்ள வயல்பிரதேசத்தையே படுவான்கரை என்கின்றனர். அதாவது படுவான்கரைக்குள் இன்னொரு படுவான்கரை. நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்களையும்  மற்றும் வளங்களையும் கொண்டிருந்த போடியார்களுக்கும், சிறிய நெல்விவசாயிகளுக்கும் இன்றுவரை குடியேற்றங்களில் குடியேறுவது ஒரு தேவையாக இல்லை. 

வடக்கு நிலைமை: 

வடக்கில்  குடியேற்ற நிலப்பிரச்சினையைவிடவும் கடல் பிரச்சினை முக்கியமானது. கிழக்கில் விவசாயிகள் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட காணியில் மறு தரப்பினரின் அத்துமீறலை எவ்வாறு ஏற்க மறுக்கிறார்களோ, அதே போன்றே வடக்கில் கடற்தொழிலாளர்கள் தென்னிந்திய மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களையும் ஏற்கமுடியாதவர்களாக உள்ளனர்.  இது இன, மத, நாட்டு வேறுபாடுகளுக்கப்பால் சகல மக்களதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியம். 

வடக்கில் இந்த  நிலநிலவரம் வேறுபட்டது. கிழக்கில் நிலவுடைமை ஏக்கர் கணக்கில் பேசப்பட்டபோது, யாழ். குடாநாட்டில் இது பரப்பு அளவாகவே பேசப்பட்டது. யாழ். குடாநாட்டில் சனத்தொகை அதிகரித்தபோது அதைத் தாங்குவதற்கான நிலங்கள் அங்கு பற்றாக்குறையாக இருந்தன.  இதனால் தோட்டவிவசாயிகள் கிளிநொச்சி மற்றும் வன்னி நிலங்களை நோக்கி நகர்ந்தனர். இது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் யாழ்.குடாநாட்டுச் சனத்தொகையைப் பரவலாக்கியது. 

இங்கு பெரும்பான்மையினராக தமிழர்கள் இருந்தமையும், நிலப்பற்றாக் குறையும், 1970 களில் ஏற்பட்ட உப உணவு உற்பத்திப்போரும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த யாழ்.மக்கள் வன்னி நோக்கி தொழில்சார் இடப்பெயர்ச்சியை மேற்கொண்டனர். 

இங்கு இது ஒரு இனக்கட்டுப்பாட்டிற்குட்பட்ட, பிரதேசம் சார்ந்த இடப்பெயர்வு என்பதனால் பிரச்சினையாக அமையவில்லை. 

மறுபக்கத்தில் தென்னிலங்கை மணிஓடர் பொருளாதாரத்தில் தங்கியிருந்த மத்திய தரவர்க்கம் மெல்ல, மெல்ல தென்னிலங்கை நோக்கி நகர்ந்தது. போராட்டம் ஆரம்பமானபோது முதலில் மத்திய தரவர்க்கமும், பின்னர் சாதாரண மக்களும் புலம் பெயரத்தொடங்கினர். இப்போதும் கிழக்கு சமூகம் தனது பொருளாதார கட்டமைப்பில் மாற்றமற்றதாகவே இருந்தது. 

மத்திய கிழக்கிற்கு கூட கடைசி பஸ்ஸில் தான் அவர்கள் ஏறினார்கள். மேற்குலக புலம்பெயர்வு என்பது 1990 களிலேயே ஆரம்பித்தது.  

இது இலங்கையின் காணிப் பிரச்சினையையும், சனத்தொகை பரம்பலையும், அதற்கான பொருளாதார தேவைகளையும் வரலாற்று ரீதியாக அறிந்து கொள்வதற்கான ஒரு அடிப்படையாக அமையலாம். 

இந்த வரலாற்றுப் போக்கின் ஊடாகவே இன்று எரியும் பிரச்சினையாக உள்ள மேய்ச்சல் தரை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச விவகாரத்தையும் சற்று விளங்கிக்கொள்ள முடியும் 

மேய்ச்சல் தரை விவகாரம் – விட்டதும் தொட்டதும் 

மட்டக்களப்பு  மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையாக உள்ள இப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றைக்  காண  வேண்டியது  அரச அதிகாரிகளினதும், அரசியல்வாதிகளினதும் கடமையாகும். 

இது விடயமாக அண்மையில் மட்டக்களப்பு  கச்சேரியில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திச்சபைக் கூட்டத்தில் இது விடயமாகப் பேசப்பட்டது. 

அங்கு   மூன்று வேறுபட்ட அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டன. 

1. மேய்ச்சல் தரையில் இடம்பெற்றுள்ள அத்துமீறல் சட்டவிரோதமானது என்று பிரேரணை ஒன்றை நிறைவேற்றல்.  

2. இது விடயமாக ஏற்கனவே ஒக்டோபரில் திகதி குறிப்பிடப்பட்டு கொரோனாவினால் நடாத்த முடியாது போன கூட்டத்தை மீளக் கூட்ட நடவடிக்கை எடுத்தல். 

3. 1+2=3. இரண்டையும் செய்யலாம் என்ற ஆலோசனை. 

கிழக்குமாகாண ஆளுனர் தன்னிச்சையாக அங்கு சென்று 500 ஏக்கர் காணியை சோளம் பயிரிடுவதற்கு வழங்க முன்வந்ததாகவும் அறியமுடிகிறது. மேய்ச்சல் தரைக்கான மொத்த நிலப்பரப்பில் சுமார் மூன்று இலட்சம் கால்நடைகள் உள்ளன என்றும் அவற்றில் இரண்டு இலட்சம் கறவைப் பசுக்கள் என்றும் கூறப்படுகின்றது. 991 பண்ணையாளர்கள் இந்த கால்நடைகளின் சொந்தக்காரர்கள். இவர்கள் பல தசாப்தங்களாக பரம்பரை பரம்பரையாக இத்தொழிலைச் செய்து வருகின்றனர். இது இவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினையாகும். 

இதற்கு வெறுமனே சிங்கள விவசாயிகளின் அத்துமீறல் சட்டரீதியற்றது என்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால் போதுமானதா? அத்துடன் இப்பிரச்சினை முடிந்து விடுமா? இலங்கையின் நிறுவனமயப்படுத்தப்படாத தனிநபர் நிலப்பிடிப்பை வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அவை எப்போதும் சட்டரீதியற்றவைதான். அப்படித்தான் அரசகாணியில் நிலம்பிடித்தல் ஆரம்பிக்கின்றது.  இதை சிங்களவர்கள் மட்டும் செய்யவில்லை என்பது  ஒரு கசப்பான உண்மையாகும். காலத்திற்கு காலம் இடம்பெறும் காணிக் கச்சேரிகள் மூலம் இந்த நிலங்கள் பின்னர் சட்டரீதியாக அங்கிகரிக்கப்படுகின்றன. சில தனி நபர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ஆட்சி உறுதியை எழுதிக் கொள்வதும் நடைமுறையில் உள்ள ஜதார்த்தம். இந்த நிலையில் கச்சேரியில் எடுக்கப்படுகின்ற இந்தத் தீர்மானம் தரப்போகின்ற பலன் என்ன? நீண்ட கால நிரந்தரத் தீர்வுக்கு ஒரு இடையூறாக மட்டுமே இது இருக்கமுடியும். 

இந்த விவகாரம்  போராட்ட காலம் தொடக்கம் பேசப்படுகின்ற ஒன்று. இதற்கு ஆதாரமாக தமிழ்நெற் இணையத்தின் செய்திகளை குறிப்பிடமுடியும். கிழக்குமாகாண முதலமைச்சராக திரு.சந்திரகாந்தன் இருந்தபோது இதுதொடர்பாக பல முன் எடுப்புக்கள் எடுக்கப்பட்டு வர்த்தமானி  பிரகடனம் செய்கின்றநிலை வரை காய்நகர்தப்பட்டுள்ளது. 

பின்னர் தமிழரசு   விவசாய அமைச்சர் ஒருவர் இருந்த காலத்திலும் எதுவும் நடக்கவில்லை. அவர் ஒன்றை மட்டும் செய்திருக்கிறார்.  சிங்களக் காடையர்கள் மேய்ச்சல் தரையில் அத்துமீறிக் குடியேறுகிறார்கள் என்று தமிழ்நெற்றில் பல பேட்டிகளை அளித்துள்ளார். 

ஆகவே, யார் குத்தினாலும் அரிசானால் சரி. இன்றைய நிலையில் தீர்வுக்கு மிக நெருக்கமாக இருப்பது வர்த்தமானி பிரகடனம். அதைசெய்ய முயற்சிக்க வேண்டும் அல்லது இடைநிறுத்தப்பட்ட கூட்டத்தைக் கூட்டி தீர்வை  நோக்கி நகர்த்த வேண்டும். வெறும் தீர்மானங்கள்  எந்தளவிற்கு தீர்வு நோக்கி நகர்கின்றது?  

தமிழர் தரப்பில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் செயல்திறன் அற்றவை என்பது தமிழர் அரசியலுக்கு புதிதல்ல. 

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் முழுமையாக இல்லை என்பதால் மத்திய அரசு மாகாணக் காணிகளில் அதிகாரம் செலுத்தமுடியும். இதனால் தேசிய உப உணவு உற்பத்திக்கு சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழ், முஸ்லீம் விவசாயிகளும் காணிகளைப் பெற்று பங்களிப்பைச் செய்யமுடியும். இங்கு தந்திரோபாயத்துடன் கூடிய இணங்கிப் போதலும் விட்டுக்கொடுப்பும், சலசலப்பற்று பலகாரம் சுடுவதும் முக்கியம். இல்லையேல் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தமாதிரி, சிங்கள கடும்போக்காளர்களை உசுப்பேத்தி விடுவதாக அமைந்துவிடும். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம்: 

இது விடயமாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்  ரவூப்ஹக்கிம் அண்மையில் கூறிய கருத்துக்கள் பலரதும் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்தப் பிரச்சினையை தமிழ், முஸ்லீம் கட்சிகள் பேசித்தீர்க்க முடியும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மையில் இது ஒரு துணிச்சல் மிக்க, தீர்வை இலக்காகக் கொண்ட  சரியான அணுகுமுறையாகும். 

அவர் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து இங்கு முக்கியமானது. கிழக்கு மாகாணத்தில் மட்டும்தான் இனஅடிப்படையிலான நிர்வாக அலகுகள் உள்ளன. மிகுதி முழு இலங்கையிலும் நிர்வாக அலகுகள் இனம் சார்ந்ததாக பிரிக்கப்பட்டிருக்கவில்லை. நிர்வாக அலகொன்றில் பல இன, மத, கலாச்சார மக்கள் வாழ்கிறார்கள். கிழக்கில் இருப்பது  ஒரு விதி விலக்கான அணுகுமுறை. இது சரியா?பிழையா? என்பதை விடவும் இருப்பதை காப்பது எமது கடமையும் உரிமையும் அல்லவா? 

எனவே ரவூப்ஹக்கிம் குறிப்பிட்டது  போல் எல்லை நிர்ணயத்தினை புதிதாக மேற்கொண்டு பேச்சு வார்த்தையின் மூலம் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். 

சாய்ந்தமருது விவகாரத்திற்கும் கல்முனைவடக்கு விவகாரத்திற்கும் முடிச்சுப் போடவேண்டிய தேவையும் இல்லை. இருக்கின்ற தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையிலான இடைவெளியில் தனியே முஸ்லீம் மக்களோடு சம்பந்தமான ஒரு விடயத்தை இணைத்துப் பார்ப்பது  தீர்வை இழுத்தடிப்பதாக அமைந்துவிடும். 

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமின்  கருத்துக்கு தமிழ் தரப்பின் பதில் என்ன?