— பி. ஏ. காதர் —
(இலங்கையின் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான “காதர் மாஸ்டர்” என்று அழைக்கப்படும் பி. ஏ. காதர் அவர்கள், மலையகத்தின் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் நிறுவனராவார். அங்குள்ள முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல மலையக அரசியல்வாதிகளால் குருவாகவும் இவர் வரித்துக்கொள்ளப்பட்டவர்)
2020 அமெரிக்க ஜனதிபதி தேர்தல் முடிந்துவிட்டது. கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையை இன்னும் ஒத்துக்கொள்ளாத டிரம்ப், தனது தோல்வியையும் அதே பாணியில் ஒத்துக்கொள்ளாமால் அடம் பிடிக்கிறார். எனினும் அவர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவது விரைவில் நடக்கும்.
தன்னை வெற்றிபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் என பிரகடனப்படுத்திக்கொண்டு ஜோ பைடன் தமது ஆட்சியின்கீழ் முன்னுரிமை வழங்கவேண்டிய நிகழ்ச்சிநிரல்களை வரையறுப்பதிலும் அவற்றை நிறைவேற்றவேண்டிய அதிகாரிகளையும் ஆலோசனை வழங்கவேண்டிய நிபுணர்களையும் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
புதிய ஜனதிபதி எதிர்நோக்கும் சவால்களும் டிரம்பின் வெளியுறவு அணுகுமுறை உருவாக்கியுள்ள குளறுபடிகளும்.
உள்நாட்டில் ஐந்து பெரும் சவால்களை டிரம்ப் நிர்வாகம் விட்டுச்சென்றுள்ளது. முதலாவதாக, கொரோனா பெருந்தொற்றை சரியாக கையாளாத காரணத்தால் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் (1917-1920 காலப்பகுதியில் ஸ்பானிஷ் காய்ச்சலால் குறைந்தது 17 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் இறந்தனர்) இப்போதுதான் அங்கு பாரிய சுகாதார நெருக்கடி ஏற்றப்பட்டுள்ளது. ஜார்ஜ் ஃபிலாய்ட் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து 1960 இன் பின்னர் இன ரீதியில் அமெரிக்கா மிகவும் மோசமாகப் பிளவுபட்டுள்ளது. ஜோ பைடன், ட்ரம்ப் ஆகிய இருவருமே முன்னைய அமெரிக்கா ஜனாதிபதி எவரும் இதுவரை பெறாதளவு கூடிய வாக்குகளைப்பெற்றுள்ளனர். இதனால் அமெரிக்கா இருகட்சியாக மேலும் பிளவுபட்டுள்ளது. ஐந்தாவதாக, ட்ரம்பின் வெளிவிவகார கொள்கையால் சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்கும் நம்பிக்கையும் சரிந்துள்ளது.
ஜோ பைடன் உடனடியாக எதிர்நோக்கும் இச்சவால்களில் “சர்வதேசஅரங்கில் சரிந்துள்ள, அமெரிக்காவின் செல்வாக்கையும் நம்பிக்கையையும் சரி செய்வதுதான்”, ஒப்பீட்டு ரீதியில் எளிதாக இருக்கும். டிரம்ப் இதற்கு ஒருவிதத்தில் மறைமுகமாக உதவி செய்திருக்கிறார் என்றே கூறவேண்டும். உண்மையில், டிரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட குளறுபடிகளை சரி செய்தாலேபோதும் ஜோ பைடன் நல்ல பெயர் வாங்கிவிடலாம்.
டிரம்பின் குளறுபடிப் பட்டியல்
உங்கள் பாதுகாப்புக்கு நீங்கள் செலவழிக்கவேண்டும் என “நேட்டோ” விடம் திமிர்த்தனமாக கூறியமை, 2015ல் கைச்சாத்திடப்பட்ட பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியமை, 2015ல் ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுவாயுத தடுப்பு ஒப்பந்தத்தை நீடிக்காமை, ஐநா மனித உரிமைக்கவுன்ஸிலில் (UNHRC) இருந்தும் உலக சுகாதார நிறுவனத்தில் (WHO) இருந்தும் வெளியேறியமை, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷமூட்ட முயன்றமைக்காக ரஷ்ய அதிபரை கண்டிக்க மறுத்தமை, ஏமன் படுகொலைகளுக்கு சவுதி சர்வாதிகாரிகளுக்கு துணைபோதல், முஸ்லீம் நாடுகள் மீதான பயணத்தடை போன்றவிடயங்களை மாற்றியமைப்பதன் மூலம் ஜோ பைடன் நல்ல பெயரை சீக்கிரம் பெறலாம். இம்மாற்றங்கள் விரைவில் இடம்பெறும். டிரம்புடன் கைகுலுக்க மறுத்த பிரான்ஸ் அதிபர் மெக்றோன், பெண் என்பதால் டிரம்பால் அவமானப்படுத்தப்பட்ட ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்கெல், வல்லரசுகளின் மாநாட்டில் டிரம்பின் முதுகின் பின்னால் கேலி செய்த உலகத்தலைவர்கள் ஆகியோர் ஏற்கெனவே மகிழ்ச்சிகொள்ள தொடங்கியுள்ளனர்.
டிரம்ப்பை கண்மூடித்தனமாக நம்பி சீனாவின் ஆத்திரத்துக்கு உள்ளன தைவான் மாத்திரம் அச்சம் கொண்டுள்ளது, இந்தியப் பிரதமர் மோடி ஒரு நண்பரை – டிரம்ப்பை – இழந்துவிட்டார். ஆனால் உபஜனாதிபதி -வெற்றி – வேட்பாளர் (தமிழ் நாட்டில் பிறந்த தாய்க்கும் ஜமேக்கா தந்தைக்கும் பிறந்து யூத கணவனை மணமுடித்துள்ள) கமலாதேவி ஹாரிஸ் அவர்களை இதுவரை கண்டுகொள்ளாத இந்திய ஊடகங்களும் சில தமிழ் தேசியவாத வயிற்றுப்பிழைப்பாளர்களும் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
சீனாவுக்கு எதிராக கடைசி நேரத்தில் போர்க்கொடி தூக்கி ஆயுத வியாபாரத்தை சிறப்பாக நடத்திக்கொண்டு, தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் நப்பாசையில் ‘நீங்கள் யார் பக்கம் – சீனா பக்கமா எம்பக்கமா?’ என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு இலங்கையின் கரத்தை பின்புறமாக முறுக்க முயன்றபோது மீண்டும் குதூகலமடைந்து, ‘சர்வ–தேசங்– சரணங்– கச்சாமி‘ பாடிய எமது ஈழக்- கனவான் அரசியல்வாதிகளும் கமலா ஹாரிஸ் மீது இப்போது நம்பிக்கை வைக்கத்தொடங்கியுள்ளனர்.
ஜோ பைடன் –கமலா ஹாரிஸ் எவ்வாறு வெளியுறவு கொள்கையை கையாளப்போகிறார்கள்?
உண்மையில் ஜோ பைடன் -கமலா ஹாரிஸ் ஆட்சியில் அமரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவு எப்படியாக இருக்கப்போகிறது, இது இலங்கை அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்ப்படுத்தப்போகிறது என்பதை மாத்திரம் இக்கட்டுரையில் பார்ப்போம்.
அமெரிக்க வரலாற்றிலே மிகவும் அனுபவம் மிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தான். மிகவும் குறைந்த வயதில் செனட்டரானவர் என்ற சாதனையைப் படைத்த இவர், மிகக்கூடிய வயதில் ஜனாதியானவர் என்ற சாதனையையும் இப்போது படைத்துள்ளார். செனட்டில் 36 ஆண்டுகளும் துணை அதிபராக எட்டு ஆண்டுகளும் இருந்த பழுத்த அரசியல்வாதி இவர். டிரம்பைப்போல் ஆணவமும் ஆதிக்க போக்கும் அற்ற மென்மையான மனிதரான இவருக்கு ‘டீல் மேக்கர்’ (deal-maker) என்ற பட்டப்பெயரும் உண்டு. இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவராக இருப்பினும் எதிரணியான குடியரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரோடும் இவருக்கு நட்பு இருந்தது. அவர்களையும் தம்பக்கம் இழுத்துக்கொண்டு காரியமாற்றுவதில் இவர் வல்லவர்.
ஆயினும் இவரைச்சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் வெளிவிவகாரம், தேசிய பாதுகாப்பு ஆகிய துறைகளில் உள்ள ஆலோசகர்களில் பலர் புதியவர்கள் அல்ல. அவர்கள் ஒபாமா – ஹில்லரி கிளின்டன் காலத்திலும், அதற்கு முன்பும் பணியாற்றியவர்கள், ஒரு சிலரைத் தவிர. அத்துடன் ஜோ பைடன் மீது வெளிவிகார கொள்கையில் “ஊசலாட்டப் போக்குடையவர்” என்ற விமர்சனமும் உண்டு.
இவரின் ஆலோசகர்களில் பிரதானமானவர் அண்டனி பிளிங்கன் (Antony Blinken). இவர் 2000 வருடத்தில் இருந்து ஜோ பைடனுடன் இருக்கும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். ஜோ பைடன் டெலாவேர் செனட்டராக ஈராக் போருக்கு 2002ல் வாக்களித்தபோதும் பிளிங்கன் அவரது ஆலோசகராக இருந்தார், ஆனால் 2007ல் ஈராக் உள்நாட்டுப் போர் மூண்டபோது, அமெரிக்கத் துருப்புக்களை அதிகரிப்பதை பைடன் எதிர்த்தார். அண்டனி பிளிங்கன் இஸ்ரேல் ஆதரவாளர்.
ஜேக் சுலிவன்(Jake Sullivan) இவர் ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார். ஒபாமா காலத்தில் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த, ஈரானுடன் பின்வாசல் (back-channel) பேச்சுவார்த்தைகளை நடத்த உதவியவர்.
கொலின் கால் (Colin Kahl) தேசிய பாதுகாப்பு ஆலோசகர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பைனான்சியல் டைம்சுக்கு (Financial Times) இவர் அளித்த பேட்டியில் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்சும் நிறைய நண்பர்களை இழந்துவிட்டன, ஆகவே ஜோ பைடன் நிர்வாகம் இப்பிராந்தியத்தில் இவர்களை பங்குதாரர்களாக தொடர்ந்தும் கருதி அவர்களுக்கு ஆயுத விற்பனை செய்வதைப்பற்றி ஆராயும் என்று கூறினார்.
எலிசபெத் ரோசன்பெர்க் (Elizabeth Rosenberg) ஒபாமாவின் கீழ் தனது பதவிக் காலத்தில், ஈரான், சிரியா மற்றும் லிபியா மீது பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியவர்.
அவ்ரில் ஹைன்ஸ் [Avril Haines] சி.ஐ.ஏ. யின் முன்னாள் துணை இயக்குனர். ட்ரோன் தாக்குதல் தொடர்பான ஒபாமாவின் கொள்கைகளையும், வட கொரியாவுக்கெதிரான கடுமையான அணுகுமுறையையும் வடிவமைக்க இப்பெண்மணியே காரணமானார்.
ஜூலி ஸ்மித்[Julie Smith], வெளிவிவகாரத்தில் நிபுணரரான இப்பெண்மணி ஐரோப்பாவுடனான நல்லுறவை வலியுறுத்தும் அதேசமயம் ரஷ்ய ஆதிக்கத்தை தடுப்பதற்கான கடும் போக்குக்கொண்டவர்.
தாமஸ் டோனிலன் [Thomas Donilon] ஒபாமாவின் சீனாவுடனான ஒத்துழைப்பு கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்தார், ஆனால் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சீனாவை அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக சித்தரித்து சீனாவை சுற்றி வளைத்தல் என்ற கொள்கையை வலியுறுத்த தொடங்கியவர்.
அனைத்துக்கும் மேலாக இவ்வணியில் ஜோன் கெரி (John Kerry), “யுத்த கழுகு” என வர்ணிக்கப்படும் முன்னாள் வெளியுறவு செயலாளர், கடந்த 20 ஆண்டுகளாக இதில் உறுப்பினராக இருந்துவருகிறார்.
ஒபாமா – ஜோ பைடன் காலத்தின் வெளியுறவு அணுகுமுறை
ஒபாமா – ஜோ பைடன் காலத்தில் (2009 ஜனவரி 2017 ஜனவரி) அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்தால் ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் ஆட்சியில் வெளியுறவு கொள்கை எத்தகையதாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
2003 இல் அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ் ஈராக் மீது படையெடுக்க தீர்மானித்தபோது அதனை எதிர்த்த ஒபாமா, தனது 2008 தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க துருப்புக்களை விரைவில் திரும்பப் பெறுவதாக உறுதியளித்தார். ஈராக்கில் டொலர் ஆதிக்கத்திற்கு தடையாக மாறிய தனது முன்னாள் ஆத்ம நண்பனான சாதம் ஹுசெயினை தூக்கிலிட்டு, பொதுமக்களை படுகொலை செய்து, அந்நாட்டின் வளங்களை கொள்ளையடித்து, தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொண்ட அமெரிக்காவால் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கிருந்த வெற்றிடத்தை நிரப்பியதால் நிலைமை சிக்கலானது.
எனினும் ஒபாமா ஆப்கானிஸ்தானில் உள்ள அரிய வளங்களை கொள்ளையடிப்பதற்காக தலிபான்கள் மீது தாக்குதலை முடுக்கி விட்டு, அங்கு படைகளை குவிக்க முயன்றதால் ஒரே சமயத்தில் இவ்விருநாடுகளிலும் போர்புரிய முடியாத நிலையில் படிப்படியாக ஈராக்கிலிருந்து படைகளை திரும்பப் பெறும்போது அங்கு ஒரு பெரும் அராஜகநிலை உருவானது.
ஆப்கானிஸ்தானில் ஒபாமாவின் படையெடுப்பு பெரும் உயிரிழப்பையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியதே தவிர, எதிர்பார்த்த எந்த வெற்றியையைம் பெறவில்லை. எனவே அங்கிருந்தும் படைகளை படிப்படியாக திரும்பப் பெறவேண்டி ஏற்றப்பட்டது.
அமெரிக்கா இதுவரை பலம்வாய்ந்த எந்த ஒரு நாட்டுடனும் நேரடியாக மோதியதில்லை. அது போர்தொடுத்த பலவீனமான நாடுகளில் கூட படுதோல்வியையே தழுவியுள்ளது என்பதே அதன் வரலாறு. கொரிய யுத்தம் (1950-1953), வியட்நாம் யுத்தம் (1955 – 1975) ஆகியவற்றில் அமெரிக்கா அடைந்த அவமானகரமான தோல்விகளை உலகம் என்றும் மறக்காது ஆனால் அமெரிக்கா அடிக்கடி மறக்கிறது.
2011 மே 2 ம் திகதி பாகிஸ்தானின் அபோட்டாபாத் [Abbottabad] அருகே ஒரு குடியிருப்பு வளாகத்தில் அல்கய்தா தலைவரான ஒசாமா பின் லாடனை சீல்ஸ் [SEALS] என்ற கடற்படை பிரிவை அனுப்பி கொன்றதன் மூலம் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்ட ஒபாமா தனது சரிவடைந்த செல்வாக்கை உயர்த்திக்கொண்டு படிப்படியாக ஆப்கானிஸ்தானிலிருந்து ‘மீசையில் மண் ஒட்டாமல்’ படைகளை மெல்ல வாபஸ் பெறத்தொடங்கினார்.
மற்றொரு நாட்டின் மண்ணில் போர்புரிவதிலுள்ள பேரிழப்புகளை ஒபாமா நிர்வாகம் கருத்தில் கொண்டு தனது அணுகுமுறையை மாற்றத்தொடங்கியது. நேரடியான படையெடுப்புக்கு பதிலாக விமானங்களின் மூலம் நுட்பமான முறையில் தாக்குதல்களை நடத்தும் உத்தியை கடைபிடிக்கத் தொடங்கியது.
லிபியாவில் தரைப்படைகளை இறக்காமல் விமானத்தின் மூலம் குண்டுகளை பொழிவதில் நம்பியிருப்பது. இதனால் பல்லயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், பெருமளவு உடமைச் சேதங்கள் ஏற்பட்டன. அத்துடன் கடாபி (அக்டோபர் 2011) அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட பின்னர் நாட்டில் அரசு என்று ஒன்று இல்லாமல் போய், பெரும் குழப்பநிலையை அது தோற்றுவித்தது. தரைப்படைகளை இறக்காமல் விமானத்தின் மூலம் குண்டுகளை பொழிவது ஒபாமா – ஜோ பைடன் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இரண்டாவது கட்ட போர்முறையாகும். இப்போர்முறையால் ஈராக்கிலும் லிபியாவிலும் அரசு செயலிழந்து அராஜகம் தலைவிரித்தாடியது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் விரிவடைவதற்கு வழிவகுத்தது.
2002 லிருந்து மத்திய கிழக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடத்திய நீண்ட போர்களில் துலக்கமான எந்த வெற்றியையும் பெறாமல் சோர்வுற்றிருந்த மக்களும், யுத்தத்திற்கு எதிரான சமூக அமைப்புகளின் வளர்ச்சியும், அத்தகைய போர்களுக்கெதிராக கைகோர்த்திருந்த அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளும் ஒபாமா – ஜோ பைடன் இரண்டாவது ஆட்சிகாலத்தில் பெரும் தலையிடியாக மாறியிருந்தன. எனவே ஒபாமா – ஜோ பைடன் நிர்வாகம் நேரடி யுத்தத்தில் மாட்டிக்கொள்வதில்லை என்ற முடிவுக்குவர நிர்ப்பந்திக்கப்பட்டது.
இதனால் சிரியாவின் பஷர் அல்-அசாத்தின் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்து அமரிக்காவை நம்பி போராட்டத்தில் குதித்த, அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக சிரியாவில் ஏவுகணைத் தாக்குதல்களை அமெரிக்காவால் நடத்த முடியவில்லை.
பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை சுமத்தி, அதனை தடுப்பதற்காக சிரியாவின் படை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த காங்கிரசிடம் ஒபாமா சம்மதம் கேட்டார். முன்னர் ஈராக் மீது போர் தொடுப்பதற்கு ஜார்ஜ் புஷ் இவ்வாறான கதையைத்தான் கூறினார். இத்தடவை காங்கிரஸ் ஏமாறவில்லை. அது அவரது பிரேரணையை நிராகரித்தது. இதனால் அமெரிக்காவை நம்பி போரில் குதித்த கிளர்ச்சியாளர்கள் அநாதரவாக விடப்பட்டனர்.
இந்நிலையில் ஒபாமா எதிர்பாராத முடிவொன்றை எடுத்தார். சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அகற்றுவதற்கு சம்மதிப்பது என்ற போர்வையில் பஷர் அல்-அசாத்திற்கு ஆதரவாக போரில் குதித்த ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினினுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, கோழைத்தனமாக பின்வாங்கினார். சிரியாவில் நடைபெறும் நீண்ட யுத்தம் அப்பிராந்தியத்தில் மாத்திரமல்ல ஐரோப்பாவிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது, அங்கு லட்சக்கணக்கான சிரியர்கள் தங்கள் நாட்டில்ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழ்நிலை காரணமாக தஞ்சம் கோரி ஐரோப்பா வருகின்றனர்.
இப்போது தொழில் நுட்பம் மேலும் வளர்ந்து கணணிமயமான, புதுவிதமான யுத்தமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆளில்லா விமானத் தாக்குதல் (drone attacks) என்ற போர்முறையே அதுவாகும். அதிலிருந்து நேரடியான படையெடுப்புக்கு பதிலாக ஆளில்லா விமான தாக்குதல் அமெரிக்காவின் போர்முறையாகிவிட்டது. விண்கலங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியும் இதற்கு பெருந்துணையாக அமைந்தன. இது ஒபாமா – ஜோ பைடன் நிர்வாகம் கடைப்பிடித்த மூன்றாவது யுத்தமுறையாகும்.
ஆப்கனிஸ்தானில் அடிக்கடி ட்ரொன் தாக்குதல்களை நடத்தி, யுத்த தொழில்நுட்பத்தில் தாம் இன்னும் முன்னிலையில் இருப்பதாக அமெரிக்கா காட்டிக்கொண்டது. அது சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர்கள் மீது துல்லியமாக ட்ரொன் தாக்குதல்களை நடத்தி தனது ஆற்றலை அவ்வப்போது நிரூபித்தது.
இதன் பின்னர் மத்தியகிழக்கில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஒபாமா – ஜோ பைடன் நிர்வாகம் முயன்றது. இதற்கு ஒரு சான்று ஈரானுடன் அது செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் பிரதான நோக்கம் சிரியாவிலே ரஷ்யாவுடன் மறைமுகக்கூட்டு சேர்ந்திருக்கும் “ஈரான்”, ரஷ்யாவுடன் நிரந்தர கூட்டு ஒன்றினை அமைத்துவிடக்கூடாது என்பதாகும்.
ஆயினும் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் ரஷ்ய செல்வாக்கை அதனால் தடுக்கமுடியவில்லை. 2014 ல் ரஸ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பு அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் நெருக்கமாககொண்டுவந்தது. ரஷ்யாவிற்கு எதிராக அவை கூட்டாக பொருளாதாரத் தடைகளை விதித்தன, ஆனால் ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறவில்லை.
ஒபாமா – ஜோ பைடன் காலத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று, “அரை நூற்றாண்டுக்கும் மேலாக கியூபாமீது பகைமை பாராட்டிவந்த அமெரிக்கா, டிசம்பர் 2014ல் அதனுடன் இராஜதந்திர உறவுகளை முதன்முறையாக ஏற்படுத்தியதும் 2016 மார்ச் மாதம் ஒபாமா அந்நாட்டிற்கு விஜயம் செய்தது”மாகும். லத்தின் அமெரிக்க நாடுகள் பலவற்றில் கியூப புரட்சி சித்தாந்தத்தின் செல்வாக்கு அதிகரித்து அப்போது வெடித்திருந்த அமெரிக்க விரோத அலையை தணிப்பதே இதன் நோக்கமாக இருந்தது.
ட்ரம்பின் வெளியுறவு அணுகுமுறை
வியாபாரியான டிரம்ப் காலத்தில் அவரது ஆணவப்போக்கு பல நண்பர்களை இழக்கச்செய்தது. ‘அமெரிக்கா முதலாவது’ [America First] கொள்கையால், உலகமயமாக்கல் என்ற நவ தாராளவாத பொருளாதார கொள்கையிலிருந்து பாதுகாப்புவாதம் [protectionism] தலை தூக்கியது. அமெரிக்காவின் ‘சர்வதேசகடமைகளால்’ ஏற்பட்ட செலவுகளை குறைக்கும் சிக்கன நடவடிக்கையாக அவர் மேற்கொண்ட – [UNHRC] ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் இருந்தும், [WHO] உலக சுகாதார அமைப்பில் இருந்தும், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்தும், ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறியமைபோன்ற – பல நடவடிக்கைகள் உலக நலனுக்கு எதிரானவையாக இருந்தன.
ஆயினும் அவர் காலத்தில் அமெரிக்கா வெளிநாடு எதன் மீதும் போர் தொடுக்கவில்லை என்பது சிறப்பான அம்சமாகும். அது மாத்திரமல்ல தாலிபான்களுடன் கூட பேச்சுவார்த்தை நடத்தி ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகளை திருப்பி அழைக்க முயன்றதும் கொரியா அதிபரை இரண்டு முறை சந்தித்து அப்பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு சாதகமான அமைதியை நிலைநாட்ட முயன்றமையும் முக்கியமான சம்பவங்களாகும்.
மறுபுறத்தில் டிரம்ப் ரஷ்ய அதிபர் பூட்டினுடன் நட்பை பேணிக்கொண்டு சீனா மீது கடும்போக்கை மேற்கொண்டு மறைமுகமான வர்த்தகப் போரை அதன்மீது நடத்தியதுடன் நில்லாமல் தைவானுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியும் செயலிழந்து கிடந்த ‘QUAD’ க்வாட் அமைப்புக்கு உயிர்கொடுத்து இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை சீனாவுக்கெதிராக அணிதிரட்டி ஒரு பதட்ட நிலைமையை உருவாக்கியும் அமெரிக்காவின் ஆயுத விற்பனையை சிறப்பாக நடத்திமை டிரம்ப்பின் மற்றொரு அரசியல் -வியாபார சதுரங்க விளையாட்டாகும்.
ஜோ பைடன் –கமலா ஹாரிஸ் ஆட்சியில் வெளியுறவு எப்படியிருக்கும்?
இவற்றிலிருந் இனி சில முடிவுகளுக்கு வரலாம்:
முன்னரைப்போல தனது படைகளை அனுப்பி ஏனைய நாடுகளில் போர்புரிய அமெரிக்கா தயாரில்லை. யுத்த எதிர்ப்பு சமூக அமைப்புகள் அங்கு பலம்பெற்றுள்ளன. நீண்ட யுத்தங்கள் அங்கு சோர்வை ஏற்றப்படுத்தியுள்ளது. தற்போது அமெரிக்கா சிக்கிக்கொண்டுள்ள பாரதூரமான பொருளாதார நெருக்கடி மேலும்அதனை பலவீனப்படுத்தியுள்ளது. இந்நிலைமை மாற நீண்ட காலம் எடுக்கும்.
மறுபுறத்தில் ஏனைய தொழில் துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதன் ஏற்றுமதி வருவாயில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் யுத்த உபகரண ஆயுத வியாபாரம் தடைபடாமல் நடைபெறவேண்டும். முன்னரைப்போல நேரடி யுத்தங்கள் சாத்தியமற்ற இன்றைய நிலையில் சில பிராந்தியங்களில் பதட்டத்தை ஏற்படுத்தி, தனது ஆயுத விற்பனையை தொடர்ந்தும் நடத்திக்கொண்டு தனது மேலாதிக்கத்தை (hegemony) கைப்பற்றிக்கொள்வதே அதன் உத்தியாக இருக்கும். அமெரிக்கா இன்று முகம் கொடுத்துவரும் பாரிய நெருக்கடிகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கும் பிளவுபட்டுள்ள அமெரிக்காவை ஒன்றுபடுத்துவதற்கும் இது அவர்களுக்கு தேவைப்படுகிறது.
எனவே, ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் ஆட்சியில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைத்து அங்கொரு பதட்ட நிலைமை உருவாக்கப்படும். அமெரிக்காவின் பிரதான ஆயுத விற்பனைச் சந்தையாக ஐரோப்பா மாறும் என எதிர்பார்க்கலாம்.
பிரித்தானியாவுடனான விசேட நட்புறவு ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுக்காக பாலியாக்கப்பட்டாலும் அதனை அமெரிக்கா பகைத்துக்கொள்ளாது. ஐரிஷ் பரம்பரையைச் சேர்ந்த ஜோ பைடன் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தை மதித்து நடக்குமாறு பிரித்தானியாவை நெருக்குவார்.
சீனாவுடனான உறவில் ‘ஒத்துழைப்பு சுற்றிவளைப்பு’ என்ற கொள்கை கடைபிடிக்கப்படும் வாய்ப்புள்ளது. சீனாவிடம் கடன் வாங்கியிருக்கும் அமெரிக்கா, மேலும் கடன் உதவிக்காக அதனிடம் மீண்டும் கையேந்தக் கூடும். அதனால் வர்த்தக கெடுபிடியை சிறிது தளர்த்த வேண்டிவரும். ஆனால் சீனாவின் ராட்சத வளர்ச்சியை தடுத்து நிறுத்த திரைமறைவில் அனைத்தையும் செய்துகொண்டு, அப்பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டுள்ள பதட்ட நிலைமையை தொடர்த்து வைத்துக்கொண்டு, தனது ஆயுத வியாபாரத்தை தொடரும். அதே சமயம் சீனா ரஷ்யாவுடன் ஒரு இராணுவ கூட்டுக்குள் வராமல் தடுப்பதில் கவனமாக இருந்து சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யும்.
மத்திய கிழக்கில் பதட்டம் தணியும். ஈராக், ரஷ்யாவுடன் கைகோர்த்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கும். ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மீண்டும் செய்துகொள்ளப்பட்டு அதன் மீதான தடை தளர்த்தப்படும். சவுதி, யுஏஇ (UAE) ஆகிய நாடுகளுடனான விசேட உறவு நிலையில் மாற்றம் ஏற்படும். ஏனைய முஸ்லீம் நாடுகளுடன் பதட்டத்தை தணித்துக்கொள்ள முயலும். இதனால் முஸ்லீம் எதிர்ப்புவாதம் தளரும். உலக முஸ்லிம்களை சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக முடுக்கிவிடும் முயற்சி தொடரும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறும். அதனால் ஏற்படும் வெற்றிடத்தை தலிபான்கள் நிரப்ப முயலுவார்கள். இதனால் அங்கு அராஜகநிலை ஏற்படும். வட கொரியாவுடனான உறவு விரிசலடையும்.
இந்தியா
இந்தியாவுடனான உறவில் பெரிய மாற்றம் ஏற்படாது. சீனா இந்தியா எல்லைத்தகராறு இருக்கும்வரை, இந்திய – பாக்கிஸ்தான் உறவில் விரிசல் இருக்கும் வரை, இந்து சமுத்திரத்தில் இந்திய நலன் அச்சுறுத்தப்படும் வரை அமெரிக்காவின் ஆயுதங்களையும் போர்விமானங்களையும் யுத்த தொழில்நுட்பங்களையும் விற்பனை செய்வதற்கான ஆசியாவின் பெரிய சந்தையாக இந்தியா திகழும். மறுபுறத்தில் இந்தியா தொழில் துறையில் வளர்ச்சிபெற்று தமக்கு எத்துறையிலும் சவாலாக வந்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கா மிகக் கவனமாக இருக்கும்.
இலங்கை
இலங்கையின் கேந்திர புவியியல் அமைவும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடங்கள் குத்தகை கொடுத்தமையும், பூகோள அரசியலில் இலங்கையை வல்லரசுகளின் ஆடுக்களமாக மாற்றியுள்ளது. ஆயினும் இப்புதிய சூழலை இலங்கை அரசு தனக்கே உரிய நரித்தனத்தோடு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுவருகிறது. ஒருபுறத்தில் சீனாவின் பணத்தை வாங்கிக்கொள்கிறது மறுபுறத்தில் இரகசியமாக அமெரிக்காவுடன் கைகுலுக்கிக்கொள்கிறது. 07.05.2019ல் முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் ஓ. பிளேக் ஜூனியர்(Robert O. Blake Jr.) இலங்கைக்கு சந்தேகத்துக்குரிய முறையில் வந்து பண்டாரநாயக்க மண்டபத்தில் கோத்தபாயாவை தனது சொற்பொழிவில் பாராட்டிவிட்டு சென்றதும், சத்தடியில்லாமல் மிகவும் சர்ச்சைக்குரிய ACSA [Acquisition and Cross-Servicing Agreement] 2007 ல் கோத்தபாயாவின் மேற்பார்வையில் கைச்சாத்திடப்பட்டமையும், அது மங்கள சமரவீர -ரணில் மேற்பார்வையில் இரகசியமாக 2017ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டமையும் இதற்கான உதாரணங்கள்.
இலங்கையில் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று பெரிய நாடுகளினதும் பிடி தளரப்போவதில்லை. இதில் ஒருநாட்டை இன்னொருநாடு வெளியேற்றுவதில் வெற்றிபெறாது. இந்தியா அண்டை நாடு அதனை உதாசீனப்படுத்த முடியாது. ஆனால் இலங்கையில் “மகாவம்ச மனநிலை” இருக்கும்வரை இந்தியாவுக்கெதிரான மனோபாவம் அங்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருக்கும். அமெரிக்காவின் மறைமுகமான வேர்கள் இலங்கையின் எல்லா மட்டங்களிலும் பரவியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் அமெரிக்காஎதிர்ப்புவாதம் ஆழப்பதிந்துள்ளது. ஆயினும் சீனாவுக்கு எதிரான மனோபாவம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெரியளவில் கிடையாது. சீனாவின் பிடியும் அரசின் சகல துறைகளிலும் இறுக்கியுள்ளது. ஆக, இவற்றில் எந்தநாடும் இராணுவரீதியில் இலங்கையை ஆக்கிரமிக்க முடியாதபடி மக்கள் மனோபாவமும் சமபலமும் இருக்கின்றது.
இந்நிலையில் சீனாவின் பிடி மேலும் இலங்கைமீது இறுகும்போது அமெரிக்கா அதனை சமநிலைப்படுத்துவதற்கு இரண்டு கருவிகளை கையில் வைத்துள்ளது. ஒன்று இந்தியா. மற்றது ஜெனீவா. இலங்கை அமெரிக்காவின் நல்ல பிள்ளையாக இருக்கும் வரை ஜெனீவாவில் போர்க்குற்ற விசாரணை நடைபெறாது. ஆனால் அதனை இலங்கை அரசுக்கு அடிக்கடி நினைவு படுத்திக்கொண்டிருக்கும். ஆகவே ஜெனீவாவில் இப்பிரச்சினை தொடர்வதை அமெரிக்கா விரும்பும், ஆனால் அது நியாயமான ஒரு முடிவுக்கு வந்து முற்றுப் பெறுவதை விரும்பாது.