(மூத்த செய்தியாளர் பி.கே.பாலச்சந்திரனால் ஆங்கில ஊடகமொன்றுக்காக எழுதப்பட்ட கட்டுரையை தழுவி எழுதப்பட்டது. தமிழில் தருபவர் சீவகன் பூபாலரட்ணம்)
(குறைந்த கூலி பெறும் கீழ்ப்படிவான தொழிலாளர் படையை தக்க வைக்கும் நோக்கில் பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமார், தொழிலாளர் ஒப்பந்தகாரார்கள் மற்றும் அடுத்தடுத்து வந்த இலங்கை ஆட்சியாளர்களே இலங்கை தோட்டத் தொழிலாளர்களை கல்வியறிவற்றவர்களாக தொடர்ந்து வைத்திருந்தனர்.)
பலரது சொந்த நலனுக்காக, இலங்கையின் பெருந்தோட்ட பொருளாதாரத்தின் ஆரம்பம் முதலே தோட்டத்தொழிலாளர்கள் பொருளாதார, சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பிந்தங்கிய நிலையில் வைக்கப்பட்டனர்.
அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் ஏனைய பகுதிகளில் கல்வி முன்னேற்றமடைந்த போதிலும், தமக்கு மலிவான மற்றும் கீழ்ப்படிவுள்ள ஒரு தொழிலாளர் சக்தி தேவை என்ற காரணத்துக்காக பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமார், தோட்டத்தொழிலாளர்களுக்கு கல்வியை மறுத்தனர்.
“Confrontations with colonialism -1796-1920” என்ற தனது நூலில் பி.வி.ஜே ஜயசேகர அவர்கள் இதுபற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “ஆரம்பத்தில், 19 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில், பிரிட்டிஷ் கோப்பி பயிற்ச்செய்கையாளர்கள், சிங்கள கிராம மக்களை தமது தோட்டங்களில் பணிக்கு அமர்த்தினர். ஆனால், குறைந்த கூலியாகையால் சிங்களவர்கள் உடனடியாகவே வேலையை விட்டு சென்றுவிட்டனர். இதன் காரணமாக பாக்கு நீரிணைக்கு அப்பால், தமிழகத்தில் வறுமையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த மக்களை அவர்கள் குறைந்தகூலிக்காக அணுக வேண்டியிருந்தது. அத்தோடு அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள், தமது உடலில் உயிரை ஒட்டிவைத்துக்கொள்வதற்காக, உலகின் எந்த மூலையிலும் எந்தக் கூலிக்கும் வேலை செய்ய தயாராக இருந்தார்கள். அந்த வேலையாட்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அப்படி அவர்கள் இலங்கை கொண்டுவரப்பட்ட பின்னர், “அவர்கள் வேறு வழியின்றி குறைந்த வசதியுடன் குறைந்த ஊதியத்தில் தொடர்ந்து வேலை செய்யும் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்பதற்காக”, பிந்தங்கிய நிலையிலேயே முதலாளிமார் அவர்களை பராமரித்தனர். இந்த நிலையைப் பேணுவதற்காக அவர்களுக்கு கல்வி வேண்டுமென்றே மறுக்கப்பட்டது.”
‘இலங்கையின் பெருந்தோட்டங்களில் இந்திய தமிழ் சிறுபான்மையினர் மத்தியிலான முன்னேற்றம்’ என்ற தனது ஆய்வு அறிக்கையில், அஞ்சலா டபிள்யூ. லிட்டில் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார். “19 ஆம் நூற்றாண்டின் முதல் அரைவாசியில் முக்கிய வணிகப் பொருளாக கோப்பி இருந்தது. அது ஒரு பருவப் பயிர் மாத்திரமே. ஆகவே, கொண்டுவரப்பட்ட இந்திய குடிவரவுத்தொழிலாளர் அனைவரும் ஆண்கள் மாத்திரந்தான், குடும்பங்கள் கிடையாது. ஆகவே அந்தக் காலப்பகுதியில் பள்ளிக்கூடங்களை திறக்கவேண்டிய தேவை இருக்கவில்லை. ஆனால், கோப்பியில் இருந்து தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு மாறிய போது நிலைமையும் மாறியது. தேயிலை அனைத்துப் பருவத்துக்குமான ஒரு பயிர் என்பதால், தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆகவே தேயிலைக்கு மாறிய போது தொழிலாளர்களுடன் அவர்களது குடும்பங்களையும் அழைத்துவர நேர்ந்தது. ஆகவே தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டவேண்டிய தேவை முதலாளிமாருக்கு ஏற்பட்டது.
மதக்கல்வி
ஆனால், அந்தக் கல்விகூட தொழிலாளர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்தை உயர்த்தும் நோக்கில் வழங்கப்படவில்லை. அவர்களில் முதலாளிமாரின் தேவைகளுக்கு பொருந்தும் பெறுமானங்களை வளர்த்துக்கொள்வதற்கான கல்வியாகவே அது ஏற்பாடாகியது. கிறிஸ்தவ மிஷனரிகளின் உதவியுடன், இதற்கான கல்வி மதக்கல்வியே ஒழிய, மதசார்பற்ற கல்வியல்ல என்று தோட்ட முதலாளிமார் கண்டார்கள். கேள்வி-பதில் அடிப்படையிலான கத்தோலிக்க கல்வியை தமிழில் வழங்குவதுதான் அதற்கான வழி என்று அவர்கள் கண்டதாக ஜயசேகர கூறுகிறார். அஞ்சலா லிட்டில் இது குறித்து மேலதிக தகவல்களை தருகையில், தோட்டக் கங்காணிமாரும் பள்ளிக்கூடங்களை அமைத்ததாகவும், அதுவும் மதக்கல்விதான் என்றும் ஆனால், அவர்கள் இந்துமதக் கல்வியை கற்பித்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்துக்களின் “விதி” கோட்பாட்டின்படியும் (அதாவது எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்ற கருதுகோள்), சாதிப்படிநிலைகளின் படியே எவரும் நடக்க வேண்டும் என்ற கோட்பாட்டின்படியும், ஒரு கீழ்படிவுள்ள வேலையாட்களாக தொழிலாளர்களை பேணுவதே கங்காணிமாரின் சிந்தனை.
கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு விருப்பமில்லாதபோதிலும், பிரிட்டிஷ் முதலாளிமார் கங்காணிகளின் இந்து மதக் கல்விக்கே முன்னுரிமை வழங்கியிருக்கிறார்கள். ஏனென்றால், தமக்கு கீழ் வேலைசெய்யும் குறைந்த சாதியை சேர்ந்த தொழிலாளர்களை, கங்காணிமார் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் சாதி படிநிலை அடுக்கு கோட்பாடு ஆகியவற்றின் மூலம் இலகுவாக அடிமைகொள்ள முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால், இந்துக்கோயில்களை அமைப்பதற்கும், தொழிலாளர்கள் அவர்களின் மதக் கொண்டாட்டங்களை அனுட்டிக்கவும் முதலாளிமார் உதவியுள்ளார்கள் என்கிறார் பி.வி.ஜே. ஜயசேகர.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தோட்டக்கல்வி விவகாரம்
1903ஆம் ஆண்டில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலான கல்விக்கு போதுமான வசதிகள் கிடையாது என்ற விவகாரம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு அரசியல் விவாதமாக மாறியுள்ளது. தேயிலையில் இருந்து அதிக வருமானம் வந்தபோதிலும், கல்விக்காக காலனித்துவ அரசாங்கங்களிடம் இருந்து உதவி நிதிகள் கிடைத்தபோதிலும் தோட்டத்தொழிலாளர்களுக்கு மதசார்பற்ற கல்வியை வழங்க முதலாளிமார் தயக்கம் காட்டினார்கள். தோட்ட முதலாளிமாரின் அழுத்தம் காரணமாக, 1907இல் கிராமிய பள்ளிக்கூடங்களுக்கான கட்டளைச்சட்டத்தில், தோட்டக்கல்விக்கு தனியான மற்றும் கட்டுபாடுகள் தளர்ந்த விதிக்கோவைகள் கொண்டுவரப்பட்டன. எப்படியிருந்தபோதிலும் அடுத்தடுத்து 1920,1930 மற்றும் 1940களில் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் அடிப்படையில், தோட்டங்களில் “அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களின்” எண்ணிக்கை அதிகரித்தது. 1904இல் 43 ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை 1948இல் 968ஆக உயர்ந்ததாக அஞ்சலா லிட்டில் கூறுகிறார்.
வாக்குரிமை விவகாரம்
1930இல் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டபோது, அவற்றை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்க பல தேசியவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தோட்டத்தொழிலாளர்கள் இந்த நாட்டின் நிரந்தரக் குடிகள் அல்ல, ஆகவே அவர்களுக்கு நாட்டின் நலனில் நிரந்தரமான ஒரு அக்கறை இருக்காது என்று அவர்கள் வாதாடினர். எப்படியிருந்த போதிலும் யார் யார் வாக்களிக்கலாம் என்ற சில கட்டுப்பாடுகளுடன், தமிழ் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட, சுதந்திரத்துக்குப் பின்னர் நடந்த முதலாவது தேர்தலில் அவர்கள் சார்பில் 7 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர்.
ஆனால், இதனால், கலவரப்பட்ட முன்னணி இலங்கை அரசியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 1948 மற்றும் 1949 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டங்களின் அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை மறுத்தனர். 1954 மற்றும் 1964 இல் இந்தியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாடுகடத்தப்பட்டமை உட்பட சில காரணங்களால், இலங்கை சனத்தொகையில் இந்திய தமிழர்களின் வீதம் 1946 இல் 11.7 ஆகவிருந்து 1971இல் 9.4 வீதமாகவும் 1981இல் 5.6 வீதமாகவும் குறைந்தது.
ஆனால், நாடுகடத்தல் அடிப்படைகள் குறித்து விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, இந்தியாவுக்கு நாடுகடத்தப்படவிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாடுகடத்தப்படாமல் இருந்தனர். இதன் காரணமாக எழுந்த ஸ்திரமற்ற நிலை மலையகத்தில் பள்ளிக்கூடத்துக்கு போகவிருந்த பிள்ளைகளுக்கு பாதிப்பாக அமைந்தது. 1946 முதல் 1981 வரையிலான காலப்பகுதி தோட்டத்தொழிலாளர் கல்வி வீழ்ச்சியை சந்தித்த காலப்பகுதியாகும்.
“1945இன் இலவசக்கல்விச் சட்டம் இலங்கையில் வாக்குரிமைபெற்ற சிங்கள சமூகத்துக்கும், அவ்வளவு ஏன், தமிழ் சமூகத்துக்கும் கூட பெரும் நன்மைகளைச் செய்தது. ஆனால், அது தோட்டத்தொழிலாளர் மத்தியில் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தோட்டங்களில் புதிய பள்ளிக்கூடங்களை அமைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உரியது என்று 1947 இன் கட்டளைச்சட்டம் பரிந்துரைத்தாலும், இந்தச் சட்டத்தின் கீழ் தோட்டங்களில் புதிய பாடசாலைகள் அமைக்கப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. 1948 முதல் 1951 வரை அங்கு பெரும் எண்ணிக்கையிலான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன அல்லது வேறொன்றுடன் இணைக்கப்பட்டன. அத்துடன் 24 பள்ளிக்கூடங்கள் கையேற்கப்பட்டன” என்கிறார் அஞ்சலா லிட்டில்.
மொழி விவகாரம்
தோட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களின் கற்கை மொழி தமிழா அல்லது சிங்களமா என்ற மொழிப்பிரச்சினையும் அங்கு உருவானது. அஞ்சலா லிட்டிலின் தகவலின்படி, பொது மற்றும் தோட்டப் பாடசாலைகளை ஒருங்கிணைப்பதற்கு ஆதரவு வழங்கிய சிங்களவர்கள், அந்தப் பாடசாலைகளில் சிங்களம் கட்டாய பாடமாக கற்பிக்கப்பட வேண்டும், அல்லது கிராம சிங்கள பிள்ளைகளும், தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளும் அந்தப் பள்ளிக்கூடங்களில் ஒன்றாக கற்பிக்கப்பட வேண்டும், அதில் சிங்களம் கற்கை மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். ஆனால், தமது பள்ளிக்கூடங்கள் தேசிய மைய நீரோட்ட பாடசாலைகளுடன் ஒருங்கிணைக்கப்படுவதை ஆதரித்த தோட்டத்தொழிலாளர்களின் தமிழ் தலைவர்கள், ஆனால், அந்தப் பள்ளிக்கூடங்கள் தனியான நிறுவனக்களாக அல்லது தனித்துறையாக பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதில் பிள்ளைகள் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். காலப்போக்கில் இந்த நிலைப்பாடு ஏற்கப்பட்டது. மேற்கூறப்பட்ட காரணங்களினால், இலங்கையின் ஏனைய பகுதிகளில் கல்வித்திட்டத்தினால் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பலன்களை தோட்டப்பள்ளிகள் இழந்தன.
ஏனைய காரணிகள்
உலக சந்தையில் இலங்கையின் பெருந்தோட்ட உற்பத்திகளுக்கான வருமானம் குறைந்தமை, சிறிமாவோ அரசாட்சியில் பெருந்தோட்டத்துறை தேசியமயப்படுத்தப்பட்டமை, கணிசமான அளவு தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் பெருந்தோட்டக் கல்வியில் முதலாளிமாருக்கு இருந்த அக்கறை குறைந்தது.
தோட்டப் பாடசாலைகளை கையேற்பதற்குத்தான் முன்னுரிமை என்றிலாத போதிலும், தமது இடதுசாரிக் கொள்கை காரணமாக சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் பாடசாலைகளை அரசமயமாக்கியது. அரசாங்கம் தோட்டப் பாடசாலைகளை பொறுப்பேற்க தயாராக, தாம் நடத்திய பள்ளிக்கூடங்கள் மீது தோட்ட முதலாளிமார் ஆர்வத்தை இழந்தனர். சிறிமாவோவின் தோட்டங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கைகளை அடுத்து பெருந்தோட்டங்கள் இறங்கு முகத்தைச் சந்திக்க, பிரச்சினை மேலும் பெரிதாகியது.
குடியுரிமை மற்றும் வாக்குரிமை வழங்கப்பட்டமை
எஸ். தொண்டைமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் கூட்டு முயற்சியால், அனைத்து தோட்டத்தொழிலாளர்களுக்கும் படிப்படியாக இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டது. இது தோட்டத்தொழிலாளருக்கும் அவர்களின் பிள்ளைகளின் கல்வியிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. அடுத்தடுத்து ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்களுக்கான தனது ஆதரவின் மூலமும், முக்கியமாக, வடக்கு கிழக்கு தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட பிரிவினைக்கான ஆயுதப் போராட்டங்களில் இருந்து தோட்டத்தொழிலாளர்களை தள்ளியிருக்கச் செய்ததன் மூலம் தொண்டைமான் அவர்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடிந்தது.
தோட்டத்தொழிலாளர்களின் கல்வியில் “குடியுரிமை” ஏற்படுத்திய தாக்கம் பற்றிக் கருத்துக்கூறிய ஆஞ்சலா லிட்டில், ”பல குடும்பங்கள் இப்போது இலங்கை குடிமக்களாக தமது எதிர்காலத்தை நோக்கி நகர முடிகின்றது. கல்வியின் மூலம் வேலை பெறும் இளம் தலைமுறையின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தோட்டத்தொழிலாளர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இந்த இளைஞர்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழமுடிகிறது.” என்றார்.
குடியுரிமை வழங்கப்பட்டதால் தோட்டத்தொழிலாளர்களுக்கு கிடைத்த அரசியல் மறுமலர்ச்சி, அரசாங்கத்துக்கு எதிராகவும், ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் பேரம்பேசக்கூடிய ஒரு சக்தியை அவர்களுக்கு கொடுத்துள்ளது. இவை அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சாதகமாக உள்ளது.
வெளிநாட்டு வளர்ச்சி உதவிகள் தோட்டப் பாடசாலைகளை நிர்மாணிக்க உதவுகின்றன. 9 தோட்டப் பாடசாலைகளை நிர்மாணிக்க இந்தியா உதவுகின்றது.
போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம்
ஆனால், தோட்டத்தொழிலாளர் கல்வி இன்னமும் நிறைய முன்னேறவேண்டி இருக்கிறது. தோட்டங்களில் ஆரம்ப வகுப்புகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை இலங்கையின் ஏனைய கிராம, நகர பாடசாலைகளை நெருங்குகின்ற போதிலும், கல்விப் பொதுத்தராதர சாதாரண மற்றும் உயர் வகுப்பில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 2009 மற்றும் 2010இல் நகரங்களில் சாதாரண தரத்தில் பதிவாகும் மாணவர்கள் 92.3%. உயர் தரத்தில் 45.8%. கிராமப்புறங்களில் முறையே 81.4% மற்றும் 39.7%. ஆனால், தோட்டப் பாடசாலைகளில் சாதரண தரத்தில் 53.8% மற்றும் உயர் தரத்தில் 12.8% மாத்திரமே. க.பொ.த சாதாரண மற்றும் உயர் தரத்தில் தோட்டப் பாடசாலைகளுக்கும் ஏனைய பாடசாலைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது.