— வி. சிவலிங்கம் —
தமிழ் அரசியலின் சில பக்கங்கள் மாற்றி எழுதப்படுவதன் மூலமே தமிழ்த் தேசியவாத அரசியல் அதன் இழந்த சக்தியைப் பெற முடியும். விவாதக் களம் – 1இல் சிங்கள பெருந்தேசியவாதத்தின் உட் கூறுகளின் சில பகுதிகளை அவதானித்தோம். அத்துடன் தமிழ்-குறும் தேசியவாதம் என்பது தனித்துவமான சக்தி அற்று வெறுமனே சிங்கள பெரும் தேசியவாத சக்திகளிடம் முற்றிலும் தங்கிச் செயற்படும் நிலையிலிருப்பதாகப் பார்த்தோம். தமிழ் அரசியலில் போதுமான அளவிற்கு தனித்துவமான சக்தி நிச்சயமாக உள்ளது. உதாரணமாக எண்ணெய் வளம் நிலத்தடியில் எவ்வாறு உள்ளது? அதனை உரிய முறையில் ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லாதவரை அச்சக்தியைப் பயன்படுத்த முடியாது. அவ்வாறே தமிழ் அரசியலிற்குத் தனித்துவமான இயங்கு சக்தி உண்டு. அதனை அடையாளம் காண்பதே இன்றைய தேவையாக உள்ளது. சுதந்திரத்திற்கு முன்னருள்ள காலப் பகுதியிலும், அதன் பின்னரான ஆரம்ப காலத்திலும் தமிழ் அரசியல் மிகவும் காத்திரமான வகையில் தேசிய அரசியலில் செயற்பட்டது. இலங்கை என்ற தேசிய உருவாக்கத்தில் மிகவும் கணிசமான பங்கினை தமிழ் அரசியல் வழங்கியிருந்தது. ஆனால் சுதந்திரத்தின் பின்னர் சிங்கள அரசியல் எவ்வாறு பிளவுபட்டு இனவாத அரசியலிற்குள் பிரவேசித்ததோ அவ்வாறே தமிழ் அரசியலும் பிளவுபட்டு இனவாத அரசியலிற்குள் சென்றது.
ஒன்றை ஒன்று சார்ந்து செயற்பட ஆரம்பித்த தேசியவாதங்கள்
இந்த இனவாத அரசியல் தொடர்ந்து முன்னேறுவதற்கு எதிரிகள் தேவைப்பட்டனர். அதனடிப்படையில் சிங்கள இனவாத அரசியல் தமிழர்களையும், தமிழ் இனவாத அரசியல் சிங்களவர்களையும் எதிரிகளாக அடையாளம் காட்டினார்கள். இதன் படிமுறை வளர்ச்சியின் காரணமாக இந்த இரு இனவாத அரசியல்களும் ஒன்றில் ஒன்று தங்கிச் செயற்பட, காலப் போக்கில் ஒன்றில்லாமல் ஒன்று செயற்பட முடியாத நிலைக்கு இன்று சென்றுள்ளன.
இவ்வாறாக நாம் கடந்தகால அரசியலை வகைப்படுத்தினாலும், மறு பக்கத்தில் இதன் எதிர்த் தாக்கங்கள் இருந்தன. அதாவது சிங்கள- பௌத்த இனவாத அரசியலுக்கு எதிரான சக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான பிரிவினர் குறிப்பாக இடதுசாரி சக்திகளும், தேசிய ஜனநாயக பிரிவினரும், பலமான தொழிற்சங்க செயற்பாடுகளும் இணைந்து செயற்பட்டது போலவே தமிழ் அரசியலிலும் கணிசமான மத்தியதர வர்க்கத்தினரும், இடதுசாரி சக்திகளும், உழைக்கும் மக்கள் பிரிவினரும் செயற்பட்டனர்.
இருப்பினும் நாட்டில் காணப்பட்ட குடியேற்ற ஆட்சியின் எச்ச சொச்சங்கள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்த வேளையில் அவை மிகவும் இலகுவாகவே இனவாத அரசியலை நோக்கிச் செல்வதற்கு உதவின. அத்துடன் குடியேற்ற ஆட்சியாளர்கள் வகுத்தளித்த பாராளுமன்ற கட்சி அரசியல் இனவாத அரசியல் தளிர்ப்பதற்கு மிகவும் உதவியாக அமைந்தது. இந்த நிலையிலேயே, இங்கு நாம் இன்று நடைமுறையிலுள்ள தமிழ்- குறும் தேசியவாத்தின் போக்கினை மாற்றி அமைப்பது அவசியமாகியுள்ளது.
தமிழ் – குறும் தேசியவாதமும், அதற்கான விலைகளும்
தமிழ் அரசியல் தனது எதிர்காலத்தை நோக்கித் திரும்புவதாயின் முதலில் உள்நோக்கி தனது பார்வையைச் செலுத்த வேண்டும். தமிழ் – குறும் தேசியவாதம் விளைவித்துள்ள கொடுமைகளை, தாக்கங்களை, ஒப்பீட்டு அடிப்படையில் மிகவும் பின்தங்கிய வாழ்வு நிலையில் இருப்பதற்கான காரணிகளை அடையாளம் காண்பது தேவையாக உள்ளது. குறிப்பாக தமிழ் அரசியல் தமக்கே உரித்தான தன்னியக்கத்தை அடையாமல் வெறுமனே சிங்கள பௌத்த பெரும் தேசியவாதத்தின் இயக்கத்தில் முற்றிலும் தங்கிச் செல்லும் நிலைமை காரணமாக அதன் அடிப்படைச் சமூக, பொருளாதார, அரசியல் நிலமைகள் மிகவும் பலவீன நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் பாரிய இழப்புகளுக்கு காரணமான தமிழ் குறும் தேசியவாதம்
தமிழ் – குறும் தேசியவாதமே தமிழ் சமூகத்தில் பாரிய உட் பிளவுகளுக்கும் அதன் பாரிய இழப்புகளுக்கும் காரணமாக உள்ளது. ஆரம்பத்தில் குறிப்பாக தமிழ்க் காங்கிரஸ் என்ற பொதுக் கட்டுமானத்திற்குள் தமிழ் அரசியல் இருந்த வேளையில் தேசிய அரசியலில் தமக்கான சமமான பங்கினையே வலியுறுத்தியது. இக் கோரிக்கை என்பது தேசிய அளவிலான தமிழ் சமூகத்தின் காத்திரமான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. சிங்கள அரசியல் இலங்கையர் என்ற தேசிய கட்டுமானத்தைத் தனித்துக் கட்ட முடியாத நிலையிலிருந்தது. ஐ தே கட்சியுடன் மிகவும் நெருக்கமான, தவிர்க்க முடியாத உறவுகளை வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற பின்னரும், ஐ தே கட்சியுடனான உறவு இன்றுவரை நீடிப்பது என்பது சிங்கள- தமிழ் மத்தியதர வர்க்கத்தின் நலன் சார்ந்த அரசியலிலிருந்தே அவதானிக்கப்பட வேண்டும்.
சிங்கள பெருந்தேசியாவாதத்தின் கூறுகள்
சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் தனது தொடர்ச்சியான இருத்தலுக்கு சிங்கள சமூகத்தில் காணப்பட்ட பெருங்கூறுகளைத் தனது நேச சக்திகளாக அடையாளம் காட்டியது. அதாவது சிங்கள கிராமப்புற மக்களின் சுகாதாரத்தில் சிங்கள ஆயர்வேத வைத்தியர்கள் காத்திரமான பங்கினை வகித்தனர். அதே போலவே ஆசிரியர்கள் அதாவது சிங்கள மொழியை வளர்ப்பதற்கான பெரும் பங்கினை அவர்களே வழங்கினர். அடுத்ததாக, பௌத்த மதத்தை கிராமப்புறங்களில் வாழும் மக்கள் மத்தியில் பரப்புவதும், அம் மக்களின் நலன்களில் அதிக அக்கறையுடையவர்களாகவும் பௌத்த பிக்குகள் காணப்பட்டனர். அடுத்து நாட்டின் விவசாயத்தையும், தொழிற் துறையையும் வளர்க்கும் விவசாயிகளும், தொழிலாளர்கள் பிரிவினர்களாகும். இந்த ஐந்து பிரிவினர்களையும் ‘பஞ்ச மகா பலவேகய’ என அழைக்கப்படும் ஐந்து பாரிய சக்திகளாக அரசியல் அடையாளம் காட்டியது. இதுவே சிங்கள தேசியவாதத்தின் அடிப்படைக் கூறுகளாக இருந்தன.
ஆதிக்கப் பிரிவினரின் அடிப்படையான தமிழ் தேசியவாதம்
ஆனால் தமிழ் அரசியல் அல்லது தமிழ்க் – குறும் தேசியவாதம் அவ்வகையான சமூகக் கூறுகளைத் தனது தேசியவாதத்தின் அடிப்படைகளாகக் காட்டத் தவறியது. அவ்வாறாயின் தமிழ்ச் சமூகத்தில் அவ்வாறான சமூகக் கூறுகள் இருக்கவில்லையா? என்ற கேள்வி எழலாம். ஆனால் அது அவ்வாறில்லை. சிறுதோட்ட விவசாயிகள், கூலி விவசாயத் தொழிலாளர்கள், சிறு கைத் தொழில் சமூகத்தினர், சிறு வியாபாரிகள், மீன்பிடிச் சமூகத்தினர், சாதிப் பிரிவினர் எனப் பல பிரிவினர் காணப்பட்டனர். ஆனால் தமிழ்க் – குறும் தேசியவாதம் என்பது தமிழ்ப் பகுதிகளிலுள்ள நிலச் சுவாந்தர்களினதும், குடியேற்ற ஆட்சி சேவைப் பிரிவினரதும், சைவ மத பிரிவினர்களினதும் ஆதிக்கத்திற்குள் இருந்ததாலும், ஏற்கனவே குறிப்பிட்ட பிரிவினர் இவர்களின் ஆதிக்கத்திற்குள் கட்டுப்பட்டு இருந்ததினாலும் தமிழ்க் – குறும் தேசியவாதம் தனது இயல்பான விதத்தில் ஆதிக்கப் பிரிவினரின் விளக்கமாக மாறியது.
தமிழ்ச் சமூகத்தின் பிரதான கூறுகளாகவுள்ள அச் சமூகங்களின் நலன்கள் குறித்து அல்லது அச் சமூகங்கள் ஆதிக்கப் பிரிவினரின் ஒடுக்குமுறைக்குள் வாழ்வது குறித்த எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் அல்லது தமிழ்த் தேசியவாத இயக்கத்திற்குள் அப் பிரிவினர் இணைக்கப்படுவதன் அவசியத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வெறும் வாக்கு வங்கிகளாக எண்ணிச் செல்லும் போக்கு படிப்படியாகவே அதிகரித்து அவை வெறுமனே சிங்கள – பௌத்த பெரும்தேசியவாதத்திற்கு எதிராக மட்டும் செயற்படத் தொடங்கியது என்பது அதன் குறுகிய நலன்களின் விளைவாகும்.
இத் தமிழ்க் – குறும் தேசியவாதம் ஆரம்பத்தில் பரந்த ஆதரவுத் தளத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டிருந்த போதிலும் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் ஆதரவு என்பது பல்வேறு சமூகங்களின் பங்களிப்பாகக் காணப்பட்ட போதிலும் காலப் போக்கில் குறிப்பாக தமிழரசு – காங்கிரஸ் எனப் போட்டி அரசியல் தொடர்ந்தபோது அந்த ஆதரவுத் தளங்களும் கூறுகளாகின. சமீபகால அரசியலை நோக்கினால் கூட்டமைப்பு என்ற பெயரில் உருவாகிய அணியினரை வர்ணிப்பது அப்பிளவுகள் இன்னமும் தொடர்வதை அவதானிக்கலாம்.
ஒப்பீட்டளவில் சிறந்த முன்னாள் ஆயுதக்குழுக்கள்
உதாரணமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் என்பன இன்னமும் இடைக்காலத்தில் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த அமைப்புகளாகவே வர்ணிக்கப்படுகின்றன. இவை அவற்றின் வன்முறை அடையாளங்களைத் தொடர்ந்தும் நினைவூட்டுவதாக மேலெழுந்தவாரியாகக் கருதலாம். ஆனால் அடிப்படையில் இவை ஏதோ ஒரு வகையில் கொள்கை அடிப்படையிலும், செயற்பாட்டு அடிப்படையிலும் ஒட்டு மொத்த இலங்கைக்குள்ளான தீர்வை வற்புறுத்தும் அமைப்புகளாகவே செயற்படுகின்றன.
குறிப்பாக தமிழ்க் – குறும் தேசியவாத அரசியலை ஈ பி ஆர் எல் எவ், புளொட் என்பன முழுமையாக ஆதரிப்பதாக இல்லை. தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்படும் குறும் -தேசியவாத அரசியலுடன் இந்த அமைப்புகள் முரண்பட்டே இணைந்தும், பிரிந்தும் பயணிக்கின்றன. இந்த இரு அரசியல் அமைப்புகளும் அதன் தோற்றத்தின் போது ஒட்டு மொத்த இலங்கையில் அடிப்படை மாற்றங்களைக் கோரியே தோற்றம் பெற்றன. இதன் பிரதான வேறுபாடாக தமிழரசுக் கட்சி முழுமையாகவே சிங்கள மக்களை எதிரியாக்கிச் செல்வதையும், ஆனால் கூட்டமைப்பின் இதர பிரிவுகள் அவ்வாறான போக்கை முழுமையாக ஏற்க முடியாது அதிகார வர்க்கத்தினரை எதிர்க்கும் நிலையிலும், தேர்தல் அரசியலில் கூட்டு தவிர்க்க முடியாத தேவையாகவும் இருப்பதால் தொடர்ந்து பயணிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் காணப்படுகிறது.
உதாரணமாக தமிழரசுக் கட்சி தற்போது பாராளுமன்ற அரசியலை நோக்கிய பாதையிலும் அதன் அரசியல் கோட்பாடாக தமிழ்க் -குறும் தேசியவாதமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூட்டமைப்பின் பிரதான கட்சிகளான புளொட், ஈ பி ஆர் எல் எவ் என்பன ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வுகளையே கொண்டுள்ள நிலையில் தேசியம் குறித்த உள் முரண்பாடுகளுடன் பயணிக்கின்றன. இந்த இரு போக்குகளையும் இணைக்கும் காரணியாக சிங்கள பௌத்த பெருந் தேசியவாதமே உதவுகிறது.
த.தே.கூ பதிய மறுப்பதன் காரணம்
இன்னொரு உதாரணத்தைக் குறிப்பிடுவதானால் தமிழர் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சி மிகவும் தயக்கம் காட்டுகிறது. இதற்கான பிரதான காரணி தேசியம் தொடர்பான இரு வேறுபட்ட போக்குகளேயாகும். தமிழர் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சி தமிழ்ச் சமூகத்தின் எப் பிரிவினரின் அபிலாஷைகளைக் கைவிட்டுச் சென்றதோ அப் பிரிவினரே இன்று இதர இயக்கங்கள் என்ற வடிவில் கூட்டமைப்பிற்குள் இணைந்துள்ளனர். அதே போன்ற நிலையில் இக் கூட்டிற்கு வெளியே செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, கம்யூ. மாக்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிஇ, புதிதாக உருவான சமத்துவக் கட்சி போன்றனவும் பரந்த தேசிய கோட்பாடுகளுடன், தமிழக் – குறும் தேசியவாதத்துடன் இணங்கிச் செல்ல முடியாமல் தனித்துப் பயணிக்கின்றன. இவ் வேறுபாடுகளை மிகவும் ஆக்கபூர்வமான விதத்தில் அவதானித்து எதிர்காலத்திற்கு ஏற்றவாறான கோட்பாடுகளை வகுப்பதும் தேவையாகிறது.
பொதுவாகவே தேசியவாதம் என்பது பாதிப்புற்ற சமூகத்தினை அல்லது வளர்ச்சியை நோக்கி அணி திரட்டுவதற்கு ஒன்று திரட்டும் ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ் அரசியலில் அவ்வாறான நிலை தற்போது இல்லை. முற்று முழுதாகவே பாராளுமன்ற அதிகாரத்தை நோக்கிய பாதையாக அவை மாறியுள்ளன. மத்தியதர வர்க்கத்தின் இயல்பான போக்குகளை ஒப்பு நோக்கி இன்றைய தமிழ் அரசியலை நோக்கும்போது அவ்வாறான ஓர் முடிவுக்கே நாம் செல்ல முடியும். எவ்வாறு இன்றைய பௌத்த சிங்கள பெருந்தேசிய வாதம் சிங்கள மக்களின் ஒரு பிரிவினரை தமிழ், முஸ்லீம் மக்களை எதிரியாகக் காட்டி தனது பேரினவாத அரசியலை முன்னெடுக்கிறதோ, அதே பாணியில் தமிழ்க்- குறும் தேசியவாதம் சிங்கள மக்களை எதிரியாக முன்வைக்கிறது.
தமிழ் குறும் தேசியத்தால் புறக்கணிக்கப்படும் தமிழ் மக்கள்
இவ்வாறான குறும் தேசியவாதம் ஒரு புறத்தில் தத்தமது சமூகத்தின் ஒரு பிரிவினரை தம்மோடு எடுத்துச் செல்லும் அதேவேளை மறு பக்கத்தில் பெருந்தொகையான தமது மக்களை கைவிட்டுச் செல்வதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இம் மக்களே எமது கவனத்திற்கு உரியவர்கள். இலங்கை என்ற தேசத்தில் அதிகார வர்க்கத்தினர் தமது பணங்களாலும், பிரச்சாரங்களினாலும், ஊடக வியாபாரங்களினாலும் தமது குறும்-தேசியவாத நலன்களை உக்கிரப்படுத்தலாம், ஆனால் இக் குறும் – தேசியவாதம் பொய்யான வாக்குறுதிகள் மேல் அதன் அதிகாரத்தை கட்டமைப்பதை நாம் காணலாம்.
ஒரு புறத்தில் தமிழ் – குறும் தேசியவாதிகள் சாமான்ய சிங்கள மக்களை எதிரியாக அடையாளம் காட்டிய போதிலும், தமிழ் குறும் தேசிய வாதத்தரப்பு அதிகார வர்க்கத்துடன் வைத்திருக்கும் இரகசிய உறவுகளை இன்று மக்கள் அப்பட்டமாகக் காண்கின்றனர். அதே போலவே சிங்கள – பௌத்த பெருந்தேசிய வாதிகள் ஒட்டு மொத்த சிங்கள – பௌத்த மக்களின் நலன்கள் குறித்துப் பேசிய போதிலும் அவர்களது நடைமுறைகள் யாரைப் பாதுகாக்க உதவுகின்றன? உள்நாட்டுப் பெருந் தேசியவாத சக்திகள் கடந்த போர்க் காலத்தில் பாரிய செல்வத்தினைப் போர், தேசிய அபிவிருத்தி என்ற போர்வையில் திரட்டிய வரலாறுகள், நாட்டினைப் பெருந் தொகையான கடன் பளுவிற்குள் தள்ளியதன் பின்புலங்கள் எவை? என்பதை மக்கள் படிப்படியாகக் காண்கின்றனர்.
மக்களுக்குப் போலி வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைக் கொள்ளையிட்டவர்கள் இன்று அதனை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். கொரொனா நோயிலிருந்து மக்களே தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அரசினால் முடியாது எனக் கை விரிக்கும் நிலைக்கு சிங்கள- பௌத்த பெருந் தேசியவாதம் தனது மக்களைக் கைவிட்டுச் சென்றிருக்கிறது. இந் நிலைதான் தொடருமெனில் பொருளாதாரத்தால் பாதிக்கப்படும் இவ் வேளையில் ‘நீங்களே உங்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற நிலையை அடைய அதிக காலம் எடுக்காது. அப்போதுதான் சிங்கள – பௌத்த பெருந் தேசியவாதத்தின் வெறுமையை மக்கள் காண்பார்கள்.
தமிழ் – குறும் தேசியவாதம், சிங்கள – பௌத்த பெருந் தேசியவாதம் என்பன அதன் இறுதிச் சுற்றில் செல்கின்றன. இவ்விரு குறும் தேசியவாதங்களும் பெரும்பான்மையான தனது மக்களைக் கைவிட்டுச் செல்கின்றன. இந்த மக்களே எமது புதிய தேசியவாத எண்ணங்களைச் சுமந்து செல்ல வேண்டியவர்கள். இம் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார தேவைகளே எமது அரசியல் கோட்பாடுகளின் மையங்கள். இக் குறும் – தேசியவாத கோட்பாடுகளின் விளைவுகள் குறிப்பாக தமிழ் – குறும் தேசியவாதம் பல லட்சம் தமிழ் மக்களின் வாழ்வினைக் காவு கொள்ளக் காரணமாக இருந்துள்ளது. நாம் இறந்தவர்கள் குறித்துப் பேசும் அதேவேளை உயிருடன் வாழும் மக்களின் தேவைகளை, அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நோக்கிச் செல்வதே எமது முன்னால் உள்ள பாரிய பொறுப்பு ஆகும்.
வாசகர்களே!
சிங்கள, தமிழ் குறும் தேசியவாதத்தின் கொடுமையான விளைவுகளில் சிலவற்றையே இப்போது பார்த்தோம். எவ்வகைத் தேசியவாதமாக இருப்பினும் அவை மக்களின் வாழ்வின் மேம்பாட்டை நோக்கியே பேசப்படுகின்றன. ஆனால் எமது தாயகத்தில் காணப்படும் குறும் தேசியவாத நகர்வுகள் மக்களின் வாழ்வை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளி அச்சத்தில் வாழும் உளவியல் போக்கிற்குள் செலுத்துகின்றன. எமது சமூகத்தில் வாழும் சகல மக்கட் பிரிவினரினதும் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை முன்னகர்த்தி இக் குறும் – தேசியவாதத்தின் கொடுமையான பாதிப்புகளைத் தரும் கூறுகளை விலக்கி புதிய வழியில் சிந்திப்பது தேவையாகிறது.
புதிய கருத்துக்கள் என நாம் கூறுகையில் அவை முற்றிலுமாக இன்றைய அரசியல் போக்கிலிருந்து அந்நியமானதாக அமையவேண்டும் என்ற அவசியமில்லை. எமது சமூகம் கடந்து வந்த பாதையில் சில முட்களும் தொடர்ந்து செல்ல வேண்டிய பயணத்திற்குத் தடைகளாகக் காணப்படுகிறது. அவற்றை அடையாளம் கண்டு அவற்றை நீக்கிச் செல்வதற்கான உபாயங்களை அணுகுவதே இவ் விவாதங்களின் பிரதான நோக்கமாகும்.
தமிழ் அரசியலில் மிகவும் காத்திரமான அத்தியாயங்கள் ஏற்கனவே உள்ளன. குறிப்பாக சமஷ்டி கட்டுமானம், சுயநிர்ணய உரிமை, அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் போன்ற கோட்பாட்டு நிலைப்பாடுகளாகும். இவற்றை இன்றைய 21ம் நூற்றாண்டின் சர்வதேச மாற்றங்களுக்கு ஏற்ப சில மாறுதல்களோடு எடுத்துச் செல்வதற்கான விவாதங்களை நோக்கிச் செல்வதாகும்.
தொடரும்.