பிரிட்டிஷ் ஆங்கிலம் VS இலங்கை ஆங்கிலம்: எது சிறந்தது? (இலங்கையில்)

பிரிட்டிஷ் ஆங்கிலம் VS இலங்கை ஆங்கிலம்: எது சிறந்தது? (இலங்கையில்)

(ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுத்தாளர் ஜனிக் சிற்றம்பலத்தால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையை தமிழில் தருபவர் சீவகன் பூபாலரட்ணம்

ஆங்கிலத்தை பேசுவதற்கு மிகவும் சரியான வழி என்று ஒன்று உள்ளதா? ஆங்கிலம் பேசுவதானால், அது பிரிட்டிஷ் ஆங்கிலமாக, அந்த வடிவத்தை ஒத்ததாக இருக்க வேண்டும் என்றும் எலிசபெத் மகாராணியாரின்  ஆங்கிலத்துக்கு குறைந்த எதுவும் பரிகாசத்துக்குரியது, சங்கடமானது என்றும் ஒரு நம்பிக்கை இங்கு எமது குட்டித்தீவான இலங்கையில் இருக்கிறது. 

ஆனால், பிரிட்டிஷின் ஏனைய பல முன்னாள்  காலனித்துவ நாடுகளைப் போல இலங்கையிலும் ஆங்கிலம் வளர்ந்து, அதற்கான தனி வடிவத்தைப் பெற்று, “இலங்கை ஆங்கிலம்” என்று அது அழைக்கப்படுகின்றது என்று யதார்த்தத்தை இந்த பழமையான நம்பிக்கை கவனிக்கத் தவறிவிட்டது. 

இலங்கை ஆங்கிலத்துக்கான அங்கீகாரம் என்பது முதலில் கல்விமான்கள் வட்டாரத்தில் மாத்திரமே இருந்தது. ‘முறையான’ ஆங்கிலம் பேசுபவர்கள் இதனை பிழையான ஆங்கிலம் என்றே கருதி வந்தனர். எப்படியிருந்தபோதிலும், நாம் பேசும் பாணியிலான ஆங்கிலம் அங்கீகரிக்கப்பட வேண்டியது என்றும் எமக்கே தனித்துவமானது என்றும் தற்போது பலர் கருதத் தலைப்பட்டுள்ளனர். 

1985 முதல் இலங்கையில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரரான மைக்கல் மெய்லர் என்பவர் 2007இல் “இலங்கை ஆங்கிலத்தின் குணாதிசயம்” பற்றிய விரிவான தொகுப்பை பிரசுரித்தார். அவரது  ‘A Dictionary of Sri Lankan English’  என்ற நூல் இலங்கையில் ஆங்கிலம் பேசுபவர்கள் மத்தியில் பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்கள், சொற்றொடர்கள், சொற்திறன், விபரிப்புகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தியது.  

இலங்கை ஆங்கிலம் என்றால் என்ன? 

இலங்கையில் ஆங்கிலம் பேசும் பெரும்பாலும் எல்லோருமே இலங்கை ஆங்கிலத்தின் அம்சம்களையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த அம்சங்கள் இலங்கை ஆங்கிலத்துக்கு மாத்திரம் தனித்துவமானவை  என்பது அவர்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருப்பதில்லை. “ஆனால், வெளியாள் என்ற வகையில் அந்த அம்சங்களை அடையாளம் காண்பது எனக்கு இலகுவாக இருந்தது,” என்று ஆங்கில றோஅர் மீடியாவுக்கு மெய்லெர் வழங்கிய செவ்வி ஒன்றில் கூறியிருக்கிறார். 

மெய்லெரின் அகராதி மூன்று வகையான ஆட்களுக்காக தொகுக்கப்பட்டதாகும். இலங்கையில் ஆங்கிலம் கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், இலங்கையில் உள்ள வெளிநாட்டவர், மற்றும் ஆங்கிலத்தின் வகைகளில் ஆர்வம் உள்ள கல்வியாளர்கள். 

நான்காவது வகையான, இலங்கையில் சாதாரணமாக ஆங்கிலம் பேசுபவர்கள் குறித்து அவர் கவனம் செலுத்தவில்லை. “இதுதான் நாம் பேசும் ஆங்கிலம் என்பதை அங்கீகரிக்கும் அவர்களைப் பொறுத்தவரை, இலங்கை ஆங்கிலம் என்பது ஒரு விடயம் என்றோ அல்லது அது குறித்து அவர்கள் பெருமைப்படலாம் என்பது குறித்தோ யாரும் அவர்களுக்கு கூறவில்லை, அவர்களும் அதனை தெரிந்திருக்கவில்லை,” என்றார் அவர். 

தனது அகராதி எத்தனை பேருக்கு சுவாரசியமானதாக இருக்கிறது என்பது குறித்து பேசும்போது மெய்லெர், அவ்வளவு பேருக்கு அது பிடித்திருக்கும் என்பதில்லை என்கிறார். “இதனுடனான தொடர்புகள் பற்றி புரிந்திருக்கும் ஆட்களுக்கே அது சுவாரசியமாக இருக்கிறது” என்று அவர் நம்புகிறார். 

இலங்கையை தான் வந்தடைந்த உடனேயே இலங்கை ஆங்கிலத்தின் உதாரணங்களைச் சேகரிக்க மெய்லெர் ஆரம்பித்துவிட்டார். தான் இங்கு வந்தடைந்த காலத்தில் இருந்தே வித்தியாசங்களை தான் பார்க்கத் தொடங்கிவிட்டதாக அவர் கூறுகிறார். அவற்றை அப்போதிருந்தே அவர் பட்டியலிடத் தொடங்கிவிட்டார். “ஆரம்பத்தில் ஒரு பழைய பாணியிலான தட்டச்சு இயந்திரத்திலேயே நான் இவற்றை தட்டச்சு செய்யத்தொடங்கினேன். நவீன கணினிகளில் நான் தட்டச்சு செய்த முதலாவது விடயம் எனது இந்தப் பட்டியலைத்தான்.” 

மெய்லெரின் அகராதியில் சொற்களும் சொற்றொடர்களும் மாத்திரம் இடம்பெறவில்லை. வேறு இடங்களில் பயன்படுத்தப்படாத, ஆங்கில இலக்கண அம்சங்களையும் அவர் பதிவு செய்தார். உதாரணமாக, ‘had’   என்ற சொல் past perfect tense (முடிவுற்ற இறந்த காலமாக) பயன்படுவது  குறித்த விடயத்தை கூறலாம். இலங்கையில் ஒருவர் “The robbers ‘had’ escaped in a white van,” என்று சொல்வதை வேறு இடங்களில் எளிமையாக “the robbers escaped in a white van” என்று சொல்வார்கள்.  

செய்தி கட்டுரைகளில் காணப்படும் ஒரு பொது அம்சத்தையும் அவர் விளக்குகிறார். இலங்கை ஆங்கிலத்தில் ஒருவர் ‘had’  என்ற சொல்லை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில், அதன் பயன்பாட்டின் மூலம் அவர் ஒரு உண்மையை மாத்திரம் சொல்லவில்லை, அதனை இன்னுமொருவர் சொல்லக் கேட்டேன் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். வழக்கமான பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் ஒருவர் “he told me, that the robbers had escaped in a white van” என்று சொல்வதை இலங்கை ஆங்கிலத்தில் ‘had’  மாத்திரம் சேர்ப்பதன் மூலம் உணர்த்திவிட முடியும்.  

இலங்கை ஆங்கிலத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட இரு வேறுபட்ட வகைகள் இருக்கின்றன.

1. முதல் மொழியாக பேசுபவர்கள்,

2. இரு மொழி பேசுபவர்கள்.

காலனித்துவ கால வயதானவர்களின் ஆங்கிலத்துக்கும் நவீன இரு மொழி பேசுவோரின் ஆங்கிலத்துக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு குறித்தும் மெய்லெர் ஒப்புநோக்கியுள்ளார். 

இளம் தலைமுறை அதிகம் பூகோள மயப்பட்ட அல்லது சர்வதேச பாணியிலான ஆங்கில அம்சங்களை கொண்டு பயன்படுத்துவர். மேலதிகமாக சிங்களம் அல்லது தமிழை முதல் மொழியாக கொண்டிருப்பவர்களைப் பொறுத்தவர்கள் அந்த மொழிகளின் அம்சங்களை பெரிதும் உள்ளடக்கியிருப்பர். 

பழந்தலைமுறையினர் மத்தியில் வழக்கொழிந்து போன, சொற்கள் அல்லது உணர்வு வெளிப்பாடுகள் அதிகம் காணப்படும். உதாரணமாக ஒரு காரின் boot (பூட்) ஐக் குறிக்க ‘dickie’ (டிக்கி) என்ற சொல் இன்னும் பயன்படுத்தப்படுகின்றது.(இங்கிலாந்தில் பலருக்கு இந்த டிக்கி என்ற சொல் தெரியாது.) 

இளம் ஆங்கிலம் பேசுவோர் மத்தியில்(காரின் பின் பக்கத்தில் இருக்கும் பொருள் வைக்கும் இடத்தை ‘boot’,  அல்லது ‘trunk’  என்ற சொல்லை பயன்படுத்துவோர்) கொஞ்சம் முறையான பயன்பாட்டில் உள்ள சொற்கள் அல்லது சொற்றொடர்களான ‘Do the needful’ ‘hence’ மற்றும்  ‘hitherto.’ போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கம் கிடையாது. 

“இலங்கை ஒரு மிகச் சிறிய நாடாக இருந்த போதிலும், இங்கு ஆங்கிலம் பேசும் ஆட்கள் மிகவும் குறைவாக இருக்கின்ற போதிலும், இலங்கை ஆங்கிலத்தில் பல துணைப்பிரிவுகள் இருக்கின்றன” என்கிறார் மெய்லெர்.  

சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் வெவ்வேறான ஆங்கில வகைகளை பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்தவர்களும், இந்துக்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் தமெக்கென தனித்தனியான சொற்களை பயன்படுத்துகிறார்கள். இளம் தலைமுறையில் இருந்து வேறுபட்ட ஆங்கிலத்தை பழைய தலைமுறையினர் பேசுகிறார்கள். கொழும்பு மேல்தட்டு சமூகத்தினர்(ஆங்கிலத்தை தமது முதல் மொழியாக பேசத்தலைப்படுபவர்கள்) ஏனைய பரந்த சமூகத்தினரில் (பொதுவாக ஆங்கிலத்தை தமது இரண்டாவது மொழியாக பேசுபவர்கள்) இருந்து வேறுபட்ட ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள்.  

ஆங்கிலமும் வர்க்கமும் 

இலங்கையில் ஒருவர் எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என்பது, அவரது வாழ்வு பற்றிய தகவல்களின்  பொதியையும் சேர்த்தே அமைகிறது. “மொழியைப் பொறுத்தவரை ஒருவர் அவரது சமூக வர்க்கத்தைக் கொண்டு களங்கப்படுத்தக் கூடாது. ஆனால், தவிர்க்கமுடியாத வகையில், சிலர் பேசும் ஆங்கிலம் என்பது அதிகமாக அவரது சமூகப் பாரங்களையும் சேர்த்துக்கொண்டே வருகிறது,” என்றார் மெய்லெர். 

இலங்கையில் உள்ள ஆங்கிலம் பேசுபவர்களைப் பொறுத்தவரை, மிகவும் நுட்பமான வகையில் பார்த்தால், அவர்கள் பேசும் மொழி, பயன்படுத்தும் சொற்கள், உணர்வு வெளிப்பாடுகள் மற்றும் உச்சரிப்பு ஆகியவை, அவர்களின் சமூக வர்க்கம், தொழில் அல்லது சொந்த ஊர் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும். உதாரணமாக உச்சரிப்பில்  /f/ ஒலி ஆங்கிலத்தில் இருக்கிறது, ஆனால், சிங்களத்தில் அது இல்லை. இதனால், உள்நாட்டு சிங்கள மக்கள் ஆங்கிலம் பேசும் போது, பெரும்பாலும்  /p/  ஒலியை உச்சரிப்பார்கள்.  

இதனால், ‘office’ என்பது சிலவேளைகளில் சிங்கள மக்களால் ‘oppice’  என்றும், Finland என்பது ‘Pinlanthaya’ என்றும் உச்சரிக்கப்படுகின்றது. 

இந்த மாதிரியான அம்சங்கள் புதிய, சிங்கள செல்வாக்கு நிறைந்த இலங்கை ஆங்கிலத்தில் அதிகம். இவற்றை பழைய ஆங்கிலம் பேசுபவர்கள்(பிரிட்டிஷ் செல்வாக்குள்ள இலங்கை ஆங்கிலம்) கேலி செய்வார்கள். 

பல்வேறு வகையான ஆங்கிலங்களை அங்கீகரித்தல் 

இலங்கை ஆங்கிலத்தைப் போல் அல்லாது, இந்திய ஆங்கிலம் தனித்துவமான வகை என்று ஆரம்பம் முதலே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. முதலாவது இந்திய ஆங்கில அகராதி — Hobson-Jobson: A Glossary of Colloquial Anglo-Indian Words and Phrases, and of Kindred Terms, Etymological, Historical, Geographical and Discursives  — காலனித்துவ காலத்திலேயே பிரசுரமாகிவிட்டது. ஆங்கிலேயருக்கு உள்ளூர் சொற்கள் தொடர்பாக உதவும் முயற்சியாக ஒரு பிரிட்டிஷ்காரராலேயே அது பிரசுரிக்கப்பட்டது. 

“அன்று முதல், சுதந்திரத்துக்கு பின்னரான காலத்தில் இந்திய அரசாங்கம், இந்திய ஆங்கிலத்தின் உரிமையை ஒரு வழியில் தனதாக்கிக்கொண்டது. ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை என்றும் செய்யவில்லை” என்றார் மெய்லெர். 

மெய்லெரின் இந்தப் பணி பரந்துபட்ட அளவில் அங்கீகாரத்தைப் பெற்றது. இலங்கை ஆங்கிலத்தைக் கற்கும் கல்வியாளரும் அங்கீகாரமும் அதற்குக் கிடைத்தது. ஆனால், அது குறித்த விமர்சனமும் உண்டு. 

உலகில் வேறு இடங்களிலும் உள்ள எந்த ஆங்கிலத்தையும் விட இலங்கை ஆங்கிலம் விபரிப்பதற்கு கடினமானதல்ல என்று கூறுகிறார் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பேராசிரியரான அர்ஜுனா பராக்கிரம. 

“இலங்கை ஆங்கிலத்தின் அம்சங்களைச் சுற்றவரவுள்ள சிக்கல் மற்றும் சிரமம் குறித்து சிணுக்கங்களும், ஊளையிடலும் நிறைய இருக்கின்றன. எமது துறையின் எழுத்துகள் மற்றும் சிந்தனை வகைப்படுத்தும் நுட்பமான பாதுகாப்புணர்வுடனான, வருத்தம் தெரிவிக்கும் தொனியுடனான பிரசங்கங்கள் இவை. இந்த நிலைமைகள் உலகெங்கும் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்” என்று 2016இல் பிரசுரிக்கப்பட்ட தனது ‘Extra-Linguistic Value (of English in Sri Lanka)’  என்ற கட்டுரையில் அவர் கூறியுள்ளார். 

அவரது நிலைப்பாடு குறித்து மெய்லெர் அனுதாபம் கொள்கிறார். “ஒன்று செயற்கையானதாகவோ அல்லது மேலோட்டமானதாகவோ இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் ஒரு எல்லைக்கோட்டை வரைந்தாக வேண்டும்,” என்கிறார் அவர். “ஒரு புத்தகத்தை எழுதும்போது எவை தவறுகள், எவை அதன் அம்சங்கள் என்பது குறித்து நான் தேர்ந்தாக வேண்டும். உதாரணமாக “when you come?” அல்லது  “where you go?” போன்ற சொற்றொடர்கள் இலங்கை ஆங்கிலத்தில் இருப்பதாக நான் கொள்ளமுடியாது. அத்துடன், நான் இது தவறான ஆங்கிலம் என்று நான் தனிப்பட்ட வகையில் சொன்னாலும்கூட, இதனை இலங்கை ஆங்கிலத்தில் இருப்பதுதான் என்று இன்னுமொருவர் வாதாடலாம்.  

மெய்லெரைப் பொறுத்தவரை, தெளிவான தொடர்பு என்று வரும் போது, நீங்கள் இலங்கை ஆங்கிலத்தை பேசுகின்றீர்கள் அல்லது இந்திய ஆங்கிலத்தை பேசுகிறீர்கள் என்பதால், உலகில் ஏனைய பகுதியில் உள்ள ஆங்கிலத்தை பேசுபவர்களுடன் உங்களால் தொடர்பு கொள்ளமுடியாது என்பதல்ல” என்கிறார் அவர். “ஒருவர் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது அதனை இன்னுமொருவரால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்தான், ஆனால், பிரிட்டனின் ஒரு இங்கிலாந்துக்காரர் அதே நாட்டில் உள்ள ஸ்கொட்லாந்துக்கு போனாலும் அதுதானே நடக்கிறது.” 

ஒரு இடத்தில் ஆங்கிலம் எவ்வாறு பேசப்படுகின்றது என்பதைப் புரிந்தவர்களாக, தெளிவுடையவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு பொறுமையும் வேண்டும். “ஒரு பிழையை காணும்போது அதனைத் திருத்த வேண்டும்தான், ஆனால், சில குறித்த அம்சங்களை பிழைகளாக வகைப்படுத்திவிடக்கூடாது என்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்,” என்கிறார் அவர். அதுதான் ஒரு மொழியை மக்கள் பயன்படுத்தும் “இயற்கையான வழி” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 

(பட விளக்கம்: ஆங்கிலேய காலனித்துவ ஆட்சி உலகின் பல இடங்களுக்கு ஆங்கிலத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இங்கு கரு  நீலத்தில் காணப்படும் இடங்களில் பெரும்பான்மை மக்களால் ஆங்கிலம் தேசிய மொழியாக அல்லது பிறப்பிட மொழியாக பயன்படுத்தப்படுகின்றது. மெல்லிய நீலத்தில் குறிக்கப்பட்ட நாடுகளில் ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாகவும், ஆனால், பெரும்பான்மை மொழியாக அல்லாமலும் இருக்கின்றது.)