— சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
“இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
1970 இல் எங்களுக்காக விஞ்ஞான உயர்வகுப்பைத் தொடங்குவதற்காக அதிபர் அவர்கள் எங்களை அழைத்தார். பாடசாலைக்கு மகிழ்ச்சியோடு சென்ற எங்களுக்குப் படிப்பிக்க இராஜகோன் ஆசிரியை மறுத்தமை ஏமாற்றத்தைத் தந்தது. ஒரேயொரு விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியையை வைத்துக்கொண்டு உயர்வகுப்பைத் தொடங்குதல் உசிதமல்ல என்பதால் இன்னும் இரண்டு ஆசிரியர்களையாவது எங்கிருந்தாவது இடமாற்றி எடுப்பதற்கு அதிபர் எடுத்த முயற்சிகள் வெற்றிபெறாத முடிவிலியாக விரையமாகின.
எங்கள் பாடசாலையில் விஞ்ஞான உயர்வகுப்பை வைப்பதற்காக எங்களின் உயர்கல்வியைப் பணயம் வைக்கும் நிலைமையே இருப்பதை அறிந்தோம். இருந்தாலும் எதிர்காலத்தை எண்ணிப் பயந்தோம். நம்பிக்கையைத் தொடர்ந்தோம். தினமும் பாடசாலைக்கு நடந்தோம்! ஆசிரியர்கள் வராத வகுப்புக்களைக் கவனிக்கும் பொறுப்பை அடிக்கடி அதிபர் கொடுத்தபோது, அதிலும் இணைந்தோம். காலம் இப்படியே கரைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஊரிலே ஒரு நூல்நிலையம் கூட இல்லாது குறை எங்களுக்குப் புரிந்தது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் என்மனதில் கருவானது. எப்படியாவது நூலகம் ஒன்றை அமைக்கவேண்டும் என்பது ஒரு வெறியாகவே உருவானது.
சில காரணங்களால் சில காரியங்கள் நிறைவேறும் சில காரியங்களால் சில காரணங்கள் வெளியாகும். மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜீ.ஆர் மீது விருப்பமும், அவரது படங்களைப் பார்ப்பதில் ஆர்வமும் கொண்டவன் நான். எனது நண்பர்களில் சிலர் என்னை விடவும் தீவிரமான இரசிகர்களாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர்மீது பைத்தியமாகவும் இருந்தார்கள். அதனால் அவரது பெயரிலே ஒரு மன்றம் தொடங்க நினைத்தேன். அதன்மூலம் நூலகம் ஒன்றை அமைக்கும் முயற்சியை எடுத்தேன். நண்பர்கள் சிலரோடு பேசினேன். எல்லோரும் விரும்பினார்கள். ஆரம்ப வேலைப்பாடுகளில் இறங்கினேன். கூட்டத்திற்கு ஒழுங்கு செய்தேன்.
—— —— —— —— ——-
இந்த இடத்தில், இடைச் செருகலாக ஒரு விடயத்தை நான் சொல்லியாகவேண்டும். 1965 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் எம். ஜீ. ஆர். அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தார். அவருடன் கன்னடத்துப் பைங்கிளி என அழக்கப்படும் நடிகை சரோஜாதேவியும் வந்திருந்தார். மட்டக்களப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. செ. இராஜதுரை அவர்களின் முயற்சியினால் எம்.ஜீ ஆர் அவர்கள் மட்டக்களப்பிற்கு அழைக்கப்பட்டு வரவேற்புக் கொடுக்கப்பட்டது.
முத்தவெளி திறந்த மைதானத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது. முத்துலிங்க குஞ்சப்பா (எனது சித்தப்பா) அவர்கள் அந்த விழாவுக்குபன்னிரண்டு வயதுச் சிறுவனான, என்னையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அன்று காலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலா பக்கங்களில் இருந்தும் விசேட போக்குவரத்துச் சேவையை நடத்தியது, இ.போ.ச. காலையில் நேரத்தோடு பஸ்பிடித்து மட்டுநகருக்குச் சென்றுவிட்டதால் மேடைக்கு முன்னால் ஐந்தாறு மீற்றர் அளவுக்கு அண்மித்த இடத்தில் புல்தரையில் இருக்க இடம் கிடைத்தது.
இங்கே படத்தில் மேடையிலே மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர், சரோஜாதேவி, இருவருக்கும் இடையில் பின்னால் நிற்பவர் அந்நாள் பத்திரிகையாளரும், பின்னாளில் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினராயிருந்தவருமான ஜோசேப் பரராஜசிங்கம் அவர்கள். இடப்பக்கம் அமர்ந்திருப்பவர், பட்டிருப்புத்தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான சீ.மூ.இராசமாணிக்கம் அவர்கள்.
சின்னஞ்சிறு வயதில் மிக அண்மித்த தூரத்தில் இருந்து பொன்மனச் செம்மலைக் கண்ணாரக் காணும் வாய்ப்பும் கிடைத்தது. ‘இதுவரை நான் இதுபோல மக்கள் வெள்ளத்தைப் பார்த்ததில்லை’ என்று ‘கன்னடத்துப் பைங்கிளி’ சரோஜாதேவி தனது பேச்சில் குறிப்பிட்டதைப்போல், அதுபோல ஒரு சனசமுத்திரத்தை இன்றுவரை நான் கண்டதில்லை. அப்போது எம்.ஜீ .ஆரின் எங்கவீட்டுப் பிள்ளை திரைப்படம் விஜயா திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது.
கூட்டம் முடிந்ததும் படத்தையும் பார்ப்போம் என்று கூட்டிச்சென்றார் குஞ்சப்பா! தியேட்டர் இருந்த தெருப்பக்கமே செல்ல முடியவில்லை. திரண்டிருந்த மக்கள் நெரிபட்டு, மிதிபட்டுத் திணறிக்கொண்டிருந்தார்கள். உடலெங்கும் இரத்தம் தோய்ந்தபடி சிலர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். திரும்பிச் செல்ல முடிவெடுத்து பஸ்நிலையம் சென்றோம். நள்ளிரவு நேரம்தான் ஊர்போய்ச் சேர்ந்தோம்.
எம்.ஜீ.ஆர். அவர்களைச் சின்னவயதில் கண்டதிலிருந்து அவர்மீது ஏற்பட்ட ஈர்ப்பு, என்றும் மறையாத ஒன்றாக இதயத்தில் வளர்ந்திருந்தது. இளைஞனானபோது அது இன்னும் மிகுந்திருந்தது. என்னச் சுற்றியிருந்த எனது நண்பர்களும் எம்.ஜீ.ஆர் விசிறிகள் என்பதால் எம்.ஜீ.ஆர் மன்றத்தை அமைக்கும் எண்ணத்திற்கு எல்லோரினதும் ஆதரவும் எளிதாகக் கிடைத்தது.
எம்.ஜீ.ஆர். மன்றத்தின் ஆரம்பக் கூட்டத்திற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தார்கள். அதற்குக் காரணம் எனது மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவனான கறுத்தஸ்ரீ என்று செல்லமாக அழைக்கப்படும், சாமித்தம்பி ஸ்ரீஸ்கந்தராசாவின் முயற்சிதான். அவனும் ஒரு எம்.ஜீ.ஆர் பைத்தியம். ஆரம்பக்கூட்டம் பட்டிருப்பு மகா வித்தியாலய மண்டபம் ஒன்றில் நடந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த படித்த இளைஞர்களில் மூத்தவரான அரங்கண்ணனை (பா.அரங்கநாதன் அவர்கள் இப்போது அமெரிக்கவில் இருக்கிறார்) தலைவராகத் தெரிவு செய்தோம். என்னைச் செயலளராகத் தெரிவுசெய்தார்கள். அமைப்புச் செயலாளராக சாவன்னா ஸ்ரீயை அமர்த்தினோம். எம்.ஜீ.ஆரின் தீவிர இரசிகராக இருந்த, எங்களோடு ஒரே வகுப்பில் கல்விகற்ற ஏ.பாலசுந்தரம் பொருளாளரானார். (சில வருடங்களில் பாலசுந்தரம் எதிர்பாராதவகையில் நோயுற்று, காலமாகிவிட்டார்)
எம்.ஜீ.ஆர். மன்றம் அமைக்கும் எண்ணம் எழுந்தமைக்குக் காரணமே நூல் நிலையம் அமைப்பதுதான். எனவே முதலில் நூல்நிலையம் அமைப்பதற்கு ஓர் இடம் வேண்டும். அந்த இடம் ஊரின் மத்தியிலே பலருக்கும் வசதியான இடமாகவும் இருக்க வேண்டும். பல இடங்களைப் பற்றி ஆலோசித்தபின்னர் ஓர் இடத்தைத் தெரிவுசெய்தோம்.
பழுகாமத்தைச் சேர்ந்த கதிரேசபிள்ளை நொத்தாரிசியார் அவர்களுடைய உறவினருக்குச் சொந்தமான வளவு ஒன்று எனது வீட்டுக்குப் பக்கத்தில் தரிசாகக் கிடந்தது. அந்த இடத்தில் நூல் நிலையத்தை அமைக்கத் தீர்மானித்துச் செயலில் இறங்கினோம். எனது வீட்டுக்குப் பக்கத்தில் என்பதால் நூல்நிலையத்தைப் பராமரிப்பது வசதியாக இருக்கும் என்பதும் அந்தத் தீர்மனத்திற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று.
பழுகாமத்திற்குச் சென்று, வளவுச் சொந்தக்கராரிடம் அனுமதி கேட்டோம். அப்பப்பா என்று நான் அழைக்கும் எனது அம்மாவின் அப்பாவான வண்ணக்கர் வீரக்குட்டி அவர்களின் பேரன் நான் என்று சொன்னதும் எவ்வித தயக்கமும் இல்லாமல் மிகுந்த விருப்பத்துடன் அவர் அனுமதி தந்தார்.
எனது அப்பப்பா முன்னர் வெற்றிலை தோட்டம் வைத்திருந்த அந்த வளவில் தோட்டம் அமைந்திருந்த இடம் உயரமான மணல் திடலாக இருந்தது, பக்கத்தில் வெற்றிலைத் தோட்டத்திற்குத் தண்ணீர் வார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு துரவு அப்போதும் தண்ணீர் நிறைந்த நிலையில் இருந்தது. பயன்படுத்தப்படாமையால் துரவுத் தண்ணீர் அழுக்காகிக் கிடந்தது. உடனடியாக அந்த இடத்தைத் திருத்தியமைக்கும் நடவடிக்கையில் இறங்கினோம்.
ஒருநாள் காலைநேரத்தில் ஏறத்தாழ பத்துப்பேர். மண்வெட்டி, கத்தி முதலிய உபகரணங்களுடன் வேலையை ஆரம்பித்தோம். பத்துமணியளவில் முப்பதுக்கும் மேற்பட்டோர் சேர்ந்துவிட்டர்கள். உயரமாக இருந்த தோட்டப்பிட்டி ஒரேநாளிலேயே சமதரையாக நிரவப்பட்டது. துரவு மூடப்பட்டது. சுற்றுச் சூழல் துப்பரவாக்கப்பட்டது.
அந்த வளவில் மேற்குப்பக்கம் இரண்டு பலாமரங்கள் எப்போதும் காய்த்துத் தொங்கும். வடக்குப்பக்கம் பொதுவேலியோரமாக மிகப்பெரிய விருட்சமாக நின்ற வேப்பமரத்தில் குருவிச்சை படர்ந்து, அதன் பூக்களும் பழங்களும் குருவிகளைக் கவரும்.
வேப்ப மரத்தின் அடிப்பகுதியில் வடிந்து கிடக்கும் அந்தப் பிசின்தான் நமக்கெல்லாம் புத்தகம், கொப்பி ஒட்டுவதற்குப் பயன்படும். தெற்குப்பக்கம் பொதுவேலியோடு (இப்போது வீதியுள்ள இடத்தில்) புல்லாந்தி மரங்கள் நின்றன.
வட்ட வட்டப் பற்றைகளாய் வளைந்து கிடந்த அவற்றின் மெல்லிய கிளைகளில் புல்லாந்திப் பழங்கள் மின்னும். சிட்டுக் குருவிகள் பறந்து பறந்து அவற்றைத் தின்னும்.
கிழக்குப்பக்கம் ஒழுங்கை அருகே அடர்ந்து படர்ந்து நின்ற நறுவிலி மரம் பூத்துக் காய்த்துக் குலுங்கி நிற்கும். நெடிதுயர்ந்து, வரிசையாக நான்கு பக்கங்களிலும் நின்றிருந்த தென்னைமரங்கள் குளிர்ந்த நிழலைக் கொடுக்கும்! இத்தனையும் சூழ இருந்த மணல் திடலில்தான் எம்.ஜீ.ஆர். மன்றம் எழுந்தது.
இனி
நூல்நிலையம் அமைந்த சுவையான கதையும், திறப்புவிழா நிகழ்ந்த பெருமையான கதையும், அது சிறப்பாக இயங்கிய மகிழ்வான கதையும், நூல்நிலையம் எரிக்கப்பட்ட திகிலான கதையும் அடுத்த பகுதியில் இடம்பெறும்.
(நினைவுகள் தொடரும்)