— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
சென்ற தடவை (சொல்லத் துணிந்தேன்– 38) ‘அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் பரிசோதனை முயற்சிகள்– களநிலை அறிந்த அணுகுமுறைகள்– உபாயங்களை வகுத்து அதனடிப்படையில் அமைந்த வியூகங்கள் தேவை. இதனைத் தமிழர் தரப்பு அரசியலுடன் பொருத்திப் பார்ப்பதே இப்பந்தியின் நோக்கம்’ என்ற முத்தாய்ப்புடன் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் 2012 இல் ஜெனிவாவில் இலங்கை குறித்து அமெரிக்கா கொணர்ந்த தீர்மானம் பற்றியும் அலசி இருந்தேன்.
இம்முறையும் அதே முத்தாய்ப்பின்கீழ் 2018 ஒக்டோபரில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு பற்றி அலசத் துணிந்துள்ளேன்.
2018 அக்டோபரில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு என்னவென்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் திடீரென்று பதவி நீக்கம் செய்து விட்டுப் புதிய பிரதமராக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையும் அதனைத் தொடர்ந்து வந்த அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தை அதன் பதவிக்காலம் முடியுமுன்னரே கலைத்தமையுமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததும் பாராளுமன்றத்தை அதன் பதவிக்காலம் முடியுமுன்னரே கலைத்ததும் சரியா? பிழையா? என்ற அரசியல் அமைப்பு வியாக்கியானங்களுக்குள் செல்லாமல் தமிழர் தரப்பு இச்சந்தர்ப்பத்தைத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது பற்றிய சில விடயங்களை முன்வைக்கவே துணிந்துள்ளேன்.
2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவைத் தாங்கள்தான் ஜனாதிபதியாக வெற்றியீட்டச் செய்தோமென்றும் 2015 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைத் தாங்கள்தான் ஏற்படுத்தினோமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கூறி வந்தது. மேற்கூறப்பட்ட அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டபோது 2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ‘நல்லாட்சி’ அரசாங்கம் சுமார் மூன்றரை வருட காலத்தைப் பூர்த்தி செய்திருந்தது. இந்த மூன்றரை வருட காலமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இணங்கியிருந்த காலம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்துக் கொண்டிருந்தார். இந்த மூன்றரை வருட காலத்தில் வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி முறைமையை உள்ளே ஒளித்து வைத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்ட புதிய அரசியல் அமைப்பு எனும் மாயமானைத் தமிழர்களுக்குக் காட்டித் தமிழர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வஞ்சித்ததே தவிர, தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சமூக பொருளாதார தேவைகள் எதனையும் நிறைவேற்றிக் கொடுத்ததேயில்லை. பின்னர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் ரணில் விக்கிரமசிங்க அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறிக் கொண்டிருந்தனர்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்றம் வரை சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவியைப் பாதுகாத்ததுடன் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டச் செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைப் பாதுகாத்தது. ஜனநாயக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்தது நியாயமானதாகத் தோன்றலாம். அதேவேளை, 1978 இல் தமிழர் தரப்பினால் நிராகரிக்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவினால் அவர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பை அதே தமிழர் தரப்பு பாதுகாத்தது என்பதும் ஒரு முரண் நிலை அரசியலாகும். எது எப்படியிருப்பினும் இப்பத்தி எழுப்பும் கேள்வி என்னவென்றால், இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்ட சமூக பொருளாதார அனுகூலங்கள் என்னவென்பதே.
ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பதவியில் இருந்தாலும் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணங்கியிருந்த முதல் மூன்றரை வருட காலமும் எதையுமே சாதிக்காதத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நடைமுறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் பிணங்கி இருக்கப் போகின்ற மீதி ஒன்றரை வருட காலத்தில் தமிழர்களுக்கு ஏதாவது நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடை ‘இல்லை’ என்பது எவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய கூடிய எளிய கணிதமாகும். எனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லையென்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல் மிகத் தெளிவானது.
அன்று 2018 இல் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் சிங்களச் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையானவர்களும் முப்படைகளும் போலீசாரும் மகாசங்கத்தினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிதாக அவரால் பிரதமராக நியமிக்கப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரது பக்கமே நின்றிருந்தனர் என்ற காலநிலை யதார்த்தத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
சிங்கள சமூகத்தின் உளவியலையும்–மனோ நிலையையும் புறந்தள்ளிவிட்டு வெறுமனே கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் அரசியலமைப்பு வியாக்கியானங்களையும் முன்வைப்பது மட்டுமே பொருத்தமான–புத்திசாலித்தனமான அணுகுமுறையாகாது.
ஐக்கிய இலங்கைக்குள் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சி அலகை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்புக் கோரிக்கையும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கையும் தமிழர் தரப்பில் நியாயமானதாக இருந்தாலும்கூடச் சிங்களச் சமூகத்தின் மனதை வெல்லாமல் பாராளுமன்ற அரசியல் வழிமுறைகளினூடாக மேற்படி கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான சாத்தியமே இல்லை என்ற நிலையில், ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்’ என்பதற்கிணங்க, 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்தல்–வடக்குக் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாகத் தமிழர்களை நியமித்தல்–கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தல்–அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அரசியல் தீர்மானம்–படையினர் வசம் உள்ள தனியார் காணிகளை விடுவித்தல்– கிழக்கில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் வட்டமடு மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கான தீர்வு–பொத்துவில் கனகர் கிராம மீள் குடியேற்றம் மற்றும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்ற சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்துதல் போன்ற இன்னோரன்ன நடைமுறைச் சாத்தியமான அதாவது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடி அதிகார வரம்பிற்குட்பட்ட நடைமுறைச் சாத்தியமான விடயங்களை முன்வைத்து, மேற்குறிப்பிடப்பட்ட அரசியல் கொந்தளிப்புக் காலத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்குப் பாராளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வெற்றியீட்டச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை நழுவ விட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த கையோடு நடைபெற்ற 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது இந்த யுத்தத்துக்கு இராணுவத் தலைமை ஏற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களைத் தமிழர் தரப்பு அன்று ஆதரித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வையில் தவறில்லையென்று எடுத்துக்கொண்டால் யுத்தம் முடிந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த யுத்தத்திற்கு அரசியல் தலைமையேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2018 இல் ஆதரித்திருந்திருந்தால் அதுவும் தவறில்லைத்தானே.
அன்று 2010 இல் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் தமிழர்கள் மீது முன்னாள் ஜனாதிபதிக்கு வன்மமும் அதனால் தமிழர்களுக்குத் தீமையும் ஏற்பட வழி எடுத்துக் கொடுத்ததேயொழிய தமிழர்களுக்கு எந்த நன்மையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அன்றைய அரசியல் நிலைப்பாட்டினால் ஏற்படவில்லை. அதற்குப் ‘பிராயச்சித்தம்’ தேடக் கூடிய ஒரு சந்தர்ப்பம் 2018 அரசியல் கொந்தளிப்பின் போது தமிழர் தரப்பின் கதவைத் தட்டிய போதிலும்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ரணில் விக்கிரமசிங்கவின் மீதான பக்தியினால் அடுத்தடுத்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தவறான முடிவினால் தமிழர் தரப்பு அதனை மீண்டும் நழுவவிட்டிற்று.
பாராளுமன்ற அரசியல் வழிமுறைகளுக்கூடாக எவற்றைச் சாதிக்கலாம். அதற்கு வெளியே எவற்றைச் சாதிக்கலாம் என்ற தெளிவான நிகழ்ச்சி நிரல் இல்லாமல் தமிழரசுக் கட்சிக்காலத்திலிருந்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் வரையிலான தமிழர் தரப்பின் வினைத்திறனற்ற ‘ஏட்டுச் சுரக்காய்’ அரசியல்தான் தமிழ்ச் சமூகத்தின் சமூக பொருளாதார அரசியல் பின்னடைவுகளுக்கு முக்கிய அடிப்படைக் காரணமாகும்.
எல்லாவற்றையும் ‘முள்ளிவாய்க்கால்’ யுத்தத்தை வைத்துக் கொண்டே தீர்மானிக்கக் கூடாது. மேலும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தைக் காரணமாக வைத்து ராஜபக்ஷக்களைப் பரம எதிரிகளாகக் காலம் முழுவதும் வைத்துக் கொண்டும் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்துக் கொண்டும் தமிழர் தரப்பு எதனைச் சாதிக்கப் போகிறது. ராஜபஷக்களின் மீது பழி தீர்த்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசி பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்காவுடன் யப்பான் இன்று கைகோர்த்துக் கொண்டு தனது சமூக பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தி உலக நாடுகளில் முன்னணியில் விளங்குவதை கண்கூடாகக் காண்கின்றோம். வருடாவருடம் இடம்பெறும் இத் துன்பியல் சம்பவத்தை நினைவுகூருகின்ற நிகழ்வுகளில் ஒரு சந்தர்ப்பத்திலேனும் அமெரிக்காவை ஜப்பான் திட்டியதும் இல்லை– கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதுமில்லை– போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று கூறியதும் இல்லை. இத்தனைக்கும் ஜப்பானியர்கள் இச்சம்பவத்தை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை. ஆனால் யப்பான் அமெரிக்கா மீது வெறுப்பை ஒரு போதும் உமிழ்ந்ததுமில்லை. அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படுவதன் மூலம் ஜப்பானுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதுமில்லை, எந்தச் சாதனையையும் நிலைநாட்டப் போவதுமில்லை என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதையே தமிழர் தரப்பும் நன்றாக புரிந்து கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழர்களைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சி என்றாலும் சரிதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றாலும் சரிதான் அல்லது தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தி என்றாலும் சரிதான் பொது ஜன பெரமுன என்றாலும் சரிதான் எல்லாமே பௌத்த சிங்களப் பேரினவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். காலநேரம் அறிந்து தமிழர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் இக்கட்சிகளை அரசியல் சாணக்கியதோடும் நுட்பங்களுடனும் கையாள்வதுதான் உகந்த அணுகுமுறையாக இருக்க வேண்டுமே தவிர அவற்றுடன் கச்சை கட்டிக்கொண்டு போர்க் கோலம் பூணுவதல்ல. இதுதான் அரசியல். போராட்டம் என்பது வேறு. அது பற்றிப் பேசுவது இப்பத்தியின் நோக்கமல்ல. இப்பத்தி அரசியல் பற்றியே பேசுகிறது.
இந்தப் பத்தியில் நான் சரிபிழைகளைப் பற்றி ஆராய முற்படவில்லை.
மகாபாரதக் கதையில் ஒரு சந்தர்ப்பத்தில் கிருஷ்ண பரமாத்மா “சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்லுதலும் தர்மமே” என்கிறார்.
யுத்தம் முடிந்த காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதன் வர்க்கக் குணாம்சம் காரணமாகத் தமிழ் மக்களுக்கான அரசியலை விடவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தேவையான அரசியலுக்கே முன்னுரிமை கொடுத்து அவர்களின் ஊதுகுழலாகச் செயல்படுகின்றது.
தமிழர்களுடைய அரசியல் கடந்த 70 வருட காலமாகப் ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான’ கதையாகவும், ‘சாண் ஏறி முழம் சறுக்கிய’ கதையாகவும் இருப்பதற்கான காரணமும் மக்கள் நலனைப் புறந்தள்ளிய இந்த ஏகாதிபத்திய வர்க்கக் குணாம்சம்தான். இன்று தமிழ் மக்களுக்குத் தேவை சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்லும் அரசியல் மார்க்கமே. அதுவும் தர்மமே.