சொல்லத் துணிந்தேன்—38

சொல்லத் துணிந்தேன்—38

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் பரிசோதனை முயற்சிகள்–களநிலை அறிந்த அணுகுமுறைகள்–உபாயங்களை வகுத்து அதன் அடிப்படையில் அமைந்த ‘வியூகங்கள்’ தேவை. இதனைத் தமிழர் தரப்பு அரசியலுடன் பொருத்திப் பார்ப்பதே இப்பத்தியின் நோக்கம். 

முதலில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த கையோடு 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் பார்ப்போம். அத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிரணி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ‘அன்னம்’ சின்னத்தில் களமிறக்குகிறது. 

இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழர்களை முள்ளிவாய்க்காலில் பேரழிவுக்குள்ளாக்கிய இறுதி யுத்தத்திற்கான அரசியல் ஆணையைப் பிறப்பித்தவர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அந்த இறுதி யுத்தத்தைத் தலைமையேற்று வழி நடத்தியவர். உணர்வு ரீதியாக இருவரில் எவரையேனும் ஆதரிக்க முடியாத நிலையில், தமிழர்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்திருக்க வேண்டும்.  ஆனால் தமிழர்தம் அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி தமிழ் மக்களைக் கேட்டது. 

 மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் வென்று மீண்டும் ஜனாதிபதியானார். இத் தேர்தலில் தமிழ்மக்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட சமூக பொருளாதார அரசியல் நலன்கள் எதுவுமே இல்லை. எதிர்மறையாகத் தமிழர்கள் மீதான ராஜபக்ஷாக்களின் வன்மம் அதிகரித்ததைத் தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை. இருவருக்குமே வாக்களிக்காது தமிழர்கள் இத்தேர்தலைப் பகிஸ்கரித்திருந்திருந்தால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உணர்வுகளை அமைதி வழியில் உலகுக்குத் தெரியப்படுத்தியதாகவும் இருந்திருக்கும். ராஜபக்சாக்களின் தமிழர்கள் மீதான வன்மமும் ஐதாக்கப்பட்டிருக்கும். பௌத்த சிங்கள சமூகத்தின் உளவியலிலும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம், ‘சத்துருவையும் சார்ந்து வெல்லும்’ அணுகு முறைக்கேற்ப.  

பின்னாளில், ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்காது சிவில் சேவை அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டு முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரை இந்நாட்டின் ஜனாதிபதியாக ஆக்க முயன்ற நீங்கள் இவ்வாறு கேட்கிறீர்களே என்றதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாயடைத்துப் போயினராம் என்ற செய்தியையும் இங்கு பதிவிடல் பொருத்தம். 

மேலும், தமிழர் தரப்பு ஜெனீவா வரை சென்று போர்க் குற்றங்களுக்காகச் சர்வதேச நீதிமன்ற விசாரணையைக் கோரி நிற்கின்றது. அது நியாயமானதுதான். அது வேறு விடயம். 

இராணுவ நடவடிக்கைகளின் போது, போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டியவர் அந்த யுத்தத்தை இராணுவ ரீதியாக வழிநடத்திய இராணுவத் தளபதிதான். ஆனால் தமிழர் தரப்பில் உள்ள முரண்பாடு என்னவென்றால் போர்க்குற்றங்களுக்கு நேரடிப் பொறுப்புக் கூறவேண்டிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் ஆதரித்து வாக்களித்தமையாகும். இப்படி முரணாகச் செயற்பட்டதனால் போர்க்குற்ற விசாரணை கோரும் தார்மீகத்தைத் தமிழர் தரப்பு மலினப்படுத்திவிட்டது. இந்த இடத்தில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறாக வழி நடத்தியுள்ளது என்றே கூற வேண்டும். 

அன்றியும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2010இல் பாராளுமன்றப் பொதுத் தேர்தலும் நடைபெற்றது. இத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து தமிழரசுக் கட்சியின்  ‘வீட்டு’ச் சின்னத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர்க் குற்றங்களுக்காகச் சர்வதேச விசாரணை வேண்டிய எந்த வரிதானும் இடம்பெறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை நன்றாகவே ஏமாற்றப் பழகிவிட்டது என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டு. 

2012ல் ஐநா மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த பின்னர்தான் சர்வதேச போர்க்குற்ற விசாரணை பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கதைக்கத் தொடங்கியது. போதாக்குறைக்குத் தங்களால்தான் அமெரிக்கா இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னாளில் தம்பட்டம் வேறும் அடித்துக் கொண்டது. தெருத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழமையான வேலைதான். 2012 இல் அமெரிக்கா இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தது, இது சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தனது வழிக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முஸ்தீபே தவிர, தமிழ் மக்களின் மீதான கரிசனையோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிக்கொண்டு திரிவதுபோல் அவர்கள் கோரியதனாலோ அல்ல என்பது ஒரு சாதாரண அரசியல் மாணவனுக்கும் விளங்கக் கூடிய ஒன்றே. 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகா வென்றிருந்தால் அமெரிக்கா 2012 இல் இத்தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டுவந்திருக்கமாட்டாது. அமெரிக்கா இத்தீர்மானத்தைக் கொண்டுவராது விட்டிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பாக வாய் மூடி மௌனமாகவே இருந்திருக்கும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் நலன்களை விட அது பிரதிபலிக்கும் வர்க்க நலன்களுடன் ஒத்துப் போகக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சியினதும் அதன் எஜமானனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் நலன்களுக்கே முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றது. 2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்தமைக்கு அடிப்படைக் காரணம் இந்த வர்க்கக் குணாம்சமேயாகும். இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகிப் போயிருக்கும் இலங்கையின் வடகிழக்குத் தமிழர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற ஏகாதிபத்திய சார்பு அமைப்பொன்றினால் ஒருநாளும் எவ்வகையிலேனும் விமோசனமும் பெற்றுத் தர முடியாது.