— கமலநாதன் பத்திநாதன், களுவன்கேணி —
நான் கெட்டவன் பேசுகிறேன். எல்லோரைப் போலவே நானும் குடமுடைந்து பிறந்தாலும், எல்லோரையும் போலவே நானிருக்கவில்லை. ஆதலால்தான் நான் கெட்டவன். ஹோர்மோனின் ஆளுகையைத் தாண்டிய காலங்களில் இருந்து நான் கெட்டவன். ஆனால் நானனொரு நல்ல கெட்டவன்.
பல்லாயிரக் கணக்கான கெட்ட நல்லவர் மத்தியில், எடுத்து வந்த சிந்தனைப் பதிகையாலும், எடுத்துக் கொண்ட கருத்தேற்ற நிலைமைகளாலும் நானின்று நானாக இல்லை என்பதனையும், எனக்காய் இதுவரைக்கும் ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை என்பதையும் உணர்ந்த கெட்டவன் நான்.
நீங்கள்?, நான் யார்?, எதற்காக எனக்கு உயிரையும் , உடலையும் தந்தன அவ்விரு உயிரிகள்?, நான் ஏனிங்கு வாழ்கிறேன்?, நான் ஏன் உடையணிகிறேன்? நான் ஏன் நாகரிகப் போர்வையைப் போர்த்திக் கொள்கிறேன்?, நானேன் காதலிக்கிறேன்?, நானேன் காமத்துத்தூண்டலுக்கு உட்படுகிறேன்?, நானேன் கைத்தூய்மை செய்கிறேன்?, நானேன் தூற்றுகிறேன்?, நானேன் போற்றுகிறேன்?, நானேன் வணங்குகிறேன்?, நானேன் உண்மையை மறைத்தும், உரைக்காமலும் திரிகிறேன்? இப்படியான பல் வினைகளை எனக்காக எனக்கு மட்டுமாக ஆற்ற முடியாமல் புலம்பப் படைக்கப்பட்டமையினால் நானொரு கெட்டவன். நீங்கள்? .
நான் எனக்காக எதையுமே செய்யவில்லை. எனது கருத்தை நானாக சொல்லவும் முடிவில்லை. நானாக எதையும் கொடுக்கவும் இல்லை. வாங்கவும் இல்லை. எல்லாமும் என்னோடு வலம் வருகின்றன. எல்லாமும் என்னோடு போட்டி போடுகின்றன. எல்லாமும் என்னை வெறுக்கவும் செய்கின்றன, விரும்பவும் செய்கின்றன. இவைகளை உணர்ந்த படியினால் இன்று கெட்டவனாக நான். நீங்கள்?
“கலாச்சாரம்” அது அழகான சொல், ஆனால் அழுக்கைப் பாதுகாக்கும் சொல். இனம், மதம், மொழிப் பேதங்களை இறுக்கமாகக் கட்டிக்காக்கும் சொல். பல் பேதங்களுக்கான மிகப்பொருத்தமான வெளிக்காட்டுகைச் சொல். பேத வெளிப்பாடுகளை கைக்கொட்டி உணர்த்திட மனிதரால் மனிதருக்கு வழங்கப்பட்ட சொல். உள்ளதை உள்ளவாறன்றி உண்மையை மறைத்தாள வகைக்கோர்க்கப்பட்ட சொல்.
நீங்கள் பண்டிகைக்கும், கொண்டாட்டத்திற்கும் வீட்டில் ஆடு வெட்டினால் பரவாயில்லை, மாடு வெட்டினால் பரவாயில்லை ஆனால் தனது தொழிலுக்காக ஒருவன் ஆடு, மாடு வெட்டினால் உயிர்க்கொலைப் போராட்டம்.
தன்னைப் போல் சக உணர்வும், உடலும் கொண்ட பிறர் கோயில் தேரிழுத்தல் மாபாதகம்; காரணம் சாதி. ஆனால் உயிரற்ற எரிபொருள் வாகனம்; இழுத்தல் மிகப் பொருத்தம். வரைந்து வைத்த தனிநபர் ஓவியங்களும், நடிக்கப்பட்ட சாமிப்பட நடிகர் பிரதியும் வீட்டின் புனிதவறையில். ஆனால் பழுதில்லாமல் பெற்றெடுத்த நிஐத்தெய்வங்கள் கழிவறையில்.
ஆனால் ஆண், பெண் என்ற பேதமும் உயர் குல, தாழ் குல பேதமும், ஏழை பணக்கார பேதமும் என பதர் நாற்றுக்கீடான பல வகையான பேதங்களும் ஊர்ந்து செல்லும் பேரூந்துப் பயணங்களில் எங்கே?, அடைக்கப்படும் அகதி வாழ்வில் எங்கே?, உயிர் காக்கும் (சில வேளைகளில் போக்கும்) வைத்தியசாலைகளில் எங்கே?, அடிபட்டு வீதியில் உயிர் காக்கப் போராடும் தருணத்தில் எங்கே? இவைகளை உணர்ந்து கொண்டதால் நான் கெட்டவன். நீங்கள்?
மரபில் மாற்றம் காண வேண்டும் என்று மாற்றான் கொள்கையோட்டங்களைத் தனது இயைந்த வாழ்வியல் வினைத்தொகுதிகளோடு வலிந்து புகுத்தி அதற்கு நவீனம் என்னும் மரவுரி அணிந்து கொண்டு அதனையே பிதட்டிப் பாராட்டி விட்டு மீளமுடியாத இயற்கைக் கொடு விளைவுகளால் பின்னர் மரபுக்கே மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்ற மாந்தர்களையும், உலகியல் அயர்ச்சிகளையும் உணர்ந்து கொண்டு வருகிறேன். ஆகவே நானொரு கெட்டவன். நீங்கள்?.
உடைநடை, உணவுமுறை, வாழ்வியற் கூறுகள், கலை நோக்கு, கல்விமுறை, கலவி நிலை, விஞ்ஞான அணுக்குப் பார்வை, இலக்கியத்தேற்றம், இல்லறத்தோற்றம், நகரமயமாதலில் இருந்து கிராமமயமாதல் என இங்கு விடுபட்டும் போகின்ற பல்லுலக நடைமுறைகளிலும் மீண்டும் மரபினையே நாடுவதையும், அவ்வாறு மாறுவதைத் தற்புகழ்ச்சிக்கோ அல்லது வேறு தேவைக்கோ எழுத்து மூலக் கல்விக் காப்பகம் செய்வதனையும் உணர்ந்து கொண்டு வருகிறேன் ஆதலால் நான் கெட்டவன். நீங்கள்?.
நூற்றுக்கு நூறு வீதம் நடந்தே தீரும் என்று அனைவராலும் தெரியப்பட்ட, கட்டாயம் ஏற்க வேண்டிய விடயம் என்றால் அது மரணம் மட்டுமே. ஆனால் எவருமே இங்கு நான் சாகத்தான் போகிறேன் என்று, நாளொன்றிலோ அல்லது தனது வாழ்நாளிலோ எவ்வித வினைகளையும் ஆற்றாமல் இருப்பதும் இல்லை, ஆற்றுவதும் இல்லை. உலகம் இல்லாமல் போனாலும் நானிருப்பேன் என்ற முரண்நகைச் சிந்தனைத் தாக்கத்தினால் சொத்துச் சேர்த்தல், சுகம் காணல், பணமோகம், பொறாமை, போட்டி, அடக்கியாழ்தல், கொள்ளை, கொலை என பல அபத்தப் பாதகம் செய்து கொண்டு இறுதியில் அடங்க ஆறடி நிலமும் இன்றி மின்னடுப்பில் வேகுவதையும் உணர்ந்தும் விட்டேன் ஆகையால்தான் நானொரு கெட்டவன். நீங்கள்?.
தன்னைப் போலவே சக மனிதர்களையும் நினைத்துக் கொள்ளல், நினையாது போதல் போன்ற காரண காரிய நிலைமைகளால்தான் மனித உறவுகளிடையேயும், தன்மைகளிடையேயும் வக்கிரமும், வஞ்சனையும் தீவிரம் அடைந்து கொண்டிருக்கின்றன. உங்களுக்குக் கத்தியால் குத்தும் போது வலிக்கும் என்றால் பிறருக்கும் வலிக்கும், உனக்குள் இருக்கின்ற மாறாத தன்னிலை அனுபவப் படிகங்கள் போன்றே மற்றவருக்கும் இருக்கும். (அது ஆணோ, பெண்ணோ) பருவ வயதில் நீயொரு ஆணாக என்னவெல்லாம் லிங்கப் பகிடிகள் செய்வாயோ அதற்கு ஈடாக உனது பெண்ணுறவும் செய்யும், செய்திருக்கும். உங்களுக்கு பிறர் நடத்தைகளை விமர்சிக்க உரிமையும், தைரியமும் உண்டானால், பிறருக்கும் உங்களை விமர்சிக்க உரிமையும், தைரியமும் உண்டு. நரகாசுரப் படுகொலையை (தீபாவளி) தீபமேற்றி கொண்டாட எம்மால் முடிந்தால் ஏன் எம்மினப் படுகொலையைப் பால்ச்சோறுண்டு கொண்டாட அவர்களால் முடியாது?. இவ்வெண்ண நிலைக்கு மாறாக எந்தவொரு நபரையும் எந்தவொரு இடத்திலோ, நேரத்திலோ நமக்கான பார்வை மட்டத்திலும், அனுபவச் செருக்கிலும் பாரத்தலோ, பழகுதலோ, புரிந்து கொள்ள முற்படுவதோ வடிகட்டிய தவறு என்பதனையும் புரிந்து கொண்டதால் நானொரு கெட்டவன். நீங்கள்?.
ஆணாதிக்கம், பெண்கொடுமை, சிறுவர் கொடுமை, கொலை பாதகம், கொள்ளை நிகழ்வு, வன்புணர்வு, வேசி வாழ்வு, துரோகம், பேராசை, இழிந்து பேசல், பாலியல் லஞ்சம், போதையடிமை, புறங்கூறல், பொய்பேசல் போன்ற பாரதூரமான இழி செயல்கள் என்று சொல்லப்படுகின்ற அனைத்தையும் இங்கு எவருமே மார்தட்டிச் சொல்லிக் கொடுக்கவில்லை, பிரத்தியேக வகுப்புக்கள் கொண்டு பாடம் புகட்டவில்லை, கற்கைக் கூடங்கள் அமைத்து நடைமுறைப்படுத்தவில்லை, எந்த ஊடகமும் காணொலி, கேட்டொலி விழிப்புணர்வு செய்யவில்லை. ஆனால் உலகவாழ் அங்கிகள் அனைவராலும் நிமிடத்திற்கு கொருமுறையாவது மேற்சொன்னவைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் மேற்சொல்லப் பட்டவைகளுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படுகின்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள், எழுத்து வடிவப் போராட்டங்கள், மனித வடிவப் போராட்டங்கள் என பலவற்றினாலும் உண்டாகின்ற பயன்களின் விளைவு? என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் நானொரு கெட்டவன். நீங்கள்?.
எல்லாம் வல்ல கடவுளர்கள், ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளர்கள், பரலோகத்தில் இருக்கின்ற கடவுளர்கள், உருவமில்லாத கடவுளர்கள், கொல்லாமை விரும்பும் கடவுளர்கள் என எந்த விதமான கடவுளர்களாலும் கண்ணுக்கே தெரியாத, உயிரற்ற அந்த நுண்ணுயிரியினை அழிக்கவும் முடியவில்லை, அவற்றிடம் இருந்து தனது பக்தர்களைக் காப்பாற்றவும் இயலவில்லை. எல்லாக் கடவுளர்களின் வாழிடங்களும் அடைக்கப்பட்டன. வழிபாடுகள் வீட்டிலேயே முடக்கப்பட்டன. அநேகமான தொற்றுக்கள் (கொரோனா) இவ்வாறான கடவுளர்களின் வாழிடங்களிலேயே பரவியதற்கு எமது நாடும் உதாரணமல்லவா? கடவுளர்களின் வாழிடங்கள் முடக்கப்பட்ட நாட்களில் இருந்து திறபடாமல் இருந்த வைத்திய சாலைகள் திறக்கப்பட்டன. புதிய வைத்திய சாலைகள் உருவாக்கப்பட்டன. காலாகாலமாக வழிபட்டு வந்த கடவுளர்களால் கைவிட்டப் பட்ட மனிதர்களுக்கு வைத்தியசாலைகள் தான் அடைக்கலமாயும் போயின. போகின்றன. இவ்வேளையில் தான் வைத்தியசாலைகளின் தேவையும், அதன் உயர் மட்ட சேவையும், வைத்தியத்துறையின் வளர்ச்சியும், வைத்தியர்களின் அதிகரிப்பும் என வைத்தியம் சார்ந்த தேவைகளும் அதே சமயம் இருக்க இடமில்லா விடினும் கோடி கோடியாய் கொட்டி, இருக்கின்ற வளங்களை வக்கற்றவையாய் இயல்பிறக்கப் பண்ணுகின்ற ஆலயங்களும் அதன் உப்புச்சப்பற்ற வேலைப்பாடுகளையும் (விதிவிலக்குண்டு.) உணர்ந்து கொண்டிருக்கிறேன் ஆகையால் நானொரு கெட்டவன். நீங்கள்?
‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்ற முதுமொழியின் கருத்தாழம் இன்று வெகுவாக உணரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அவ்வகையில் தான் உள்ளூர் உற்பத்திகளின் பகிரங்கமான பலன்கள், கொப்ரேட் உற்பத்திகளின் அபரிமிதமான நேரடியானதும், மறைமுகமானதுமான தீய விளைவுகள், தனி நபர் உடலாரோக்கியத்தின் பலமும் தேவையும், பொதுவுடமை வாதத்தின் தவிர்க்க முடியாத நற்திறத் தாற்பரியம், முதலாளித்துவத்தின் நினைவுக்கு எட்டாத துரித வீழ்ச்சி போன்ற உலகியல் நடத்தைகளின் எண்ணப்பாடுகளும், அதன் செயற்பாட்டு ரீதியான பொறிமுறையின் இருபக்க விளைவுகளும் அனைத்து மனிதரினாலும் ஏதோவொரு வகையில் அவரவர் அறிவுக்கேற்ப உணரப்பட்டுக் கொண்டு இருக்கின்றன என்பதனையும் மனிதரால் மனிதருக்கு உருவாக்கப்பட்ட சாதிகள், இனங்கள், மதங்கள், மொழிகள், பயனற்ற நம்பிக்கைகள், வரட்டு மரபுகள், கடவுளர்கள் என அனைத்தையும் தாண்டி மனிதரனைவரும் ஒரே புள்ளியில் தான் இருந்து கொண்டு இருக்கின்றோம் என்பதனையும் மனிதரல்லாத உலகமானது எவ்வளவு சுதந்திரமாக இருக்கும் என்பதனை மிகக்குறுகிய காலத்துள் புரியப்பண்ணியுள்ளது கொரோனா நோயும் அதன் முகமூடிக் கலாசாரமும் எனும் மனித வரலாற்று உண்மையை புரிந்து கொண்டதானாலும், அவற்றைக் கதைக்க முட்பட்டதனாலும் நானொரு கெட்டவன். நீங்கள்?
இவ்வாறு இன்னும் பல விடயங்களையும் பச்சையாகச் சொல்வதற்கும், சொன்ன விடயங்களையே முரண்நகையாகச் செய்து கொண்டு இருக்கும் தவிர்க்கவியலா காரணத்தினாலும் நானொரு கெட்டவன். நீங்கள்???….