ஆங் சான் சூ சி : ஜனநாயகத்தின் துருவ நட்சத்திரமாக இருந்து – இனப்படுகொலைக்கு வாக்காலத்து வாங்குபவராக…

ஆங் சான் சூ சி : ஜனநாயகத்தின் துருவ நட்சத்திரமாக இருந்து – இனப்படுகொலைக்கு வாக்காலத்து வாங்குபவராக…

— சீவகன் பூபாலரட்ணம் —

(பிபிசி ஆங்கில சேவை மற்றும் ஏனைய சில செய்தி ஆதாரங்களைத் தழுவியது)

ஒரு காலத்தில் ஜனநாயகத்தில் கலங்கரை விளக்கமாக பார்க்கப்பட்டவர் அவர். அப்போது பர்மா என்று அழைக்கப்பட்ட இன்றைய மியான்மரை பல தசாப்தங்கள் ஆண்ட இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான தனது ஜனநாயகப் போராட்டத்துக்காக, தனது சுதந்திரத்தையே பணயம் வைத்தவர்தான் ஆங் சான் சூ சி. அவருக்கு 75 வயது. 

பர்மாவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, 1991இல் ஆங் சான் சூ சிக்கு “சக்தியற்ற மக்களின் சக்தியாக” விளங்கியமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

ஆனால், தற்போது மியான்மரின் அதியுன்னத தலைவியாக இருக்கும் அவர், ரொஹிஞ்ஞா முஸ்லிம்களை கையாண்ட விதத்துக்காக “இனப்படுகொலையை வக்காலத்து வாங்குபவராக” சிலரால் பார்க்கப்படுகின்றார். அது பர்மிய ஜனநாயகத்தின் தலைவியாக ஒரு காலத்தில் பார்க்கப்படும் அவருக்கு பெரும் அபகீர்த்தியாக உருவெடுத்துள்ளது. 

அதிகாரத்துக்கான வழி 

1989 க்கும் 2010க்கும் இடையே ஆங் சான் சூ சி அவர்கள் சுமார் 15 வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். மியான்மரின்(பர்மா) இராணுவ  ஆட்சிக்கு எதிரான அவரது தனிப்பட்ட போராட்டம், அடக்குமுறைக்கு எதிரான அமைதிப் போராட்டத்தின் சர்வதேசக் குறியீடாகப் பார்க்கப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு நவம்பரில் பர்மாவில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த முதலாவது வெளிப்படையான தேர்தலில் அவரது தலைமையிலான “ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி” பெரும் வெற்றியைப் பெற்றது. ஆனாலும், அவரது பிள்ளைகள் வெளிநாட்டுப் பிரஜைகள் என்ற காரணத்தினால், பர்மிய அரசியலமைப்பின்படி அவரால், அந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியவில்லை. 

அவரது நெருங்கிய சகாவான “வின் மிய்ண்ட்”தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால், ஆங் சான் சூ சி தான் பர்மாவின் உண்மையான தலைவியாக இருக்கின்றார்.  

அரசியல் வம்சம் 

மியான்மரின் சுதந்திரப் போராட்ட வீரரான ஜெனரல் ஆங் சான் இன் மகள்தான் ஆங் சான் சூ சி. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து 1948 இல் பர்மா சுதந்திரம் பெறுவதற்கு சற்று முன்னதாக ஆங் சான் சூ சி இன் இரண்டாவது வயதிலேயே அவரது தந்தை படுகொலை செய்யப்பட்டுவிட்டார். 

1960 இல் டில்லிக்கான பர்மிய தூதராக நியமிக்கப்பட்ட தனது தாயாரான டவ் கின் யீ உடன் இந்தியாவுக்கு சென்றார் ஆங் சான் சூ சி. நான்கு வருடங்களின் பின்னர் பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற அவர், அங்கு தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கற்றார். அங்கேயே அவர் தனது வருங்கால கணவரான கல்வியாளர் மைக்கல் அரிஸை சந்தித்தார். 

பின்னர் ஜப்பான் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் சிலகாலம் வேலை செய்து, வசித்த பின்னர் தனது இரு பிள்ளைகளான அலக்ஸ்ஸாண்டர் மற்றும் கிம் ஆகியோரை வளர்ப்பதற்காக பிரிட்டனில் அவர் குடியேறினார். ஆனாலும், தனது சொந்த ஊர் பற்றிய அவரது நினைவுகள் அவரைவிட்டு என்றும் நீங்கவில்லை. 

பின்னர் மிகவும் மோசமாக உடல் நலமற்றுப் போன தனது தாயை பராமரிப்பதற்காக பர்மிய நகரான ரங்கூனுக்கு(தற்போது யங்கூன்) அவர் 1988இல் திரும்பி வந்தபோது, பர்மா பெரும் அரசியல் நெருக்கடியில் இருந்தது. 

இராணுவ ஆட்சியின் எதிராக, ஜனநாயக மறு சீரமைப்புக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்களும், அலுவலகப் பணியாளர்களும் பிக்குமாரும் வீதிக்கு இறங்கினார்கள்.  

“எனது தந்தையின் மகளாக, அங்கு நடந்த விடயங்களில் இருந்து என்னால் விலகி இருக்க முடியவில்லை” என்று ரங்கூனில் 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் திகதி அவர் ஆற்றிய உரை ஒன்றில் ஆங் சான் சூ சி கூறியுள்ளார். அப்போதைய இராணுவ ஆட்சித்தலைவரான ஜெனரல் நே வின் க்கு எதிரான கிளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். 

வீட்டுக்காவல் 

அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான தலைவரான மார்ட்டின் லூதர் கிங் மற்றும் இந்தியாவின் மகாத்மா காந்தி ஆகியோரின் அகிம்சைப் போராட்டத்தால் கவரப்பட்ட ஆங் சான் சூ சி, பர்மா எங்கிலும் பயணித்து ஊர்வலங்களை நடாத்தி, அமைதியான ஜனநாயக மாற்றங்களையும், சுதந்திரமான தேர்தலையும் கோரினார். 

ஆனால், 1988 செப்டம்பர் 18 இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியிருந்த இராணுவம் இவர்களது போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. அதனைத்தொடர்ந்த பல வருடங்கள் ஆங் சான் சூ சி வீட்டுக்காவலில் போடப்பட்டார். 

1990 மே மாதத்தில் இராணுவ ஆட்சியாளர்களால்(யுந்தா) தேசிய மட்டத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஆங் சான் சூ சி இன் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணிக் கட்சி கணிசமான வெற்றியைப் பெற்றது. ஆனால், அவர்களிடம் அதிகாரத்தை கொடுக்க இராணுவ ஆட்சியாளர்கள் மறுத்துவிட்டனர். 

தொடர்ச்சியாக 6 வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூ சி, 1995 ஜூலையில் விடுவிக்கப்பட்டார். 

பயணத்தடைகளை மீறும் நடவடிக்கையாக மண்டலாய் நகருக்கு அவர் பயணித்ததைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு செப்டம்பரில் அவர் மீண்டும் வீட்டுக்காவலில் போடப்பட்டார். 

நிபந்தனையற்ற வகையில் 2002 மே யில் விடுதலை செய்யப்பட்ட அவர், அவரது ஆதரவாளர்களுக்கும் அரசாங்க ஆதரவு கும்பலுக்கும் இடையில் நடந்த மோதலை அடுத்து மீண்டும் கைது செய்யப்பட்டார். 

வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு மீண்டும் காவலில் வைக்கப்பட்டார். 

ஆரம்பத்தில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்ட அவர், பின்னர் தனது ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் சில முக்கியஸ்தர்களையும், சில இராஜதந்திரிகளையும் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். தனது இரு மகன்களையும் கணவரையும் சந்திக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. 1999இல் அவரது கணவர் புற்றுநோயால் இறந்துபோனார். 

அவர் மிகவும் மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில், அவரைப் பார்ப்பதற்காக பிரிட்டனுக்குச் செல்ல இராணுவ அரசாங்கம் ஆங் சான் சூ சி க்கு அனுமதி வழங்கியது. ஆனால், தன்னை மீண்டும் நாட்டுக்குள் வர விடாமல் இராணுவம் தடுத்துவிடும் என்ற அச்சம் காரணமாக அவர் அந்தப் பயணத்தை நிராகரித்துவிட்டார். 

மீண்டும் அரசியலில்  

2010 நவம்பரில் நடந்த பர்மாவின் தேர்தலில் (இருபது வருடங்களில் நடந்த தேர்தல்) இருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட ஆங் சான் சூ சி, தேர்தல் முடிந்த 6 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார். அப்போதுதான் அவரது மகனான “கிம்” ஐ பத்து வருடங்களுக்கு பின்னர் முதல் தடவயாக சந்தித்தார். 

புதிய அரசாங்கம் ஒரு அரசியல் சீர்திருத்த நடவடிக்கையை ஆரம்பித்தபோது, ஆங் சான் சூ சியும் அவரது கட்சியும் மீண்டும் அரசியல் நடவடிக்கையில் இறங்கினார்கள். 

2012 ஏப்ரலில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 45 இடங்களில் 43 இல் அவரது கட்சி வெற்றி பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆங் சான் சூ சி பதவியேற்றார். 

அடுத்த மே மாதத்தில் அவர் 24 வருடங்களில் முதல் தடவையாக மியான்மருக்கு வெளியே பயணித்தார். அவரை மீண்டும் நாட்டுக்குள் திரும்ப அனுமதிப்பேன் என்ற புதிய தலைவரின் உறுதி மொழியின் அடிப்படையிலேயே அந்தப் பயணம் நடந்தது. 

 ரொஹிஞ்ஞா பிரச்சினை 

2017 ஆம் ஆண்டில் பர்மாவின் ரக்கைன் மாகாணத்தில் ரொஹிஞ்ஞா இன கிளர்ச்சிக்காரர்களால் பொலிஸ் நிலையங்கள் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், பர்மிய இராணுவமோ ரொஹிஞ்ஞா இன மக்கள் மீது பெரும் தாக்குதல்களை ஆரம்பித்தது. ஈவு இரக்கமற்ற வகையில் அந்த மக்கள் கொலை செய்யப்பட்டனர். படுகொலைகள், சூறையாடல்கள், பாலியல் வல்லுறவுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.  

பர்மாவின் ஆளும் கட்சியாக இருந்தது, ஆங் சான் சூ சியின் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணிதான். ஆனால், அந்த ஆட்சியின் ஜனாதிபதி அவரல்ல. அவரது நெருங்கிய சகாதான் ஜனாதிபதி. ஆனாலும், பர்மாவின் “ஆட்சி ஆலோசகர்” என்ற பெயரில் ஆங் சான் சூ சிதான் ஆட்சிக்கு பொறுப்பு. ஆகவே ரொஹிஞ்ஞா மக்களின் விவகாரத்தை கையாழும் பொறுப்பு அவருக்கே வந்தது. 

நாட்டை விட்டுக் கலைக்கப்பட்ட ரொஹிஞ்ஞாக்கள் 

பர்மிய இராணுவம் ரொஹிஞ்ஞா மக்களை தாக்கியதை தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள வங்கதேசத்துக்கு ஓடினார்கள். பலர் அகதிகளாக படகுகள் மூலம் பல தேசங்களை நோக்கி ஓடினர். அவர்களில் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். பல நாடுகள் அவர்களை நிராகரித்தன அல்லது மோசமாக நடத்தின. உலக மட்டத்தில் ரொஹிஞ்ஞாக்களின் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தது. 

ஏழு லட்சத்து நாற்பதினாயிரம் ரொஹிஞ்ஞக்களை நாட்டை விட்டு துரத்தியதாக பர்மிய இராணுவத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பர்மிய இராணுவம் இவர்களை இனப்படுகொலை செய்யும் நோக்கில் செயற்பட்டதாக ஐநா நிபுணர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 

ஆகவே, “ஹம்பியா” என்ற முஸ்லிம் நாடு இந்த விவகாரத்தை ஐநாவின் உயர் நிலை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள இந்த முயற்சிக்கு பல முஸ்லிம் நாடுகள் ஆதரவு வழங்கின. அதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பர்மா செய்ததாகக் கூறப்படும் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யத்தொடங்கியது. 

ரொஹிஞ்ஞா முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதை, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை, இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நிகராக நடத்தப்பட்டதாக கூறப்பட்டதை தடுக்க தவறிவிட்டார் என்று ஆங் சான் சூ சி மீது அவரது முன்னாள் ஆதரவு நாடுகள் பல இப்போது குற்றஞ்சாட்டுகின்றன. 

இன்றும் சக்தி மிக்கதாக இருக்கும் இராணுவத்தை கண்டிக்கவும் அதன் மீதான குற்றச்சட்டுக்களை ஏற்றுக்கொள்ளவும் அவர் தவறிவிட்டார் என்பது குற்றச்சாட்டு. 

“யதார்த்த அரசியல்வாதியான அவர், பல இனங்கள் வாழ்கின்ற, சிக்கலான வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டை கவனமாக கையாழ முயல்கிறார்” என்று சிலர் முதலில் அவருக்குச் சாதகமாக வாதாடினார்கள். 

ஆனால், “த ஹேக்” இல் இருக்கின்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது இராணுவத்துக்கு ஆதரவாக கடந்த வருடம் அவர் வாதாடியதைப் பார்த்தபின்னர், அவர் பற்றி சர்வதேச மட்டத்தில் இருந்த புனிதர் என்ற அந்தஸ்து அப்படியே தகர்ந்துபோனது. 

உள்ளூரைப் பொறுத்தவரை, ரொஹிஞ்ஞாக்கள் மீது எந்தவிதமான இரக்கமுமற்ற பௌத்த பெரும்பான்மையினர் மத்தியில் ஆங் சான் சூ சி பெருமைக்குரியவர்தான். 

ஆனால், தன்னையே மனித நேயமற்று நடத்திய அதே இராணுவத்துக்கு ஆதரவாக அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வாதாடியதை பெரிதாக சர்வதேசம் வரவேற்கவில்லை. தமக்கு என்ற போது ஜனநாயகமாக, மனித உரிமையாக தோன்றிய விடயங்கள் இன்னுமொரு இனமென்று வந்தபோது வேறாகத் தெரிந்துள்ளன. 

ஆங் சான் சூ சியின் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தது முதல், “காலனித்துவ கால பழைய சட்டங்களை”க் கொண்டு செய்தியாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளது என்ற விமர்சனம் உள்ளூரில் பலமாக உள்ளது. 

மாற்றங்கள் வந்திருக்கின்ற போதிலும் நாடாளுமன்றத்தில் கால்வாசி இடத்தை தம்வசம் வைத்திருக்கும் இராணுவம், முக்கியமான பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரம் மற்றும் எல்லை விவகாரம் ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது. 

2018 ஆகஸ்டில் தனது அமைச்சரவையில் இருக்கும் இராணுவ ஜெனரல்களை ஆங் சான் சூ சி “நல்லவர்கள்தான்” என்று வர்ணித்துள்ளார். 

மியான்மரில் ஜனநாயக மாற்றம் என்பது “இடையில் நின்றுபோய் விட்டது” என்ற வகையில்தான் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

ஏற்கனவே மோசமாக இருந்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையும் கொவிட் 19 தாக்குதலால் மேலும் உடைந்துபோய் உள்ளது. 

ஒரு தேர்தல் கண்காணிப்பு அமைப்பால் 2020 இல் நடத்தப்பட்ட கணிப்பீட்டின் படி முன்னைய ஆண்டுகளில் 70 வீதமாக இருந்த ஆங் சான் சூ சிக்கான மக்கள் ஆதரவு இப்போது 79 வீதமாக அதிகரித்துள்ளது. 

ஆங் சான் சூ சி பற்றி பிபிசிக்கு கருத்துக் கூறிய பர்மாவுக்கான அமெரிக்கத் தூதுவரான டெரெக் மிச்சேல் பின்வருமாறு கூறியுள்ளார். 

“நம்மில் பெரும்பாலானோரின் கதைகளைப் போல ஆங் சான் சூ சி யின் கதையும் அவரைப் பற்றியதுதான். அவர் மாறாது இருக்கலாம். அவர் உறுதியானவராகவே இருந்திருக்கலாம். அவர் யார் என்பது குறித்ததன் சிக்கல் தன்மையை நாம் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் பிரச்சினை.” 

“பெரும் புனிதர்கள் என்பது போன்ற தோற்றத்தைக் கொண்ட ஆட்களை, அளவுக்கு அதிகமாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிவிடக்கூடாது என்பதில் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.”