— பேராசிரியர் சி. மௌனகுரு —
யாழ்ப்பாண ஆகமமுறை மதக்கலாச்சாரப் பாதிப்பு
மட்டக்களப்பில் யாழ்ப்பாண சமூகத்தின் செல்வாக்கு எழுவான்கரையில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஆரம்பமாகிறது. ஆங்கிலேயருக்கு அதிகாரிகளாக வந்த யாழ்ப்பாணத் தமிழரான பஸ்கோல் முதலி முக்குவரின் நிலங்கள் சிலவற்றை தந்திரமாகக் கவர்ந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுமுண்டு. ஆகமமுறை சார்ந்த பிராமணமயப்பட்ட சைவ சித்தாந்த மதம் சார்ந்த இவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து பிராமணரை தம் கோயிற் பணிகளுக்கு அமர்த்திக் கொண்டமைக்குச் சிறந்த உதாரணம், மட்டக்களப்பில் ஆனைப்பந்தியிலுள்ள பிள்ளையார் கோயிலாகும். அமிர்தகழி மாமாங்கப் பிள்ளைமார் கோயிலும் இதற்கு உதாரணமாயினும் அங்கு பெரும்பான்மை இனமாகக் கரையார் வாழ்ந்தமையால் அக்கோயிலைத் தம் ஆளுகைக்குட்படுத்த இவர்கள் கரையாரிடம் சமரசம் செய்து கொண்டனர். இதனால் அங்கு ஆகம முறையிலமைந்த வழிபாட்டு முறைகள் உருவாகின.
காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நாதஸ்வர வித்துவான்கள், பிராமணர்கள், ஒதுவார்கள் என்போர் யாழ்ப்பாண உயர் சைவ வேளாளர் கோயிற் கலாசாரத்தை இங்கும் பரப்பினர். இதனால் மெல்ல மெல்ல தமது பொருளாதார மாற்றம் காரணமாக சமூக அசைவியக்கத்தில் மேனிலைக்கு வந்து கொண்டிருந்த சமூக அதிகார அடிநிலையில் இல்லாத இடைச்சாதியினரும் (முக்கியமாக கரையார், பொற்கொல்லர்) தம் கோயில்களிலும் வாழ்க்கை முறைகளிலும் மேனிலையாக்கம் பெற்ற யாழ்ப்பாண சைவ வேளாளர் நாகரிகத்தைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றனர். மட்டக்களப்பு ஆதிக்கம் இதுவரை அறியாத தேவார ஓதுகை, சைவ விரதங்கள், சைவச் சாப்பாடு என்பன சமூக மேனிலையின் சின்னங்களாகக் காணப்படுகின்றன. இவற்றை வளர்த்ததில் அரசாங்கப் பாடசாலைகளுக்கும் இராமகிருஸ்ணமிசன் பாடசாலைகளுக்கும் முக்கிய இடமுண்டு. இங்கு ஆரம்பத்தில் கல்வி கற்பித்தோர் யாழ்ப்பாண சைவ ஆசிரியர்களே.
இவர்கள் மூலமாக இச்சைவக் கலாசாரம் ஆகம முறைசாராத இந்து மதக் கலாச்சாரம் கொண்ட மட்டக்களப்பிற்குள் ஊடுருவலாயிற்று. தம்மை அறியாமலேயே மட்டக்களப்பு மக்கள் இன்னொரு கலாச்சார ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுக் கொண்டனர்.
படுவான்கரையில் பொருளாதார, அரசியல், கல்வி ஆகியவற்றில் ஏற்பட்ட உள்ளார்ந்த மாறுதல் அம்மக்களின் சிலரின் இடப்பெயர்வு, போர்க்காலச்சூழல், இளைஞரின் மத்திய கிழக்கு நாட்டுக்குச் செல்கை, புதிய பணப்புழக்கம் என்பன மட்டக்களப்பில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் ஒன்று சேரப் பாதித்தன.
மட்டக்களப்புப் பிரதேசத்தையண்டிக் குடிபெயர்ந்த படுவான் கரையாரின் வாழ்க்கை முறையிலும் இதன் தாக்கத்தைக் காண்கின்றோம். முக்கியமாக பெரும்பான்மை இனமாக இருந்து ஒரு காலத்தில் ஆட்சியதிகாரங்களைக் கொண்டிருந்து, பின்னர் பின் தங்கிய நிலைக்குச் சென்றிருந்த முக்குவர் மத்தியில் படித்தோர் குழாமும் நகர நாகரிக உணர்வும், உத்தியோகத்தர்களும் பெருகினர். இக்குழுமம் இப்போது ஒரு எழுச்சி பெறும் குழுமமாக உள்ளது. இதனால் தமது வரலாற்றை எழுதும் ஆர்வம் இக்குழுமத்தின் படித்த தலைமுறையினரிடையே உருவானது.
இதேபோல சமூக எழுச்சி பெற்ற இரண்டு இனக் குழுமங்கள் மட்டக்களப்பில் உள்ளன. ஒரு இனக்குழுமம் கரையோரப் பகுதியில் வாழ்ந்த கரையார், அடுத்தது பொற்கொல்லர்கள். குறிப்பாக போரதீவுப் பகுதியைச் சார்ந்த பொற்கொல்லர்கள். முன்னையவர்கள் அரசாங்க உத்தியோகங்களிலும் சிறு தொழில்களிலும் கவனம் செலுத்தி எழுச்சி பெற பின்னையவர்கள் பொருளாதார பலம் பெற்றவர்களாக எழுந்தனர். படுவான்கரைப் பகுதியில் வாழ்ந்த பொற்கொல்லர்கள் பலர் யுத்தச் சூழல் காரணமாக மட்டக்களப்பிற்கும் கொழும்புக்கும் இடம்பெயர்ந்தனர். இவர்கள் பலரின் வசதியான பொருளாதார நிலை கொழும்பில் வாழும் பலத்தை இவர்களுக்களித்தது.
இச்சமூக அசைவியக்கங்கள் மட்டக்களப்பின் பழைய தன்மைகளைப் பாதிக்கின்றன. மட்டக்களப்பு மாறிவருகின்றது. இந்த மாற்றத்திற்கு மட்டக்களப்பின் சகல சமூகங்களும் முகம் கொடுக்கின்றன.
ஏற்கனவே சொன்ன ஆகமமுறை, பிராமணியப் பாதிப்பு இவர்களில் சிலருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. ஆனால் சகல சாதியினர் மத்தியிலும் மேநிலையாக்கம் ஏற்படுவதனால் மேநிலையாக்கம் பெற்ற இந்து மதம் சார்ந்தோர் தம்மை யாழ்ப்பாண சைவச் சாயலில் உருவாக்க முயற்சிப்பதும் அவர்களே குறிப்பிட்ட சாதிக் கோயில்களில் பிரதம பதவிகள் வகிப்பதனால் அச்சாதி சார்ந்த வசதி குறைந்த ஏனையோர் வசதியுடையோரின் நடை, உடை, பாவனைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதும் நடைபெறுகின்றது.
எனினும் சாதாரண பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்த பண்டைய வழிபாட்டு முறைகள் (மாரி, காளி, திரெளபதி அம்மன்கள்) வணக்க முறைகள் (உருக் கொண்டு ஆடுதல், மடை பள்ளயம், தீப்பாய்தல், பலி கொடுத்தல்) இன்னும் அம்மக்களால் பேணப்படுகின்றன.
சில கோயில்களில் ஆகம முறைகளும், ஆகமம் சாராத முறைகளும் சமரசம் செய்து கொண்டிருப்பதனையும் காணலாம்.
எனினும் யாழ்ப்பாண உயர் குழாத்தினரின் அதிகாரத்திற்கும் மாறாக ஆகமம் சாராத வழிபாட்டு முறைகளையும், மட்டக்களப்பு பாரம்பரிய பண்பாட்டு, கலைகள் என்பவற்றையும் மட்டக்களப்பின் சகல இனக் குழுமங்களும் முன்னெடுக்கும் பண்பும் காணப்படுகின்றது.
முஸ்லிம்களின் சமூக அசைவியக்கம்
மட்டக்களப்பில் அண்மைக்கால மிக வேகமான அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாசாரம் ஆகிய அனைத்திலும் மாறிவரும் இனமாக முஸ்லீம் இனம் விளங்குகின்றது. முஸ்லீம்களின் சமூக அசைவியக்கத்திற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.
ஒன்று, மட்டக்களப்பில் 1980களின் பின் தமிழ் – முஸ்லீம் இன முரண்பாடுகள் வலுவடைந்ததன் காரணத்தினால் படுவான்கரைப் பகுதியில் தமது பாரம்பரிய விவசாயத்தைச் செய்ய முடியாத நிலை மட்டக்களப்பு முஸ்லீம்களுக்கு ஏற்பட்டது. இவர்கள் வியாபாரத்தில் தமது நாட்டத்தைச் செலுத்தினர். விவசாயத்தை விட வியாபாரம் தந்த இலாபம் மேலும் மேலும் இவர்களை வியாபாரத்தில் ஈடுபட வைத்தது. வியாபாரம் பொருளாதாரத்தில் பலரை உயர்த்தியது.
இரண்டு, இனமுரண்பாடுகள் காரணமாக தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லீம் மாணவர் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தம் பிரதேசப் பாடசாலைக் கல்வி அபிவிருத்தியில் இவர்கள் கவனம் செலுத்தினர். மட்டக்களப்பு முஸ்லீம் பாடசாலைகளின் அபிவிருத்தி 1970களில் அரசாங்கத்தில் கல்வி மந்திரியாக இருந்த பதியுதீன் முகம்மத் அவர்களால் அத்திவாரமிடப்பட்டதாயினும் பின்வந்த அரசியல் நிலைமைகள் அதனைத் துரிதப்படுத்தின. புதிய பாடசாலைகள் பல தோற்றுவிக்கப்பட்டன. பழைய பாடசாலைகள் பல தேசிய பாடசாலைகளாயின. ஒப்பீட்டளவில் முன்னையவிட பல்கலைக்கழகம் செல்லும் மட்டக்களப்பு முஸ்லீம் மாணவர் தொகை அதிகரித்தது. முஸ்லீம்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றும் உருவாகியது. கல்வி அறிவு பெற்றோர் தொகை கூடியது. எழுத்துத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் மட்டக்களப்பு முஸ்லீம்களின் பங்களிப்பு அதிகமாகியது. கல்வி அறிவு, தம்மைப் பற்றிய சிந்தனைகளைத் தோற்றுவித்தது. இறுக்கமான மதக்கட்டுப்பாடுகளுடன் வளர்ந்த இந்தச் சமூகம் தமது பண்பாட்டுத் தனித்துவத்தை வலியுறுத்த ஆரம்பித்தது. இதற்கு உலக நாடுகளில் வளர்ச்சி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதமும் பின்னணியாக இருந்தது.
மூன்று, 1980களுக்குப் பிறகு தமிழரைப் போல முஸ்லீம்களும் மத்திய கிழக்கு நாடுகட்கு வேலை தேடிச்சென்றனர். உண்மையில் மட்டக்களப்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகட்கு வேலை தேடி ஆரம்பத்திற் சென்றோர் முஸ்லீம்களே. ஏனையவர்களைவிட மத்திய கிழக்கில் வேலை தேடுதல் இவர்கட்கு இலகுவாகவும் வாய்ப்பாகவும் அமைந்தது. கீழ் மட்டத்திலிருந்த முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்த பலர் மத்திய கிழக்கு நாடுகட்குச் சென்றனர். குறிப்பாகப் பெண்கள் சென்றனர். இவர்களால் மட்டக்களப்பு முஸ்லீம் சமூகத்துக்குள் வந்த மத்திய கிழக்குப் பணம் இச்சமூகத்தில் அசைவியக்கத்தை ஏற்படுத்தியது.
நான்கு, இலங்கை அரசியலில் மட்டக்களப்பு முஸ்லீம் தலைவர்கள் பிரிந்திருந்தாலும் எப்போதும் ஆளும் கட்சியில் ஒரு பிரிவினர் அங்கம் வகித்தனர். மந்திரிப் பதவிகளில் இருந்தனர். தம் அரசியற் செல்வாக்கைத் தகுந்த முறையில் முஸ்லீம் மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தினர்.
வியாபாரம், மத்திய கிழக்கின் பணம் என்பன பொருளாதாரப் பின்புலம் தந்தன. கல்விச்சாலைகள் அறிவுப் பின்புலத்தை தந்தன. அரசியல் செல்வாக்கு வியாபாரத்தையும் கல்வியையும் வளர்க்க உதவியதோடு அரசாங்க உத்தியோகத்தர்களையும் பெற்றுத்தந்தது. இதனால் மட்டக்களப்பு முஸ்லீம் சமூகம் சமூக அசைவியக்கம் பெறும் ஒரு சமூகமாயிற்று.
மட்டக்களப்பின் வரலாற்றில் தமக்குரிய இடத்தைச் சொல்ல வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு இவ்வினம் தள்ளப்பட்டது.
இப்பின்னணி மட்டக்களப்பில் எழுதப்படும் மட்டக்களப்பு வரலாற்றையும் மட்டக்களப்பில் வரும் சாதி, இன, வரலாற்று நூல்களையும் விளங்கிக் கொள்ள உதவும்.
(தொடரும்)