காலக்கண்ணாடி: 08

காலக்கண்ணாடி: 08

— அழகு குணசீலன் —

தேசிய விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றுப் போக்கில் பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலும், அதில் ஏற்படும் ஏற்ற இறக்கம்  கொண்ட மாற்றங்களும் முக்கியமானவை. 

பிராந்திய வல்லரசுகளும், உலக வல்லரசுகளும் தமது பொருளாதார, அரசியல் நலன் சார்ந்து மேலாதிக்கத்தை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிக்கின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையையே கொண்டு இயங்குகின்றன. 

பனிப்போரின் முடிவு,  முதலாளித்துவ, சோஷலிச முகாம்கள் தகர்க்கப்பட்டமை,  பேர்ளின் சுவர் உடைப்பு,  கோர்பச்சோவின் பிரஷ்ரிக்கா சீர்திருத்தம் எல்லாமே பொருளாதார நலன்களை உலகமயமாக்கல் மூலம் முதன்மைப்படுத்தும் நிகழ்வுகளாகும். 

போராட்டச் சக்திகள் இந்த வலையில் இருந்து தப்பித்துக்கொள்வது என்பது இலகுவான ஒன்றல்ல. போராட்டச் சக்திகள் தாமாகவே ஒரு சந்தர்ப்பவாத அரசியலுக்குள் சிக்காமலும், மேலாதிக்க சக்திகளில் தங்கியிருக்காமலும், கொள்கைகளை கிடப்பில் போட்டு குறுக்கு வழிகளில் இலக்கை அடைவதற்கு முயலாமலும் உறுதிப்பாட்டுடன் செயற்பட வேண்டிய தேவை இங்கு அவசியமாகின்றது.  

இந்த உறுதிப்பாடு என்பது நடைமுறைச்சாத்தியமானதும் ஜதார்த்தமானதும் மற்றும் சொந்தக்காலில் நின்று போராடுகின்ற சமுக பொருளாதார அரசியல் வளங்களையும் பூகோள அரசியல் மற்றும் காலத்திற்குக் காலம் ஏற்படும் சர்வதேச அரசியல் மாற்றங்களையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டுமேயன்றி,   இவற்றைக் கவனத்தில் எடுக்காத வறட்டுத்தனமான நெகிழ்ச்சித்தன்மை அற்றதாக இருக்கமுடியாது. நெகிழ்ச்சித்தன்மையற்ற காலச்சூழலுக்கு இணங்கிப் போகாத எதுவும் உடைந்து போகும் என்பது நியதி. 

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றை அகிம்சை முதல் ஆயுதம் வரையும், ஆயுதத்திற்குப் பின்னரான இன்றைய அகிம்சை பாராளுமன்ற அரசியலையும் அதன் எதிர்ப்பு அரசியலையும் நோக்குகின்றபோது மூன்றாவது சக்தி ஒன்றில் தங்கியிருக்கின்ற -சரணடைகின்ற ஒருபோக்கு வெளிப்படையாகத் தெரிகின்றது. 

அன்று  இந்தியாவாகவும்,  இன்று ஐ.நா.வாகவும்  அது காட்சிப்படுத்தப்படுகின்றது. எடுத்ததெற்கெல்லாம் இந்தியாவை கூவி அழைத்த தரப்பினர், தற்போது ஐ.நா.வை உச்சரித்து முறையிடுவோம்  முழங்குவோம் என்று  தமிழ் மக்களின் அப்பாவித்தனத்தை தமது கட்சி அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

இங்குதான் பூகோள அரசியலும், சமகால சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும், பிராந்திய, உலக வல்லரசுகளின் ஆர்வங்களும் முக்கியம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. சமகால சர்வதேச பொருளாதாரப்போக்கு உலகமயமாக்கத்தின் ஊடாக நிர்ணயிக்கப்படுவதாக உள்ளது. 

இந்தியா வந்ததும் தந்ததும்! 

ஈழப்போராட்டத்தில் இந்தியாவின்-இந்திராகாந்தியின் நேரடித் தலையீடு 1983 கறுப்பு யூலையை தொடர்ந்தது. இது இந்திய மேலாதிக்கத்தின் ஆதி என்றால் ராஜீவ்காந்தியின் கொலை அதன் அந்தம். 

ஈழப்போராட்டத்தை பயிற்சி, ஆயுதம், பணம், இராஜதந்திரம் ஊடாக வளர்த்துவிட்ட  இந்தியா, போராட்ட சக்திகள் தமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரையும் வளர்த்துவிட்டது. இது திம்புவில் கோரப்பட்ட தமிழர் தாயகக் கோட்பாட்டை வடக்கும்கிழக்கும் இணைந்த மாகாணசபையாக  மக்களுக்கு வழங்கியது. 

இலங்கை, இந்தியா, விடுதலைப்புலிகள் முத்தரப்பு முரண்பாடுகள் காரணமாக  வளர்த்த கடா மார்பில் பாய, வளர்த்துவிட்டவர்களே அழித்துவிடும் நிலைக்கு தள்ளப்பட, தமிழ்த் தரப்பும் உடந்தையாகப் போனகதை ஒரு துன்பம். இன்று உடன்பாட்டை உயிரைக் கொடுத்து தமிழர்க்கு தந்த ராஜீவ் வும் இல்லை, உடன்பாட்டை  சுதேசியவாதியாக எதிர்த்து நின்ற பிரேமதாசவும் இல்லை. இரு தரப்பினருக்கும்  இடையில் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை என்று அரசியல் நடாத்திய புலிகளும் இல்லை. 

இது இந்தியா வந்ததும் தந்ததும். ஈழப்போராட்டம் அன்றைய ஆரம்பப் புள்ளியில் வெறும் பாராளுமன்ற அரசியலில் தேங்கிக் கிடக்கின்றது. பாராளுமன்ற அரசியல் மூலம் தமிழர் உரிமைகளைப் பெறமுடியாது என்றவர்களே, அதே பாராளுமன்ற அரசியலில் வியப்புடன் செயற்படுகின்றனர். இது ஒரு விடுதலைப்போராட்ட வரலாற்றின் பின்னடைவா? அல்லது முன்னடைவா? அல்லது பாராளுமன்றத்தை சர்வதேசத்திற்கான பிரச்சாரமேடையாகப் பயன்படுத்தும் அரைநூற்றாண்டு பழமை வாய்ந்த வெற்றுக் கோசமா? சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம். 

இந்த நிலையில் அண்மைக்காலமாக ….. 

ஐ.நா.வரும்!  ஐ.நா. வரும்  !! எடுத்ததற்கெல்லாம் ஐ.நா.வில் முறையிடுவோம் என்றும், ஜெனிவா சென்று முழங்குவோம் என்றும் வடக்கு கிழக்கில் இடிமுழக்கத்துடன் மழையடிக்கிறது. 

இதற்கு இரண்டு காரணங்கள் “காலக்கண்ணாடி” யில் விழுகின்றன. 

1. இந்தியா வரும்! இந்தியா வரும்!! என்று தமிழ்மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. இந்தியா தனது முழு ஆளுமையையும் ஆதிக்கத்தையும் பயன்படுத்தி தமிழர்க்கு தந்ததுதான் தமிழர் தாயகத்தில் ஒரு நடைமுறைச்சாத்திய அதிகாரப்பரவலாக்கல் நிர்வாகக்கட்டமைப்பு.   

இதற்கு மேல் இம்மியளவும் இந்தியா நகரப்போவதில்லை. தமிழர் தரப்பு பலவீனமுற்றும் இலங்கை அரசு பிராந்திய, சர்வதேச மட்டத்தில் பல முற்றும் உள்ள நிலையில் இலங்கை அரசுக்கு பிராந்திய ஆதிக்க அழுத்தத்தை பிரயோகிக்க முடியாத நிலையில் இந்தியா உள்ளது. 

 2.  பிராந்திய பூகோள அரசியல் 1987 ல் இருந்ததை விடவும் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை உள்வாங்கி நிற்கின்றது. இந்தியாவிற்கும் சீனாவிற்குமான உறவில் மாத்திரமன்றி, சார்க் நாடுகளுக்கிடையிலான உறவிலும் பொருளாதாரம்தான் வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிக்கின்ற முக்கிய அம்சமாக அடையாளப்படுத்தி நிற்கின்றது. 

எனவே தொடர்ந்தும்  நீங்கள் எங்களுக்கு அடித்தால் மூத்தண்ணன் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார், அவரின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றெல்லாம் இனிமேலும் சம்பந்தர் & CO தமிழ்மக்களுக்கு கதை சொல்ல முடியாது. ஆக, இந்தியாவைவிட்டு ஐ.நா.வை கூப்பிடுவோம். மக்கள் காதில் மற்றொரு பூச்சுத்தல். 

ஐ.நா.வைக் கூப்பிடுதல் 

முதலில் ஐ.நா. அமைக்கப்பட்ட நோக்கத்தையும் அது இன்று அதிகாரமும் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றி தனிமைப்பட்டு நிற்கும் நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.  

உலகின் வறிய, சமூக, பொருளாதார, அரசியல் வலிமை இழந்த நாடுகள்தான் ஐ.நா.வில் ஓரளவுக்காவது சர்வதேச உதவிகளைப் பெறுவதற்காக நம்பிக்கை கொண்டுள்ளன என்பதும் அரசியல் பொருளாதார வலிமைமிக்க நாடுகள் எதுவும் ஐ.நா.வை கணக்கில் எடுப்பதில்லை என்பதும்  ஒரு கசப்பான உண்மையாகும். 

வறிய நாடுகள் ஒருவேளை உணவுக்காக ஐ.நா.வில் தங்கியிருக்க வலிமை மிக்க நாடுகள் ஐ.நா.வை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முண்டியடிக்கின்றன. இந்த மேலாதிக்க வல்லரசுகளின் தாளத்திற்குத்தான் ஐ.நா. ஆடுகின்றது. 

இந்த நிலையில் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வில் அல்லது கடந்தகால யுத்தப்பேரழிவுகளுக்கான நீதியில், ஐ.நா. தலையிடவேண்டும் என்பதோ அல்லது ஐ.நா.வில் கோரிக்கை விடுவதோ எந்த அளவிற்கு பயனளிக்கப்போகிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது. 

இதற்கு ஐ.நா.வின் அண்மைக்கால நடிவடிக்கைகள் சிலவற்றைப் பட்டியல் இட முடியும்.  

அதற்கு முன் ஐ.நா.  வில் பாதுகாப்புச் சபையே அதிஉயர் அதிகாரங்களைக் கொண்டதாகவும் தீர்மானங்களை எடுக்கின்ற உயர்பீடமாகவும் உள்ளது. 

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா என்பன நிரந்தர உறுப்பு நாடுகள். வீட்டோ அதிகாரத்தைக் கொண்டவை. 

நிரந்தர உறுப்புரிமையற்ற இரு ஆண்டுகள் பதவிக்காலத்தைக் கொண்ட மேலும் பத்து நாடுகளாக மொத்தம் பதினைந்து நாடுகளைக் கொண்டதே பாதுகாப்புச் சபை. இவை அதிகாரமற்ற வெறும் அந்தஸ்துக்காக இருக்கைகளைப்பெற்றுள்ள பின்வரிசை நாடுகள். 

ஐ.நா. பாதுகாப்புச்சபை எத்தனை போர்களை தடுத்தது? எத்தனை நாடுகளில் சமாதானத்தை நிலைநாட்டி இருக்கிறது? எத்தனை நாடுகளில் போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கும், மனிதப் படுகொலைகளுக்கும் நீதியை வழங்கி இருக்கிறது என்றால் அதற்கான பதிலைத் தேட காலக்கண்ணாடி போதாது பூதக்கண்ணாடி தேவை. 

1. ருவாண்டாவில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளுக்கு எதிராக ஐ.நா.வால் எதுவும் செய்ய முடியவில்லை. 

2. டார்பூர் – சூடான் பிரச்சினையில் சீனா எண்ணெய்வள ஆர்வம் காரணமாக வீட்டோ வைப் பயன்படுத்தியதால் முன்நோக்கி நகரமுடியவில்லை. 

3. மியான்மாரில் சிறுபான்மையினர் மீதான இன அழிப்பில் ஒரு விசாரணையைத் தவிர வேறு எதுவும் இடம்பெறவில்லை. 

4. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஆண்டாண்டு காலமாக அமெரிக்க – இஸ்ரேல் நல்லுறவில் பாலஸ்தீனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

5. சிரியாவில் இடம்பெற்ற போரை ஐ.நா.வால் தடுக்க முடியவில்லை. ரஷ்யா வீட்டோவைப் பயன்படுத்தியது. 

6. உக்ரைனில் ரஷ்யா மலேசியப் பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய விவகாரம் ரஷ்ய வீட்டோவால் அசையாது கிடக்கிறது. 

இத்தனைக்கும் மத்தியில் எதிர்வரும் ஆண்டுகளில் நடைபெறும் என்று எதிர்பார்கப்படுகின்ற ஐ.நா. சீர்திருத்தத்தின்போது G4 என்று அறியப்பட்ட  குழு நான்கு நாடுகளான இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜேர்மனி என்பன பாதுகாப்புச்சபை நிரந்தர உறுப்புரிமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளன. அப்போது பாதுகாப்புச் சபை நிரந்தர உறுப்புரிமை பத்தாக உயரும். 

இந்த நிலையில் இந்தியா தனது ஆதிக்கத்திற்குட்பட்ட பூகோள அரசியலில் சிலவற்றை பாதித்திருக்கிறது. 

1. வங்காள தேசத்தின் சத்திரசிகிச்சை வைத்தியர் இந்திரா,-இந்தியா. 

2., பிராந்தியத்தில் இந்திய ஆதரவுடனான சமாதான முயற்சியே நேபாள மன்னர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து நேபாள மார்க்சிய போராளிகள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்க வழிவகுத்தது. 

3.பாலஸ்தீன விடுதலைப்போராட்ட வரலாற்றில் இரு நாடுகள் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. 

4. சீன ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேறியுள்ள திபெத்து ஆன்மீக தலைமை தலாய்லாமாவுக்கும் மக்களுக்கும் புகலிடம் வழங்கியுள்ளது. 

இவை ஐ.நா.வை விடவும் ஈழத்தமிழர்கள் இந்தியாவுடன் ஒரு இணக்கத்திற்கு வருவதன் மூலம்தான் இன்றைய பலவீனமான சூழலில் எதையாவது அடையமுடியும் என்பதே பிராந்திய பூகோள அரசியல் ஜதார்த்தம் என்பதைக் காட்டுகின்றது. 

எனவே  மேற்கின் மானிடநேயமற்ற பொருளாதார இலாப நட்டக் கணக்குப் பார்க்கின்ற ஐ.நா.ஆதிக்கத்தில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும், அது ஐ.நா.வால் முடியும் என்று எதிர்பார்ப்பதும் இது விடயத்தில் அப்பாவித் தமிழ் மக்களை சுய கட்சி அரசியல் இலாபத்திற்காக நம்ப வைப்பதும் உண்மையில் தவித்த முயல் அடித்த அரசியலாகும். 

ஆக, ஐ.நா. வெறும் காகிதப் புலி!