புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் – விவாதக் களம் – 1

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் – விவாதக் களம் – 1

— வி.சிவலிங்கம் —

இலங்கையில் தற்போது புதிய அரசியல் யாப்பிற்கான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. அதன் பிரகாரம் மக்களிடம் அபிப்பிராயங்களைப் பெறுவதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 20வது திருத்தம் நாட்டில் ஓர் சர்வாதிகார ஆட்சியை நிறுவுதற்கான அடித்தளங்கள் போடப்படுவதாக பலமான விவாதங்கள் எழுந்துள்ள வேளையில், தமிழ் மக்கள் இப்புதிய அரசியல் யாப்பு விவகாரத்தில் எவ்வாறான நிலைப்பாடுகளை மேற்கொள்வது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ் அரசியலில் காணப்படும் அரசியல் கட்சிகள், குழுக்கள் மத்தியில் தெளிவான சிந்தனைப் போக்குகள் இதுவரை காணப்படவில்லை. இந் நிலையில் சிவில் சமூகத்தின் சிந்தனைகளை இப்பிரச்சினையில் அறிதல் அவசியமாகிறது? அத்துடன் எமது அடுத்த சந்ததிகளின் நலன் கருதி மிகவும் காத்திரமான அடிப்படைகள் மீது புதிய அரசியலையும் கட்டுவது அவசியமானது. இன்றைய ஆட்சிக் காலத்தில் அல்லது இன்றைய அரசியல்வாதிகளைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான அரசியலை முன்னெடுப்பதற்கான விவாதங்களாக அவை அமைய முடியாது. ஏனெனில் அரசியல் யாப்பு என்பது தேசத்தின் அடிப்படைச் சட்டங்களை இயற்றுவதற்கான முக்கிய ஆவணம் என்பதால் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், நாட்டில் வாழும் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையிலான விவாதங்களை உருவாக்கும் ஓர் முயற்சியே இதுவாகும். குறிப்பாக புதிய அரசியல் யாப்புத் தொடர்பான வாதங்களில் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் விவாதங்களாக மாறியுள்ளன. அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு என்பன நாட்டின் பல்லின அடையாளத்தை உறுதி செய்யும் ஏற்பாடுகள் என்பதால் அவை குறித்து ஆழமான விவாதங்கள் தேவையாகின்றன.

சிங்கள பௌத்த தேசியவாதத்தின் முன்பாக சிறுபான்மைகள்

குறிப்பாக, நாட்டில் தற்போது எழுந்துள்ள புதிய அரசியல் அலை தொடர்பாக நாம் தெளிவான பார்வையைச் செலுத்துதல் அவசியமானது. சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அரசியல் என்பது எவ்வாறான சமூக கட்டுமானத்தை நோக்கிச் செல்கிறது? என்பது குறித்தும் தேசத்தின் அரசியல் கட்டுமானம் என்பது சிங்கள பௌத்த பெரும் தேசியவாதத்தை நோக்கிச் செல்லுமாயின், குறிப்பாக இதர சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுதலித்துச் செல்லுமாயின் இச்சிறுபான்மைத் தேசிய இனங்களின் தெரிவு என்ன? என்ற கேள்வி எழுகிறது. தமிழ் அரசியலில் முன்வைக்கப்படும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை என்பது பிரிவினையோடு இணைக்கபட்டிருப்பதன் பின்னணியில் ஏற்படக்கூடிய விளைவுகள், தாக்கங்கள் என்பவற்றைக் கருத்தில் கொள்வதும், அடிப்படைக் குறிக்கோள்களில் விட்டுக்கொடுப்பிற்கு இடமளிக்காது மாற்று அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதும் அவசியமாகிறது.

குழப்பமான நிலையில் தமிழர் அரசியல்

தமிழ் அரசியல் தற்போது மிகவும் குழப்பமான, கோட்பாட்டு விளக்கங்கள் எதுவுமற்ற நிலையிலுள்ளது. தமிழ்க் குறும் தேசியவாதம் அதன் இயல்பான தவறான கோட்பாட்டு அடிப்படைகளால் பலமிழந்து காணப்படுகிறது. அதே போலவே சிங்கள பெரும் தேசியவாதம் ஒருவகை குடும்ப ஆதிக்கத்தை நோக்கிய அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள அரசியலின் போக்கை கோட்பாட்டு அடிப்படையில் புரிந்து கொள்வதன் மூலமே புதிய அணுகுமுறைகளுக்கான பாதைகளைத் திறக்க முடியும்.

இக் கட்டுரை சிங்கள பௌத்த ஆதிக்கச் சிந்தனையின் அடிப்படைக் கோட்பாடுகளையும், இக்கோட்பாட்டுப் போக்கினைக் கட்டுடைப்பதாயின் தமிழ் அரசியல் தனது கோட்பாட்டில் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளையும் விவாதத்திற்கு முன்வைக்கிறது. வெகு விரைவில் நிறைவேற்றப்படவுள்ள புதிய அரசியல் யாப்பின் கோட்பாட்டு நிலைப்பாடுகள் மிகவும் தூர நோக்கோடு எடுத்துச் செல்லப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. இதனை அதன் ஆரம்பத்திலேயே சவாலுக்கு உட்படுத்தாவிடில் அதன் தாக்கத்தைச் சமாளிப்பதற்கு 30 ஆண்டுகாலப் போர் நடத்தினாலும் முடியாமல் போகலாம்.

தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழலில் அதாவது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலவீன நிலையிலுள்ளதாகவும், மறுபக்கத்தில் சிங்கள பௌத்த பேரினவாதம் மிகவும் பலமான நிலையிலுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழ் மக்கள் அல்லது நாட்டின் இதர சிறுபான்மைத் தேசிய இனங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே தமது இருப்பைக் காப்பாற்ற முடியும் என்ற வாதங்களும் உள்ளன. இவை நியாயமானவையாக இருப்பினும், சமூகம் பல வழிகளில் மிகவும் பலவீனமாக இருப்பதன் காரணமாக அதன் அடிப்படை உரிமைகளையும் விட்டுக்கொடுத்து அடிமைச் சமூகமாக வாழவேண்டும் என்ற நிலை இல்லை. இப்பிரச்சனையைப் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வரையறைக்குள் நிறுத்தி விவாதிக்க முடியாது. ஏனெனில் இவை மனித அடிப்படை உரிமை சார்ந்தததே தவிர எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல. எந்தச் சமூகமும் எவ்வளவு பலவீன நிலையிலிருப்பினும் அவ்வாறான தற்கொலை முயற்சிக்குச் செல்ல முடியாது. மிக நீண்ட தூர நோக்கோடு பாதைகளை வகுத்துச் செல்வதே விவேகமான மாற்று வழியாகும்.

இவ்வாறான சிக்கலான அரசியல் போக்கிலிருந்து விடுபட வேண்டுமெனில் மிகவும் தெளிவான கோட்பாட்டு நிலைப்பாடுகளை எடுப்பதும், அதனடிப்படையில் வேலைத் திட்டங்களை வரைவதும், செயற்படுவதும் கடமையாகிறது. அவ்வாறாயின் இன்றைய அரசியல் போக்கின் தவறான வழிமுறைகளை மிகவும் கறாரான விதத்தில் தெளிவுபடுத்துவது மட்டுமே புதிய அணுகுமுறைக்கான கதவுகளைத் திறக்க முடியும். புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் என்பன அடிப்படை ஜனநாயக உரிமைகள் குறித்துத் தெளிவாகப் பேசப்படுவதை முதலில் உறுதி செய்வது அவசியமாகிறது. அந்த வகையில் இக் கருத்து விவாதம் சிங்கள -பௌத்த தேசியவாதத்தின் கூறுகளின் அடிப்படையிலிருந்தே ஆரம்பமாக வேண்டும்.

சிங்கள பெருந்தேசியவாதத்தில் தங்கியிருக்கும் தமிழ் குறுந்தேசிய வாதம்:

இதற்கான பிரதான நியாயங்கள் எதுவெனில் தமிழ் அரசியலில் காணப்படும் தமிழ்-குறும் தேசியவாதத்தின் எண்ணமும், போக்கும் சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதத்தின் தீவிரத் தன்மையிலேயே தங்கியிருப்பதை நாம் காணலாம். தமிழ்த் தேசியவாதத்திற்கு இயல்பான, தனித் தன்மையான இயங்கு சக்தி இல்லை என்பதும், சிங்கள பௌத்த தேசியவாதத்தின் உக்கிரத் தன்மைகளிலிருந்தே தமிழ் – குறும் தேசிய வாதம் தமக்கான இயங்கு சக்தியைப் பெறுகிறது.

அடுத்ததாக, தமிழ் – குறும் தேசியவாதம் என்பது அவ்வாறு தமக்கே உரித்தான இயங்கு சக்தி அற்று இருப்பதற்கான இன்னொரு பிரதான காரணம் தமிழ்ப் பிரதேசங்களிலே அதன் கலாச்சார பாரம்பரியமிக்க அரசியல், கலாச்சார, சமூக வடிவங்கள் பலமாக இல்லாதிருப்பதேயாகும். ஆங்காங்கே சில காணப்படினும் அவை சமூகத்தின் மத்தியில் செல்வாக்குப் பெற்றவையாக இல்லை. உதாரணமாக, நாளை தனிநாடாக வடக்கு, கிழக்குப் பிரிக்கப்பட்டால் மறுநாள் முதல் சமூகத்தின் நலன்களைத் தொடர்ந்து எடுத்துச் செல்லக்கூடிய சமூக கட்டமைப்புகள் அதாவது கலாச்சார பாரம்பரியத்தின் அடிப்படையில் பிரிந்த மறுநாளே செயற்படும் அளவிற்கு நிலமைகள் இல்லை. அவ்வாறாயின் தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர் வகுத்தளித்த அரசியல் சமூக கட்டுமானங்களிலேயே தமிழ் மக்கள் தமது நிர்வாகங்களை நடத்த வேண்டும். அவ்வாறாயின் சுயநிர்ணய உரிமையின் அதாவது தமிழ் மக்கள் தமது, அடையாளத்தை, கலாச்சாரத்தை, மொழியை, சமயத்தை, அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான தனித்துவமான சமூக கட்டுமானங்கள் எதுவும் இல்லை. இவை எதுவும் தோற்றுவிக்கப்படாமல் அல்லது அதன்கான எதுவித உட்கட்டுமானங்கள் எதுவும் இல்லாத நிலையில் சுயநிர்ணய உரிமையைக் கோருவது என்பது யதார்த்தத்திற்குப் புறம்பானது.

அது போலவே சிங்கள பௌத்த பெரும் தேசியவாதம் என்பது அந்த மக்களின் நலன் சார்ந்ததாக அது இல்லை என்பதே எமது வாதமாகும். அதாவது தமிழ் – குறும் தேசியவாதம் என்பது எவ்வாறு தமிழ் மக்கள் சார்ந்ததாக இல்லையோ, அதே போன்ற போலி நிலையில்தான் பௌத்த – சிங்கள பெரும் தேசியவாதமும் உள்ளது. எனவே சிங்கள பௌத்த பெரும் தேசியவாதத்தின் உள் முரண்பாடுகளையும், அதன் உள் நோக்கங்களையும் சரிவரப் புரிந்து கொள்ளுதலின் மூலமே தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் பாதையை வகுக்க முடியும்.

ராஜபக்ஸ சிங்கள – பௌத்த பெரும் தேசியவாதம்

கடந்த 30 ஆண்டுகளாக ராஜபக்ஸாக்களால் இலங்கை அரசு என்ற பெயரில் நடத்தப்பட்ட போர் குறித்து உருவாக்கப்பட்டுள்ள உளவியல் கோட்பாட்டு அடிப்படைகளை நாம் ஆராய்வது பொருத்தமானது. உள் நாட்டிலும், பல வெளிநாடுகளிலும் தோற்கடிக்க முடியாத போராட்டம் என வர்ணிக்கப்பட்ட அந்தப் போர் ராஜபக்ஸாக்களால் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டது? என்பது கவனத்திற்குரியது.

மறு பக்கத்தில் இப்போர் தமிழ் மக்களின் பேரால் நடத்தப்பட்ட போதிலும், அவை தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை. அவ்வாறான தோற்றப்பாடு ஒடுக்கு முறைகளாலும், கட்டுப்பாடுகளாலும், தீவிர பிரச்சாரங்களாலும் உருவாக்கப்பட்டனவே தவிர மக்களின் தார்மீக ஆதரவுடன் நிகழ்த்தப்படவில்லை. அவ்வாறு நடந்திருப்பின் விடுதலைப் புலிகளின் அரசியல் தொடர்ந்தும் நிலைத்திருந்திருக்கும். மக்கள் மீண்டும் பாராளுமன்ற அரசியலிற்குள் சென்றதோடு, தனிநாட்டுக் கோரிக்கையை பகிரங்கமாக மறுதலிக்கும் போக்கும் நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் சிங்கள – பௌத்த சக்திகள் இப்போரை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் நிறைவேற்றினார்கள். அதாவது அந்தப் போர் என்பது, ‘தமிழ்ப் பயங்கரவாதிகளினது பிரிவினைச் சூழ்ச்சிகளிற்கும், சர்வதேச சதிகளுக்கும் எதிரான சிங்கள – பௌத்த தேசியத்தை உருவாக்குவதற்கான ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்பதே பிரதான இயக்கு விசையாக இருந்தது. இந்த உயர் மட்ட பெரும் தேசியவாத சிந்தனை ராணுவ போர்ச் சிந்தனைகளோடு மிகவும் லாவகமாகவே குறிப்பிட்ட இலக்கை நோக்கி இணைக்கப்பட்டது.

இந்த ராணுவ சிந்தனை என்பது நாட்டுப் பிரிவினையைக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளையும், அதன் அமைப்பினையும், அதன் கனவுகளையும் அதாவது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்ற அபிலாஷைகளையும் முற்றாக நிர்மூலமாக்குவதையே இலக்காகக் கொண்டிருந்தது. போரை முடித்து வைத்தல் என்பது சரீர ரீதியாக முற்றாக ஒழிப்பதுடன் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான தேச மற்றும் அரச உருவாக்கத்தை முற்றாக நிர்மூலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏதாவது அரசியல் தீர்வை நோக்கி எமது கவனத்தைச் செலுத்துவதாயின் இக்கோட்பாட்டு அடிப்படைகளில் ஏற்படும் மாற்றங்களின் தன்மையிலிருந்தே அணுக வேண்டும்.

மேலே குறிப்பிட்ட கோட்பாட்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அதாவது போரை நோக்கி மக்களைத் திருப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மக்களின் மனங்களில் ஏற்படுத்திய உளவியல் தாக்கங்களையும் நாம் புரிந்திருத்தல் அவசியமாகிறது. ராஜபக்ஸாக்களால் முன்னெடுக்கப்பட்ட பௌத்த சிங்கள ராணுவ வாதத்தினை விமர்ச்சிப்பவர்கள் அல்லது எதிர்ப்பவர்கள் துரோகிகளாக நடத்தப்பட்டார்கள் அல்லது அடையாளப்படுத்தப்பட்டார்கள். இதுவே விடுதலைப்புலிகளின் அணுகுமுறை என்பது தனியானது. இப் போரின் உள் நோக்கங்கள் மிகவும் அப்பட்டமாக சிங்கள – பௌத்த தேச உருவாக்கத்தின் அரசியல் நோக்கங்களை வெளிப்படுத்தியது. அதாவது இலங்கை என்பது தனித்துவமான சிங்கள – பௌத்த தேசம் எனவும், அது எவ்வகையிலும் பிரிக்க முடியாததை உறுதிப்படுத்தும் வகையிலான ஒற்றை ஆட்சித் தன்மையும் உடைய ராஜபக்ஸாக்களின் பரம்பரை ஆட்சிக்குரிய முடிக்குரிய நாடு என்பது பல வகைகளிலும் மக்களின் மனதில் ஊடகங்கள், பிரச்சாரங்கள், பாரிய போஸ்டர்கள் போன்றவற்றின் மூலம் மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டது.

ராஜபக்ஸாக்களின் குடும்ப ஆட்சி என்பது நிர்மாணிக்கப்பட்ட விதம் கவனத்திற்குரியது. அதாவது இலங்கை என்பது சிங்கள-பௌத்த நாடு என வர்ணிக்கப்பட்ட போதிலும் அதன் உள்ளடக்கத்தில் தேசிய செல்வத்தினை உறிஞ்சி எடுப்பதற்கு கடத்தல்காரர்கள், போதை வஸ்து வியாபாரிகள், சர்வதேச சூதாட்ட அமைப்புகள், கூடிய வட்டியில் பிழைப்பு நடத்தும் நிதி நிறுவனங்கள் என ஒரு கூட்டுக் கலவை நாட்டைக் கொள்ளையிட அனுமதிக்கப்பட்டது.

தற்போது இக்கொள்ளைக் கூட்டத்தினருக்கு எதிராக முதலில் ஊடகங்களில் செய்திகளைக் கசிய விட்டபின் மிகவும் பகிரங்கமாகவே அவர்களை ஒழித்துக் கட்டும் செயல்கள் ஆரம்பமாகியுள்ளன. ஏனெனில் நாட்டின் ஒட்டு மொத்தமான வளங்களைச் சூறையாட அவர்களே தம்மை நியமித்துள்ளனர். இதன் விளைவாக தேசிய செல்வம் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் கைகளில் சென்றடையும் விதத்தில் அதிகார மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவே இன்றைய ராணுவ, அரசியல் நிகழ்ச்சி நிரலாக அதாவது ஒரு புறத்தில் 20வது திருத்தமாகவும், இன்னொரு புறத்தில் புதிய அரசியல் யாப்பாகவும் மாறி வருகின்றன. இவ்வகை நிகழ்ச்சி நிரல் என்பது நாட்டில் பாரிய பாதிப்பை மிக நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தப் போகிறது.

ஒற்றை ஆட்சி முறையும், விளைவுகளும்

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல நாட்டினைச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதாக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வேளையில் அரசியல் யாப்பு மூலம் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் மேலும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தவுள்ளது. இவை நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களது இருப்பையும். அரசியல் அபிலாஷைகளையும் முற்றாகவே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்து வருகின்றன. அரசியல் யாப்புத் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அடிப்படை மாற்றங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் கோட்பாட்டு வகையில் மாற்றப்படுகின்றன.

ஒற்றை ஆட்சி முறை என்பது அதன் உள்ளடக்கத்தில் பல்வேறு நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக நாட்டின் அந்நியர்களான தமிழர்களுக்கு அல்லது திராவிடர்களுக்கு எதிரான ஒன்றாக கட்டி அமைக்கப்படுகிறது. ஏனெனில் இந்துக்கள் அல்லது சைவர்களான திராவிடர்கள் பௌத்தர்களை இந்தியாவிலிருந்து துரத்தியபோது இலங்கை வந்தடைந்தவர்களே பௌத்தர்கள் என்ற சிந்தனை மகாவம்சம் மூலமாக போதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இலங்கையில் தொடர்ச்சியான இந்திய எதிர்ப்பு வாதம் முன்வைக்கப்படுகிறது. தற்போது காணப்படும் இந்திய எதிர்ப்பு வாதம் என்பது இன்றைய வரலாற்றுக் காரணிகள் என்பதை விட கடந்தகால காரணிகளும், அதில் மகாவம்சம் செலுத்தும் பாத்திரமுமே பின்புலமாகும்.

ஒற்றையாட்சிக்கான புது விளக்கம்

சமீபகால போரின் பின்புலத்தில் ஒற்றை ஆட்சி என்பது புதிய விளக்கத்திற்குள் சென்றுள்ளது. அதாவது இரண்டாவது சுதந்திரத்தைப் பெற்றதாகக் கூறும் கதைகள் என்பது அந்நிய ஆதிக்கத்திடமிருந்து இரத்தம் சிந்திப் பெற்றதாகவும், அது உயர் சிங்கள – பௌத்த சிறப்பினதும், ஆதிக்கத்தினதும் வெற்றி எனவும், குறிப்பாக ஒட்டு மொத்த இலங்கையின் ஆதிக்கத்தை உறுத்திப்படுத்தியதாகவும் கூறும் விளக்கங்களாகும்.

ஒரு புறத்தில் தமது வெற்றிப் பெருமிதங்களை இரண்டாவது சுதந்திரப் போராக வர்ணிக்கும் அதே வேளை தமது எதிரிகளுக்கும் மிகவும் தெளிவான பதிலை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதாவது இன்று உருவாக்கப்படும் சிங்கள- பௌத்த பெரும் தேசியவாத கட்டுமானத்தை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பதாகும். சமீபத்தில் இலங்கை வந்திருந்த அமெரிக்க ராஜாங்க அமைச்சர் முன்னிலையில் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக அவர் ஏதாவது தெரிவித்தால் பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக அதாவது தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே அதற்கான தீர்வு வழங்கப்படும் எனத் தாம் தெரிவிக்கப் போவதாக ஜனாதிபதி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எனவே இன்று உருவாக்கப்படும் ராணுவ, அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைப்பாடுகளை மறுதலிக்கும் எவரும் மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்பது மறைமுகமான செய்தியாக வழங்கப்படுகிறது.

வாசகர்களே !

இதுவரை சிங்கள – பௌத்த பேரினவாத கோட்பாடுகளின் அடிப்படையில் நாடு எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது? என்பதற்கான சில காரணங்களைப் பார்த்தோம். இதனைப் படிக்கும் வேளையில் மீண்டும் பிரிவினைவாத சிந்தனைகளை நோக்கி தமிழ் மக்களை அழைத்துச் செல்லும் வாதங்களாக அமைந்திருப்பதாக சிலர் காணலாம். ஆனால் அவ்வாறில்லை. இவ்வாதங்கள் யாவும் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நாம் கொள்ள முடியாது. நாட்டின் அரசியல் புற நிலமைகள் சில சமயம் அவ்வாறான தோற்றப்பாட்டை உருவாக்கலாம். ஆனால் அவை எப்போதும் நிலையாக இருப்பதில்லை. உதாரணமாக 2005ம் ஆண்டு பதவிக்கு வந்த ராஜபக்ஸாக்கள் ஒரு நீண்ட கனவுடன்தான் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களின் கனவை 2015 இன் பின்னர் தொடர முடியவில்லை. அந்த தொடர் அறுந்தது. ஏன் அறுந்தது? 2019இல் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் எவ்வாறு கிடைத்தன? தற்போது முன்வைக்கப்படும் சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் ஆழமாக வேருன்றுவதற்கு முன்பதாகவே அவை தடுக்கப்பட்டன. அவை மீண்டும் செயலூக்கம் பெறும் நிலை காணப்படும் இவ்வேளையில் மீண்டும் அதனைத் தடுப்பது மிகப் பிரதானமானது. இதனை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து செயற்பட வேண்டுமெனில் தமிழ் அரசியலும் தனது பங்கினை வழங்குவது தவிர்க்க முடியாததாகும். இவ்வாறான பல கேள்விகள் எழுகின்றன.

அதேபோலவே தமிழ் அரசியலும் சில மாற்றங்களை நோக்கித் திரும்பியுள்ளது. தனித் தேசியம், தமிழ் இறைமை, சுயநிர்ணய உரிமை, சுயாட்சி, இருநாடு ஒரு தேசம் எனப் பல்வேறு கோரிக்கைகளுடன் புதிய பயணம் ஆரம்பமாகியுள்ளது. புதிய அரசியல் யாப்பிற்கான விவாதங்கள் நடைபெறுகையில் 13வது திருத்தம், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பன பற்றிய வாதங்களும் தொடர்கின்றன.

எனது அடுத்த கட்டுரை சமஷ்டி, 13வது திருத்தம் என்பன தொடர்பாக புதிய வகையில் அல்லது புதிய வழியில் சிந்திக்க முடியுமா? என்பதற்கான விவாதங்களைக் கோட்பாட்டு அடிப்படையில் நோக்கலாம். ஏனெனில் சிங்கள – பௌத்த பெரும் தேசியவாதம் அடிக்கடி ‘கோல் கம்பங்களை’ மாற்றுவதால் தமிழ் அரசியலும் வேறு வழியின்றி மாற்றிய பாதையில் தாமும் மாறிச் செல்லும் ஆபத்து ஏற்படுமா? என்ற ஏக்கம் பலமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இலங்கையின் வரலாற்று தொடர்ச்சிமிக்க தேசிய இனம் பெரும் தேசியவாதத்தின் அழுத்தங்களால் தனது அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுத்து தனது அடையாளங்களை இழந்து விடுமா? அல்லது அவ்வாறான நிலமைகளைத் தடுக்கும் பாதையை ஏற்படுத்துமா? அதற்கான வழி வகைகள் உண்டா? என்பதற்கான வாதங்களாகவே அவை அமையும்.

தற்போது காணப்படும் அரசியல் புறச் சூழலில் குறிப்பாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் அணுகுமுறைகளின் அடிப்படையில் தமிழ் அரசியல் தனது அரசியல் விளக்கங்களிலும், அணுகு முறைகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியாக வேண்டும். உதாரணமாக சுயாட்சி, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் என்ற கோட்பாடுகள் சமஷ்டி என்ற பாரிய விளக்கத்தின் உள்ளடக்கமாக அமைகின்றன. எனவே சமஷ்டி என்பது புதிய விளக்கங்களுக்குள் செல்வது அவசியமாகிறது. அவை வெறுமனே கற்பனை விவாதங்களாக அமையாமல் யதார்த்த புற நிலமைகளைக் கவனத்தில் கொண்டு, இலங்கை என்ற தேசிய உருவாக்கத்தில் கனதியான பங்களிப்பை வகிக்கும் விதத்திலும் அவை அமைதல் தேவையாகிறது. அவ்வாறாயின் அவை பற்றிய விளக்கங்கள் வெறுமனே கோட்பாட்டு அடிப்படையில் மட்டும் அணுகாமல் நாட்டின் யதார்த்த நிலமைகளைக் கவனத்தில் கொண்டும், எதிர் காலத்தில் தொடர் மாற்றங்களை உந்தித் தள்ளும் விதத்திலான ஆரம்பங்களாக எவை அமைதல் அவசியம்? என்ற விவாதங்களை நோக்கியும் செல்ல வேண்டும். இவ்வாறான விவாதங்களின்போது சிங்கள மக்கள் மத்தியில் செயற்படும் ஜனநாயக சக்திகளைப் பலப்படுத்திச் செல்வதும் இந்த அணுகுமுறைகளின் இலக்காக அமைவதும் மிக அவசியமாகிறது. தற்போதுள்ள அரசியற் புறச் சூழலில் தேவைக்கு அதிகமான அளவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமானால் எதுவுமே சாத்தியமற்றுப் போகும் ஆபத்துக்களும் உண்டு. எனவே சமஷ்டி அரசியல் அடிப்படைகளை உருவாக்குவதற்கான மாற்று வழிமுறைகளை நோக்கிச் செல்லும் புதிய கோட்பாடுகள் குறித்து அடுத்த கட்டுரையில் நோக்குவோம்.

(தொடரும்)