ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி-6)

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி-6)

— பேராசிரியர் சி. மௌனகுரு —

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும்
கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும் (பகுதி 6)

மட்டக்களப்பில் எழுந்த சாதி இன வரலாறு கூறும் நூல்களின் எதிர்வினைகள்

சாதி இன வரலாறு கூறும் நூல்கள்

மட்டக்களப்புப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் எழுந்த நான்கு நூல்களை இங்கு நான் எடுத்துக் கொள்கிறேன். அவையாவன :

  1. சீர்பாதகுல வரலாறு

எழுதியவர் – அருள் செல்வநாயகம் (1982)

  1. மட்டக்களப்பு குகன் குல முக்குவர் வரலாறு

எழுதியவர் – சி.சண்முகமூர்த்தி(2000)

  1. மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை

எழுதியவர் – மணிப் புலவர் மருதூர் மஜீத் (1995)

  1. அக்கரைப்பற்று வரலாறு

எழுதியவர் – ஏயாரெம் சலீம் (1990)

இந்நான்கு நூல்களும் 1980 களிலிருந்து 2000 வரையுள்ள 20 வருட காலத்துள் எழுந்த நூல்கள். முன்னிரு நூல்களும் முறையே மட்டக்களப்பில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் சாதிப் பிரிவினராகிய சீர்பாதர் பற்றியும் முக்குவர் பற்றியும் கூறுவன. பின்னிரு நூல்களும் கிழக்கு மாகாணத்தின் முஸ்லீம்கள் பற்றி, குறிப்பாக மட்டக்களப்பின் தென்கிழக்கு முஸ்லீம்கள் பற்றிக் கூறுவன.

இந்நான்கு நூல்கள் விபரங்களைத் தரும் முறையிலும், நம்பகத் தன்மையிலும் தாரதம்மிய வேறுபாடு கொண்டவை. சரித்திர ஆதாரங்களைவிட வாய்மொழிக்கதைப் பண்பே இவற்றில் அதிகம் காணப்படுவதும் இவ்வாராய்ச்சிக்கு இந்நூல்கள் பயன்படுத்தப்படும் முக்கிய காரணிகளுள் ஒன்று.

நூல் – 01

சீர்பாதகுல வரலாறு (1982)

சீர்பாத குலத்தின் வாய்மொழி வரலாற்றினடிப்படையிலும் சீர்பாதகுலம் பற்றிக் கிடைக்கும் ஏடுகளினடிப்படையிலும் புனைகதைகளுக்குரிய முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் செல்வாக்கு மிக்கதான சீர்பாதகுலத்தின் தோற்றம் பற்றி இதிற் கூறப்படுகின்றது.

ஈழநாட்டில் நாக நாட்டுச் சிங்கள அரசனான உக்கிர சிங்கனுக்கும் சோழநாட்டு இளவரசி மாருதப்புரவிக வல்லிக்கும் பிறந்த பால சிங்கன் (ஜெயதுங்க பரராஜசிங்கன்) புகழ் பெற்ற சோழ அரசன் விஜயாலயச் சோழனின் புதல்வியான சீர்பாத தேவியை மணந்து, ஈழம் திரும்பிய போது விஜயாலயச் சோழனின் தந்தை குமாரங்குசன் தன் மகளுடன் திருவாரூர், பெருந்துறை, பளையாறை, காட்டுமாவடி ஆகிய இடங்களில் வாழ்ந்த முதன்மையான அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் எனும் குலத்தைச் சேர்ந்த தலைவர்களையும், குடும்பங்களையும் தேர்ந்தெடுத்து ஈழம் அனுப்பினான். கப்பல் பல தடைகளைத் தாண்டி மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியான வீரமுனையிற் கரை தட்டியது. அங்கு அவர்கள் ஒரு பிள்ளையார் கோயிலை எழுப்பினர் (சிந்து யாத்திரைப் பிள்ளையார்) அக்கோயிலை மையமாக வைக்க அரசர், பிராமணர், வேளாளர், வணிகர் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) நால்வரையும் ஒரு சாதியாக்கி அச்சாதிக்கு சீர்பாதகுலத்தவர் எனப் பெயரிட்டு கதிரமலை சென்றனர் என்ற கதை இந்நூலில் கூறப் படுகின்றது.

ஆசிரியர் இந்நூலில் சீர்பாதகுலத்திற்கான ஒரு வரலாற்றைக் கூறுவதுடன்

‘கிறிஸ்துவுக்கு முன் 8ஆம் நூற்றாண்டில் வீரமுனையில் வளரத் தொடங்கிய சீர்பாத குலத்தவர்கள் இருபதாம் நூற்றாண்டாகிய இக்காலத்தில் மல்வத்தை, துறைநீலாவணை, சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி, குறுமன்வெளி, மகிழுர்முனை, மண்டூர் கோட்டைமுனை, தம்பலவத்தை, பாலமுனை, கரையாக்கான்தீவு எனும் ஊர்களில் நிறைந்து வாழ்கிறார்கள். இவ்வூர்களனைத்தும் சீர்பாத குலத்தவர்கள் மட்டும் நிறைந்து வாழும் தனி ஊர்களாகத் துலங்குகின்றன’ – என்கிறார் நூலை முடிக்கும் போது. ‘ சீர்பாத குலத்தவர் அன்று பூணூல் அணிந்து அரசகுல கெளரவத்துடன் வாழ்ந்தார்கள். அரச மரபினைச் சேர்ந்த சீர்பாத குலத்தவர்களின் மங்காத சிறப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்’ என்று முடிக்கின்றார்.

சீர்பாத குலத்தவர்களின் பண்டைய சிறப்புக்களைக் கூறுவதே ஆசிரியரின் நோக்கம் என்பது தெளிவாகின்றது.

‘பெருமைமிக்க மக்களைப்பற்றி அவர்களின் தோற்றம், கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை இவற்றை விரிவாக எடுத்துரைக்கும் நூல்’ என்று F.X.C. நடராஜா அணிந்துரையிற் குறிப்பிட்டாலும் இந்நூலில் சீர்பாத குலத்தவரின் பண்பாடு, வாழ்க்கை முறை என்பன பற்றி விபரங்கள் காணப்படவில்லை.

மட்டக்களப்பின் சமூக அமைப்பினை ஆராய்பவர்கள் அங்குள்ள சமூக அமைப்பில் உள்ள சாதியமைப்பினை மேனிலை, இடைநிலை, கீழ்நிலை என வகுத்துள்ளனர். பொருாளாதாரம், பண்பாடு, அதிகாரம், சனத்தொகை என்பவற்றைக் கொண்டே இவ்வண்ணம் பிரித்தனர். இவருள் வேளாளர், முக்குவர், சீர்பாதக்காரர் என்போர் மேனிலையிலும், கரையாரும், கை வினைஞர்களும் (கொல்லர், தட்டார்) இடைநிலையிலும் ஏனையோரான நளர், அம்பட்டர், கடையர் முதலியோர் கடைநிலையிலும் வைத்து நோக்கப்படுகின்றனர்.

இச்சமூகங்களுள் வேளாளர், முக்குவர், சீர்பாதக்காரர், கரையார் என்போரே அதிக சனத்தொகைக் கொண்ட சாதியினராவர். சனத்தொகையடிப்படையில் முக்குவர், வேளாளர், கரையார், சீர்பாதக்காரர் என இவர்களை வரிசைப்படுத்தலாம். இவர்களுள் சனத்தொகை கூடியோர் முதல் மூன்று சாதியினருமே.

முக்குவ வன்னிமைகள் கண்டியரசனுடன் உறவாயிருந்தமையினால் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயருக்கு எதிர்ப்பாயிருந்ததுடன் அதிகளவில் மதமும் மாறவில்லை. ஆனால் வேளாளர், கரையார், சீர்பாதக்காரர் ஆங்கிலக் கல்வி பயின்று புதிய வாழ்க்கை முறைக்கு இயைய வளர்ச்சி பெற்றனர்.

பெரும்பாலான அரசாங்க உத்தியோகங்களை முக்குவர் தவிர்ந்த 3 சாதியினருமே வைத்துக் கொண்டனர்.

சனத்தொகைக் காரணமாக முக்குவர், வெள்ளாளர், கரையார் வகுப்பிலிருந்தே பாராளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் சீர்பாதக்காரருக்கு அந்த வாய்ப்பு இருக்கவில்லை. மண்டூர்க் கோயிலிலும், ஏனைய சில கோயில்களிலும் முக்குவர், வேளாளருடன் உரிமை பெற்றிருந்தனர்.

ஆங்கிலக் கல்வி பெற்று அதனால் அரசாங்க உத்தியோகங்களில் அமர்ந்த சமூக அசைவியக்கம் பெற்ற சீர்பாதக்காரர் தம் சாதிப் பெருமையையும், தமது இருப்பையும் கூற வேண்டியதாயிற்று. இதனால் மட்டக்களப்பு வரலாற்றில் தம்மை நிலைநிறுத்த இவர்கள் தம் சாதி வரலாறு எழுதினர். தம்மை இந்தியாவை ஆண்ட சோழருடனும், யாழ்ப்பாணத்தை ஆண்ட உக்கிர சிங்கனுடனும் இணைத்துக் கொண்டனர்.

சீர்பாத குலத்தவர் தம்மைப் பிராமணர்களுடனும், அரச வம்சத்துடனும் இணைத்து சமூகத்தில் மேனிலையாக்கம் பெற முயற்சிப்பதை இந்நூல் எமக்குணர்த்துகிறது.

நூல் – 02

மட்டக்களப்பு குகன்குல முற்குகர் வரலாறும் மரபுகளும் (2000)

முக்குவர் பற்றிக் கிடைக்கின்ற வாய்மொழிக் கதைகளையும், வரலாற்று ஆவணங்களையும் நடைமுறை வாழ்க்கை ஆவணங்களையும் நடைமுறை வாழ்க்கை மரபுகளையும் ஆதாரமாக வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் ஆட்சியுரிமை பெற்றிருந்து, இன்று அதிகார பலமின்றி இருக்கும் முக்குவர் இந்நூலிற் காட்டப்படுகின்றனர்.

முக்குவரின் மட்டக்களப்பு வருகையினை கி.பி. 2 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிடும் ஆசிரியர் முக்குவரை இராமாயண பாத்திரங்களுடன் – கங்கையைக் கடக்க இராமனுக்கு உதவிய குகனுடன் – இணைக்கின்ற வாய்மொழி மரபை அப்படியே கூறுகின்றார்.

மட்டக்களப்பு முக்குவர்கள் தாம் இராமனுக்கு கங்கை நதியைக் கடக்க உதவிய குகனின் மரபு வழியில் வந்தவர்களென்றே கல்வெட்டுக்களில் அழைக்கப்படுகின்றனர். ‘முற்குகர் என்பது முக்குகர் எனத் திரிபுபட்டு பின்னர் பேச்சு வழக்கில் முக்குவர் என்றாயிற்று’ என்று முக்குவரை முற்குகர் எனக் குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.

இந்நூலில் மட்டக்களப்பில் ஆதியில் குடியேறிய நாகரிகமிக்க குடிகளாக முக்குவர் காட்டப்படுகின்றனர். இங்கு ஏற்கனவே இருந்த வேடரை வென்று திமிலரைத் துரத்தி (பட்டாணியர் உதவியுடன்) ஆட்சியுரிமை பெற்ற சாதியினராக முக்குவர் கூறப்படுகின்றனர்.

மட்டக்களப்பு நாட்டுக்கோயில் வழிபாட்டையும், ஒழுங்கையும் நாகரிகத்தையும் தந்த சாதியினராக இவர்கள் காட்டப்படுகின்றனர். பின்வரும் ஆசிரியர் கூற்று இதனை விளக்கும்.

‘மட்டக்களப்பு நாட்டிற்கு முதன் முதல் குடியேறிய தமிழர்கள் முற்குகர்களாக இருப்பதால் அவர்களே திருக்கோயில் பதிக்கு ஊழியம் செய்வதற்காக ஆட்களைக் கொண்டு வந்து குடியேற்றி ஆலயத்திற்கும், ஆலய ஊழியர்களின் சேவைக்கும் தேவையான காணிகளை பூமிகளை வழங்கி ஆலய வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்தினர்.’ இத்திருப்படைக் கோயில்களின் பாதுகாவலர்களாகவும், வன்னிமைகளாகவும் அக்காலம் தொட்டே முக்குவ குலப் பிரபுக்கள் இருந்து வந்தனர் என்று கூறப்படுகின்றது.

முக்குவ குலத்தின் பெரும் அரசியாக ஒரிஸ்ஸாவிலிருந்து இங்கு வந்து, மண்முனை நகரை நிறுவி, ஆட்சிபுரிந்த உலகநாச்சி காட்டப்படுகின்றாள். அவள் ஆண்ட உன்னரசகிரி ஒரு இராசதானியாகக் காட்டப்படுகின்றது. அவளுக்கு முன்னரேயே முக்குவர் ஆட்சி இருந்தமையும் வலியுறுத்தப்படுகின்றது. முற்குகர் குல அரசியான உலகநாச்சி (உலகநாச்சியின் வருகை) மட்டக்களப்பிலிருந்து ஆட்சி செய்த காலத்திலிருந்தே மட்டக்களப்பில் முற்குகச் சிற்றரசர்களது ஆட்சி ஏற்பட்ட தென்று கூறக் கூடியதாக இருக்கிறது. ஆயினும் குணசிங்கனும் அவனுக்கு முந்தியவர்களும் உலகநாச்சியினது உறவினர்கள் எனக் கொள்ளும்போது மட்டக்களப்பில் முற்குகர் குலத் தமிழ் அரசர்களது காலம் இன்னும் பல ஆண்டுகள் முன்னே ஏற்பட்டதெனக் கூற வேண்டியுள்ளது.

உலகநாச்சியாரை மட்டுமின்றி ஏறாவூரை ஆண்ட இளஞ்சிங்க வன்னியன், பனிச்சங்கேணி வன்னிச்சி, விந்தனை வன்னிச்சி என்று ஓர் அரச பரம்பரை சுட்டிக்காட்டப்படுகின்றது.

அரசர்கள் மாத்திரமின்றி அரசின் பிரதிநிதிகளாயும் ஊர்த் தலைமைக்காரர்களாயும் வாழ்ந்த முக்குவர் குலப் போடிமார் பற்றியும் கூறப்பட்டுள்ளது. கண்டியரசனின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றும் அளவிற்கு மன்னனின் மதிப்புப் பெற்றவர்களாகப் போடிமார் காட்டப்பட்டுள்ளனர்.

கண்டியரசனின் கீழ் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குரிய ஆட்சிப் பொறுப்பைக் கவனித்த நிலாமைப் போடிகள் பற்றியும் பிரித்தானிய ஆட்சி வரை அது நீடித்தது பற்றியும் நூல் கூறுகிறது.

இம்முக்குவர் குடிகளாகப் பிரிந்திருந்தமை குலவிருதுகள் பெற்றிருந்தமை அவர்கட்கெனத் தனிப்பட்ட மரபுகள், சட்ட முறைகள், பழக்க வழக்கங்கள் இருந்தமையாவும் விபரமாகக் கூறப்பட்டுள்ளன. (இவற்றை இந்நூலில் உள்ள முக்குவச் சட்டம், மரபுகள் எனும் தலைப்பில் அமைந்த அத்தியாயங்கள் விளக்குகின்றன).

ஆட்சியுரிமையும், செல்வாக்கும் பெற்ற முக்குவர் அந்நியரை எதிர்த்துக் கண்டி மன்னருடன் இணைந்து போராடியவர்களாகக் காட்டப்படுகின்றனர். இப்போராட்டமே அச்சாதியினரின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்றாம். ஆசிரியர் அதனை இவ்வாறு கூறுகின்றார்.

‘சைவ மதம் தழைத்தோங்க உதவிய முக்குவர்களான வன்னிய ராசாக்கள் தமது சுதந்திரத்தை காத்துக் கொள்வதற்காக அந்நிய எதிரிகளுடன் போராடிய போது உயிரிழக்க நேரிட்டது. அது மட்டக்களப்பில் முக்குவர் இனத்திற்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.’ இத்தகைய வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதம் மாறி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து ஆங்கிலேயரிடம் முதலியாராக இருந்த பஸ்கோல் முதலியும் காட்டப்படுகின்றார்.

முக்குவருக்குரிய பரம்பரை உரிமைகளை நீக்கியதுடன் மதம்மாறி பட்டம் பதவி பெற்றதுமல்லாமல் முக்குவப் போடிகளுக்குச் சொந்தமாக இருந்த நிலங்களையெல்லாம் பறித்து பிரித்தானிய முடிக்குரிய காரணிகளாக மாற்றும் கைங்கரியத்தை செய்தவனாக இவன் காட்டப்படுகின்றான்.

மதம் மாறாமல் முக்குவர் இருந்தமையே அவர்கள் பின்தங்கி இருந்தமைக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இவ்வகையில் இவ்வாசிரியர் அதிகாரத்தில் இருந்த ஒரு சாதியின் பழைய பெருமைகளைக் கூற வருகின்றார். அண்மைக் காலமாக முக்குவர் கல்வியிலும், பொருளாதாரத்திலும், அரசாங்க உத்தியோகங்களிலும் மேனிலை பெற்று வருகின்றனர்.

கிறிஸ்தவ மத வருகை காரணமாகவும், ஆங்கிலக் கல்வியினாலும் மட்டக்களப்பில் அதிக பயன் பெற்ற இரு பெரும் சாதியினர் வெள்ளாளரும், கரையாருமே. இவர்களே அரசப் பதவிகளில் முக்கிய இடங்களில் அமர்ந்தனர். ஆனால் அண்மைக் காலமாக முக்குவரிடம் ஏற்பட்ட சமூக அசைவியக்கம் அவர்களிடம் கல்விமான்களையும், அரச அதிகாரிகளையும் தந்துள்ளது. அவர்கள் பற்றிய வரலாறு எழுதுமளவுக்கு அவர்களை ஆக்கியுள்ளது. ஏற்கனவே உள்ள முக்குவர் வரலாறு கூறும் மட்டக்களப்பின் பூர்வீக சரித்திரம், மட்டக்களப்பு மான்மியம் என்பன இதற்கான அடித்தளத்தைத் தந்துள்ளன.

ஒருவகையில் சைவ வேளாள மேன்மைமிக்க யாழ்ப்பாண மையம் கொண்ட தமிழ் மக்களின் சரித்திரக் கட்டமைப்புக்கு மாற்றாக, இந்து முக்குவ மையம் கொண்ட சரித்திரத்தினை கட்டமைப்பதற்கான விதைகளை இந்நூலிற் காணமுடிகிறது.

யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டை, கந்தரோடை, பூனகரி, நல்லூர் என இராசதானிகள் இருந்தால் மட்டக்களப்பிலும் உன்னரசகிரி, மண்முனை, ஏறாவூர், பனிச்சங்கேணி என அரசுகள் இருந்தன என்றும், ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தில் ஆண்டால் மட்டக்களப்பில் உலகநாச்சி ஆண்டாள் என்றும் சங்கிலியன், பண்டாரவன்னியன் போன்றோர் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து வடக்கிலே போராடினார்கள் என்றால் கிழக்கில் முக்குவ வன்னிமைகள் கண்டிப் பிரதானிகளுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி தூக்கில் இடப்பட்டனர் என்றும் யாழ்ப்பாணத்துக்குத் தேசவழமைச் சட்டமாயின் மட்டக்களப்புக்கு முக்குவச் சட்டம் உண்டென்றும் ஆகம முறைப்பட்ட பண்பாடு, பழக்கவழக்கம் யாழ்ப்பாணத்துக்குரியதாயின் மட்டக்களப்பில் முக்குவர்களிடம் ஆகம முறைசாராத தனித்துவமான பண்பாடு, பழக்க வழக்கம், மரபுகள் உண்டென்றும் சான்றுகளைக் காட்டுவதன் வாயிலாக சைவ வேளாள யாழ்ப்பாண மையம் கொண்ட தமிழர் சரித்திரத்திற்கு ஒப்ப மட்டக்களப்பை மையம் கொண்ட ஒரு இந்து முக்குவ தமிழர் சரித்திரத்தை கட்டமைக்க முயலும் எத்தனத்தை இந்நூலில் காணமுடிகின்றது.

தமிழர் தம் உரிமைகட்காகப் போரிடும் இன்றைய கால கட்டத்தில் தமிழர் சரித்திரத்தில் தம் இடம் நிலைநாட்டப்பட ஒரு சமூகக் குழுவினர் எடுக்கும் முயற்சியான தமது பாரம்பரிய உரிமைகளைக் கோரும் முயற்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது. ஒரு வகையில் யாழ்ப்பாண மையவாதத்திற்கு மறுதலையாக மட்டக்களப்பு மைய வாதத்தினை இந்நூலில் மறைமுகமாகக் காணவும் முடிகின்றது.

(தொடரும்)