— படுவான் பாலகன் —
‘மாடு வைத்திருக்கன் என்று பெயருதான் அதை வளர்த்து நிமிர்த்திறதில இருக்கிற சவால் பார்ப்பவர்களுக்கு எப்படி புரியும். நம்மட உயிரைப் பணயம் வைத்துதான் இந்த உயிர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கு’ என சாமித்தம்பி இராசதுரையுடன் பேசிக்கொண்டிருந்தார்.
தாந்தாமலைக்கு மேற்குப்புறம் உள்ள காட்டுப்பகுதியில் மாடுகளை மேய விட்ட பின்னர் சாமித்தம்பியும் இராசதுரையும் ஒரு மலையில் பேசிக்கொண்டு இருக்கும் போதே இவ்வுரையாடலும் இடம்பெற்றது.
வீட்டுக்கவலைகளையும், கஸ்டங்களையும் பேசிக் கொண்டிருந்த இருவரும் தங்களது தொழில்பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ‘மாடு வைத்திருக்கன் என்று இலகுவாக சொல்லித்து போய்விடுவார்கள். மாடுகளுக்கு உணவுகொடுக்கிறதுக்கு அனுபவிக்கும் துன்பதுயரங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படி புரியப்போகுது.’
நமது பகுதிகள் எல்லாம் விவசாயம்(பயிர் செய்யும்) செய்கின்ற பகுதிகள் என்பதால், பயிர்ச் செய்கை ஆரம்பித்தால் மாடுகளை மேய்ப்பதற்காக மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்குதான் கொண்டு செல்ல வேண்டும். எல்லைப்பகுதியென்றால் புற்தரைகளைக் கொண்ட ஒருவெட்ட வெளி, சுற்றி மனிதர்கள் குடியிருக்கும் இடம் என்று நினைத்துவிடாதீர்கள். மிருகங்கள் வாழ்கின்ற காட்டுப்பகுதியில்தான் மாடுகளை மேய்க்க வேண்டும். அதற்காக அக்காடுகளிலேயே தங்குவதற்கும் ஒரு குடிசையை அமைக்க வேண்டும். அதில்தான் இரவுத் தங்கலும், உணவு சமைத்தலும் நடக்கும்.
நீண்ட நாட்களுக்கான உலர் உணவுகளை எடுத்துக்கொண்டு சென்றால், அவை தீரும்போதுதான், அடுத்த சிறிது காலத்துக்கான உணவினை எடுத்துவருவதற்காக தமது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச்செல்வர். மீண்டும் மேய்ப்பதற்காக சென்றுவிட்டால் இன்னும் சிறிது நாட்களின் பின்னர்தான் மீண்டும் வீடுதிரும்புவர். இதனால் மனைவி, பிள்ளைகளோடு சேர்ந்து இருக்க முடியாத துர்ப்பாக்கியம் இவர்களுக்கு.
மாடுகளை மேய்ப்பதுவும் காவல் புரிவதும்தான் இவர்களின் வாழ்க்கையாகி விட்டது. இந்த நிலையில்தான் இப்படிப் பேசுகிறார் சாமித்தம்பி. காலையில் எழுந்தால் இரவில் கொண்டுவந்து மாடுகளை இருப்பிடத்தில் கொண்டுவிடும் வரையும் நடைதான். அதன்போது முள்ளிலும், கம்புகட்டைகளிலும் கால்வைத்து அடிபடுவதுமுண்டு அவற்றினை பெரிதுபடுத்துவதுமில்லை. குளங்கள் உள்ள இடங்களுக்கு சாய்த்துக்கொண்டு விட்டால் தேவையான நீரினை அருந்துங்கள். புல் இருக்கும் இடங்களில் மேயவிட்டால் புல் உண்ணுங்கள். கண் எல்லைக்குள்ளேயே மாடுகள் இருக்கின்றதா என பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அவதானத்தோடு இருக்காவிட்டால் அவை வழிதவறிபோய்விடும், அவ்வாறு சென்றால் மாடுகளை யாரவாது பிடித்து கட்டி வைத்துவிடுவார்கள். சிலர் சுட்டு உணவாக சாப்பிட்டுவிடுவதும் உண்டு. ‘மாடுகளை கட்டிவைத்து, போன வருடம் 2இலட்சம் ரூபாய் பணம் கட்டியிருக்கன். சிலமாடுகள் காணமாலும் போயிருக்கு. அதனால் கண்ணும் கருத்துமாய் நின்று மாடுகளை மேய்க்க வேண்டும். பகுத்தறிவுள்ள மனிதர்கள் சொன்னாலும் கேட்காதபோது ஐந்தறிவுள்ள ஜீவனை வழிநடத்துவது இலகுவான காரியமுமில்லை.’ என்றார் அவர்.
‘நேரத்துக்கு சாப்பாடும், நீரும் கொடுக்கவேண்டும், வேறுதிசைகளுக்கு போயிடாம பார்க்க வேண்டும். நாம் உண்பதற்கும் சமைக்க வேண்டும். இத்தனையும் கடந்து ஏனைய மிருகங்களில் இருந்து நம்மையும் பாதுகாத்துக்கொள்ளணும் இதெல்லாம் சொல்லுவதற்கு இலகுவாகத்தான் இருக்கும். அனுபவித்தால்தான் புரியும்.’ என்றார் சாமித்தம்பி.
‘தங்கியிருக்கும் இடம் காடு என்பதினால் எல்லா மிருகங்களும் இதில் வாழும். ஆனாலும் யானைக்கே அதிக பயம். அதற்காக இரவில் தூங்காது கண்விழித்து இருப்பதுண்டு. அவ்வாறு வருகின்ற யானைகளை துரத்துவதுமுண்டு. காடென்பதினால் பகல் நேரங்களிலும் குளங்களின் அருகிலும், குளத்திலும் யானைகள் நின்றுகொண்டிருக்கும். அவ்வேளை மாடுகளுக்கும் நீர்கொடுக்க வேண்டும். அதன்போது யானைகளை அவ்விடத்தில் விட்டு துரத்த வேண்டும். எனக்கூறிய சாமித்தம்பி, அண்மையில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றினையும் அவ்விடத்தில் பகிர்ந்து கொண்டான்.
‘ஒரு நாள், நிறைய யானைகள் குளத்தருகில் நின்றுகொண்டிருந்தன. அவ்யானைகளைத் துரத்தியபோது, ஒருயானை மட்டும் ஒரு ஓரத்தில் பற்றையருகில் மறைந்து நின்றிருந்தது. அப்போது மூன்றுபேர் அங்கே சென்றோம். அந்த யானை மறைந்து நின்றதை காணவில்லை. தீடிரென தும்பிக்கையை நீட்டி நடுவில் சென்றவரை தும்பிக்கையால் தூக்கி எடுத்தது. ஆனால் அவ்யானையின் பிடியில் இருந்து அவர் நழுவிவிட்டார். இதனால் யானையின் காலுக்குள் அகப்பட்டு, உயிர் போகாமல் தப்பிவிட்டார். நெஞ்சில் மட்டுமே அடிபட்டது. வைத்தியசாலையில் ஐந்து நாள் இருந்துவிட்டு திரும்பவும் வந்திட்டார். யானையின் பிடி ஒழுங்காக இருந்திருந்தால் அவர் இறந்து சகல கடமைகளும் முடிந்திருக்கும். அதற்காக அவர் பயந்து அத்தொழிலை விடவில்லை. மீண்டும் மாடுமேய்க்கும் இடத்திற்கே வந்துவிட்டார்.’ என்றார் அவர்.
முதலில் யானைப்பயம் இப்போது மனிதர் பயம்
‘முதலெல்லாம் மாடு மேய்பதில் சாவால்கள் நிறைந்திருந்தாலும், இப்போது போன்று இல்லை. இப்போது யானைக்கு பயப்படுவதைவிட மனிதர்களுக்கே அதிகம் பயப்பட வேண்டியிருக்கு. அந்தப்பக்கம் போனால் அவன் மாட்டை சுடுவான், இந்தப்பக்கம் போனால் கட்டி வைப்பான். அடுத்த பக்கம் சென்றால் புல் இல்லை. இப்படி ஒவ்வொரு பக்கமும் பிரச்சினைகள் சூழ்ந்துள்ளன. மாடுகளுக்கு நோய்வந்தால் ஒவ்வொன்றாக, பட்டியோடு இறப்பதுமுண்டு. இப்பவும் அண்மையில், மின்னல் தாக்கி, ஒருபட்டிக்காரரின் 14 மாடுகள் இறந்தன. அடிக்கடி மாடுகளும் களவுபோகின்றன. ஒழுங்கான மேய்ச்சல்தரையும் இல்லை. நம்மளும் பிள்ளைகளை, குடும்பத்தை விட்டுட்டு காட்டில் வந்து இருக்கம். ஒழுங்கான நித்திரையும் இல்லை. நேரத்திற்கு சாப்பாடும் இல்லை. இதையெல்லாம் சிந்திக்கும் போது எல்லா மாடுகளையும் விற்றுப்போட்டு வேற ஏதும் தொழில்களை செய்யலாம் என்று சிந்தித்தாலும், இந்த மாடுகளை பார்க்கக்குள்ள அதுகளை விற்கவும் மனமில்லாது இருக்கு. இம்மாடுகளை பார்க்கும் போதுதான் சந்தோசமும் ஏற்படும். இதனால் இப்பவரைக்கும் இவ்வளவு கஸ்டத்தையும் அனுபவித்து வச்சிட்டு இருக்கன்’ என்றார் சாமித்தம்பி.
நீண்ட நேரமாக சாமித்தம்பி பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த இராசதுரையும், ‘நீங்க இப்படி கஸ்ரப்படுறீங்க. மேய்ச்சல்தரை ஒழுங்காக வரையறையோடு இருந்திருந்தால் இப்படி பெரிய சிக்கல்களும் வராது’ என்றார்.
இவ்வாறு பிரச்சினைகள் சூழ்ந்துள்ள நிலையில், இராசதுரையும் அண்மையில் மாவட்டத்தில் இடம்பெறும் பிரச்சினையொன்றையும் ஞாபகப்படுத்தினார். ‘மயிலத்தமடு பகுதியில் மேய்ச்சல்தரையில் விவசாயம் செய்கின்றனராம். இதனால் அங்க மாடுமேய்க்கச் சென்றவர்கள் திரும்பி வந்திட்டனராம். இதெல்லாம் பார்க்கப் பார்க்க வருங்காலம் மாடு வளர்ப்பு தொழில் இல்லாமல்தான்போகும் போல’ எனக்கூறிய இராசதுரை; ‘மாடுகள் அந்தப்பக்கமாக போகுது. அண்ண சத்தம்போடுங்கோ, என்று கூறிட்டு மாடுகளை சாய்த்துக்கொண்டு இருப்பிடத்தினை நோக்கி இருவரும் நகர்ந்தனர்.