சொல்லத் துணிந்தேன்—37

சொல்லத் துணிந்தேன்—37

—-தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—

20ஆவது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தன்னிலை விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்றினைக் கல்முனையில் 25.10.2020 அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரிஷ் நடத்தியவேளை ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களாகக் கல்முனை நகரை எம்மிடமிருந்து (முஸ்லிம் மக்களிடமிருந்து) பறிக்க முற்பட்டது’ எனக் கூறியுள்ள கூற்று அப்பட்டமான வரலாற்றுத் திரிபு ஆகும்.

அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு மாவட்டமானது நிர்வாகத் தேவைகளுக்காக ‘வன்னிமை’களாகப் பிரிக்கப் பிரிக்கப்பட்டிருந்தன. அப்போதைய நிர்வாக அலகான ‘வன்னிமை’யைத் தற்போதுள்ள பிரதேசச் செயலகப் பிரிவுடன் ஒப்பிடலாம். ஒவ்வொரு வன்னிமைகளும் ‘உடையார்பிரிவு’ எனும் துணைப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. உடையார் பிரிவுகள் மேலும் போலீஸ் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இப் பொலீஸ் துணைப் பிரிவுகள் ‘குறிச்சிகள்’ (Village Headman’s Division) என அழைக்கப்பட்டன. கல்முனை ஒரு தனியான உடையார் பிரிவாக இருந்தது. அது கல்முனை முதலாம் குறிச்சி, கல்முனை இரண்டாம் குறிச்சி, கல்முனை மூன்றாம் குறிச்சி என மூன்று குறிச்சிகளைக் கொண்டிருந்தது. இம்மூன்று குறிச்சிகளும் நூறு வீதம் தமிழர்களைக் கொண்டிருந்தன.

அதேபோல் கல்முனையின் அயற் கிராமமான கல்முனைக்குடி, கல்முனைக்குடி முதலாம் குறிச்சி, கல்முனைக்குடி 2ம் குறிச்சி, கல்முனைக்குடி மூன்றாம் குறிச்சி, கல்முனைக்குடி நான்காம் குறிச்சி, கல்முனைக்குடி ஐந்தாம் குறிச்சி என ஐந்து குறிச்சிகளைக் கொண்டிருந்தது. கல்முனை வேறு; கல்முனைக்குடி வேறு. கல்முனை தமிழ்க் கிராமம் கல்முனைக்குடி முஸ்லிம் கிராமம்.

பின்னாளில் கல்முனைக் குடியைக் கல்முனையோடு இணைத்து 1897 இல் கல்முனை என்ற பெயரில் ‘சனிற்றரி’ சபை (Sanitary Board) நிறுவப்பட்டது. பின்னர் இது 1946 ஆம் ஆண்டின் மூன்றாம் இலக்கப் பட்டின சபைகள் சட்டத்தின் கீழ் 1947 இல் கல்முனை என்ற அதே பெயரில் பட்டின சபையாக (Town Council) ஆக்கப்பட்டது. அதன் பின்னர் பல நிர்வாக மற்றும் உள்ளூராட்சிச் சீர்திருத்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

கல்முனைக் கிராமத்தையும் கல்முனைக்குடிக் கிராமத்தையும் பிரிக்கும் எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியாகும்.

தனித்தனிக் கிராமங்களாக விளங்கிய கல்முனையின் மூன்று குறிச்சிகளையும் கல்முனை குடியின் ஐந்து குறிச்சிகளையும் சேர்த்துத்தான் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் திட்டத்துடன் புதிதாக 1947 இல் உருவான கல்முனைப் பட்டின சபையானது இரண்டு வட்டாரங்கள் தமிழ்ப் பெரும்பான்மை வட்டாரங்களாகவும் ஐந்து வட்டாரங்கள் முஸ்லிம் பெரும்பான்மை வட்டாரங்களாகவும் மொத்தம் ஏழு வட்டாரங்களுடன் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அரசியல் செல்வாக்கும் பொருளாதார பலமும் மிக்க முஸ்லிம் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட சதியினால் கல்முனைக் கிராமம் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டதே தவிர முஸ்லிம் கிராமங்களுக்குத் தமிழர்கள் ஒருபோதும் உரிமை கோரியதில்லை.

கல்முனைத் தமிழர்கள் இன்று தரமுயர்த்தக் கோரி நிற்கின்ற கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப்பிரிவின் தெற்கு எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியாகும். இது கல்முனைக் கிராமத்தின் பாரம்பரிய எல்லையாகும். இங்கே கல்முனைத் தமிழர்கள் கல்முனைக் குடியை ஆக்கிரமிக்கவில்லை. 1947 இல் இருந்து ஆரம்பித்து இன்று வரை கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாகக் கல்முனையை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்களே தவிர உண்மை வேறொன்றில்லை.

மேலும் 12 .04. 1987 இல் உப அலுவலகமாகத் திறக்கப்பட்டுப் பின்னர் 1993 இல் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்பெற்ற கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுமுயர்தித்தரும்படிதான் தமிழர்கள் கேட்டிருக்கிறார்கள். இது புதியதொரு கோரிக்கையோ அல்லது ஹரிஸ் கூறுவதுபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த ஐந்து வருட கால கோரிக்கையோ அல்ல.

இந்த உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உள்ளேதான் கல்முனை அடங்குகிறது. அப்படியிருக்கக் கல்முனை நகரை முஸ்லிம்களிடமிருந்து பறிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலங்களாக முற்பட்டது என்ற கூற்று முற்று முழுதான பொய்யும் வரலாற்றுண்மைக்கு மாறுபட்டதுமாகும்.

கல்முனைக் கிராமத்தை கடந்த எழுபது வருடங்களாக முஸ்லீம்கள் ஆக்கிரமித்த போதிலும் கூட இன்றும் கல்முனையில் தமிழர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு கல்முனை என்பது அப்போதைய கல்முனை முதலாம் குறிச்சி, கல்முனை இரண்டாம் குறிச்சி, கல்முனை மூன்றாம் குறிச்சி ஆகியவற்றை உள்ளடக்கியும் அதன் தெற்கு எல்லையாகக் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியையும் வடக்கு எல்லையாகத் தாளவெட்டுவான் வீதியையும் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கு எல்லையாகக் கிட்டங்கி வாவியையும் கொண்டதாகவும் அமைந்த நிலப்பரப்பு ஆகும். இது பாரம்பரிய தமிழ்க் கிராமம் ஆகும்.

முஸ்லிம்களிடையே முக்கியமான அரசியல் கட்சியாகத் திகழ்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராகவும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற ஹரிஸ் போன்றவர்கள் இவ்வாறு வரலாற்றைத் திரிவுபடுத்திக் கூறி அப்பாவித் தமிழ், முஸ்லிம் மக்களைத் தவறாக வழி நடத்தக் கூடாது.