— ‘தேசம் நெற்’ சஞ்சிகையின் ஆசிரியர், த.ஜெயபாலன் —
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது!
ஜோபைடன் வெற்றி பெற்றால் அமெரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!
அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கின்றது. தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமான போட்டியை காட்டிக் கொண்டிருக்கையில் அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே அமெரிக்க ஜனாதிபதி தனது வெற்றியயை அறிவித்துக் கொண்டிருக்கின்றார். தேர்தல்களில் குளறுபடிகள் நடந்ததாகவும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவும் கோரியுள்ளார். போட்டியாளர்கள் இருவரது தரப்பிலும் ஆயிரக்கணக்கான சட்டத்தரணிகள் கடுமையான போட்டி நடைபெறும் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகக் கூறி சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகின்றனர்.
மேலும், சில கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் தபால் மூலமான வாக்குகள் தேர்தல் முடிவின் பின்னரே எண்ணப்படுவது வழமை. அதனாலும் சில மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம். அதனால் தேர்தல் முடிவடைந்த சில நாட்களிற்கு பின் வரையும் இறுதியான வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வழமையாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே தேர்தல் மோசடிகள் பற்றியும் தேர்தலைத் தொடர்ந்து ஏற்படும் கலவரங்கள் பற்றியும் அச்சமும் அசம்பாவிதங்களையும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
கலவரம் வரும் என்று அஞ்சும் நிறுவனங்கள்
ஆனால் இம்முறை உலக ஜனநாயகத்தின் காவலனாக, சுதந்திர உலகின் பொலீஸ்காரனாக தன்னைக் காட்டி வந்த அமெரிக்காவில் ஜனநாயகம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் சூறாவளி போன்ற அழிவுகளில் இருந்து தங்களைக் காப்பதற்காக வர்த்தக நிறுவனங்கள் பலகைகளைக் கொண்டு தங்கள் வியாபார நிறுவனங்களைச் சுற்றி மேலதிக பாதுகாப்புக்காக பொருத்தி வருகின்றனர்.
துப்பாக்கிகள் விற்கின்ற வியாபார நிலையங்களில் துப்பாக்கிகளும் அதற்கான சன்னங்களும் விற்றுத் தீர்ந்துள்ளன. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக சங்கிலித் தொடர் வியாபார நிறுவனமான Walmart துப்பாக்கிகள், அதற்கான சன்னங்களின் விற்பனையை சில நாட்களுக்கு முன்னரேயே நிறுத்திவிட்டது. தேர்தல் முடிவுகள் வருகின்ற போது கலவரம் ஏற்படும் என்பது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கு ஆதரவான வெள்ளையின தீவிர போக்காளர்களைத் தயார் நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ட்ரம்ப் – பைடன் முதல் சுற்று தொலைக்காட்சி விவாதத்தின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். தன்னிடம் இருந்து வெற்றி பறிக்கப்படும் என்ற போலியான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியதன் மூலம் தான் தோற்றுப் போனால் மோசடியே காரணம் என்பதை அவர் தனது தீவிர ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததுடன் அதற்கு எதிராக சண்டையிடவும் ஆயத்தமாக இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தால் அமெரிக்காவில் பாரிய குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமையலாம்.
அமெரிக்க மக்கள் மத்தியில் பிளவு
அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 1865க்குப் பின் இப்போதுதான் அமெரிக்க மக்கள் மிகவும் மோசமாகப் பிளவுபட்டுள்ளனர். தீவிர வெள்ளைத்துவ வாதம் மிகவும் தீவிரமாக ஓங்கியுள்ளது. அதன் பிரதிபலிப்பாக சட்டம் ஒழுங்கு என்பதை டொனால்ட் ட்ரம்ப் முன்கொண்டு செல்கின்றார். அதேசமயம் அங்குள்ள சிறுபான்மைச் சமூகங்கள்: கறுப்பினத்தவர், ஸ்பானியர், மாநிறத்தோர் அங்குள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய நிறுவனங்களால் வஞ்சிக்கப்படுகின்றனர். அடிப்படையில் சட்டம் ஒழுங்கு என்பது மிக முக்கிய அம்சமாக இருந்த போதும், அது வெவ்வேறு சமூகங்களால் முற்றிலும் முரண்பட்ட நிலையிலேயே நோக்கப்படுகின்றது.
வாழ்க்கைத்தரத்திலும் முரண்பாடு
முரண்பாடு என்பது சட்டம் ஒழுங்கு மற்றும் கொள்கைகளில் மட்டுமல்ல மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்திலும் இந்த மிகமோசமான முரண்பாடு வெளிப்படுகின்றது. அமெரிக்க செல்வத்தில் 40 வீதத்தை ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்கள் தமது கையில் வைத்துள்ளன. கால்பங்கு செல்வத்தை 90 வீதமான கீழ்நிலையில் உள்ள குடும்பங்கள் பங்கு போடுகின்றன. அதன்படி பார்த்தால் இக்குடும்பங்களிடம் சராசரி தலா பத்தாயிரம் டொலர்களுக்குக் குறைவான செல்வமே உள்ளது. இக்குடும்பங்கள் வாழ்வதற்கு சொந்தமான கூரை கூட அற்றவர்களாகவே, பெரும்பாலும் வாடகைக் கூரையின் கீழ் வாழ்கின்றனர். ‘அமெரிக்க கனவு’ என்பது மிகப் போலியான ஒரு மாயை. ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்கின்றபோது ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்ற அதேநேரம், 90 வீதமான கீழ்நிலைக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றன.
தொடர்ந்து தேயும் வறிய குடும்பங்கள்
ஆனால் அமெரிக்காவின் வீடுகளில் கட்டுப்பட்டுக் கிடக்கின்ற $113 ரில்லியன் சொத்துக்களை அமெரிக்காவில் உள்ள 329 மில்லியன் மக்களுக்கு சரியாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் $ 343,000 சொத்துக்களை வைத்திருப்பார்கள். மூவரைக் கொண்ட குடும்பத்தில் அண்ணளவாக ஒரு மில்லியன் டொலர் சொத்துக்கள் இருக்கும். ஆனால் கடைக்கோடியில் வாழும் 90 வீதமான குடும்பங்களிடம் உடு துணிகள், படுக்கைத் தளபாடங்கள் ஒரு சில மின் உபகரணங்களைத் தவிர, அவர்களிடம் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளே மட்டுமட்டாகவே இருந்துள்ளது.
கொழுத்த செல்வந்தனான ட்ரம்ப்
உலக செல்வந்தர்களை மிக அதிகமாகக் கொண்டுள்ள அமெரிக்காவில் உள்ள 788 பில்லியனெயர்கள் $3,000,000,000,000,000 ($ 3 ரில்லியன்) செல்வத்தை தங்களிடம் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு செல்வந்தாரன டொனாலட் ட்ரம்ப் மக்கள் பற்றிய எவ்வித கரிசனையும் உடைய மனிதரல்ல. ஒவ்வொருவரும் எப்படியும் செல்வத்தை சேர்த்துக் குவிப்பது, அவரவர் திறமை என்று கருதுகின்ற ஒரு கொழுத்த செல்வந்தன் தான் டொனால்ட் ட்ரம்ப்.
அதனால் வரி செலுத்தாமல் ஏமாற்றுவது, நிறுவனங்களை திவாலடையச் செய்து கொள்ளை இலபமீட்டுவது எல்லாமே ஒரு வியாபாரத்தின் திறமை எனக் கருதுபவர். அதனை நடைமுறையிலும் செய்து காட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தனது சொத்துக்கள் மற்றும் வரி போன்ற விடயங்களை வெளியிடவில்லை. கொழுத்த செல்வந்தரான டொனால்ட் ட்ரம்ப் செலுத்திய வருமானவரி; ஒரு சாதாரண ஆசிரியர் செலுத்திய வருமான வரியிலும் குறைவானதாக உள்ளது. மேலும் இவர் 13 தடவைகள் தன்னை திவாலடைய வைத்துள்ளது மாத்திரமல்ல, அதனை தனது திறமையாகவும் பறை சாற்றுகின்றார்.
ஆனால் அவருக்குத்தான் வெள்ளையின அடித்தட்டு மக்களில் பலரும் ஆதரவளிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள 8 செல்வந்தர்கள் உலகின் எழைகளான 50 வீதத்தினரின் ஒட்டுமொத்தச் சொத்துக்ககுக்குச் சமனான சொத்துக்களை வைத்துள்ளனர். இந்தப் பின்னணியில் தான் அமெரிக்க தேர்தல் நடைபெற்றது.
உலக அமைதிக்கு வழி செய்யும் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகள் என்பது எப்போதும் மோசமானதாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை. உலக சமாதானத்தின் அடிப்படையில் நோக்கினால் அமெரிக்காவில் வந்த அண்மைய ஜனாதிபதிகளில் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே யுத்தத்தை உருவாக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே யுத்த பிராந்தியங்களுக்கு அனுப்பட்ட இராணுவத்தையும் திருப்பி அழைத்து வருகின்றார். நாடுகளின் பாதுகாப்பை அந்தந்த நாடுகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நேட்டோவிற்கான நிதிப்பங்களிப்பையும் குறைத்துள்ளார். இந்த நடவடிக்கைகள் ஒரு வகையில் உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா தன்னை கட்டமைத்ததை கட்டுடைக்கின்ற நடிவடிக்கையின் முதற்படியாக உள்ளது.
சர்வதேச இராணுவத் தலையீடுகளைக் குறைப்பது, ரஸ்யாவுடனான நல்லுறவு வடகோரியாவுடனா உறவு என்பன ஓரளவு உலகில் இராணுவப் பதட்டத்தை ஒப்பீட்டளவில் குறைத்தே வருகின்றது.
இருந்தாலும் சவுதிய அரேபியா யேர்மன் நாட்டில் யுத்தத்தைத் தொடுத்திருந்த நிலையில் அந்நாட்டுடன் பல பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை வெறும் வியாபார ரீதியில் விற்றுக்கொண்டிருப்பதும் சுட்டிக்காட்டத் தக்கது. டொனால்ட் ட்ரம்ப் எவ்வித உள்ளுணர்வும் அற்ற, லாபமீட்டுவதை மட்டுமே நோக்காகக் கொண்ட வியாபாரி; என்ற வகையில் வேறுநாடுகளின் விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு பொருளாதாரச் செலவை ஏற்படுத்த விரும்பவில்லை என்பது அவரிடம் உள்ள முக்கிய வரவேற்கத் தக்க குணாதிசயம்.
சீனாவும் அமெரிக்காவும்
சீனாவோடு உள்ள வர்த்தகப் போட்டியும் கூட, ஒரு வகையில் ஒரு ஒப்பந்தத்திற்கு செல்லும் போக்கே அல்லாமல் யுத்தத்தை நோக்கி நகரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. டொனால்ட் ட்ரம்ப் இற்கு அமெரிக்காவை உலக பொலிஸ்காரனாக உருவாக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தன்னுடைய நேட்டோ நட்பு நாடுகளுடனேயே பகைத்துக் கொண்டு, ரஸ்யாவோடு உறவாடவும் தயாராக இருப்பதால், டொனால்ட் ட்ரம்பின் காலத்தில் உலகில் ஒப்பீட்டளவில் அமைதியேற்படும் எனக் கொள்ளலாம்.
மேலும் டொனால்ட் ட்ரம்ப் ஒரு இறுக்கமான அரசியல் தலைவரல்ல என்பதும் அவருக்கு ஒரு இறுக்கமான அரசியல் கொள்கை இல்லாமல் இருப்பதும் அமெரிக்காவுக்கு எதிரான வல்லரசுகளான சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அதனால் டொனாலட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்நாடுகள் விரும்புகின்றன. ஆனால் நேட்டோ நேச நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதில் எவ்வித விருப்பும் கிடையாது. சர்வதேசத்தில் அமெரிக்காவின் தலைமையில் குட்டிச் சண்டியர்களாக திரிந்தவர்களை டொனால்ட் ட்ரம்ப் ஓரம்கட்டிவிட்டு ரஸ்யா, சீனா, வடகொரியா என புதிய உறவுகளை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஏற்படுத்தி வருவது அவர்களுக்கு அதிருப்தியயை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கிழக்கில் கூட அரபு நாடுகளுக்கு இஸ்ரேலுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உறவு ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மைல்கல். இவ்வெளியுறவுக் கொள்கை பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பலமான அடி. டொனாலட் ட்ரம்ப் எவ்வித உள்ளுர்ணவும் அற்ற லாபத்தை மட்டுமே நோக்காக் கொண்டவர் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்.
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்களிடம் தங்கள் நிலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் இழந்து வருகின்றனர். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமான உறவானது, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு நகர்வே. ஈரானை சர்வதேசத்தில் இருந்து ஓரம்கட்டவே அமெரிக்கா முயற்சிக்கின்றது. ஆனால் இந்த முரண்பாடு ஒரு யுத்தமாக அண்மைக்காலத்தில் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அவ்வளவிற்கு இல்லை.
அமெரிக்க எதிர்காலத்தை பழுது செய்யும் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்பின் தலைமை உலக சமாதானத்திற்கு சாதகமாக இருப்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு அது சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவை தலைசிறந்தது ஆக ஆக்குவார் என்பதற்காக அவர்கள் வாக்களிக்கின்றனர். ஆனால் டொனால்ட் ட்ரம்பின் தலைமை அமெரிக்காவை பெரும்பாலும் தலைகுனியச் செய்தே வருகின்றது. டொனாலட் ட்ரம்பின்: கதையாடல்கள், வாய்கூசாமல் சொல்கின்ற பொய்கள், கொரொனாவை கட்டுப்படுத்த முடியாமை, சுற்றுச்சூழல் பற்றிய கொள்கைகள், விஞ்ஞாபூர்வமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள், சிறுபான்மையினங்களுக்கு எதிரான துவேசத்தை வளர்த்துவிடுவது, மக்களைக் கூறுபோடுவது என்பன அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இது அமெரிக்காவின் எதிர்காலத்தை பெரும்பாலும் பாதிக்கும்.
குடிவரவு விவகாரம்
மேலும் நாட்டின் குடிவரவைக் கட்டுப்படுத்தவது என்ற பெயரில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைகள் மனிதாபிமானத்துக்கு முரணானவை. இனக்குரோதமாகவும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்கா இதுவரை தலைமை தாங்கிய சுயாதீன கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாறாக, தற்பாதுகாப்பு பொருளாதாரக் கொள்கையை நோக்கி நகர்த்தப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் வருவதை இப்பொருளாதாரக் கொள்கை ஊக்குவிக்கின்றது. இதுவும் அமெரிக்காவை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தவே வழிவகுக்கும். உலகமயமாதல் தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலையின்மையை ஏற்படுத்துவதால், உலகமயமாதலுக்கு எதிர்நிலையயை டொனால்ட் ட்ரம்ப் எடுத்து வருகின்றார். இது அமெரிக்காவில் தொழில் வாய்ப்பை உடனடியாக உருவாக்க உதவுகின்றது. அத்துடன் சர்வதேச நாடுகளில் அமெரிக்காவின் சுரண்டலை இது தடுப்பதற்கும் உதவும். ஆனால் உடனடியாக பாதிக்கப்பட்ட நாடுகளில் வேலையின்மை ஒரு பிரச்சினையாகும். இந்நாடுகள் சுயசார்புப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி தள்ளப்படுவார்கள். ஒருவகையில் சர்வதேசத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தளர்த்துவதாகவே டொனாலட் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் அமைகிறது. இது இன்று தனது பொருளாதார ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் சீனாவிற்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.
ஆகையால் டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்கா உலக நாடுகளின் சமாதானத்திற்கு சாதகமாகவும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமையும். மாறாக டெமோகிரட் கட்சியின் ஜோ பைடனின் வெற்றி, கட்சிபேதமற்று அமரிக்காவின் வல்லாதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதாகவும் நேட்டோ நேச நாடுகளின் அணியை வலுப்படுத்தி, உலக பொலிஸ்காரனா தன்னைக் அமெரிக்கா கட்டமைப்பதுமாகவே அமையும்.
இது அமெரிக்காவில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலுமே அமெரிக்க அரச இயந்திரம் அவ்வாறு தான் செயற்படுத்தும். ஜோ பைடன் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பின் படைப்பே. டொனால்ட் ட்ரம்ப் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பால் உருவாக்கப்படாததால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். அதனால் ஜோபைடன் அமெரிக்காவின் எழுச்சியை மீளக் கட்டமைப்பதற்கான முயற்சிகளில் இறங்குவார். அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்துவது, அங்குள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் சற்று குறைப்பதன் மூலம் பதட்டத்தை தணிப்பது, இனங்களிடையே சுமூக உறவை ஏற்படுத்தி ‘நாங்கள் அமெரிக்கர்’ என்ற உணர்வை ஊட்டுவது, இதன் மூலம் சமூகப் பதட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் இறங்குவார். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற விடயங்களை முன்நிறுத்துவதன் மூலம், சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் “தலை” நிமிரச் செய்ய முயற்சிப்பார்.
இந்தப் பின்னணியிலேயே எதிர்கால அமெரிக்க – சர்வதேச நிலைமைகள் அமையும்.