துபாயின் ஆட்சியாளரும், துணை அதிபருமான சேக் முஹமட் பின் ரசீட்டு “கொவிட் 19 தடுப்பு மருந்து” ஊசியை பெற்றுள்ளதாக அவரது டுவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதே டுவிட்டர் தகவலில் கொறொனா வைரஸுக்கான இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அந்த தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்ட அவர், “இந்த தடுப்பு மருந்தை பெறும் அதேவேளையில், எல்லோரும் பாதுகாப்பும் நல்ல சுகாதார வசதியும் பெற வாழ்த்துகிறோம். அத்துடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இந்த தடுப்பு மருந்து கிடைக்க அயராது உழைத்த அனைவர் குறித்தும் நாம் பெருமைப்படுகின்றோம்” என்றும் அந்த டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
“ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் எதிர்காலம் சிறப்பாக இருக்கட்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சீனாவின் இந்த சினோபார்ம் தடுப்பு மருந்தைப் பெற்றவர்களில் பிரதமரும் அடங்குகிறார்.
இந்த தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனையில் எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் ஜோர்தானில் 31,000 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
செப்டம்பரில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜிய அரசாங்கம் அனுமதி அளித்தது முதல், அங்கு முன்னரங்க மருத்துவ பணியாளர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் சில அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
சில அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் வார இறுதியில் இது கொடுக்கப்பட்டது.
மற்றுமொரு முன்னகர்வாக, செவ்வாயன்று பஹ்ரைன் அரசாங்கம் முன்னரங்க பணியாளர்களுக்கு சினோபார்ம் தடுப்பு மருந்து வழங்குவதற்கான அவசர அனுமதியை வழங்கியதாக அந்த நாட்டின் அரச செய்திச்சேவையான பி என் ஏ கூறியுள்ளது.
5 லட்சம் பேருக்கு சினோபார்ம் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது
அக்டோபர் நடுப்பகுதியில் சினோபார்ம் தயாரிப்பில் பங்கேற்ற நிறுவனமான “சைனா நாஷனல் பயோடெக் குறூப்”, நான்கு லட்சத்து எண்பதினாயிரம் பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டதாக கூறியிருந்தது. அந்த நிறுவனம் இரு தடுப்பு மருந்துகளை தாயரிக்கும் முயற்சியில் இருக்கிறது. இன்னும் 93,000 பேர் இந்த ஊசியைப் பெற விண்ணப்பித்துள்ளதாக அது கூறியிருந்தது.
இந்த மருந்தின் மூன்றாவது கட்ட சோதனை முடிவுகள் இதுவரை பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளில் சுதந்திரமான மறுஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால், விஞ்ஞான சஞ்சிகையான “லான்செட் இன்பெக்ஸியஸில்” கடந்த மாதம் வெளியான கட்டுரை ஒன்று, இதன் முதலாம் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் பலமாக இருந்ததாக கூறியிருந்தன. அவை 60 வயதுக்காரர்களுக்கு கூட நல்ல பலனைத்தந்ததாக அது கூறுகின்றது.
சீனாவில் ஏப்ரல் 29 முதல் ஜூலை 30 வரையிலான காலப்பகுதியில் நடந்த “சினோபார்ம்” மருந்துக்கான முதலாம், இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் 18 முதல் 80 வயது வரையிலான 600 தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இந்த இரு கட்டப் பரிசோதனைகளிலும் அனைத்து தொண்டர்களின் உடலிலும் இந்த தடுப்பு மருந்து, 42 நாட்களில் வைரஸ் தொற்றுவதை தடுப்பதற்கான நோயெதிர்ப்புச் சக்தியை உருவாக்கியிருந்ததாக “லான்செட்” கட்டுரை கூறுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அது மெதுவாகவே வேலை செய்தது. கொஞ்சம் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது.
இளம் தொண்டர்களுக்கு 28 நாட்களுக்குள் நோயெதிர்ப்பு சக்தி உருவானது.
ஆதாரம் – த நாஷனல்