“எனது அப்பாவின் கொலையாளியை கட்டி அணைத்தேன்”

“எனது அப்பாவின் கொலையாளியை கட்டி அணைத்தேன்”

— சீவகன் பூபாலரட்ணம் —

(இரு சமூகங்கள் அல்லது இரு இனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதும், ஒன்றை ஒன்று படுகொலை செய்வதும்  உலக வரலாற்றில் பல தடவைகள் நடந்திருக்கின்றன. ஆனால், கொலையாளிகள் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கோருவதும், பாதிக்கப்பட்டவர்கள் அதனை மன்னித்து நல்லிணக்கத்துக்கு தயாராவதும் மிகக்குறைவாகவே நடந்திருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.) 

உலகில் பிரபலமான ‘வோக் சஞ்சிகை’யால் உலகில் ஊக்கமூட்டும் 33 பெண்களில் ஒருவராக கணிக்கப்பட்டவர் கண்டைஸ் மமா. மிச்சேல் ஒபாமா, மலலா போன்றவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குகிறார்கள். 

அதேபோல, உலகில் மிக முக்கியமான 20 ஆபிரிக்க பெண்களின் வரிசையில் கண்டைஸ் மமா, ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பட்டியலிடப்பட்டுள்ளார். ஆபிரிக்காவில் அமைதிக்காக பணியாற்றியதாக இவரை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கண்டைஸ் மமாவின் முகம் மாத்திரமல்ல அகமும் அழகு. அவர் சந்தித்த இழப்பும் பெரிது. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி இனங்களுக்கிடையே பெரும் அளவில் பிளவை ஏற்படுத்தியிருந்த காலத்தில் 1991இல் பிறந்தவர் கண்டைஸ் மமா. உண்மையில் அந்தக் காலகட்டத்தில்தான் அந்த “அப்பர்தைட்” என்னும் நிறவெறி ஆட்சி படிப்படியாக முடிவுக்கு வந்தது.  

கொலை செய்யப்பட்ட தந்தை 

கண்டைஸ் மமாவின் தந்தை கிலிநெக் மசிலோ மமா நிறவெறி ஆட்சிக்கு எதிரான ஒரு போராட்டக்காரர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு சமாந்தரமாக பான் ஆபிரிக்கனிஸ்ட் காங்கிரஸ் என்னும் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் அவர். ஆனால், தென்னாபிரிக்காவின் அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்ற ஆபிரிக்க காங்கிரஸின் கொள்கைக்கு எதிரான கொள்கையை பான் ஆபிரிக்கனிஸ்ட் காங்கிரஸ் கடைப்பிடித்தது. கண்டைஸின் தந்தை ஒரு கறுப்பு இனத்தவர். ஆனால், தாயாரான சண்டிரா கலப்பு இனத்தவர். 

இவற்றைவிட முக்கியமான விடயம் என்னவென்றால் கண்டைஸின் தந்தை “கிலிநெக்”, கண்டைஸ் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போதே கொலை செய்யப்பட்டுவிட்டார். அவரைக் கொலை செய்தது நிறவெறி ஆட்சியின் பொலிஸ் படையின் கொலைப்பிரிவு ஒன்று. 

தனது தந்தையை கண்டைஸுக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், “அவர் வாழ்க்கையை நேசித்த ஒருவர், அழகியலில் அதிக நாட்டமுள்ளவர், போராட்ட வாழ்க்கையின் மத்தியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆட, பாட விரும்பியவர்” என்றெல்லாம் அடுத்தவர்கள் சொல்ல கண்டைஸ் கேட்டிருக்கிறார். 

தனது தந்தை கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டைஸ் சிறு வயது முதலே கேள்விப்பட்டுத்தான் இருந்தார். அவரை கொலை செய்தது “இயூஜின் டெ கொக்” என்ற பொலிஸ் படையின் ஒரு கேணல்தான் என்பதும் அவர் கேள்விப்பட்டிருந்தார். 

ஆனால், அந்த கொலையின் தாற்பரியத்தை அவர் உணர்ந்தது சுமார் 9 வயதில்தான். அதாவது கொலை மிகவும் பாரதூரமானது, அது தமது குடும்பத்தில் பெரும் மாற்ற முடியா அழிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவர் உணர்ந்தது அப்போதுதான்.  

இருண்ட இதயம் 

சிறுவயது முதலே வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் ஒரு புத்தகத்தை காண்பிப்பார் கண்டைஸின் தாயார். அந்தப் புத்தகத்தை பார்த்ததும், வந்தவர்களும், கண்டைஸின் தாயும் ஒன்றாகச் சேர்ந்து ஒப்பாரி வைப்பார்கள். இது தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று கண்டைசுக்கு தெரியாது.  

அந்தப் புத்தகத்தின் பெயர் “இருண்ட இதயம் – நிறவெறி படுகொலையாளரின் ஒப்புதல் வாக்குமூலம்”. 

முதலில் அதில் அப்படி எல்லோரும் சேர்ந்து அழுவதற்கு என்ன இருக்கிறது என்று கண்டைஸுக்கு தெரியாது. அதனை திறந்து பார்க்கவும் அவருக்கு அனுமதி கிடையாது. ஒரு அலுமாரிக்கு மேலே அது உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் தனது தந்தையின் படம் இருக்கிறது என்று அவருக்கு தெரியும்.  

ஆனால், தனது 9வது வயதில் எப்படியாவது இந்தப் புத்தகத்தை பார்த்துவிடுவது என்று கண்டைஸ் முடிவு செய்தார். தாய் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஒரு கதிரையை வைத்து ஏறி, புத்தகத்தை எடுத்தார். உரிய பக்கத்தை திறந்தார். அதைப் பார்த்ததும் அவர் அதிர்ந்துபோய்விட்டார். 

பார்த்தவுடனேயே, அந்தப் படம் தனது தந்தையினுடையது என்பது அவருக்கு புரிந்துவிட்டது. அது ஒரு பயங்கரமான படம். ஒரு காரின் ஓட்டுனர் இருக்கையில் ஸ்டியரிங்கில் சாய்ந்தவாறு, அவரது தந்தையின் உடல் எரிந்த நிலையில் காணப்படுகிறது. கிட்டத்தட்ட நெஞ்சு வெடித்துச் சிதறியது போன்ற உணர்வு கண்டைஸுக்கு. தான் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தது தவறு என்பது அப்போதுதான் அவருக்கு புரிந்தது.  

ஆனால், தனது தந்தையைப் பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலும் அவருக்கு அதிகரித்தது. “நீ, கறுப்பன் என்ற காரணத்துக்காக மாத்திரம் உன்னால், வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று நினைக்காதே” என்பது அவரது கொள்கையாம். அடிக்கடி அப்படிச் சொல்வாராம். இந்த 25 வயதில் இந்த மனிதருக்குள் இவ்வளவு பக்குவமா என்ற சிந்தனை, அவரது தந்தை பற்றிய மதிப்பை கண்டைஸின் மனதில் அதிகரித்தது. இது அவரது இழப்பின் பாரிய தன்மையையும் அவருக்கு உணர்த்தியது. 

நெஞ்சில் வலி 

ஆனால், நெஞ்சில் ஒருவிதமான வலியையும் அவர் உணரத்தொடங்கினார். தனது 16 வயதில் நெஞ்சு வலி என்று கண்டைஸை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். இருதய  வலியாக இருக்கலாம் என்ற சந்தேகம்.  

 “உனக்கு மார்பு வலி கிடையாது. ஆனால், எனது 20 வருட மருத்துவ அனுபவத்தில் இந்த அழவுக்கு சிறிய வயதிலேயே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை நான் பார்க்கவில்லை” என்று அவரை சோதித்த மருத்துவர் கண்டைஸின் தாயாரிடம் கூறியுள்ளார்.  

“மனவருத்தம், உன் உடல் உன்னைக் கொன்றுகொண்டிருக்கிறது’ என்று மருத்துவர் எச்சரித்தார். கண்டைஸும் அதனை உணர்ந்தார். “எனக்கு மகிழ்ச்சி இல்லை, உடல் சுகமாக இல்லை, தன்னுடைய வாழ்க்கைகூட விசுவாசமாக இல்லை” என்று கண்டைஸ் உணர்ந்தார். 

ஆகவே தன்னை குணமாக்குவதற்கான வழியை அவர் தேடவேண்டியிருந்தது. அப்பாவின் படுகொலைப் புகைப்படத்தின் பின்னணி தனக்கு தந்த மன வருத்தத்தில் இருந்து கண்டைஸ் மீளவேண்டியிருந்தது. 

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 

1995 இல் நடந்த தென்னாபிரிக்காவின் முதலாவது ஜனநாயகத் தேர்தலின் பின்னர், ஆட்சிக்கு வந்த நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், நிறவெறி ஆட்சிக்காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்தது. அந்த விசாரணையின் அனைத்து பதிவுகளும் பிரசுரிக்கப்பட்டிருந்தன.  

ஆகவே, தனது தந்தையின் கொலையாளியான இயூஜின் டெ கொக் என்ற பெயரை கொண்டு, தனது தந்தைக்கு என்ன நடந்தது என்று அறிய கண்டைஸ் முற்பட்டார். கண்டைஸின் தந்தை கொல்லப்பட்ட அன்று என்னவெல்லாம் நடந்தது என்று அந்த ஆவணத்தில் இயூஜின் விபரமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். 

அதைப்படித்ததும், கண்டைசின் மனதில் தாழ முடியாத கோபம். எனது தந்தைக்கு இந்த ஆள் எப்படி இந்த அநியாயத்தைச் செய்யலாம் என்று அவர் உணரத்தலைப்பட்டார். அதைப் படிக்க தனது வயிற்றுக்குள் ஒரு வலி உருவாவதை அவர் உணர்ந்தார். எவரும் நினைத்துப் பார்க்காத ஒரு முடிவுக்கு அவர் வந்தார். அதாவது தனது மன வலி குறைய, தனது தந்தையை தன்னிடம் இருந்து பிரித்த அந்த ஆளை தான் மன்னிக்க வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. ஆனால், அந்த முடிவை அவர் இலகுவாக எடுக்க முடியவில்லை. அதற்கு நீண்ட அவகாசம் தேவைப்பட்டது. 

உண்மையில் முதலில் அந்த ஆளை பழி வாங்க வேண்டும் என்றுதான் கண்டைஸ் நினைத்தார். ஒவ்வொரு தடவையும் அவரைப் பற்றி நினைக்கும்போது அந்த ஆள் தன்னை, தனது உணர்வுகளை ஆக்கிரமித்துக் கட்டுபடுத்துவதாக கண்டைஸ் உணர்ந்தார். “அந்த ஆள் எனது தந்தையை ஏற்கனவே கொன்றுவிட்டார். இப்போது அவர் என்னைக் கொன்று கொண்டிருக்கிறார். ஆகவே, இதில் இருந்து வெளிவருவதானால், நான் அவரை மன்னித்தாக வேண்டும்’. 

அந்த நினைப்பே, அவரை மன்னித்தாக வேண்டும் என்ற உணர்வை கண்டைஸ் மனதில் ஏற்படுத்தியது. ஆனாலும், அப்போது கண்டைஸ் ஒரு பதின்ம வயதுப் பெண்தான். 

“மன்னிப்பு” என்ற உணர்வு மனதை ஆட்கொண்டபோது, தனது மனமும் உடலும் மெதுவாக இலகுவாவதாக, ஏதோ பாரம் குறைவதாக கண்டைஸ் உணரத்தொடங்கினார். 

2014 இல் தேசிய சட்டநடவடிக்கை அதிகார சபை கண்டைஸின் தாயை தொடர்பு கொண்டது. ‘“குற்றவாளி – பாதிக்கப்பட்டவர்” சந்திப்பு என்ற நிகழ்வின் மூலம் இயூஜின் டி கொக்கை நேரடியாக சந்திக்க அவர்கள் விரும்புகிறார்களா?’, என்று அந்த அதிகார சபை கேட்டிருந்தது. கண்டைஸுக்கு அப்போது 23 வயது. 

உடனடியாகவே “ஆம், நான் அவரை சந்திக்கப்போகிறேன்’ என்று கண்டைஸ் கூறிவிட்டார்.  

இயூஜின் அலக்ஸ்சாண்டர் டெ கொக் என்ற தென்னாபிரிக்க பொலிஸ் படையின் கேணல், நிறவெறி ஆட்சிக்காலத்தில் பெரும் சித்திரவதைகள், படுகொலைகள் ஆகிவற்றில் ஈடுபட்டவர். “பிரைம் எவில்” என்பது அவருக்கு பட்டப்பெயர். சி10 என்னும் கிளர்ச்சி எதிர்ப்பு படையின் தலைவர் அவர். உண்மை மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழுவில் 1996 இல் விசாரிக்கப்பட்ட இவருக்கு எதிராக 89 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 212 வருடம் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. பிரிட்டோரியாவுக்கு 20 மைல் தொலைவில் உள்ள விலக்பிளாஸ் என்னும் இடத்தில் நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் ஆகியவை இவருக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டுகள். கண்டைஸின் தந்தையும் அங்குதான் கொலை செய்யப்பட்டார். 

குற்றவாளி – பாதிக்கப்பட்டோர் சந்திப்பு 

கண்டைஸ் தனது தந்தையை கொலை செய்தவரை சந்திப்பதற்கான நாளும் வந்தது. அந்த அனுபவம் விநோதமானது என்கிறார் ஒரு செவ்வியில் கண்டைஸ். பிபிசி உலக சேவையின் லூசி வல்லிசுக்கு அந்த பேட்டியை கண்டைஸ் வழங்கியிருந்தார்.  

அதில் பின்வருமாறு அவர் கூறுகிறார்.  

“சந்திப்புக்கான அறையில் ஒரு நீண்ட மேசை போட்டிருந்தது. அதில் ஒரு மூலையில் நீங்கள் சாப்பிட பிஸ்கட்டும் வைக்கப்பட்டிருக்கும். ஏதோ ஒரு நகரத்தில் இருக்கும் உங்கள் அத்தையின் வீட்டுக்கு போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அது.” 

“ஆனால், அங்கே ஒரு மூலையில் அந்த ஆள் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் இரண்டு விடயங்களுக்காக நான் அதிர்ந்து போனேன். நான் எனது சிறிய வயதில் படங்களில் பார்த்த அதே தோற்றத்தில் அப்படியே இருந்தார் அந்த 65 வயதுக்காரர். ஆண்டுகள் ஓடினாலும் அவரது தோற்றத்தில் மாற்றம் இல்லை. அடுத்தது, ஒரு பொலிஸ் கொலைப்படையின் முன்னாள் கொமாண்டரான அவரின் தோற்றம் ஒரு பேயைப் போல இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் அப்படியில்லை” என்று அந்த செவ்வியில் கண்டைஸ் கூறியிருந்தார். 

அங்கிருந்த பாதிரியார் ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய, தானாக முன்வந்து “உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றார் இயூஜின் டெ கொக். கண்டைசின் தந்தை கொலை செய்யப்பட்ட 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி உண்மையாக என்ன நடந்தது என்று கண்டைஸின் தாய் அவரிடம் கேட்டார். 

பான் ஆபிரிக்கனிஸ்ட் காங்கிரசின் முகாமுக்குள் பொலிஸார் ஒரு உளவாளியை அனுப்பியிருக்கிறார்கள். அந்த முகாமில்தான் கண்டைஸின் தந்தையும் இருந்திருக்கிறார். அவர்களில் மிகவும் கடும்போக்கான ஆட்கள் யார்? நல்ல திறமையுள்ள போராளிகள் யார் என்பதை அறிவது அவர்களது நோக்கம். கண்டைஸின் தந்தையையும் மேலும் மூவரையும் அவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். 

சுட்டு எரித்தனர் 

குறிப்பிட்ட தினத்தில், ஜொகன்னஸ்பேர்க்குக்கு 350 மைல் தொலைவில் உள்ள நெல்ஸ்பிருயுட் என்னும் இடத்துக்கு கண்டைஸின் தந்தை செல்லவிருந்தார். (2014இல் ம்பொம்பெலா என்று அதன் பெயர் மாற்றப்பட்டது). 

அவரை வழிமறித்துத் தாக்க இயூஜின் குழுவினர் காத்திருந்தது அவருக்கு தெரியாது. ஒரு பாலத்துக்கு கீழாக அவர் சென்றுகொண்டிருந்தபோது, பொலிஸ் குழு அவர் மீது சுடத்தொடங்கியது. கார் நிற்காமல் தொடர்ந்து ஓடவே, தன்னிடம் இருந்த முழு மகசினையும் இயூஜின் சுட்டுத்தீர்த்திருக்கிறார். அதன் பிறகும் கண்டைஸின் தந்தைக்கு உயிர் இருப்பதாக தெரியவே, தம்மிடம் இருந்த எரிபொருளை ஊற்றி அவரை எரித்துள்ளார்.  

இயூஜின் இதைக்கூறி முடித்தபோது ஒரு சாதாரண மனிதனால், இந்தப் பெரிய அக்கிரமத்தை செய்திருக்க முடியாது என்று கண்டைசின் மனதில் தோன்றியிருக்கிறது. 

ஆனால், ஒரு பொலிஸ் குழுவில் சேர்ந்து கற்று, அங்கு “இவர்கள் உனது எதிரிகள், அவர்களை அழிக்க வேண்டும்” என்று சொல்லிக்கொடுக்கப்படும் போதுதான் இது சாத்தியமாகும். ஆனால், இன்று அந்த இயூஜின் கொக் ஒரு சாதரண மனிதனாகவே தெரிந்தார். ஆக, இது ஒரு குழு மனப்பாங்கும். தனிமனிதனின் செயல் அல்ல. 

என்ன கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டுமோ அனைத்துக் கேள்விகளையும் கேட்க கண்டைசின் குடும்பத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 

கண்டைஸுக்கும் ஒரு கேள்வி இருந்தது. அவர் சொன்னார், “நான் உன்னை மன்னிக்க விரும்புகிறேன். ஆனால், அதற்கு முன்னதாக எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்.” 

“என்ன கேட்க வேண்டும்?” இயூஜின் கேட்டார். 

“நீங்கள் உங்களை மன்னிப்பீர்களா?” கண்டைஸின் கேள்வி இது. 

அந்த சந்திப்பு முழுவதிலும் இப்போதுதான் முதல் தடவையாக இயூஜின் கொஞ்சம் பின்னடைந்தார். “ஒவ்வொரு தடவையும் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நான் சந்திக்க வரும்போது, இந்தக் கேள்வியை அவர்கள் கேட்டுவிடக்கூடாதே என்றுதான் நான் கடவுளை இதுவரை பிரார்த்தித்து வந்தேன்” என்றார் அவர். 

அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. “நான் செய்த காரியத்தை நீங்கள் செய்திருந்தால், நீங்கள் உங்களை மன்னிப்பீர்களா? என்றார் இயூஜின். 

இப்போது கண்டைஸும் அழத்தொடங்கினார். இப்போது தனக்காக அவர் அழவில்லை. தனது தந்தைக்காக அவர் அழவில்லை. இயூஜின் கொக்குக்கு இனி என்றுமே வாழ்க்கையில் அமைதி கிடைக்காதே என்பதை உணர்ந்து, முதல் தடவையாக அவருக்காக, தனது தந்தையை கொலை செய்த கொலையாளிக்காக கண்டைஸ் அழுதார். 

அந்தக்கணந்தான் அவரை மாற்றிய தருணம். 

சந்திப்பின் இறுதியில் இயூஜினிடம் நேரடியாக சென்ற கண்டைஸ், “நான் உங்களை கட்டி அணைக்கலாமா?” என்று கேட்டார். 

தடுமாறி எழுந்த அவர், கண்டைஸை கட்டித் தழுவி, “நான் செய்த காரியத்துக்காக என்னை மன்னித்துவிடு. இப்படியான ஒரு நல்ல பெண்ணாக நீ வளர்ந்திருப்பதற்காக உனது தந்தை பெருமைப்பட்டிருப்பார்” என்று கூறினார்.  

2015 இல் இயூஜின் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். காணாமல் போன பலரது சடலங்களை மீட்கவும், பலருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியவும் தேசிய விசாரணை அதிகாரசபைக்கு அவர் பல வகையில் உதவியுள்ளார். பல இடங்களில் எவருக்கும் தெரியாமல் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. அவரது உதவி இல்லாமல் அவற்றை அதிகாரசபையால் மீட்டிருக்க முடியாது.  

இயூஜினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கவேயில்லை. ஆனால், கண்டஸுக்கும் அவரது குடும்பத்துக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த மன்னிப்பு 9 வயது குழந்தையாக இருந்த காலம் முதல் அவரது மனதை அழுத்திய மன அதிர்ச்சியில் இருந்து விடுதலை பெற உதவியது. 

தனது மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கான அனுபவங்கள் குறித்து கண்டைஸ் மமா ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். அவரைப்போல தென்னாபிரிக்காவில் பாதிக்கப்பட்ட பலருக்கும் மன்னிப்பு மனவலியில் இருந்து மீள உதவியிருக்கிறது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறிய அவர்களுக்கு உதவியுள்ளது. அதன் மூலம் நல்லிணக்கமும் ஓரளவு உருவாகியுள்ளது. 

ஆனால், நமது இலங்கையில் குற்ற ஒப்புதலுக்கும், அதனையடுத்த மன்னிப்புக்கும் அதன் மூலமான நல்லிணக்கத்துக்கும் இன்னும் வாய்ப்பு வரவில்லை. இனியும் வருமா???