— செங்கதிரோன் —
மாரி வெள்ளத்தில் அடிபட்டுவந்த மீனொன்றும் தவளையொன்றும் வெள்ளம் வடிந்தபின் நீர் தேங்கிய குட்டையொன்றில் நீண்ட நாட்களாக நண்பர்களாக வாழ்ந்துவந்தன. நாட்கள் நகர்ந்து கோடைகாலம் தொடங்கியது. குட்டையில் நீர் நாளாந்தம் குறையத் தொடங்கிற்று. வரட்சி அதிகரித்து குட்டை வற்றிப் போய்விடும் நிலைக்கு வந்தது. இச்சந்தர்ப்பத்தில் ஒரு நாள் குட்டையிலிருந்து வெளியே வந்த தவளையை ஏற்கனவே மரமொன்றில் வந்தமர்ந்து இரைக்காகக் காத்துக் கொண்டிருந்த காகமொன்று கீழே சட்டென்று பறந்து வந்து, தவளையைக் கவ்விக் கொண்டு மீண்டும் மரத்தில் போய் அமர்ந்து கொண்டது.
இதனைக்கண்ட மீன் காகத்திற்குக் கேட்குமாறு ‘காக்கை அண்ணாவே! இன்னும் இரண்டொரு தினங்களில் இக்குட்டை முற்றாக வற்றிவிட்டால் நான் உயிரிழந்துவிடுவேன். ஆனால் என் நண்பனான தவளை வேறிடங்களுக்குச் சென்று வாழக்கூடியவன். அவனை விட்டுவிட்டு இரண்டொரு தினங்களில் உயிரிழக்கப் போகின்ற என்னை உணவாக்கிக் கொள்’ என்று பணிவாகவும் சத்தமிட்டும் சொன்னது. தனது நண்பனுக்காகத் தன்னைத் தியாகம் செய்யத் துணிந்த மீனின் பெருங்குணத்தை மெச்சிய காகம் ‘இருவரும் சேர்ந்திருங்கள்’ என்று கூறி தவளையை மீண்டும் கொண்டு குட்டையில் விட்டுப் பறந்து சென்றது.
தனது நண்பனின் தியாகத்தை எண்ணி மனம் நெகிழ்ந்துபோன தவளை மீனைத் தன் முதுகில் ஏறி அமரச் சொல்லி தத்தித்தத்திச் சென்று வேறு நீர் நிறைந்த குளமொன்றைச் சென்றடைந்தது. அக்குளத்தில் இருவரும் மேலும் நெருக்கமான நண்பர்களாக வாழத் தொடங்கின.