‘சிலி’ நாட்டின் அனுபவங்களின் பின்னணியில் இலங்கையின் புதிய யாப்பு முயற்சிகள்

‘சிலி’ நாட்டின் அனுபவங்களின் பின்னணியில் இலங்கையின் புதிய யாப்பு முயற்சிகள்

— வி. சிவலிங்கம் —

இலங்கையில் தற்போது புதிய அரசியல் யாப்பு வரைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தமது அபிப்பிராயங்களை வெளியிடுவதற்கு ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் நடைபெறும் அரசியல், பொருளாதார, சமூக விவாதங்களை நோக்கும்போது எவ்வாறான மாதிரியை நோக்கி யாப்பு வரைபு செல்லும்? என்பது குறித்த சந்தேகங்கள் பல நிலவுகின்றன.

80களின் ஆரம்பத்தில், கிட்டத்தட்ட சம காலத்தில் அதாவது நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி இலங்கையும், சிலி நாடும் சமாந்தரமாக பயணத்தை ஆரம்பித்திருந்தன. சுமார் 40 ஆண்டுகள் கடந்த நிலையில் இரு நாடுகளிலும் அதேபோல, புதிய அரசியல் யாப்பை நோக்கிய பார்வைகள் திரும்பியுள்ளன.

இந்த இரு நாடுகளும் வெவ்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்டிருப்பினும் அமெரிக்க ஆதிக்கத்திற்குள் இரு நாடுகளுமே சென்றிருந்தன. தமக்கே உரித்தான வரலாற்றின் பின்புலத்தில் 80 களின் ஆரம்பத்தில் இரு நாடுகளுமே நவ தாராளவாத பொருளாதாரக் கோட்பாட்டிற்குள் நாட்டை எடுத்துச் சென்றிருந்தன. 80களில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் பல விதங்களில் ஒரேவிதமான அனுபவங்களை வழங்கியிருப்பதும், அதன் காரணமாக இன்று புதிய அரசியல் யாப்பின் தேவையை வலியுறுத்துவதும் கவனத்திற்குரியது.

ஆரம்பத்தில் இரு நாடுகளுமே எகாதிபத்திய எதிர்ப்பு நிலை

சிலி நாடு ஓரளவு பலமான ஜனநாயக ஆட்சி அனுபவங்களைப் பெற்றிருந்த காரணத்தால், 70களின் ஆரம்ப காலங்களில் சிலியிலும், இலங்கையிலும் சோசலிச கோட்பாடுகளின் அடிப்படையிலான ஆட்சிகளே உருவாகின. சிலியில் ‘சல்வடோர் அலன்டே’ தலைமையில் கம்யூ. கட்சியின் உதவியுடன் சோசலிச அரசுக்கான அடித்தளங்களை உருவாக்கும் முயற்சிகள் ஏற்பட்ட வேளையில், இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூ. கட்சி என்பன இணைந்து கூட்டணி அரசு உருவாகியது. இந்த இரு நாடுகளிலும் ஏகாதிபத்திய அரசுகளின் பொருளாதார நலன்கள் மிக அதிகளவில் இருந்தன. குறிப்பாக சிலி நாடு ‘செப்பு’ மூலவளத்தை அதிகம் கொண்டிருந்தது. அதேபோல இலங்கை தேயிலை, ரப்பர், தென்னை வளங்களைக் கொண்டிருந்தது. இவை யாவும் வெளிநாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் இரு நாடுகளுமே அதனைக் கட்டுப்படுத்துவதன் மூலமே தேசிய பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்ற நிலைக்குச் சென்றிருந்தன. அதாவது இரு நாடுகளுமே எகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தன.

சிலியிலும், இலங்கையிலும் 70களில் ஏற்பட்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலமைகள் அந்த நாடுகளிலுள்ள தமது பொருளாதார நலன்களுக்கு ஆபத்தாக மாறுவதை அவதானித்த அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தின. இந்த ஆட்சிக் கவிழ்ப்புகள் அந்தந்த நாடுகளின் வரலாற்றுப் பின்னணியை வைத்தே அதற்கேற்றவாறான தந்திரங்களை, உபாயங்களைப் பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தினர்.

சிலி நாட்டில் ராணுவத் தளபதி ‘அகஸ்டோ பினோசே’ தலைமையில் ராணுவப் புரட்சி ஏற்படுத்தி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ‘சல்வடோர் அலன்டே’ ஜனாதிபதி மாளியையை விட்டு அகலமாட்டேன் என அடம்பிடித்ததால் அந்த மாளிகை தீக்கிரையாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ஆனால் இலங்கையில் 70களில் அமைந்த அரசின் தேசியமயக் கொள்கைகளும், அதனால் ஏற்பட்ட பொருளாதாரத் தடைகளும் பெரும் உணவுத் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி, மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். இதனைச் சாதகமாக்கிய ஐ தே கட்சி ‘ஆளுக்கு இருபடி அரிசி இனாம்’ என்ற சுலோகத்துடன் மக்களின் அதிருப்தியைத் தனக்குச் சாதகமாக்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் தோற்றுவிக்கப்பட்ட அரசு புதிய குடியரசு அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்தி ஐந்து ஆண்டுகளே கடந்த நிலையில் அடுத்து நடந்த தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையால் அந்த அரசைத் தோற்கடித்தார்கள். மக்களின் பெரும்பான்மை வாக்குகள் காரணமாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

சமாந்தரமாக நடந்த ஆட்சி மாற்றம்

சிலி தேசத்திலும், இலங்கையிலும் தேசிய மூல வளங்களை அந்நிய ஆதிக்கத்திலிருந்தும் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே ஆட்சி மாற்றங்களால் தோற்கடிக்கப்பட்டன. அதன் பின்னர் சுமார் 40 ஆண்டுகள் நவ தாராளவாத பொருளாதார கொள்கைகள் செயற்பாட்டில் உள்ளன. இக் கொள்கைகளின் அமுலாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் இரு நாடுகளிலும் புதிய அரசியல் யாப்பைக் கோரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

எவ்வாறான யாப்பு?

இன்று சிலி நாட்டிலும், இலங்கையிலும் புதிய அரசியல் யாப்பிற்கான விவாதங்கள் இடம்பெறுகையில் புதிய யாப்பின் மாதிரி எவ்வாறாக அமையலாம்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. சிலி நாட்டிலும், இலங்கையிலும் தற்போது 40 ஆண்டுகளாக நடைமுறையிலிருக்கும் நவ தாரளவாத பொருளாதாரம் ஒரு புறத்தில் ராணுவ ஆதிக்கப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அரசியல் யாப்பும், அதே போலவே இலங்கையில் நவ தாராளவாத பொருளாதாரத்தை அமுல்படுத்துவதற்காக தனி அரசியல் கட்சியின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கான அல்லது ராணுவ ஆட்சிக்கு ஒப்பான நிறைவேற்று ஜனாதிபதி முறை மூலமான அரசியல் யாப்பும் தற்போது நடைமுறையில் உள்ளன. இங்கு ஆட்சி மாற்றம் என்பது குறிப்பாக நவ தாராளவாத பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான ஆட்சிக் கட்டுமான மாற்றம் என்பதாக மட்டும் காணமுடியவில்லை. இவை மேலும் பல தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

சர்வாதிகார — ஜனநாயக சமரசம்

இங்கு இன்னொரு அம்சம் தெளிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதாவது சர்வாதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்குமிடையே சில சமரசங்கள் உள்ளதை நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகிறது. இன்று இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய கூறுகள் படிப்படியாகப் பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. சிலி நாட்டில் ராணுவ ஆட்சி தாராளவாத கொள்கைகளை இறுக்கமாக அமுல்படுத்த உதவுவது போல, இலங்கையில் காணப்பட்ட பாராளுமன்ற ஜனநாயக வழிமுறை அதாவது அரசுக் கட்டுமானத்தின் தீர்மானம் இயற்றும் வழிமுறையில் ராணுவ ஆதிக்கம் படிப்படியாக உட்புகுந்துள்ளது. இதனால் ஜனநாயக பாரம்பரியங்கள் அதாவது மக்களைப் பாதுகாப்பது என்ற போர்வையில் அந்நிய முதலீடுகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாக மாறியது.

சிலி நாட்டில் 1973ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஜனநாயக வழிமுறையில் தெரிவாகிய ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. ராணுவ இரும்புக் கரங்கள் நாட்டு மக்களின் குரல்வளைகளை நசுக்கியது. ஆனாலும் அவர்களால் தொடர்ந்து அவ்வாறு செல்ல முடியவில்லை. 80களில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து காணப்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியும் சிலியின் பொருளாதாரத்தைப் பாதித்தது. நாட்டை ராணுவ கிடுக்குப் பிடிக்குள் தொடர்ந்தும் எடுத்துச் செல்ல முடியாது எனக் கருதிய ராணுவம் ஜனநாயக உரிமைகள் சிலவற்றை வழங்கத் தயாராகியது.

ராணுவ வாதத்தினைப் பின்னணியாகக் கொண்ட ஏகபோக அதிகாரங்களை வற்புறுத்திச் செல்லும் அல்லது குவிக்கப்பட்ட அதிகாரங்களை வலியுறுத்தும் அரசியல் என்பது சர்வதேச உதவிகளின் பக்கத்துணையுடன் நடத்தும் வரை சாதகமாகவே இருந்துள்ளது. அமெரிக்க உதவியுடன் தோற்றுவிக்கப்பட்ட சிலி ராணுவ அரசினால் அமெரிக்க உதவிகள் சரிந்தபோது அதனைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியவில்லை. அப்போதுதான் ஜனநாயக உரிமைகள் பற்றிய கவனத்தைப் பெறுகிறார்கள்.

80 களில் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச் சரிவும், ஏற்கனவே நாட்டில் நடைமுறையிலிருந்த நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் உள்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. 1973 இல் ராணுவச் சர்வாதிகாரியாகச் செயற்பட்ட ‘பினோசே’ 80கள் வரை பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முடக்கி நவதாராளவாதிகளின் எண்ணத்திற்கு நாட்டைத் திறந்தார். புதிய அரசியல் யாப்பு என்பது முற்றிலுமாகவே நவ தாராளவாத கொள்கைகளைப் பாதுகாப்பதற்கான ஆவணமாகவே மாறியது. இதன் விளைவாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் யாவும் கைவிடப்பட்டன. இதனால் உள்நாட்டு உற்பத்திகள் சர்வதேச போட்டிகளுடன் நிலைக்க முடியவில்லை. படிப்படியாக அவை கைவிடப்பட்டன. அந்த நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களான செம்புக் கனியம், மரம், சல்மன் மீன், பழ வகைகள் மற்றும் வைன் போன்ற குடி வகைகளின் ஏற்றுமதிகள் சர்வதேச போட்டிகளுக்குள் சிக்கின. அல்லது சர்வதேச நிறுவனங்களுடன் பங்காளிகளாக மாறும் நிலை அல்லது சர்வதேச நிறுவனங்களே அவற்றை வாங்கும் நிலை என நிலமைகள் மாறின.

நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட சிலியின் பொருளாதாரம்

சுமார் 7 ஆண்டுகள் ராணுவ கட்டுப்பாடுகள் மக்களின் வாழ்க்கையின் மீது அதிகளவு தாக்குதலைத் தொடுத்திருந்தன. அரச செலவினங்கள் குறிப்பாக ராணுவத்திற்கான செலவினம் கட்டுப்பாடற்றுச் சென்றது. வரவு செலவுத் திட்டம் என்பது அல்லது நாட்டின் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் குறித்து அறிவதற்கான புள்ளி விபரங்கள் கைவிடப்பட்டன. மக்களின் நலன்களுக்காக அதாவது சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்றனவற்றிக்காக செலவிடப்படும் தொகை மிக அதிகளவில் குறைக்கப்பட்டது. உதாரணமாக 1973இல் புரட்சி சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்தினர் மக்களுக்கான பொதுச் செலவினத்தை 27 சதவீத அளவிற்குக் குறைத்தனர். நாட்டின் மொத்த தேசிய வருமானம் 16 சதவீதத்தால் குறைந்தது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளிகளின் சம்பளப் பெறுமதி பாதியாகியது. நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் 28 சதவீதத்தால் அதிகரித்தது. இதன் விளைவாக நலிவடைந்த மக்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன. மக்களின் கொள்வனவுப் பலம் குறைந்த காரணத்தால் பல வர்த்தக நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்குச் சென்றன. நாட்டின் கூலிப் பெறுமதி அல்லது கூலிச் சம்பளம் குறைந்ததால் அதனைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் தமது விற்பனை லாபத்தை அதிகரித்தன. வெவ்வேறு நாடுகளுடன் ஏற்படுத்திய வரிச் சலுகை வர்த்தகம் தேசிய பொருளாதாரத்தை சர்வதேச வர்த்தகத்தின் கட்டுக்குள் வைக்க உதவியது.

உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தமது உற்பத்திக்கான சந்தைகளை நாட்டிற்கு வெளியில் தேட உற்பத்தியாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாக ஏற்றுமதிக்கான வரிகள் குறைக்கப்பட்டன. இதனால் ஏற்கனவே பலமான நிலையிலிருந்த ஏற்றுமதி நிறுவனங்கள் மேலும் தமது வருமானத்தை அதிகரித்தன. இதனால் நாட்டின் தேசிய செல்வம் என்பது சில குறிப்பிட்ட குழுவினரின் கைகளில் சிக்கியது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த இந்த அதிர்ச்சியை அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை. நாட்டின் பொருளாதாரம் என்பது சில குழுக்களின் கைகளில் சென்றதாலும், அக்குழுவினரே அரச தீர்மானஙகளில் அதிக தாக்கம் செலுத்துவதாலும் அரசு என்பது படிப்படியாகத் தனது வலுவை இழந்தது.

இதன் விளைவாக சிலி நாட்டின் வறுமை மிகவும் கூர்மை அடைந்தது. வலுவிழந்த மக்களுக்கான கொடுப்பனவுகளும் கைவிடப்பட்டதால் மக்கள் மத்தியில் தாம் பாதுகாப்பற்ற நிலையுள்ளதாக எண்ணும் போக்கு அதிகரித்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல 80களில் ஏற்பட்ட அமெரிக்க மற்றும் முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய பின்னணியில் ‘பினோசே’ இனால் தனது ராணுவக் கெடுபிடிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. இதன் விளைவாக நாட்டின் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார். ஆனால் ராணுவத் தளபதி பதவியைக் கைவிடவில்லை.

சிலியின் போக்கில் இலங்கை

இன்று இலங்கையின் பொருளாதார நிலைமைகளை ஒருவர் ஆழமாக அவதானிப்பாராயின் இவ்வாறான நிலமைகள் அங்கும் காணப்படுவதை அறிய முடியும். நாட்டில் நடைமுறையிலுள்ள பொருளாதாரத் தாக்கத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள வருமான ஏற்றத்தாழ்வுகள், தொழிற்சங்க கட்டுப்பாடுகள் போன்றன ஒரே மாதிரியான போக்கை உணர்த்துகின்றன.

இங்கிருந்தே இலங்கையின் இன்றைய நிலையுடன் சிலியின் நிலமைகளை ஒப்பீடு செய்வது பொருத்தமாக அமையும். இலங்கையின் புதிய ஜனாதிபதி நாட்டினை ‘பினோசே’ இனது ராணுவ உள் நோக்கங்களின் பின்னணியிலேயே நிர்வாகத்தை எடுத்துச் செல்வதாக கருதப்படுகிறது. அவர் தனது பதவியை ஏற்ற வேளையில் அதற்கான வலுவான பின்புலமும் காணப்பட்டது. உதாரணமாக, ரணில் – மைத்திரி அரசு ஒரு புறத்தில் மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், சீனா, இந்தியா, பிறேசில், தென்கொரியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், போட்டியும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்தது. இதனால் இலங்கையில் காணப்பட்ட பாராளுமன்றப் பலமற்ற நிலையும், அரசியல் கட்சிகள் மத்தியில் காணப்பட்ட ஊழல் விரயங்களும், பிரதமர் – ஜனாதிபதி என்போருக்கிடையே காணப்பட்ட முறுகல் நிலமைகளும் மக்களின் தேவைகளை அல்லது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவவில்லை. இவ்வாறான ஒரு பின்புலத்தில் ஈஸ்ரர் ஞாயிறு படுகொலை நிகழ்வும் இடம்பெற்றதால் மக்கள் தமது பாதுகாப்பு பற்றிய கவலைக்குள் தள்ளப்பட்டார்கள். ராணுவப் பின்னணியைக் கொண்ட ஜனாதிபதி அந்த நிலமைகளைச் சாதகமாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

சிலி ஜனாதிபதி ‘பினோசே’ அமெரிக்க ஆதரவுப் பலத்துடனும், நவ தாரளவாத சக்திகளின் ஊக்குவிப்போடு ஜனநாயக வழியில் பரிபாலிக்கப்பட்ட ‘அலென்டே’ அரசை ராணுவச் சதிமூலம் கவிழ்த்தார்கள். அவ்வாறான வன்முறைப் பிரயோகம் இலங்கையில் தேவைப்படவில்லை. ஏற்கனவே காணப்பட்ட மக்களின் அதிருப்தி ஆட்சியை ஜனநாயக வழியில் அகற்றப் போதுமானதாக இருந்தது. இங்கு இலங்கையின் மேற்குலக குடியேற்ற ஆட்சி வழங்கிய ஜனநாயகப் பாரம்பரியம் அதாவது பாராளுமன்ற ஆட்சிமுறை தேசியவாதத்தை உக்கிரப்படுத்துவதன் மூலம் ஓர் குறிப்பிட்ட பிரிவினரின் கைக்குள் ஆட்சியை எடுத்துச் செல்ல வாய்ப்பை அளித்தது. அதுவே நிறைவேற்று அதிகாரமுள்ள ராணுவ ஆட்சிமுறைக்கு ஒப்பான ஜனாதிபதி ஆட்சிமுறைக்குக் காரணமாக அமைந்தது. உள்நாட்டில் காணப்பட்ட வன்முறை நிலமைகள் பாராளுமன்ற ஆட்சி முறையால் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்தபோது பயங்கரவாதத்தை ஒடுக்குதல் என்பது ராணுவ வழிமுறைகளை நோக்கி மாறியது. இதனால் பாராளுமன்ற ஜனநாயக வழிமுறை மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என்ற வாதத்திற்கு வாய்ப்பை அளித்தது. எனவே ஜனநாயக வழிமுறை என்பது மட்டுப்படுத்தப்பட்டு சர்வாதிகார வழிமுறை நியாயமாக்கப்பட்டது.

நவ பொருளாதார வாதம்

சிலி நாட்டில் ராணுவ ஆட்சி மாற்றத்தின் மூலம் நவதாராளவாதம் நுழைக்கப்பட்டது போலவே இலங்கையில் புதிய அரசியல் யாப்பு வழிகள் மூலம் அதாவது நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை மூலம் சர்வாதிகாரமும், நவ தாராளவாத கொள்கைகளும் உட்புகுந்தன. சுருங்கக் கூறின் சிலியின் ராணுவ ஆட்சியும், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையும் நவ தாராளவாத கொள்கைகளை அமுல்படுத்தும் திட்டங்களின் விளை பொருட்களே.

இன்று இலங்கையின் 40 ஆண்டுகால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை பாராளுமன்ற ஆட்சிமுறையைத் தொடர்ந்து பேணி வருகின்ற போதிலும் அங்கு சிலியில் எவ்வாறு ராணுவ ஆட்சிமுறை நவ தாராளவாத கொள்கைகளை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளதோ, அதே போன்று இலங்கையில் ஓர் குடும்ப ஆட்சியைப் பலப்படுத்துவதற்கான முயற்சியில் நாட்டின் ராணுவம் பயன்படுத்தப்படுகிறது.

அவ்வாறாயின் குடும்ப ஆட்சியாக இருப்பினும் ஆட்சியாளரின் பொருளாதாரக் கொள்கைகள் எவ்வாறானது? இதற்கான மாதிரி என்ன? என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலைத் தேடுவதாயின் மீண்டும் சிலி அனுபவங்களை நோக்கிச் செல்லலாம். அதாவது 1973ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய அமெரிக்க சார்பு ‘பினோசே’ அரசு எதிர்பாராத வகையில் 80களில் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் உள்நாட்டு நெருக்கடிகள் ராணுவ உத்திகளால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றபோது புதிய அரசியல் யாப்பினைத் தருவதாகத் தெரிவித்தது.

இதேபோன்ற நிலை இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு புதிய ஜனாதிபதி பதவி ஏற்றபோது ‘கொரொனா’ தொற்றுநோய் அறியாத ஒன்றாக இருந்தது. இந் நிலையில் புதிய ஜனாதிபதியின் கனவுகள் சிங்கப்பூர் முன்னாள் தலைவர் ‘லீ குவான் யு’ அவர்களின் முன்மாதிரியை நோக்கியதாகக் காணப்பட்டது. அவரின் ராணுவப் பின்னணியும், சிங்கப்பூர் தலைவரின் கோட்பாடுகளும், சீனாவின் நெருக்கமான உறவுகளும் ஓர் இறுக்கமான ராணுவ மாதிரியிலான அரசியலை நோக்கிய சிந்தனைகளை வழங்கியது. எனவே ஜனாதிபதி பதவியை அடைவதற்கு முன்னதாகவே ராணுவம் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள், வர்த்தகர்கள் இணைந்த ‘வியத்மக’ என்ற அமைப்பை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் உடனடியாகவே மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. குறிப்பாக அரச உயர் மட்டங்களில் ராணுவ முறையிலான தகவல் பரிமாற்றத்தினையையும், செயற்பாட்டினையும் அமுல்படுத்துவது, சிவில் அதிகாரிகளின் செயற்பாடுகளை மேலிருந்து கீழாக அவதானிக்கும் வகையில் உளவுத் தகவல் பிரிவுகளை அமைப்பது, அரச உத்தரவுகள் குறிப்பிட்ட கால வெளியில் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தல், ஊழல் மற்றும் அரச விரயங்களைத் தடுத்தல் போன்ற நடைமுறைகள் பின்பற்றத் திட்டமிடப்பட்டன.

சிக்கலைக் கொடுத்த கொரொனா

ஜனாதிபதியின் அரசியல் அனுபவங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட காரணத்தால் அரசியல் பிரச்சனைகளைக் கையாள்வதற்கு அவரது சகோதரர் பிரதமராக அமர்த்தப்பட்டார்.

ஆனாலும் ஜனாதிபதியின் திட்டங்கள் ‘கொரோனா’ விற்கு முற்பட்ட காலத்தில் திட்டமிடப்பட்டதால் கொரொனா தாக்குதல்கள் எவ்வாறு ‘பினோசே’ இன் திட்டங்களை சர்வதேச வங்கிச் செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் தடுத்தனவோ அவ்வாறான நிலை தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது. முழு அளவிலான ராணுவ அடிப்படையிலான அரசியல் கட்டுமானத்தை ஏற்படுத்துவதில் பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளன. மிகவும் பலவீன நிலையிலிருந்த அரச அத்தியாவசிய சேவைகள், அரசியல் மயப்படுத்த அரச அதிகாரிகள் என்போர் ராணுவத்துடன் இணைந்து செயற்படுவது பாரிய பிரச்சனையாக அமைந்தது.

அரச சேவை அதிகாரிகள் பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழும், ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் காணப்பட்ட அரசியல் மயப்படுத்தல்கள் காரணமாகவும் அனுபவித்த சலுகைகள், கௌரவங்கள் போன்றன ராணுவத்தால் பறிக்கப்பட்டுள்ளதால் ராணுவ மயமாக்கப்படும் ஜனாதிபதி ஆட்சிமுறை பாரிய எதிர்ப்புகளை சமூக அளவில் எதிர்நோக்கியுள்ளது. அரசைப் பதவியில் அமர்த்திய சமூக குழுக்கள் உதாரணமாக பௌத்த பிக்குகள், அரச ஆதரவு அதிகாரிகள், வர்த்தகர்கள், கட்சிப் பிரதானிகள் என்போர் தாம் தமது குறைகளை யாரிடம் முறையிடுவது? என்பது குறித்து அங்கலாய்க்கும் நிலை எழுந்துள்ளது. ஏனெனில் சிவில் அதிகாரிகள் பதிலளிக்க முடியாத நிலைக்கு ராணுவ ஆதிக்கம் தடுத்துள்ளது. திறந்த செய்திப் பரிமாற்றம் பலவீனங்களை வெளிப்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சுருக்கமாகக் குறிப்பிடுவதானால் அரசிற்குள் இன்னொரு அரசு செயற்படுவதை அவர்களால் வெளிப்படையாகவே காண முடிகிறது.

நவ பொருளாதாரமும் பாதுகாப்பும்

சிலி ஆட்சியாளர்கள் 80 களில் புதிய அரசியல் யாப்பை வரையும்போது இரண்டு பிரதான நோக்கங்களில் செயற்பட்டனர். அதாவது நவ தாராளவாத பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்துவது, அடுத்தது தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது என்பதாகும். இலங்கையில் பொருளாதாரக் கொள்கை குறித்து சரியான வழிமுறைகள் இதுவரை இல்லை. தேர்தல் காலங்களில் சுய பொருளாதாரத்தை குறிப்பாக விவசாயத்தை வளர்ப்பதாகக் கூறிய போதிலும், ஏற்கனவே ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரத்தில் நாட்டின் பொருளாதாரக் கட்டுமானங்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றை மாற்றும்போது ஏற்படக்கூடிய அதிர்ச்சிகளைச் சமாளிக்கும் நிலையில் அரசு இல்லை. போதாக்குறைக்கு ‘கொரொனா’ நோயின் தாக்கம் ஏற்படுத்திவரும் அதிர்ச்சிகள் அதைவிட மோசமாக உள்ளன.

இப் பின்புலத்தில் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. அதாவது உள்நாட்டுத் தேவைகளை அதிகளவில் உள்நாட்டில் நிறைவேற்றப் போவதாகத் தெரிவித்த அடிப்படையில் இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஏற்றுமதிக்கெனத் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான மூலப் பொருள் இறக்குமதியில் பல தடைகள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக சேட் தயாரிப்பில் ஈடுபடும் புடவை நிறுவனம் அத் தயாரிப்புக்குத் தேவையான ‘பட்டன்கள்’ இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருந்தால் சேட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. அதே போலவே ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. மீன் ஏற்றுமதி மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ‘கொரொனா’ நோயின் தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இறக்குமதியில் தடைகள் இருப்பது மேலும் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது. இவ்வாறான நிலையில் நாட்டின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற இறக்குமதி செய்வதற்கான வகைகளில் திட்டங்கள் அவசியமாகிறது. அவ்வாறாயின் இறக்குமதிக்கான பணத்தை எங்கிருந்து பெறுவது? என்ற கேள்வி எழுகிறது. தேவையான பொருட்களை ஒரு நாட்டிலிருந்து மட்டும் பெற முடியாது. அவ்வாறாயின் வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றம் தேவையாகிறது. அதனை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளின் ஆதரவு தேவையாகிறது. ஆனால் நாட்டில் அதற்கான சூழல் தற்போது காணப்படவில்லை.

சிலி நாட்டின் வரலாற்றுப் பின்னணியோடு இவற்றை இணைத்துப் பார்க்கையில் 1973ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சியாளர்கள் 80களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய அரசியல் யாப்பை உருவாக்க சம்மதித்தார்கள். சுமார் 16 ஆண்டுகள் ராணுவ இரும்புக் கரங்கள் மூலம் ஆட்சியை நடத்தியவர்கள் 1980களில் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பின் முழுமையான செயற்பாட்டை 1989 இல் நடைமுறைக்கு அனுமதித்தனர்.

தமது நோக்கங்களை அதாவது நவ தாராளவாதக் கொள்கைகளை அமுல்படுத்திய ராணுவ ஆட்சியாளர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டதற்கு இணங்க 1989 இல் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட’ பினோசே’ இனால் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் அவர் ராணுவத் தளபதியாக தொடர்ந்தும் செயற்பட்டார்.

இந்த மாறுதல்கள் என்பது ஜனநாயகத்தின் சில கூறுகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது. மாற்றமடையாத அரசியல் யாப்பின் அடிப்படையிலும், மாற்றமடையாத பொருளாதாரக் கட்டுமானத்தின் பின்னணியிலும் இந்தப் பகுதி ஜனநாயகம் செயற்பட்டது. 1998 வரை ‘அகஸ்டோ பினோசே’ ராணுவத்தின் தலைவராக செயற்பட்டார்.

சிலி சொல்லும் பாடம்

சிலி நாட்டின் அனுபவங்கள் எமக்குப் பல பாடங்களை உணர்த்துகிறது. அதாவது அந்த நாட்டின் ஜனநாயக வாழ்வு ராணுவச் சதியால் குலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘பினோசே’ இன் சர்வாதிகார ஆட்சிக்குள் அம் மக்கள் 80கள் வரை வாழ்ந்தார்கள். அதன் பின்னர் 90கள் வரை அவர்கள் பகுதி ஜனநாயக கட்டுமானத்திற்குள் வாழ்ந்தார்கள்.

ராணுவ ஆட்சியாளர்களால் மாற்ற முடியாத அளவிற்கு வரையப்பட்ட அரசியல் யாப்பு இன்றுவரை மாற்ற முடியாத நிலையிலுள்ளது. இதன் விளைவாக அந் நாட்டு மக்கள் 2019ம் ஆண்டில் பாரிய ஆர்ப்பாட்டங்களை அரசுக்கு எதிராக மேற்கொண்டார்கள். ராணுவ சர்வாதிகார ஆட்சியிலிருந்து, முதலாளித்துவ சார்பு சமூக ஜனநாயக மாற்றங்களுடன் 2019 வரை செயற்பட்ட ஆட்சியாளர்களால் தொடர்ந்து ஆட்சி செலுத்த முடியவில்லை. இதன் விளைவாக தற்போதைய ஜனாதிபதி புதிய அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்துவதற்குச் சம்மதித்தார்.

இதன் விளைவாக கடந்த 25-10-2020 இல் நடைபெற்ற புதிய அரசியல் யாப்பின் அவசியம் பற்றிய மக்கள் ஒப்புதல் வாக்கெடுப்பில் 78 சதவீத சிலி நாட்டு மக்கள் வாக்களித்தார்கள். புதிய அரசியல் யாப்பிற்கான மக்களிடம் நடத்தும் வாதங்களுக்கும், வரையவும் இரண்டு வருடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021 ம் ஆண்டு அந் நாட்டு மக்கள் தமக்கான பாராளுமன்றத்திற்கு 155 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களே புதிய அரசியல் யாப்பை 2022 இல் முன்மொழிவார்கள்.

தற்போது நடைபெறும் அரசியல் யாப்பு தொடர்பான வாதங்களில் பாராளுமன்ற அங்கத்தவர் தொகையில் பாதிப்பேர் பெண்களாக அமைதல் வேண்டுமெனவும். ஆதிவாசிகளுக்கு விசேச ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

வாசகர்களே!

சிலி நாட்டில் இன்று ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கான உந்துதல்கள் நாட்டின் பொருளாதார கட்டுமானம் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவாகும். திறந்த சந்தைப் பொருளாதாரத்திற்கும், உள்நாட்டு மக்களின் பங்களிப்பிற்கும் பாரிய இடைவெளிகள் ஏற்பட்டிருந்தன. மக்கள் படிப்படியாக கடன் பளுவிற்குள் தள்ளப்பட்டிருந்தார்கள். வாழ்வு தொடர் சிக்கலாக மாற்றமடைந்திருந்தது. அவர்கள் தமது வாழ்வு என்பது சாமான்யமானதாகவும், இலகுவானதாகவும், மலிவானதாகவும் காண விரும்பினர்.

அரசு என்பது மக்களைக் குறிப்பதாகவும், அவர்களே தேசத்தின் கட்டுமானங்களினதும், மூல வளங்களினதும் உரிமையாளர்கள் எனவும் இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் யாப்பு என்பது ஜனாதிபதி ஆட்சியாகவோ அல்லது பாதிப் பாராளுமன்ற ஆட்சியாகவோ அல்லது சமஷ்டியாகவோ இருக்கலாம். ஆனால் அவை மக்களினது உரிமைகளை உத்தரவாதமளிப்பதாக அமைதல் அவசியம் என்கின்றனர்.

இப் பின்னணியில் இலங்கையில் இடம்பெறும் அரசியல் அமைப்புத் தொடர்பான விவாதங்களில் இம் மாற்றங்கள் வெளிப்படாத வரை எந்த மாற்றமும் மாற்றத்தைத் தரப் போவதில்லை.