(இலங்கையின் மூத்த செய்தியாளர்களில் ஒருவர் ஆசிஃப் ஹுசைன். ‘ஒருவரின் பெயர் அவரது நம்பிக்கையையும் மனப்பாங்கையும் பல வகைப்பட்ட அவர் மீதான செல்வாக்கையும் பிரதிபலிக்கும்’ என்கிறார் அவர். ஆங்கில இணைய சஞ்சிகையான றோவர்.எல்கேயில் அவர் எழுதிய ‘இலங்கை மக்களின் பெயர்கள்’ பற்றிய கட்டுரை சுவாரசியமாக இருந்தது. அதனைத் தழுவி தமிழில் எழுதியவர் சீவகன் பூபாலரட்ணம்.)
எமது அறிவின் ஆதாரமே பெயர்கள்தான் என்பதை நாம் புரிந்துகொண்டது மிகவும் குறைவுதான். மக்களுக்கும் பொருட்களுக்கும் பெயரிடுவதன் மூலம் எமது உலகை நாம் உணர்வது இலகுவாக்கப்படுகின்றது. உதாரணமாக, முஸ்லிம் படைப்புக் கதையின்படி, ஆதாமுக்கு எல்லா விடயங்களின் பெயர்களையும் கடவுள் எப்படிச் சொல்லிக்கொடுத்தார் என்பது கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக தேவதைகள் புரிந்துகொள்ளாத விடயங்களைக்கூட ஆதாம் அறிந்துகொண்டார்.
எமக்கு நாம் கொடுத்துக்கொள்ளும் பெயர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பதற்காக மாத்திரமன்றி, அதற்கு ஒரு அர்த்தத்தையும் கொடுக்கிறன. ஆனால், எமது பெயர்கள் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியாக இருந்திருந்ததில்லை. காலத்துக்குக்காலம் அவை மாறிவந்திருக்கின்றன. அவை குறித்துக் கூறுவதற்கும் பல கதைகள் இருக்கின்றன.
ஆரம்பகால இலங்கையர் பெயர்கள்
ஆரம்பகாலத்தில் இலங்கையர்களின் பெயர்கள் மிகவும் எளிமையாகவே இருந்தன. சிங்கள தேசத்தை நிர்மாணித்தவர்களின் பெயர்களை பார்க்கும் எவருக்கும் இது விளங்கும். ‘விஜயன்’ என்ற பெயரைப் பார்க்கும் போது அது வெற்றியை குறிக்கிறது. அவரது அமைச்சர்களான அநுராத, உபதிஸ்ஸ ஆகிய பெயர்களை எடுத்தால் அவையும் மிகவும் எளிமையானவை.
கிமு 3ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3ஆம் நூற்றாண்டுக்கும் உட்பட்ட காலகட்ட பிராமி கல்வெட்டுக்களில், ஆதி சிங்களத்தில் இடம்பெறும் பெயர்கள் எளிமையானவையே. அபய, தாதன், குட்டா, தேவ, மிதா மற்றும் சேன ஆகியவற்றை அவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம். அபய என்பது பயமற்றவன் என்று பொருள், மிதா என்பது நண்பனை குறிக்கும். சேன என்பது சேனையை(படையை) குறிக்கும்.
இந்த எளிமையான பெயர்கள் 10 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்துள்ளன. 8ஆம் மற்றும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிகிரிய சுவரோவியங்களில் காணப்படும் பெயர்களில் அக்போ, போதுர், தேவ், காசுப், மிஹிந்த ஆகியவற்றைக் காணலாம். அதேவேளை, மஹமல் புத், கொலகமு நிலதெவல, சலாம தேவ் ஆகிய இரட்டைப் பெயர்களும் காணப்படுகின்றன. இப்படியாக இரட்டைச் சொற் பெயர்களை வைக்கும் போக்கு அப்போதிருந்து மெதுவாக தொடங்குகின்றது. அதனை அடுத்து வந்த நூற்றாண்டுகளில் அவை மேலும் நீள்கின்றன. பின்னர் காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய மூலப் பெயர்களும் அவற்றுடன் சேர்ந்துகொள்கின்றன.
அந்தக் காலகட்டத்தில்தான் ஜொகன்னஸ் பிரான்ஸிஸஸ் டயஸ் விஜயசேகர பண்டாரநாயக்க மற்றும் ஜூலியஸ் வலண்டைன் டி சரம் விஜயசேகர குணதிலகரட்ண போன்ற பல சிங்கள தலைவர்களின் பெயர்களை 1844இன் சிலோன் வருடாந்த பதிவேட்டில் நாம் காண்கிறோம்.
குடும்பப் பெயர்கள்
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிகிரிய வாசகங்களை வடித்தவர்கள் சிலர், தம்மை ‘தாம் இன்ன இன்ன வீட்டைச் சேர்ந்தவர்கள்’ என்று அடையாளப்படுத்தியுள்ளனர். காசுப் ஹிமியன்-கே மிஹிந்த (காசுப் பிரபு குடும்பத்தைச் சேர்ந்த மிஹிந்த) மற்றும் மகலம்ப மிஹிதல மலுன்-கே அக்பொய் (மகலம்பையின் மகதல மால் வீட்டைச்(குடும்பத்தை) சேர்ந்த அக்பொய்) ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இங்கே ‘கே’ விகுதி என்பது ‘இன்ன வீட்டை அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை குறிக்கிறது. ஜேர்மனிய பெயர்களில் உள்ள ‘வொண்’ என்பதற்கு நிகரானது இது. இன்றும் பல சிங்களவர்கள் தமது பெயர்களில் இந்த ‘கே’ விகுதி பயன்படுத்துகின்றனர். உதாரணமாக ஹேவகே (படையினர் வீட்டைச் சேர்ந்தவர்), லியனகே (எழுதுவினைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்), பம்பரவனகே (தேனிக்காட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்) ஆகியவற்றைக் கூறலாம்.
ஒருவருடைய முறையான பெயரைத் தொடர்ந்து இவை வரும். அந்தக்காலத்தில் இது ஒருவகையிலான குடும்ப அல்லது பரம்பரைப் பெயராக தொடரும். உதாரணமாக லுவிசெவகே தயாபாலவின் பிள்ளைகள் சமிந்த லுவிசெவ மற்றும் லக்மாலி லுவிசெவ என்று அழைக்கப்படுவார்கள்.
‘கே’ விகுதி பெயர்களை ஐரோப்பிய பாணியில் குடும்பப் பெயர்களாக பெயரின் இறுதியில் போடும் போக்கு பின்னர் வந்து விட்டதாக ஈ. பி. டென்ஹம் தனது ‘1911(1912) மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இலங்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். அதற்காக அவர் குறிப்பிட்டுள்ள உதாரணங்களில் கொடித்துவக்குகே அண்டிரிஸ் என்பது அண்டிரிஸ் கொடித்துவக்கு என்று மாறியதையும் மற்றும் ரத்னாயக்ககே வில்லியம் என்பது வில்லியம் ரத்னாயக்க என்று மாறியதையும் குறிப்பிடுகிறார். ‘இன்றைய போக்கின்படி நகரங்களில் ‘கே’ பெயர்கள் முற்றாக கைவிடப்பட்டு ஆங்கில பாணிப்படி அவை குடும்பப்பெயர்களாக வரித்துக்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூரிலும் கிராமங்களிலும் அவை மிகக்கவனமாகப் பயன்படுத்தப்பட்டன’ என்று அவர் கூறுகிறார்.
பெண்களின் பெயர்கள்
கி.மு இரண்டாம் நூற்றாண்டு பிராமி கல்வெட்டுக்களில் பெண்கள் தமது பெயரை ‘தாம் இன்னாரின் மகள்’ என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். உதாரணமாக, ரேவதி தன்னை ‘மிதபாலவின் மகளான ரேவதி(மிதபாலச ஜிஹித ரேவதி)’ என்றும் இளவரசி அநுராதி, தன்னை ‘இளவரசர் அபயவின் மகள்(அய அபயச ஜிஹித்த அபி அநுராதி)’ என்றும் விபரித்துள்ளனர்.
பின்னர் இடைக்காலத்தில், சிகிரிய சுவரோவியங்களில் இருந்து சேகரித்ததின்படி, பெண்கள் தம்மை தமது கணவரின் பெயர்களுடன் சேர்த்தே(இன்னாரின் மனைவி என்ற வகையில்) விபரிக்க முயன்றுள்ளனர். ஓவியங்களை வடித்தவர்களில் தன்னை ‘சேவு’ என்ற அடையாளம் காட்டும் ஒரு பெண், தன்னை நிதலு மிஹிந்தவின் மனைவி(நிதலு மிஹின் அபு சேவு) என்றும் நால் அம்மணி என்ற இன்னுமொருவர், தன்னை மஹமத் பிரபுவின் மனைவி(மஹமத் ஹிமியா அபு நால் ஹிமியபுயுன்) என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை ஆணாதிக்க சமூகம் என்று கொள்ளவேண்டியதில்லை. ஏனென்றால், இன்னுமொரு இடத்தில், மஹாசத்தாய் என்ற ஒரு ஆண், தன்னை போயா அம்மணியின் கணவன்(போயா கலா செமி மஹசாத்தாய்) என்று அடையாளப்படுத்தியுள்ளார்.
கண்டி இராசதானியின் காலம் வரை சிங்களப்பெண்கள் தமது கணவர்களின் குடும்பப்பெயரை தமக்கு சூட்டிக்கொண்டதில்லை. தமது குடும்பப்பெயரையே சூட்டிக்கொண்டனர் என்று தெரிகிறது. ஆங்கில ஆட்சியின் பின்னரே உள்ளூர் பெண்கள் படிப்படியாக தமது கணவரின் குடும்பப்பெயர்களை தம்மோடு சேர்க்கத்தொடங்கினர். பிரிட்டிஷாருக்குகூட இந்தப் பழக்கம் ரோமர் ஆட்சியில் இருந்து வந்திருக்க வேண்டும். அதாவது ‘மனைவியானவள் தந்தைவழி ஆதிக்கத்தில் இருந்து கணவனின் வழி ஆதிக்கத்துக்கு மாற்றப்படுகிறாள்’ என்பதில் இருந்து இது வந்தது.
சாதிக் காரணி
தனிப்பட்ட பெயர்களும் ‘கே’ வகை குடும்பப்பெயர்களும் சாதிக்கு சாதி வேறுபடும். உதாரணமாக பண்டா என்ற பெயரை எடுத்துக்கொண்டால், கொவி(சிங்கள வெள்ளாளர்) சாதியினர் மத்தியில் கீன் பண்டா, திக்கிரி பண்டா, டிங்கிரி பண்டா என்று அது வரும்.
இந்தச் சாதியின் கொஞ்சம் வெள்ளையாக இருப்பவர்களை மெனிக்கே(ஆபரணம்) என்று, அதாவது ரன் மெனிக்கே, பொடி மெனிக்கே, டிங்கிரி மெனிக்கே என்று அழைப்பர். தீண்டத்தகாத ரொடி சாதியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் பெரிதும் வேறுபடும். அசுர, வைசியா மற்றும் சுருவனா ஆகிய பெயர்கள் ரொடி இன ஆண்களுக்கும் அசுராங்கி, பிங்குமாலி மற்றும் சிங்கோவல்லி ஆகிய பெயர்கள் ரொடி இன பெண்களுக்கும் பயன்படுத்தப்பட்டதாக ‘தப்ரோபானியன்(ஆகஸ்ட் 1887)’ என்னும் நூலில் பிரபலமான பிரிட்டிஷ் சிவில் அதிகாரியான ஹியூ நெவில் குறிப்பிட்டுள்ளார்.
‘கே’ பெயர்களைப் பொறுத்தவரை பொதுவில் விவசாயிகளான கொவிகம சமூகத்தினர் தாம் அதிகளவு காணிகளுடன் தொடர்புபட்டவர்களாக இருப்பதால், போவத்தகெதர(அரச மரத்தோட்ட வீடு) போன்ற இடங்களுடன் தொடர்புபடுத்தி பெயர்களை வைத்துக்கொண்டனர். அதேபோல சியாம்பலகொடகே (புளீயந்தோப்பு வீடு) போன்றவற்றையும் கூறலாம்.
அதேபோல கரவா(மீனவர் சமூகம்) சமுகத்தினரின் ‘கே’ விகுதி பெயர்கள் கடல் சார்ந்தவையாக அல்லது இராணுவ பாரம்பரியம் சார்ந்தவையாக இருக்கும். மரக்கலகே(படகோட்டி வீடு), கலப்பதிகே(கவுல்கர் வீட்டைச் சேர்ந்தவர், கப்பலில் இருந்து நீரை இறைப்பவரின் வீட்டைச் சேர்ந்தவர்), ஹென்னெடிகே(போருக்கு தயாராக உள்ளவரின் வீட்டைச் சேர்ந்தவர்), கார்டிய புஞ்சி ஹேவகே(காவல் சிறு படையினரின் வீட்டைச் சேர்ந்தவர்) மற்றும் படபெந்திகே(தலையில் வெற்றிப்பாகை கட்டப்பட்டவர் குடும்பத்தை சேர்ந்தவர்) ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை. அவர் செய்த வீரச்செயலுக்காக தலையில் தங்கத்தால் அல்லது பட்டினால் தலைப்பாகை அணிவிக்கப்பட்டவரைத்தான் ‘படபெந்தி’ என்று கூறுவர்.
வெகும்புரா சாதியினர் தேவகே மற்றும் ஹேவகே ஆகிய பெயர்களை கொண்டிருப்பர். இவர்கள் முன்னாள் போர்வீரர்கள். தேவா என்பது ஆரிய போர்வீரர்களை குறிக்கும். அதாவது சத்திரியர்கள். ஹேவ என்பதன் அர்த்தம் போர் வீரர்.
ராவட சாதியினரின் பெயர்கள் துணி துவைப்பதுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஹலுகே, அபுலனாகெதர ஆகியவை அதற்கு உதாரணம். ஹலு என்றால் சால்வை என்று பொருள். அபுலனா என்பது துணியை கல்லில் அடித்துத் துவைப்பது.
நாவந்தன்ன சமூகத்தினர் தமது கைவினைக்கலை சம்பந்தப்பட்ட பெயர்களைக் கொண்டிருப்பர். ஆச்சாரிகே, படல்கே மற்றும் அப்ஹரன கெதர ஆகியன அவற்றில் சில.
போர்த்துக்கேய பெயர்களும் பட்டங்களும்
1505 இல் இலங்கையில் வந்திறங்கிய போர்த்துகேயரின் வருகை எமது உள்ளூர் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது இலங்கையின் கரையோர மக்களின் பெயர்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
போர்த்துக்கேயரில் டொம் என்பது ஆரம்பத்தில் பெரும் முக்கியஸ்தர்களுக்கும் திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்குமே பெயரில் சேர்ந்துவரும். ஆனால், அது கொஞ்சம் மாறி உள்ளூர் ஆட்களின் பெயர்களில் இணைந்துவிட்டது. அதன் பெண்பாலான டோனா என்பது உயர் அந்தஸ்துகொண்ட பெண்களின் பெயரில் இணைந்துவிட்டது. டோனா கத்தரினா அதில் ஒன்று. (முன்னைய போர்த்துக்கேய காலனியான பிரேசிலிலும் ஒரு ஜனாதிபதியின் மனைவியின் பெயர் டோனா என்பதாகும்). குறிப்பாக இலங்கையின் தென்பகுதியில் பலருக்கு இந்த டோனா இணைந்துவிட்டது.
போர்த்துக்கேய பெயர்களில் எந்த அளவுக்கு இலங்கையர் ஆர்வமாக இருந்தார்கள் என்பது குறித்து, ஜே.டபிள்யூ. பென்னட் அவர்கள் தனது ‘சிலோன் அண்ட் இட்ஸ் கேப்பபிளிட்டிஸ்(1843) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். டொன் லூயிஸ் மற்றும் டொன் கிறிஸ்டோஃபல் ஆகியவை அதற்கு உதாரணம். அவ்வளவு ஏன் போர்த்துக்கேயரால் கண்டி ஆட்சியில் அமர்த்தப்பட்ட டோனா கத்தரினாவையும் யாரும் மறந்திருக்க முடியாது. அதுமாத்திரமல்ல இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்காவும்( டொன் ஸ்டீபன் சேனநாயக்கா) அதற்கு நல்ல உதாரணம்.
போர்த்துக்கேயர் தமது குடும்பப்பெயரையும் இங்கு விட்டுவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த குடும்பப்பெயர்களை கொண்டவர்கள் போர்த்துக்கேயரின் பரம்பரை என்றும் சொல்ல முடியாது. இலங்கையர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய போது தமது தொட்டப்பா(ஞானத்தந்தை)மாரின் குடும்பப்பெயர்களை தமக்கு சேர்த்துக்கொண்டனர். அவ்வாறு பலர் போர்த்துக்கேயப் பெயர்களை கொண்டுள்ளனர்.
அல்மெடா, கப்ரல், டயஸ், சில்வா, பெரேரா, பொன்சேகா, பெர்ணாண்டோ, பிண்டோ, ரொட்றிகோ மற்றும் சல்கடோ போன்ற போர்த்துக்கேயப் பெயர்கள் நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளை சில போர்த்துக்கேயப் பெயர்கள் சற்று மாற்றத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. அபொன்ஸு(அஃபொன்சோ), லிவரா(ஒலிவரா), கிரெரோ(குயெரெரரோ), பீரிஸ்(பெரஸ்), நோனிஸ்(நொனெஸ்), கோமாஸ்(கொமெஸ்), மெண்டிஸ்(மெண்டெஸ்), சுவரிஸ்(சோரெஸ்), சிகெர(சிக்குயெரா), பிகெரா(பிக்கியுரே), திஸ்ஸர(டெய்க்செய்ர), சல்பத்தாரோ(சல்வடோர்) ஆகியவற்றை அதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த போர்த்துக்கேய பெயர்கள் சிலவற்றுக்கு அழகான அர்த்தமும் இருக்கிறது. உதாரணமாக, சில்வா(மரங்களில் இருந்து), கொஸ்டா(கடலோரம்), பெரெரா(பியர் மரம்), ஒலிவரா(ஒலிவ் மரம்) போன்றவற்றை குறிப்பிடலாம்.
டச்சுப் பெயர்கள்
போர்த்துக்கேயர் அளவுக்கு டச்சுக்காரர்களின் பெயர்களை சிங்கள, தமிழ் சமூகங்கள் மத்தியில் காணமுடியவில்லை. 1658இல் இலங்கையில் ஆட்சிக்கு வந்த டச்சுக்காரகள் அங்கு வணிகம் செய்வதில் காட்டிய ஆர்வத்தை, உள்ளூரவரை மதம் மாற்றுவதிலோ அல்லது கலாச்சார ரீதியான மாற்றங்களை கொண்டு வருவதிலோ காண்பிக்கவில்லை. ஆனால், சில தனிப்பட்ட பெயர்களை அவர்கள் சிங்களவர் மத்தியில் விட்டுத்தான் சென்றுள்ளனர். அவை அண்மைக்காலம் வரை அவர்கள் மத்தியில் காணப்பட்டன.
பழங்கால சமூகத்தை சேர்ந்த ஆட்கள் மத்தியில் அப்படியான பெயர்களை ஆங்காங்கு காணலாம். கரொலீஸ், தெபானிஸ், கார்மனிஸ், யொகனீஸ் மற்றும் கிரிகொரிஸ் ஆகியவை டச்சுக்காரர்களின் கரொலஸ், ஸ்டெபனஸ், ஹேர்மனஸ், ஜொகன்னஸ், கிரிகோரியஸ் ஆகியவற்றில் இருந்துவந்தவை இவை. அப்படியான எல்லாப் பெயர்களும் டச்சு மூலத்தில் இருந்து வந்ததாகக் கூறமுடியாது. போலஸ் என்பது ஆங்கில போல் என்னும் பெயரில் இருந்து வந்தது. ஆங்கில ஜேம்ஸ் என்னும் பெயரில் இருந்து வந்தது ஜாமிஸ். ஆங்கில சார்ள்ஸ் இல் இருந்து வந்தது சார்லிஸ்.
தமிழ் பெயர்கள்
இந்து சமயத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் தெய்வீகப் பெயர்களை வைத்தல் தெய்வத்தைப் போற்ற உதவும் என்று நம்பினார்கள். முருகனைக் குறிக்கும் ஆறுமுகம், முருகன் மற்றும் பிள்ளையாரைக் குறிக்கும் கணபதி மற்றும் நடராசா, லக்ஸ்மி, சரஸ்வதி ஆகியவை அத்தகையவையே. கொஞ்சம் மாறிவந்த லெச்சுமி, மீனாச்சி ஆகியவற்றையும் குறிப்பிடலாம். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சைவர்களாக இருந்தாலும் வைணவப் பெயர்களையும் அதிகம் வைத்திருக்கிறார்கள். ஆழ்வார், கோபால், கிருஷ்ணன் ஆகியவை விஸ்ணுவுடன் தொடர்புபட்டவை.
தீண்டத்தகாதவர்களுக்கு வழங்கப்பட்ட நிறப்பெயர்கள்
ஆரம்பத்தில் தீண்டத்தகாதவர்களுக்கு தெய்வப் பெயர்கள் வைக்கப்படுவது குறைவு. அதற்குப் பதிலாக அவர்களுக்கு நிறத்தை, உயரத்தை, பேய்களை குறிக்கும் பெயர்கள் வைக்கபட்டன. கறுப்பன், கட்டையன், முனியன் ஆகியவை அதற்கு உதாரணம். பெண்களுக்கும் அப்படியே.
வெள்ளாள சாதியினர், தமது பெயருடன் தந்தையின் பெயருடன் பிள்ளை அல்லது புள்ளே என்று சேர்த்து வைப்பர். வேலுவின் மகனான சண்முகம், தன்னை வேலுப்பிள்ளை சண்முகம் என்று அழைத்துக்கொள்வார். இப்போதும் இந்த வழமை பழமைவாத தமிழர்களில் முதியவர் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அது படிப்படியாகக் குறைந்துவந்துள்ளது. ஆனால், பண்டைய நாட்களில் இது பொதுவாக இருந்தது. 1844 ஆம் ஆண்டுக்கான சிலோன் பதிவேட்டில் சங்கரப்புள்ளே வேலாயுதன் போன்ற பெயர்களை பார்க்கக்கூடியதாக உள்ளது.
இன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தவர் மத்தியில் ஆண்களுக்கும், திருமணமாகாத பெண்களுக்கும் தந்தையின் பெயர் முதலெழுத்தாகவும், திருமணமான பெண்களுக்கு அவர்களது கணவரின் பெயர் சேர்த்தும் அழைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்த டச்சு ஆட்சியின் காரணமாக இது இருக்கலாம்.
முஸ்லிம்களின் ‘கே’ அல்லது வீடுசார் பெயர்
பெரும்பாலும் சோனகர்களாகக் கூறப்படும் பல முஸ்லிம்கள் மத்தியில் சிங்கள ‘கே’ பெயர்கள் இருக்கின்றது என்பது பலருக்கு தெரியாத விடயம். பொதுவாகக் கண்டியை சேர்ந்த சோனகர் மத்தியில் கல்கெதர, லிண்டகெதர, கண்டகெதர, முகாந்திரம்ல-கெதர மற்றும் நாககதெனிய – கெதர ஆகிய பெயர்கள் சேர்ந்துவரும். இவை அவர்களது தனிப்பட்ட பெயர்களுக்கு முன்னதாக சேர்ந்து வரும். அலகொலதெனிய கெதர யூசுஃப் லெப்பை, குருகொட விதானலாகே கெதர அப்துல் ஹமீத் வகாப்தீன் மற்றும் கண்டகெதர அப்துல் கபூர் சித்தி நஃபியா ஆகியன இதற்கு உதாரணங்கள்.
இருந்தபோதிலும், கடற்கரை நகரங்களான அளுத்கம, பேருவல மற்றும் மக்கோனா ஆகிய இடங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின் பெயர்களிலும் ‘கே’ பெயர்கள் இருக்கின்றன. அவை 1766 – 1771 டச்சுக்கால பதிவேடுகளுடன் தொடர்புபட்டவையாகும். இப்ராஹிம் தாண்டலகே அஹமதியோ நைந்தே, டரோய்பெசி லியனகே ஒமர் லெப்பை, பவளகொடிகே சல்மான் லெப்பே, கொபிடிர்லகே இப்ராஹிம் லெப்பே, மமினா மரக்கலகே அஹ்மதியா மற்றும் அசனா லெப்பலாகே பாத்திமா நதிஜா ஆகியவை இவற்றுக்கு உதாரணமாகும். (இந்தப் பெயர்களை தமிழில் எழுதுவதில் தவறு நேர்ந்திருந்தால் மன்னிக்கவும். அவற்றின் உச்சரிப்பை அறிந்து எழுதுவதில் சற்று சிரமம் இருந்தது)
கண்டி முஸ்லிம்கள் மத்தியில் இந்த ‘கே’ பெயர்கள் வந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்த முஸ்லிம்களின் சிங்கள மூததையரின் பெயராக இவை இருந்திருக்கலாம்; அவர்களில் இருந்து அடுத்த பரம்பரையினருக்கு அவை வந்திருக்கலாம். அல்லது தாம் வந்து குடியேறிய இடங்களின் கலாச்சாரங்களை உள்வாங்க முஸ்லிம்கள் தயாராக இருந்ததை இது குறிக்கலாம். ஆகவே தம்மோடு மிகவும் நட்போடு இருந்த தமது அண்டை, அயல் மக்களின் அம்சங்களை தம்முள் அவர்கள் உள்வாங்கியிருக்கலாம். அவர்களோடு சேர்த்து தம்மை அடையாளப்படுத்த முஸ்லிம்கள் விரும்பியிருக்கலாம். இப்படியான போக்கு மத்திய ஆசியாவில் குடியேறிய முஸ்லிம்கள் மத்தியிலும் காணப்பட்டுள்ளது.
அதேவேளை, முகாந்திரம்லகே போன்ற பெயர்கள் முஸ்லிம்கள் குறிப்பிட்ட பெரிய பதவிகளில் கண்டிய மன்னரால் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களின் பெயர்களோடு இணைந்திருக்கலாம்.
முஸ்லிம்களின் வேடிக்கையான பெயர்கள்
அதேவேளை முஸ்லிம் சமூகத்தவர் மத்தியில் பட்டப்பெயர்கள் என்று சொல்லப்படும் வேடிக்கையான பெயர்களும் காணப்படுகின்றன. உதாரணமாக பபா(பேபி), கொலந்தை(குழந்தை), எச்சி(கஞ்சத்தனம்), சொத்தியான், செம்பட்ட, முட்டைக்கண்ணன், பூனைக்கண்ணன், மண்டையன் போன்றவை அவற்றுக்கு உதாரணம்.
முடிவாக, எமது பெயர்கள் தனிப்பட்ட நபர்களைப் பற்றியும் சமூகமாகவும் எம்மைப் பற்றி நிறையக் கதைகளைக் கூறுகின்றன. எமக்கு ஒரு அடையாளத்தை தரும் அவை நாம் எந்தக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கூறுகின்றன. எமது மத நம்பிக்கைகளை, குணாதிசயங்களை அவை குறிக்கின்றன. எம்முள் பதிந்து கிடக்கின்ற பல அம்சங்களையும் அவை பேசுகின்றன. அடிப்படையில் அவை ஒன்று அல்லது இரண்டு சொல்லில் எம்மைப் பற்றிச் சொல்கின்றன.