— சு.சிவரெத்தினம் —
கச்சான் அடிக்கவில்லை
அறுங்கோடை வெயிலும் இல்லை
பிள்ளைகளின் மனம்
கோடை வயலாய் வறண்டு கிடக்கிறது.
நான்
வானம்,
அன்பும் பாசமும்
என்னை மூடியிருக்கும் மேகங்கள்,
என் மேகங்களை
உருக்கி உருக்கி
மழையாய்ப் பொழிகின்றேன்.
வரம்பில்
வக்கடைகள் இல்லை
நட்டுமைகள் இல்லை
இருந்தும்
என் மழையால்
ஒரு புல் கூட முளைக்கவில்லை.
உவர் பிடித்த நிலத்தில்
நான் பெய்த மழையும்
உப்பாகித் தேங்கிக் கிடக்கிறது
ஒரு
கொக்குத்தானும்
அதில் ஒற்றைக் காலில் நிற்கவில்லை.
என் மழையெல்லாம்
‘விழலுக்கு இறைத்த நீராய்’
வீணாய்ப் போகிறது
விம்மி விம்மி அழுது
விழி பிதுங்கி நிற்கின்றேன்.
என்னை உயிர்ப்பிக்கும்
சூரியனே!
நீயே என் அறிவு
உன்னிடம் சரணடைந்தேன்.
நான்
உடைந்து
கடலில் விழுந்து
மிதக்கும்
‘பிளாஸ்ரிக்’ குப்பையாய் மாறாதிருக்க
நீ
எனக்கு ஒளிதர வேண்டும்.
என் மழையால்
புல்லுகள் முளைக்க வேண்டும்
மரங்கள் வளர வேண்டும்
அதில்
பூக்கள் பூக்க வேண்டும்.
அதற்கு
நீ
எனக்கு ஒளிதர வேண்டும்