— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி திலீபனின் இவ்வருட நினைவேந்தல் நிகழ்வின் பெயரில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா சில தமிழ்க் கட்சிகளை ஒன்று கூட்டினார். தமிழ் அரசியல் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சி என இது வர்ணிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரனும் இம் முயற்சிக்காக மாவையைப் பாராட்டிப் பத்திரிகை அறிக்கைகளும் விடுத்தனர். தமிழ் ஊடகங்களும் ஏதோ ‘தமிழீழம்’ கிடைத்த மாதிரி இதனைப் பிரமாதப்படுத்தின.
இக் கூட்டுத் தமிழ்க் கட்சிகளின் கூட்டம் இரண்டாவது தடவையாகவும் மாவை சேனாதிராசாவின் தலைமையில் நடந்து முடிந்துள்ளது. இக் ‘கூட்டு’ ப் பற்றி இப்போது பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இரண்டாவது கூட்டத்தில் சுமந்திரன் கலந்து கொண்டதால் அனந்தி சசிதரன் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இக்கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனோ, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரனோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ கலந்து கொள்ளவில்லை.
இக்கூட்டில் முன்னாள் ‘ரெலோ’வின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என். சிறிகாந்தா இருப்பதால் ‘ரெலோ’வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆர்வம் காட்டவில்லையாம். ‘ரெலோ’ தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலொன்று. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு பங்காளிக் கட்சியான ‘புளொட்’டின் தலைவர் சித்தார்த்தனும் இக் கூட்டில் சிரத்தை காட்டவில்லையாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகவும் தலைமைக் கட்சியாகவும் விளங்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஏற்கனவே தமிழ்க் கட்சிகளின் கூட்டாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றபோது, புதிய கூட்டை உருவாக்க முனைவதின் நோக்கமென்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது காலாவதியாகி விட்டதா?
ஆரம்பத்தில் மாவையின் முயற்சியைப் பாராட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இப்போது இப்புதிய கூட்டை விரும்பவில்லையாம். மூத்த அரசியல்வாதியும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ.ஆனந்தசங்கரியை இக்கூட்டு முற்றாகவே புறந்தள்ளிவிட்டது.
‘இரண்டு தேசங்கள், ஒரு நாடு’ என முழங்கித் திரிகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) இக்கூட்டு பற்றி அலட்டிக் கொள்ளவில்லையாம். அதன் வழி தனி வழி. தமிழ்த்தேசியப் பரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகளில் ‘பத்தரை மாற்றுப் பசும்பொன்’ தாங்கள் மட்டுமே என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொண்டு திரியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போக்கு இவ்வாறு தனிப் போக்காக உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் விரும்பாத இப்புதிய கூட்டுக்குத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி. வி.விக்னேஸ்வரன் முழுமையான உற்சாகம் அளிப்பதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை. இடையில் தமிழ்க் கட்சிகள் யாவும் சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் ஒன்றுபட வேண்டும் என்றும் அறிக்கை விட்டவர் சி. வி. விக்னேஸ்வரன். இதன் பின்னர் மாவை சேனாதிராசா தானே தேடிச்சென்று சி. வி. விக்னேஸ்வரனைச் சந்தித்து உள்ளார். இச்சந்திப்பின் பின்னர் சி. வி. விக்னேஸ்வரன் தனது ‘சுருதி’யை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தனது மூலக் கட்சியான ஈபிஆர்எல்எப் இன் பெயரையும் அதன் ‘பூ’ ச்சின்னத்தையும் தியாகம் செய்து தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரனை இழுத்து வந்து ஈ.பி.ஆர்.எல்.எப். மறுவடிவம் எடுத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைமைப் பதவியையும் அவருக்கு அளித்து அழகு பார்த்த முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வகிபாகம் மாவை சேனாதிராசாவின் இப்புதிய கூட்டில் எத்தகையது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதேவேளை, கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் எதுவும் இப்புதிய கூட்டின் கூட்டங்களுக்கு அழைக்கப்படவேயில்லை. வடக்கைத் தளமாகக் கொண்ட இக்கூட்டுக் கட்சிகளின் பார்வையில் கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசியத் துரோகிகள் என்ற எடுகோளின்படி அவை தீண்டத் தகாதவை போலும்.
இப்புதிய கூட்டிற்குத் தலைமையேற்றுள்ள மாவை சேனாதிராசா வயதின் அடிப்படையில் அதிக காலம் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் நின்றிருந்தாலும் கூட இதுவரை ஆளுமையும் ஆற்றலும் உள்ள தலைமைத்துவப் பண்புகளைத் தன்னகத்தே கொண்டதொரு தலைவராகத் தன்னை வெளிப்படுத்தியவரல்ல. ‘ஊமையர் சபையில் உளறுவாயன் மகாவித்துவான்’ என்பது போலத்தான் மாவை சேனாதிராசா தற்போதைய தமிழரசுக் கட்சிக்குத் தலைமை தாங்குகிறார். இந்தப் பின்னணியில் இக்கூட்டு தமிழ்த் தேசிய அரசியலில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது?
கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் தன்னிச்சையான–தன் முனைப்பான–தான்தோன்றித்தனமான–தன்னலம் நிறைந்த — தனிநபர் விருப்பு வெறுப்புகளையும் ஆசாபாசங்களையும் அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் காரணமாக ஏற்கனவே மனம் சலித்தும் குழம்பியும் போயுள்ள தமிழ் மக்களை இப் புதிய கூட்டு முயற்சி மேலும் குழப்பிவிட்டுள்ளது. இக்கூட்டு முயற்சியில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் நலன்கள் சார்ந்த நோக்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கும் இனியில்லை என்ற மூப்பும் வந்துவிட்டது. உடலும் தளர்ந்து விட்டது. இயற்கை யாரைத்தான் விட்டு வைத்தது. பிணியும் மூப்பும் சாக்காடும் மனித வாழ்வில் தவிர்க்க முடியாதவை. எனினும் அவரும் அந்த ஸ்தானத்தை விட்டு நகர்வதாக இல்லை. இரா சம்பந்தன் அவர்களின் காலத்திற்குப் பின்னர் காலியாகப் போகும் ‘திண்ணை’யில் யார் முதலில் போய்க் குந்துவது என்பதற்கான முஸ்தீபுதான் இப்புதிய ‘கூட்டு’ முயற்சி என்றே எண்ணத் தோன்றுகிறது. எதற்கும் காலம் பதில் சொல்லும்.
அதேவேளை, மாவை சேனாதிராசாவின் இக்கூட்டு முயற்சி ஒருபுறம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தாமாகவே கடந்த கால அரசியல் காழ்ப்புணர்வுகளையெல்லாம் கடந்து சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் ‘தமிழர்தரப்பு’ ஆக ஒன்றிணைப்பதற்கான ஓர் அரசியல் பொறிமுறையை ஏற்படுத்தத் திறந்த மனதோடும் அர்ப்பணிப்போடும் முன் வருவாரேயானால் அதுவே இப்போதைக்கு ஓர் ஆரோக்கியமான அவசியமான அரசியல் செயற்பாடாக அமையும்.