— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
கேசவன் அப்படிக்கேட்டதும் அகல்யாவுக்குச் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அரைமணி நேரத்திற்கு முன்னர் நெஞ்சம் நிறைந்த கனவுகளோடும், நினைத்து மகிழ்ந்த நினைவுகளோடும்தான் அகல்யா அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.
ஆம். அன்று அவளுக்கு முதலிரவு. கேசவனுக்கும் அகல்யாவுக்கும் அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. இரு வீட்டாரும் பேசி முடித்த திருமணம்தான். அகல்யா என்னதான் படித்திருந்தாலும் தமிழ்ப்பெண் என்பதால் ஒருவித பயமும், படபடப்பும் எழவே செய்தன. ஆனந்தப் பூரிப்பு இதயத்தில் நிறைந்திருந்தாலும், அது அடங்கியிருந்தது. தாலிகட்டிய கணவன் என்றாலும் தனியறையில் முதல்முதல் அந்த உறவு ஆரம்பமாகும் இரவு என்பதால் அச்சமும், நாணமும் அவளை முற்றாகவே ஆட்கொண்டிருந்தன. கதவைத் தாழிட்டுவிட்டு அவள் கட்டிலில் அமர்ந்ததும் மெல்லப் பேச்சுக்கொடுத்த கேசவன் மிகவும் அன்பாகவே கதைத்தான்.
திருமணத்திற்கு முன்பும் சிலதடவைகள் அகல்யாவின் வீட்டுக்கு கேசவன் வந்திருக்கிறான். அகல்யா அவனுடன் கதைத்திருக்கிறாள். ஆனாலும் கூச்சம் தெளியும் அளவுக்குப் பழகியதில்லை. அத்துடன் அன்றிரவுதான் அவளின் முதலிரவு. அந்தத் தனிமையும், அடுத்து நடக்கவிருக்கும் தனது வாழ்வின் அரங்கேற்றம் பற்றிய எண்ணம் தரும் அச்சமும் பேசுவதற்கு அவளுக்குத் தயக்கத்தைக் கொடுத்தன. அவன் பேசினான். மிகவும் இயல்பாகப் பேசினான். இதமாகப் பேசினான். அவளது காதருகே மெதுவாகப் பேசினான். அவளது மெல்லிய ரோமங்கள் சில்லிட்டு நின்றன. அவளின் கையைப்பிடித்து அந்த மெல்லிய விரல்களைத் தடவினான். சிலிர்த்தது அவளுக்கு உடல்முழுவதும். அப்போதுதான் அவன் சொன்னான், ‘அகல்யா! இன்றையில இருந்து எனக்கு நீ. உனக்கு நான். நமக்குள்ள எந்த இரகசியமோ, ஒளிவுமறைவோ இருக்கக்கூடாது. என்ர கடந்த காலத்தில நடந்ததையெல்லாம் நான் இப்ப உனக்குச் சொல்லப்போறன். அதுபோல நீயும் சொல்லலாம். அப்பதான் நாங்கள் ஒருத்தரையொருத்தர் தெளிவாகப் புரிஞ்சுகொள்ள முடியும். என்ன நான் சொல்றது சரிதானே?’
நனவிலேயே கனவில் மிதந்திருந்த அகல்யா, ‘…ம்…ஓம்…சரி..’ என்றாள் மிகவும் மெல்லிய குரலில்.
‘என்னைச் சில பெண்கள் விரும்பியிருக்கிறாங்க.. நானும் சில பெண்களோட பழகியிருக்கிறன். அப்படி உன்னை யாராவது விரும்பியிருக்கிறாங்களா..?’ கேசவன் கேட்டான்.
‘..ம்…எனக்குத் தெரியாது..’
‘நீ…நீ..யாரையாவது விரும்பியிருக்கிறியா..?’ கேட்கும்போது கேசவனின் குரலில் சற்று கரகரப்பு இருந்தது.
‘..ம்…இல்ல. எனக்கு அப்படியெல்லாம் ஒண்டுமில்ல..’ மிகவும் நிதானமாகவே பதில் சொன்னாள் அகல்யா.
‘ இஞ்சபார் அகல்யா!…நீ என்னைக் காணும் வரைக்கும், உனக்கு என்னைக் கலியாணம் பேசும் வரைக்கும், நீ யாரையுமே விரும்பியிருக்கக்கூடாது எண்டு எதிர்பாக்கிறது மடத்தனம். பழகியிருந்தாலோ அல்லது விரும்பியிருந்தாலோ அதில தவறில்ல. அதைப்பற்றியெல்லாம் நான் ஒண்டுமே நினைக்கமாட்டன். நீ தயங்காமச் சொல்லலாம்..’ என்ற கேசவன் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனான்.
‘ நான் ஏஎல் படிக்கேக்குள்ள என்னோட படிச்ச மேகலா எண்றவளைக் காதலிச்சன். அவளும் என்னை விரும்பினாள். கடிதங்கள் எல்லாம் எழுதியிருக்கிறம். பிறகு லண்டன்ல இருந்த அவங்கட அப்பாட்ட குடும்பத்தோட போயிற்றாள். போகேக்குள்ள என்னிட்டச் சொல்லித்தான் போனாள். ‘மறக்கமாட்டன், உங்களையும் கெதியா லண்டனுக்கு எடுப்பன்’ எண்டெல்லாம் சொன்னாள். ஆனால் போனபிறகு அவள் எனக்கு ஒரு கடிதமும் போடேல்ல. அவள்ற விலாசம் எனக்குத் தெரியாது. அதனால நானும் எழுதேல்ல. பிறகு அப்பிடியே மறந்து போயிற்று. யூனிவசிற்றியில இன்னுமொரு காதல். ஒண்டாத் திரிஞ்சம்…ஒண்டாப்பழகினம்…மிச்சம் நெருக்கமாக எல்லாம் பழகியிருக்கிறம். என்ன? மிச்சம் நெருக்கமாக எண்டால் எப்படிப்பட்ட நெருக்கம் எண்ட கேட்கமாட்டியா?’
அகல்யா அவனை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. விரல்களால் படுக்கையை மெல்லக் கீறியவாறு தலை குனிந்துகொண்டிருந்தாள்.
‘ சரி நானே சொல்றன்…நாங்க ரெண்டுபோரும் கொழும்பில றூம் எடுத்து ஒண்டாத் தங்கியிருக்கிறம். இப்பிடி நாலைஞ்சு தடவை நடந்திருக்கு. அந்த அளவுக்கு ஒருத்தரையொருத்தர் நம்பினம். பிறகு அவளுக்கு வேறொருத்தரோட கலியாணம் ஒழுங்காச்சுது. தன்னை மறந்திடச் சொன்னாள்….ம்.. எல்லாம் பழைய கதை. இப்ப நான் புது மனுசன். எண்டைக்கு உன்னை எனக்குக் கலியாணம் பேசினாங்களோ, அண்டையில இருந்து நான் உனக்கு..உனக்கு மட்டுந்தான். ஏன் அகல்யா ஒண்டுமே பேசாமல் இருக்கிறாய்?’
‘..ம்..ஒண்டுமில்ல….சொல்லுங்க…’ கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோல அகல்யாவிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.
கேசவன் தொடர்ந்தான். ‘என்ன அகல்யா? நான்தான் என்னைப்பற்றி எல்லாத்தையும் சொல்லிற்றேனே. என்னிட்ட உனக்குத்தெரியாம எந்த இரகசியமும் இருக்கக்கூடாது எண்டு நான் நினைக்கிறன். அதனாலதான் இப்ப இதையெல்லாம் சொன்னனான். இனி என்ர மனதில ஒண்டுமே இல்ல. மனமெல்லாம் நீதான் இருக்கிறாய்..’
அகல்யாவுக்கு என்னவோபோல இருந்தது. சந்தோசமா, நிம்மதியா, கலக்கமா.. எல்லாம் கலந்த குழப்பமா, எதுவென்று இனம்புரியாததோர் உணர்ச்சி அவளைத் தாக்கியது. அவள் எதுவுமே பேசமுடியாமல் இருந்தாள்.
அவன் மெல்ல அவளை அணைத்தான். அந்த அணைப்பில் எல்லாக் குழப்பங்களும் தகர்ந்தன. இதுவரை கண்டிராத புதுவித சுகமொன்றின் தவிப்பு அவளை ஆக்கிரமித்தது. அவளை அணைத்துக்கொண்டே அவன் கேட்டான்.
‘நான் சொன்னமாதிரி..உன்னுடய வாழ்க்கையில ஏதாவது நடந்திருக்குதா? தயங்காமச் சொல். இண்டைக்கு மட்டுந்தானே இதையெல்லாம் நாம கதைச்சுப் பகிர்ந்துக்கலாம்…’
‘..சீ..அப்படியெல்லாம் எதுவுமில்ல…’
‘என்ன அகல்யா..இதுவரையில ஒருத்தரோடையுமே நீ பழகல்லையா? ஒருத்தன்கூட உனக்குக் கடிதம் எழுதல்லையா? நீ எவ்வளவு வடிவாயிருக்கிறாய்! யாராவது உன்னிட்டச் சேட்டையாவது விட்டிருப்பாங்களே…அதுகளத்தான் கேட்கிறன். சொல்ல விருப்பமெண்டாச் சொல்லு…இல்லாட்டி..’ அவளது கீழ் உதட்டினைத் தன் சுட்டுவிரலால் வருடியவாறே அவளது வாயைக் கிளற முயன்றான் கேசவன்.
அகல்யாவுக்கு நினைவு சுழன்றது. ‘எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? எதையாவது சொல்லித்தான் ஆகவேண்டுமா? இவர் இந்த நேரத்திலே இப்படிக் கேட்பதன் நோக்கம் என்ன? உண்மையிலேயே ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும், பழையவற்றை இன்று பகிர்ந்துகொள்ள வேண்டும், எல்லாவற்றையுமே இன்றோடு மறந்து விடவேண்டும் என்கின்ற நல்ல நோக்கம்தான் காரணமா? அல்லது என்னில் சந்தேகம் கொண்டு இப்படிக் கேட்கிறாரா? இன்று எதையாவது உளறிவிட, அதைவைத்தே வாழ்க்கை முழுவதும் நம்மை இவர் வாட்டி வதைக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்? இப்படித்தான் எனது பள்ளித்தோழி கமலாவின் வாழ்க்கை பாழாகிப் போனது. திருமணத்துக்குப் பிறகு, தன் கணவன் தன்னிடம் மிகவும் பிரியமாயிருந்ததால் அவனுக்கு எதையுமே ஒழிக்கக்கூடாது என்ற மன உறுத்தலால் ஒருநாள் தன் பழைய காதல் தொடர்புபற்றிச் சொன்னாளாம். வெறும் கடிதப் பரிமாற்றம் என்ற அளவில்தான் அவளது காதல் இருந்தது. அதைத்தான் சொன்னாளாம். அதுவும், தான் திருமணத்திற்கு முன்னர் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக அவன் சொன்னபிறகுதான் சொன்னவளாம்.
அவள் தன் பழைய காதல் பற்றிச் சொல்லி முடிந்ததும், வில்லன்போல ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு, தனக்கு ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்ததாகத் தான் சொன்னதெல்லாம் பொய் என்றும், கமலாவின் கடந்தகால உண்மையை அறிவதற்காகவே அப்படிச்சொல்லி அவளின் வாயைக் கிளறியதாகவும் சொன்னானாம். அன்றிலிருந்து எதற்கெடுத்தாலும் அவளின் பழைய காதல்பற்றியே குத்தலும், குதர்க்கமமாகக் கதைத்து, அவளது கற்பிலேயே களங்கம் கூறி, தினமும் சண்டையும் சச்சரவும், அடியும் உதையுமாகி இறுதியில் அவளைவிட்டுப் பிரிந்தே போய்விட்டானாம். திருமணமாகி இரண்டு வருடங்களுக்குப்பிறகு பிறந்த குழந்தயைக்கூட அவன் தன்னுடயதல்ல என்று மறுத்தானாம். ஒருவனோடு கடிதத் தொடர்பு மட்டும் இருந்ததைக்கூறிய அவளைப் பலரோடு உடலுறவு வைத்திருந்த ஒரு பரத்தையாகவே அவன் குற்றம் சாட்டித் துன்புறுத்தினானாம்.’
கமலாவின் வாழ்க்கை கணப்பொழுதில் அகல்யாவின் நெஞ்சுத் திரையிலே படமாய் ஓடியது.
‘கேசவன் ஒரு பெண்ணோடு கொழும்பில் தனியறையில் பலதடவைகள் தங்கியதாகத் தன்னிடம் சொன்னதுகூட தன் வாயைக் கிளறுவதற்கான ஒரு பொய்யாக இருந்தால்….’ அகல்யாவக்குத் தலை சுற்றியது. இத்தனைக்கும் அவளுக்கு இதுவரையில் எவருடனும் காதல் ஏற்பட்டதில்லை. எந்த ஆணுடனும் நெருக்கமாகப் பழகியதில்லை. ஆனால், யாரும் தன்னை விரும்பியதில்லை என்றோ அல்லது யாரும் தன்னில் சேட்டைவிடவில்லை என்றோ அவளால் பொய்கூறவும் முடியவில்லை. எதைச்சொல்வாள்? எப்படிச் செல்வாள்?’
‘பாடசாலையில் படிக்கும்போது விஞ்ஞான ஆய்வுகூடத்தினுள் ஒருநாள் பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கும்போது பின்னால் வந்து கட்டிப்பிடித்த ஆசிரியரின் கன்னத்தில் அறைந்ததையும் பின்னர் அவர் தன் காலில் விழுந்து யாரிடம் சொல்லிவிடவேண்டாம் என்று கெஞ்சியதையும். அடுத்த மாதமே அவர் வேறு மாவட்டத்திற்கு மாற்றம் பெற்றுச் சென்றுவிட்டதையும் சொல்வதா? ஆசிரியர் ஆய்வுகூடத்தினுள் கட்டிப்பிடித்தது மட்டுந்தானா, அதற்கு மேலும் நடந்ததா என்று சந்தேகப்பட்டு விட்டால்?’
‘அக்கா பிள்ளைப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது, அறையில் படித்துக்கொண்டிருந்த தனக்குப்பின்னால் வந்துநின்று அத்தான் தனது மார்பகங்களை வருடியதையும் திடுக்கிட்டு அவரின் பிடியிலிருந்து திமிறியெழுந்து தாங்கொணாத வேதனையால் தான் கேவிக்கேவி அழுததையும் தன்னைத் தேற்றுவதுபோல வந்து மீண்டும் தன்னைக் கட்டியணைக்க முயன்றதையும் சொல்வதா? அன்றிலிருந்து அவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தான் எடுத்துவரும் பிராயத்தனங்களைப் பற்றிச் சொல்வதா? அக்காவின் வாழ்க்கையை நினைத்து யாரிடமும் அதுபற்றிச் சொல்லவும் முடியாமல் நேற்றுவரை தினமும் மனதால் நடுங்கிக்கொண்டிருப்பதைச் சொல்வதா? சொன்னால் அவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றி வருவதை நம்பித் தன்னைப் பாராட்டுவாரா?
அதற்கு மாறாக, ஒரே வீட்டில் ஒன்றாக இருந்துகொண்டு என்னால் தப்பிக்க முயாதென்றும், ஒருநாளாவது ஏதாவது நடந்திருக்கும் என்றும் சந்தேகப்பட்டுவிட்டால்..?’
‘இப்படித்தானே பொன்னம்மா மாமியின் மகள் சரசாவின் வாழ்க்கை பாழானது. சரசாவின் தமக்கையின் கணவர் சிவசம்பு அண்ணர் மிகவும் நல்லவர். உத்தமமானவர். தனது மனைவியின் தங்கைமாரைத் தனது பிள்ளைகளைப்போல நினைத்தவர். பாசத்துடன் பராமரித்தவர். அவர்களது சின்ன வயதிலேயே கதிரேசன் மாமா செத்துப்போனதால் ஒரு தந்தையைப்போல அன்புகாட்டிய சிவசம்பு அண்ணரோடு சரசாவும் அவளின் இரண்டு தங்கச்சிகளும் மிகவும் நெருக்கமாகப் பழகினார்கள். ஆனால், சரசாவின் கணவன் சந்திரன். கலியாணம் முடிந்து சிலமாதங்களிலேயே, சரசாவுக்கும் சிவசம்பு அண்ணனுக்கும் இருந்த அந்தத் தூய அன்பில் சந்தேகப்பட்டு, சரசாவை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியதும், இன்றுவரை சரசா தனது தாயுடனோ அல்லது அக்கா தங்கைமார்களுடனோ கண்ட இடத்தில்கூட கதைக்கமுடியாமல் சந்திரனுடன் தனித்து வாழ்ந்து சித்திரவதைப்படுவதும் ஊரே அறிந்த கதையல்லவா?’
அகல்யாவோடு கூடப்படித்த கண்ணன் வகுப்பில் நல்ல கெட்டிக்காரன். இப்போது உதவி அரசாங்க அதிபராக இருக்கிறான். அவன் படிக்கும்போதிருந்தே அகல்யாவை விரும்பினான். பல்கலைக்கழகத்திற்குப் போனபிறகும் அகல்யாவை அவன் மறக்கவில்லை. உதவி அரசாங்க அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டதும் ஒருநாள் அகல்யாவைச் சந்தித்து மாறாத தன் காதலை மீண்டும் உறுதிப்படுத்தினான். அகல்யாவின் சம்மதத்தைக் கேட்டான். அவளது மனம் சம்மதிக்க இணங்கியது. ஆனாலும், அதை வெளிப்படுத்தாமல் தனது பெற்றோரிடம் கேட்கும்படி அகல்யா சொன்னாள். ஆனால் பயிற்சிக்குச் சென்றிருந்தபோது, மாற்றுக்கலியாணத்திற்கு அவனது பெற்றோர் ஒழுங்கு செய்ய, தங்கைக்காகத் தனது காதலைத் தியாகம்செய்து கொழம்புப் பெண்ணுக்குத் தாலிகட்டினான். கண்ணன் தன்னைக் காதலித்த விடயம் இப்போது அகல்யாவின் மனத்திரையில் ஓடியது.
‘பள்ளிக் காலத்திலிருந்து பட்டம் பெற்றுப் பதவியை அடையும்வரை தன்னில் பித்துக்கொண்டிருந்த கண்ணனின் கதையைக் கணவனிடம் சொல்லலாமா? வெறும் பழக்கம் மட்டுந்தானா? வேறு பழக்கங்களும் உண்டா என்று அவன் கேட்டுவிட்டால்…? இல்லையென்று உண்மையைச் சொன்னாலும், அதை உண்மையென்று அவன் நம்புவானா? நம்பாவிட்டால் தன்னை அணுகும்போதெல்லாம் அதையே அவன் நினைத்துக்கொண்டால்…?’
‘அவருக்கென்ன, அவர் சொல்லிவிட்டார். அவர் சொன்னவைகளைப்பற்றி நான் குறைசொல்ல மாட்டேன், குத்திக் காட்டமாட்டேன், என்ற தைரியம். ஆனால் நான்? என் கடந்தகாலம்பற்றி நடந்த உண்மைகளைச் சொல்வதற்குக்கூட எவ்வளவு சங்கடப்பட வேண்டியிருக்கிறது. சங்கடம் மட்டும் என்றால் பரவாயில்லை. சொல்ல நினைக்கும் ஒவ்வொரு சொல்லும் தனது வாழ்க்கையையே பாழாக்கிவிடலாம் என்ற நிலையல்லவா இந்தச் சமுதாயத்தில் உள்ளது. கடவுளே! இது என்ன நீதி? அவர் ஆண் எதையும் செய்யலாம். எதையும் சொல்லலாம். ஒரு பெண் எதைச் சொல்வதென்றாலும் அதைப் பயந்துகொண்டே சொல்லவேண்டிய அவலமான நிலைமை. சொல்லிவிட்டால் எப்போது என்ன நடக்குமோ என்று வாழ்வு முடியும்வரை ஒவ்வொரு கணமும் செத்துப்பிழைக்கவேண்டிய கொடுமை.’
இத்தனை விடயங்களும் அகல்யாவின் எண்ணத்தில் எழுந்தன. கணப்பொழுதுச் சிந்தனையில் அகல்யா ஒரு முடிவுக்கு வந்தாள். அழகொழுகத் தலைசாய்த்து அரைக்கண்ணால் கேசவனைப் பார்த்தாள். ‘இல்லைங்க. அப்பா மிகவும் கண்டிப்பாக எங்கள வளர்த்தவர். நாங்க அனாவசியமாக வெளியில எங்கேயும் போறதே இல்ல. நான் முதல்முதல்ல கொஞ்சநேரம் கதைச்சிருந்ததெண்டால் அது உங்களோடதான். அப்பாவுக்குப் பயத்தில ஒருத்தரும் என்ன விரும்பியதுகூட இல்ல.’ என்று சொன்னவள், தலை நிமிர்ந்து கேசவனைப் பார்த்தாள். அவனின் முகத்தில் ஒளிர்ந்த பிரகாசத்தின் அர்த்தத்தை உணர்ந்து சற்றுத் தைரியத்துடன், ‘ நான் வடிவில்லையோ என்னவோ, அதனாலதான் ஒருத்தரும் என்னை விரும்பல்லையோ தெரியாது’ என்றபடி தலைகுனிந்து நிலத்தில் கோலமிடும் தன்வலக்கால் பொருவிரலில் கண்புதைத்தாள். இந்தப்பதில் கேசவனுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது. அவனது திருப்தி அவனின் முகத்திலும், அவளை அணைத்த அணைப்பிலும் அகல்யாவுக்குப் புரிந்தது. விளக்கு அணைந்தது. அறையில் இருள் நிறைந்தது. அந்த இருளில், அகல்யாவுக்குத் தன் எதிர்கால வாழ்வின் ஒளி தெரிந்தது.
(யாவும் கற்பனை)