சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (8)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (8)

— சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —

‘இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’

ஏழாம் வகுப்பில் எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த தியாகராஜா அவர்களின் பிறப்பிடம் பெரியகல்லாறு. திருகோணமலையில் திருமணம் செய்து வாழ்ந்த அவர். திறமையான ஆசிரியர், எங்களுக்குப் பிடித்த அருமையான ஆசிரியர். ஆங்கிலம், தமிழ் இரண்டு பாடங்களையும் அவர் எங்களுக்குக் கற்பித்தார். அடிக்கடி பகிடிகள் விடுவார், அனைவரையும் சிரித்து மகிழவைப்பார்!

அந்தக்காலத்தில் மாணவர்களிடம் வசதிக்கட்டணம் அறவிடப்படும். ஆளுக்கு இரண்டு ரூபாய் வீதம் மாணவர்கள் செலுத்தவேண்டும். வசதிக்கட்டணத்தை, வசூலிப்பதும் பற்றுச்சீட்டு வழங்குவதும் வகுப்பாசிரியரின் கடமைகளில் ஒன்றாக வழமை இருந்தது. அதிபர் எங்கள் வகுப்பிற்குரிய பற்றுச் சீட்டுப் புத்தகத்தை ஆசிரியர் தியாகராஜா அவர்களுக்கு ஒரு மாணவரிடம் கொடுத்தனுப்பினார் ‘என்ன இது?’ என்று அதைக் கொண்டுவந்த மாணவரிடம் ஆசிரியர் கேட்டார். ‘அதிபர் தந்தார் சேர்..வசதிக்கட்டணம்..ரிசீற் புத்தகம்…’ என்று அவர் தயங்கியபடி கூறினார். ‘அதை அதிபரிடமே திருப்பிக் கொண்டுபோய்க் கொடு. நான் வசதிக்கட்டணம் வாங்க மாட்டேனாம் என்று அவரிடம் போய்ச் சொல்லு’ என்று சற்றுக் கோபத்துடன் சொல்லி அவரை அனுப்பிவிட்டார்.

பின்னர் வகுப்பில் எங்களைப் பார்த்துச் சொன்னார், ‘வசதிக்கட்டணம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா. உங்களுக்காகச் சில வசதிகளை செய்து கொடுப்பதற்கு ஏற்படும் செலவுகளுக்காக உங்களுடைய பெற்றோரிடம் வசூலிப்பது. விளங்குதா? அப்ப, நீங்க கொடுக்கும் பணத்தில் உங்களுக்கு இந்தப் பாடசாலையில் சில வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். இதுவரையில் என்ன வசதிகளைச் செய்து தந்திருக்கிறாங்க? உங்களுக்குத் தெரியுமா? ஒன்றுமே இல்ல. ஒண்டுக்கு இருக்க ஒதுக்கிடம் ஒண்டு இல்ல. நான் சைக்கிளில அங்கால இருக்கிற…அந்தக் குளத்திற்கு….என்ன குளம் அது…?? ‘வண்ணன் குளம் சேர்!’ ‘ஆ..வண்ணான் குளமோ, அம்பட்டன் குளமோ…அந்தக் குளத்தடிக்கு ஒவ்வொரு நாளும் ரெண்டுதரம் போய் வாறன். அதனால நீங்க உங்கட வசதிக்கட்டணத்த அதிபரிட்டயே கொடுங்க. நான் வாங்கமாட்டன்’ என்று சொல்லிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தார்.

சற்று நேரத்தில், மேல்வகுப்பு மாணவர் ஒருவர், கடிதம் ஒன்றைக் கொண்டுவந்து ஆசிரியரிடம் கொடுத்தார். அதை வாசித்த தியாகராஜா சேர், ‘கொப்பித் தாள் ஒன்றைக் கிழித்தெடுத்து, ஏதோ எழுதினார். முன்வரிசையில் அமர்ந்திருந்த என்னை அழைத்து, ஆங்கிலத்தில் எழுதிய அந்தக் கடிதத்தை நான்காக மடித்து, என்னிடம் கொடுத்து, அதிபரிடம் சேர்க்கும்படி கூறினார். வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோல நான் அதிபரின் அறையை நோக்கி ஓடினேன். கடிதத்தை அவரிடம் கொடுத்தேன். ‘என்ன உது?’ என்று கேட்டுக்கொண்டே, கடிதத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கினார். அவரது முகத்தில் கோபம் உயர்வதை அவதானித்த நான், அவரிடம் விடை சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியேறத் திரும்பினேன். ‘நில்லும்!’ என்றார் அதிபர். நின்றேன். ஒரு தாளை எடுத்து இரண்டாக் கிழித்து, ஒருபாதியில் ஏதோ எழுதினார். இரண்டு மூன்று வரிகள்தான் இருக்கும். அதை இரண்டாக மடித்து, ‘உம்முட சேறட்டக் கொண்டு கொடும்’ என்று சொல்லிக்கொண்டே என்னிடம் தந்தார்.

மீண்டும் வகுப்பை நோக்கி ஓடினேன். இவ்வாறு, மூவிரண்டு, மொத்தம் ஆறு தடவைகள் அவரிடமிருந்து இவரிடமும், இவரிடமிருந்து அவரிடமுமாக ஓடினேன். அப்போது அது எனக்குப் பிடித்திருந்தது. ஏதோ நான் ஒரு மிகப்பெரிய சேவையைச் செய்வதுபோல எண்ணிக்கொண்டேன். இடைக்கிடை, வகுப்பிலிருந்த நண்பர்களைப் பார்த்துப் புன்னகைத்து இறுமாப்படைந்தேன். மறுநாள் மாணவர் வரவைப் பதிவதற்கு வந்திருந்த வகுப்பாசிரியர், தியாகராஜா அவர்கள், இடாப்புக் கூப்பிட்டு முடிந்ததும், எழுந்து நின்று, ‘சரி, ஆங்கிலப் பாடத்தில சந்திப்பம். இதுதான் நான் உங்களுக்குப் படிப்பிக்கும் கடைசி நாளாயிருக்கும். இங்கயிருந்து எனக்கு மாறுதல் வந்திருக்கு….’ என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். எங்களுக்குப் பேரதிர்ச்சியாயிருந்தது. ஒட்டு மொத்த வகுப்பும் பேச வார்த்தைகளின்றி உறைந்துபோயிற்று. தொண்டையை அடைத்த துக்கத்தை எல்லோரின் கண்களும் வெளிப்படுத்தின.

அதிபர் முதல் நாள் பிற்பகலே மட்டக்களப்புக் கல்வித் திணைக்களத்திற்குச் சென்று, கல்விப் பணிப்பாளரைச் சந்தித்து, கையிலேலே தியாகராசா ஆசிரியருக்கான இடமாற்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு வந்திருக்கிறார். காலையில் கையெழுத்திடச் சென்ற ஆசிரியரிடம், அத்த உத்தரவைக் கொடுத்திருக்கிறார். இந்த விபரம் எங்களுக்குப் பின்னர் தெரிய வந்தது.

இந்தச் சம்பவத்தை இங்கு நான் குறிப்பிட்டதற்குக் காரணம் அன்றைய நிர்வாக முறைகள் எப்படி இருந்தன என்பதை இன்றைய சமுதாயத்திற்கு அறியத்தருவதற்காகத்தான். தியாகராஜா ஆசிரியர் அவர்கள், ஒரு நல்லாசிரியராய்ப் பணிபுரிந்தவர், மற்றைய எல்லா ஆசிரியர்களாலும் மட்டுமன்றி, அதிபராலும் கூட மதிக்கப்பட்டவர், மாணவர்களால் விரும்பப்பட்டவர், அப்படியிருந்தும், தனது கட்டளையை நிறைவேற்ற மறுத்த ஒரே காரணத்திற்காக, இதனை இப்படியே விட்டால் அது ஏனைய ஆசிரியர்களையும் குழப்பித் தனது நிர்வாகத்திற்கு எதிர்காலத்தில் இடையூறாக அமைந்துவிடலாம் என்பதற்காக, அடுத்த நாளே அவரைப் பாடசாலையில் இருந்து, அதிபர் அகற்றிவிட்டார்.

இத்தனைக்கும் தியாகராஜா சேர், கல்லாறு கிராமத்தைச் சேர்ந்தவர். கல்லாற்றைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் படிக்கிறார்கள். அப்போது பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவும், தமிழரசுக் கட்சித் தலைவராகவும் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்கள் இருக்கிறார். அவரது வீடு, பாடசாலையில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலே – ஐநூறு மீற்றருக்குள் – இருக்கிறது. அவரிடம்கூடக் கேட்காமல் ஆசிரியரை, அதிபர் மாற்றினார்.

தலைவர் இராசமாணிக்கம் அவர்கள் இந்த இடமாற்றத்தில் தலையிடவும் இல்லை. அவர் தலையிட மாட்டார் என்ற நம்பிக்கையும், சுதந்திரமும் அதிபர் அருணாசலம் அவர்களுக்கு இருந்தது. இப்படியொரு நிலைமை இன்று உள்ளதா என்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.

……. ……. …….

அறிவு தெரிந்த நாள்முதல் காலையில் எழுந்ததும் பாடசாலைக்குப் போய்ப் பழகிவிட்ட எங்களுக்கு 1969 ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர், பாடசாலைக்குப் போக முடியாத நிலை வந்ததும் தாங்கமுடியாத சோகம் நெஞ்சிலே பரவியது. மார்கழி விடுமுறை முடிந்தது. 1970 ஆம் ஆண்டு தைமாதம் பிறந்தது, முதலாம் தவணை தொடங்கியது. காலையிலே மாணவர்கள் பாடசாலைக்குப் போவதைப் பார்த்ததும் கவலையில் கண்ணீர் ததும்பியது. என்ன செய்வது, எப்படி நாட்களைக் கடத்துவது என்பது புரியவில்லை.

க.பொ.த. சாதாரண தரத்தில் திறமையாகச் சித்தியடைந்தும் விஞ்ஞானப் பிரிவில் உயர் கல்வி கற்க வசதியில்லாத நிலைமையில் நண்பர்கள் நாங்கள் பலர் திண்டாடினோம். கலைப்பிரிவு உயர் வகுப்புக்கள் எனக்கு நினைவு தெரியாத காலத்திலிருந்து எத்தனையோ வருடங்களாக நடைபெற்று வந்தன. அதன் விளைவாகப் பலர் பல்கலைக்கழகம் சென்று வருடாவருடம் பட்டதாரிகளாக வெளிவந்துகொண்டிருந்தார்கள்.

ஆனால் விஞ்ஞானப் பிரிவுக்கான உயர்வகுப்புக்கள் நகரப் பாடசாலைகளில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. எங்கள் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்திலே விஞ்ஞான உயர்தர வகுப்பினை நடாத்துவதற்கு அதிபர் திரு. க.அருணாசலம் அவர்களும், உப அதிபர், பண்டிதர், திரு.க.கந்தையா சேர் அவர்களும் மிகப் பெரும் முயற்சிகளை எடுத்தார்கள்.

அதிலும் உப அதிபர், பண்டிதர் க.கந்தையா சேர் அவர்கள் மிகவும் அக்கறை கொண்டு உழைத்தார். அதிபர் அருணாசலம் காலத்திலிருந்து, பின்னர் வீ.சீ.கந்தையா அவர்கள் அதிபரான பின்னரும் உப அதிபராக இருந்த க.கந்தையா சேர் அவர்கள் அதில் தீவிரமாகச் செயற்பட்டார். விஞ்ஞான உயர்வகுப்பு வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான கோரிக்கையினை, அவசியமான சான்றுகளோடு மட்டக்களப்புக் கல்விப் பணிப்பாளருக்குச் சமர்ப்பித்த ஆவணத்தினைத் தயாரித்தவர் உப அதிபர் க.கந்தையா சேர் அவர்களே. இந்த விபரங்களைத் தனது இறுதிக்காலத்தில் மெல்பேணில் வாழ்ந்த, அதிபர் க.அருணாசலம் அவர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

அதன் அடிப்படையிலேயே, போதிய மாணவர்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டு, விஞ்ஞான உயர்தர வகுப்பினை நடாத்துவதற்குக் கல்வித் திணைக்களம் வாய்மொழி அனுமதியை வழங்கியது, முறையான அனுமதியைப் பெறுவதில் நிச்சயமாக வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில், விஞ்ஞான உயர்வகுப்புக்களை ஆரம்பிக்க அதிபர் அவர்களும், உப அதிபர் அவர்களும் அடித்தளம் போட்டார்கள்.

ஆனால் படிப்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உயர்வகுப்புக்களுக்குப் படிப்பிக்க முடியும் என்றிருந்த நிலைமையால் உயர்வகுப்பு ஆரம்பிப்பதில் சிக்கல் எழுந்தது. செல்வி. அம்பிகை சீனிவாசகம் அவர்கள் மட்டுமே அப்போது அங்கே ஒரேயொரு விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியையாக இருந்தார். செல்வி இராஜகோன் என்பவர் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியையாக இருந்தார்.

அவரிடம் எங்களை அழைத்துச் சென்ற கந்தையா சேர், ‘நாங்கள் ஏஎல் சயன்ஸ் தொடங்கப் போகிறோம், நீங்களும் படிப்பிக்க வேண்டும்’ என்றார். யாருக்கு என்று அவர் கேட்க, இவர் எங்களைக் காட்டினார். ‘உவங்களுக்கா? ஐயையோ, நான் மாட்டன்’ என்று சொல்லி மறுத்துவிட்டார். அவர் மறுத்தது, எங்களை ஏதோ குழப்படிகாரர் என்று பயந்ததைப்போல இருந்தது. ஆனால் உண்மை அதுவல்ல. அவர் வெறும், ஏஎல் சித்தியோடுதான் பலாலியில் பயிற்றப்பட்டு வந்தவராம். பட்டதாரியில்லையாம், அதனால்தான் தயங்கினாராம் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டோம். அவவிடம் படிப்பதற்கு எங்கள் எல்லோருக்கும் கொள்ளை விருப்பம் இருந்தது என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். ஏன் என்றால், அவ அவ்வளவு அழகு! படிப்பிக்கும் ஆசிரியை அழாகாகவும் இருந்துவிட்டால் அதனை விரும்புவது அந்தவயதில் இயல்பான உணர்வுதானே? அதற்கு நாங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

1970 ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றிலும், எனது ஊரின் நிகழ்வுகளிலும், எங்களின் வாழ்விலும் மறக்க முடியாத பல சம்பவங்கள் இடம்பெற்றன. பொதுத் தேர்தல் இடம்பெற்றது. பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி களுவாஞ்சிகுடியை விட்டு இடம் மாறியது. எம்.ஜீ.ஆர் மன்றம் அமைக்கப்பட்டது, எம்.ஜீ.ஆர் மன்ற நூல் நிலையம் எரிக்கப்பட்டது. இப்படிப் பல நிகழ்ச்சிகள் 1970 ஆம் ஆண்டில் இடம்பெற்றன.

அரசுக்கு எதிரான ஏப்ரல் கிளர்ச்சி எனப்படும் சேகுவேரா பிரச்சினை 1971இல் இடம் பெற்றது. தொடர்புடைய விடயங்களைத் தொகுக்கும்போது ஒவ்வொன்றும் விரிவாக இந்தத்தொடர் கட்டுரையில் இடம்பெறும்.

(நினைவுகள் தொடரும்…)