— சீவகன் பூபாலரட்ணம் —
கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாம் அடிக்கடி சவர்க்காரம் போட்டு கைகழுவ வேண்டும் என்று கேட்கப்படுகின்றோம். கொவிட் 19 வைரஸ் பரவலைத்தடுக்க இந்தக் கோரிக்கை. ஆனால், இப்போது பொதுவாக சவர்க்காரம் என்றால் என்ன என்பதை, அது எங்கிருந்து வந்தது என்பதை, எப்படி அது உருவாக்கப்பட்டது என்பதை நினைப்பதில்லை. நியூஸ் இன் ஏசியா ஊடகத்தில் இருந்து சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
துப்பரவாக்கலுக்கு உதவும் இந்த சவர்க்காரம் பற்றிய வேர்களை தேடும் கதை இது.
சவர்க்காரம் ஒரு பக்றீரியா எதிர்ப்பு பொருள்
கொரொனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சவர்க்காரம் போட்டு கைகழுவுவது மிகவும் முக்கியமானது. கையின் அனைத்து மேற்பரப்பிலும் 20 செக்கன்கள் வரை தேய்த்து, ஒரு நாளைக்கு பல தடவைகள் கழுவ வேண்டும் என்பது எமக்கான ஆலோசனை.
சவர்க்காரம் என்றால் என்ன?
உண்மையில் எப்போதும் நாம் சவர்க்காரம் பயன்படுத்துகிறோம். ஆனால், அது என்ன, எங்கிருந்து வந்தது, எப்படி அது உருவானது?
ஒரு தூய்மைப்படுத்தும் மூலம்
ஒரு கொழுப்பு அமிலமும் கார உலோக ஹைட்ரொக்சைட்டும் இரசாயன தாக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் உருவான தூய்மைப்படுத்தும் பொருள்தான் சவர்க்காரம். இலகுவாக பார்த்தால், கொழுப்பையும் எண்ணெய்களையும் ஒரு ஆதாரத்துடன்(உதாரணமாக தெளிவான கிளிசரினில்) கலந்தால் சவர்க்காரம் வரும்.
சவர்க்காரத்தின் புராதனம்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சவர்க்காரத்தை பயன்படுத்துகிறார்கள். கி.மு 600 ஆண்டுகளிலேயே சவர்க்காரம் மக்களால் பயன்படுத்தப்பட்டதாக புராதன எழுத்துக்கள் கூறுகின்றன. ரோமானியர்கள் இதனை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், பபிலோனியாவில் கி.மு 2800 ஆண்டுகளிலேயெ சவர்க்காரம் போன்ற பொருட்களை தயாரித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சவர்க்காரம் தயாரித்தல்
8ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் உலகம் எங்கிலும் சவர்க்காரம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெவண்ட் என்ற இடத்தில் இருந்து ஐரோப்பாவுக்கு அது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வெவண்ட் என்பது கிழக்கு மத்தியதரைப் பகுதியைச் சேர்ந்த புராதன பகுதி. இப்போது அது லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
பண்டைய தயாரிப்புப் படிமுறை
பண்டைய காலத்தில் விலங்குக்கொழுப்பை அல்லது மரக்கறி எண்ணெயை(பொதுவாக ஒலிவ் எண்ணெய்) மர சாம்பல் கொண்ட காரத்துடன் சேர்த்து கொதிக்க வைப்பார்கள். “அலெப்போ சவர்க்காரம்” இப்போதும் சிரியாவில் இதே முறையைப் பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகின்றது. அலெப்போ என்பது சிரியாவின் ஒரு நகரைக் குறிக்கும் பெயர். சிரிய பருத்திக்கும் அதே பெயர்தான்.
ஐரோப்பாவுக்கான
மத்திய காலப்பகுதியில்தான் சவர்க்காரம் மூலம் தூய்மைப்படுத்தல் ஐரோப்பாவில் ஆரம்பித்துள்ளது. சவர்க்காரம் தயாரிக்கும் முறை அதற்கு முன்னதாகவே இத்தாலிக்கும் ஸ்பெயினுக்கும் வந்துவிட்டது. 15ஆம் நூற்றாண்டளவில் பிரான்சில் தொழில் ரீதியாக சவர்க்காரம் தயாரிக்கும் முறை ஆரம்பமாகிவிட்டது. குறிப்பாக ருலோன் மற்றும் மாசேய் ஆகிய இடங்களில் உற்பத்தி நடந்துள்ளது.
செல்வந்தருக்கு மாத்திரம்
சிறிய அளவில் தயாரிக்கப்பட்டதாலும், உற்பத்திச் செலவு அதிகம் என்பதாலும், தூய்மையாக இருத்தல் குறித்த ஒரு பாதகமான போக்காலும் 18 ஆம் நூற்றாண்டுவரை சவர்க்காரம் என்பது செல்வந்தர்களுக்கு மாத்திரமான பயன்பாட்டுப் பொருளாகவே இருந்துள்ளது. ஆடம்பரப் பொருளாக.
முக்கிய தொழிற்துறை
சவர்க்காரத் தயாரிப்பை ஒரு புதுமையுடன் கூடிய சுத்திகரிப்பு முறையில் மாற்றிய பெருமை பிரான்ஸ் நாட்டின் வேதியல் நிறுவனங்களான நிக்கோலஸ் லப்னான்க்(1742 – 1806) மற்றும் மிச்சேல் இயூஜின் செவ்ருவல்(1786 – 1889) ஆகிய நிறுவாங்களை சேரும். இதன் மூலம் சவர்க்காரத் தயாரிப்புச் செலவு குறைந்ததுடன், மக்கள் தமது தேக சுகாதாரத்தை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதும் நிலையையும் ஏற்பட்டது. சவர்க்கார உற்பத்தித்துறையும் மிகவும் முக்கிய தொழிற்துறையாக வளர்ந்தது.
தொழிற் புரட்சி
பிரிட்டனில் நடந்த தொழிற்புரட்சி பாரிய அளவிலான சவர்க்கார உற்பத்தியை தூண்டியது. குறைந்த விலையிலான, நல்ல தரமான சவர்க்காரங்கள் சந்தைக்கு வந்தன.
லிவர் பிரதர்ஸ
1886 இல் வில்லியம் ஹெஸ்கீத்தும் அவரது சகோதரரான ஜேம்ஸும் சேர்ந்து செஸ்ஸியரின் வொரிங்கடனில் சிறிய அளவில் சவர்க்கார உற்பத்தி வேலையை ஆரம்பித்தனர். உலகில் இன்றும் சவர்க்கார வணிகத்தில் பெரிய நிறுவனமாக திகழும் ஒரு நிறுவனத்தை அவர்கள்தான் உருவாக்கினார்கள். முன்னர் லிவர் பிரதர்ஸ் என்று அழைக்கப்பட்ட அந்த நிறுவனம் இப்போது யுனிலிவர் என்று அழைக்கப்படுகின்றது. இலங்கையிலும் இந்த லிவர் பிரதர்ஸ் முன்னர் பிரபலம்.
சவர்க்கார விளம்பரம்
இன்று லக்ஸ் அது இது என்று பலவிதமான சவர்க்கார விளம்பரங்களை அனைத்து ஊடகங்களிலும் நாம் பார்க்கிறோம். ஆனால், இதனை அப்போதே லிவர் பிரதர்ஸ் நிறுவனமும் ஏனைய சவர்க்கார தயாரிப்பாளர்களும் ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சவர்க்கார விளம்பர நடவடிக்கை பாரிய அளவில் போட்டியோடு அப்போதே நடந்திருக்கிறது. வீட்டுப் பாவனைக்கான சண்லைட் சவர்க்கார விளம்பரம் “வீட்டுப் பெண்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் சவர்க்காரம்” என்று பரிந்துரைத்தது.
திரவ சவர்க்காரம் (லிக்கியுட் சோப்)
திரவ சவர்க்காரம் 19 ஆம் நூற்றாண்டுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 1865இல்தான் வில்லியம் செப்பேர்ட்டுக்கு திரவ சவர்க்காரத்துக்கான காப்புரிமை கொடுக்கப்பட்டது.
பாமோலிவ்
1898 இல் பி.ஜே. ஜோண்சன் பாம் மற்றும் ஒலிவ் எண்ணெயில் இருந்து ஒரு சவர்க்காரத்தை உருவாக்கினார். அவரது அமெரிக்க பி.ஜே.ஜோண்சண் சோப் கம்பனி “பாமொலிவ்” என்ற பிராண்டில் சவர்க்காரத்தை அதே ஆண்டில் அறிமுகம் செய்தது. அந்த சவர்க்காரம் மிகவும் பிரபலமாகவே தனது நிறுவனத்துக்கு “பாமொலிவ்” என்று அவர் பெயரை மாற்றிவிட்டார்.
கிளவுஸ் போர்ட்டோ
அதேவேளை, ஐரோப்பாவில் கிளவுஸ் மற்றும் ஸ்வேடர் போன்றவை 1887 இல் போர்த்துக்கல்லில் வாழ்ந்த இரு ஜேர்மனியர்களால் ஆரம்பிக்கப்பட்டன. அவர்கள் பரபரப்பாக சவர்க்காரமும் வாசனைத்திரவியங்களும் தயாரித்தனர். இன்று கிளவுஸ் போர்ட்டோ என்ற பெயரில் 50 நாடுகளில் விற்பனையில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
புரொக்டர் அண்ட் கம்பிள்
மெழுவர்த்தி தயாரிப்பாளர் வில்லியம் புரொக்டரும் சவர்க்காரத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கம்பிளும் சேர்ந்து 1837இல் “புரொக்டர் அண்ட் கம்பிள்” நிறுவனத்தை ஆரம்பித்தனர். பி அண்ட் ஜி என்று அழைக்கப்படும் அந்த நிறுவனம், வானொலி ஒலிபரப்புக்களுக்கு அனுசரணை வழங்கி தமது தயாரிப்புக்களுக்கு விளம்பரம் செய்த முதல் சவர்க்கார நிறுவனங்களில் ஒன்றாகும். இவை “சோப் ஒபெராஸ்(சவர்க்கார இசைநாடக வடிவங்கள்)” என்ற பெயரைப் பெற்றன. பி அண்ட் ஜியின் வைட் நப்தா சோப்புக்கான வானொலி விளம்பரங்கள் வெகு பிரபலம். அவை ஒருவகை வானொலி நிகழ்ச்சி வகைகளாகிவிட்டன.
சோப் ஒபெரா
வானொலி ஒலிபரப்புகளுக்கு அனுசரணை வழங்கிய இந்த வைட் நப்தா சோப் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கியது. இன்று அந்த வகையிலான முறை தொலைக்காட்சி தயாரிப்புகள் “சோப் ஒபெரா” என்றே அழைக்கப்படுகின்றன.
திரவ சவர்க்கார வழங்கிகள்
1978 இல் அமெரிக்க தொழில் முனைவோரான றொபெர்ட் டெய்லர் நிறுவனம் திரவ சோப்பை வைத்திருந்து, அவற்றை வெளியே தள்ளும் பொறிமுறை கொண்ட குடுவைகளை அறிமுகம் செய்தது. அதைத்தொடர்ந்து மினண்டொன்கா கோப்பரேஸன் நிறுவனம், பார் சோப்பை ஒரு தட்டில் வைக்கும் போது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த குடுவையை பயன்படுத்தத் தொடங்கியது.
ஆபிரிக்க கறுப்புச் சவர்க்காரம்
உள்ளூரில் அறுவடை செய்யப்பட்ட ஆபிரிக்க தாவரங்களில் சாம்பலில் இருந்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் இந்தவகைச் சவர்க்காரம் வட அமெரிக்காவில் மிகவும் பிரபலம். எண்ணெய் படர்ந்த மற்றும் முகப்பரு அதிகமாக உள்ள தோலுக்கு இந்த சவர்க்காரம் மிகவும் பயந்தரும் என்று நம்பப்படுகின்றது. இது பெரும்பாலும் நியாய வணிக குழுக்களால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
காஸ்டைல் சவர்க்காரம்
ஆரம்ப காலத்தில் ஸ்பெயினின் காஸ்டைல் பிராந்தியத்தில் தயாரிக்கப்பட்டது போல அதேபாணியில் இன்றும் இந்த சவர்க்காரம் தயாரிக்கப்படுகின்றது. இந்தச் சவர்க்காரம் 100 வீதம் தூய ஒலிவ் எண்ணெய், சாம்பல் கார நீர் மற்றும் தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.
மார்சேய் சவர்க்காரம் (மார்செய்ல்?)
சவோன் டெ மார்சேய் என்ற பெயரிலான பாரம்பரிய கடின சவர்க்காரம் இது. பிரான்ஸின் இதே மார்சேய் நகரில் 600 வருடங்களாக அதே முறையில் மரக்கறி எண்ணெயில் இருந்து இது உருவாக்கப்படுகின்றது.
வேகன் சோப்(மரக்கறி சவர்க்காரம்)
இந்தவகைச் சைவ சவர்க்காரம் முற்றாக காய்கறிகள் தாவரங்களின் எண்ணெயில் இருந்து மிருகக் கொழுப்பு கலக்காமல் தயாரிக்கப்படுகின்றது.
செவ்வந்தி சவர்க்காரம்
இதில் உள்ள மிருதுவான புத்துணர்ச்சி வழங்கும் பதார்த்தங்கள் காரணமாக இது தோலுக்கு ஊட்டமளிப்பதாக நம்பப்படுகின்றது.
றோஸ் சவர்க்காரம்
பூக்களின் வாசனை தரும் திரவியங்களை குளிக்கும் அல்லது கைகழுவும் சவர்க்காரத்தில் காலப்பது பல நூற்றாண்டுகளாகவே நடைமுறையில் இருக்கின்றது. அதுவும் றோசாப்பூவின் மணம் தரும் இதம் காலங்கடந்தது. காதல், ரொமான்ஸ் மற்றும் அழகு தருவது மலரின் மணம். ஆகவே இது புத்துணர்வை தருகின்றது.
சிட்ரஸ் சவர்க்காரம்
எலுமிச்சை இன பழங்களின் மணம் சேர்த்த சவர்க்காரம் இது. எலுமிச்சை, தோடம்பழம், நாரத்தை, திராட்சை ஆகியன இதன் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதில் கலந்துள்ள பதார்த்தங்கள் நல்ல நுரையையும் தரும்.
சந்தணச் சவர்க்காரம்
மிருதுவான சந்தணச் சவர்க்காரங்கள் அனைத்து வகையான தோல்களுக்கும் உகந்தவை. குறிப்பாக காய்ந்த, மங்கிய சருமங்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடியவை. தோலில் நல்ல ஈரப்பதத்தை பேணக்கூடியவை.
லவண்டன் சவர்க்காரம்
சவர்க்காரத்தில் கலக்கப்படும் மிகவும் பிரபலமான மணம் லவண்டர் பூ மணம். நூற்றாண்டு காலமாக நறுமணச் சிகிச்சையில் மிகவும் முக்கியமான பொருளாக இந்த வாசனைத்திரவியம் திகழ்கிறது. மருத்துவத்துக்கும் பயன்படுகிறது.
சார்கோல் சவர்க்காரம்(கரி சவர்க்காரம்)
மரத்தின் கரியில் இருந்து உருவாக்கப்படும் இந்த சவர்க்காரம் முகப்பரு சிகிச்சைக்கு நல்ல பயன்தரும். இதில் உள்ள பதப்படுத்தப்பட்ட “கார்பன்” நச்சுக்களை உறிஞ்சவும், அழுக்குகளை நீக்கவும், எண்ணெயை அகற்றவும் பயன்படும்.
தேங்காய் சவர்க்காரம்
ஈரப்பதனைப் பேண மிகவும் உதவுவது தேங்காய் எண்ணெய் சவர்க்காரம். தோலுக்கும் முடிக்கும் இது பயன்தரும். பக்றீரியத்தை அகற்றவும் இது உதவும்.
மீண்டும் பழைய சவர்க்காரத்துக்குத் திரும்பல்
அசுல் எ பிரான்கோ(நீலம் மற்றும் வெள்ளை) என்ற போர்த்துக்கல் நாட்டு சவர்க்காரம் கைத்தறி துணிகள், தரைவிரிப்புகள் மற்றும் தரை ஆகியவற்றை துப்பரவு செய்து கழுவ பயன்படுத்தப்படுகின்றது. கொரொனா தொற்று அதிகரித்துள்ள இந்த நாட்களில் இந்த “அசுல் எ பிரான்கோ” சவர்க்காரத்துக்கு பெருத்த கிராக்கி ஏற்பட்டுள்ளது.