~அதுல ரணசிங்க (உற்பத்தித்திறன் நிபுணர்) – தி ஐலண்ட்
சில சந்தர்ப்பங்களில் சாதாரணமானதொரு பொது நிகழ்வு, ஒருவரின் மனசாட்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. அண்மையில் நுகேகொடை பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் நான் பங்கேற்றமை அத்தகையதொரு அனுபவமாக அமைந்தது.
அன்றைய தினம் நான் கண்ட காட்சிகள், இன்னும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய தேசியப் பிரச்சினையொன்று குறித்து என்னைச் சிந்திக்கத் தூண்டின. அதுதான் இலங்கையில் கல்வி, வறுமை மற்றும் பின்தங்கிய சிறுவர்களின் எதிர்காலம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பாகும்.
அயலிலுள்ள பாடசாலைகளில் உயர் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகளுக்குப் பாடசாலைப் பைகள், பாடப்புத்தகங்கள், காலணிகள் மற்றும் அத்தியாவசியக் கல்வி உபகரணங்களை வழங்குவதற்காக அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவிகளின் சமூக மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அந்தந்தப் பாடசாலை அதிபர்களால் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
நிகழ்வு எளிமையாகவும் கண்ணியமாகவும் நடத்தப்பட்டபோதிலும், அந்த இளம் மாணவிகளின் முகங்களும் அவர்களது தோற்றத்தில் வெளிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலைகளும் வலுவானதொரு செய்தியை உணர்த்தின.
அவர்களில் பலர் தங்களது குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போராடும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்களுடன் வந்திருந்த சில பெற்றோரின் நிலைமையும், அந்தக் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பதை மேலும் உணர்த்தியது.
அன்றைய தினம் வழங்கப்பட்ட பொருளுதவிகளைவிட, அவற்றுக்குப் பின்னால் மறைந்திருந்த பரந்த சமூக யதார்த்தமே என்னைப் பெரிதும் பாதித்தது.
வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களைப் போலவே இவர்களும் எதிர்பார்ப்புகள், அறிவாற்றல் மற்றும் கல்வியில் முன்னேறுவதற்கான உரிமை ஆகியவற்றைக் கொண்டவர்கள். எனினும், தங்களது கனவுகளை அடைவதற்கான பயணத்தில், அவர்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் பெரும் சுமையாக அமைந்துள்ளன.
இது சங்கடமானதொரு கேள்வியை எழுப்பியது. ஆனால், அந்தக் கேள்வி எழுப்பப்பட வேண்டியது அவசியமானதாகும்.
கல்விக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருளாதார வசதி பெற்றோரிடம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, எமது நாட்டில் எத்தனை திறமையான சிறுவர்கள் தமது முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் தடுக்கப்படுகின்றனர்?
வறுமையை ஒழிப்பதற்கான கருவியாகக் கல்வி:
அந்த நிகழ்விலிருந்து திரும்பிய பின்னர், தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை, கட்டுவன தேசியப் பாடசாலையின் முன்னாள் அதிபர் ஜயந்த கே. பத்திரண எழுதிய ‘நலன்புரி உதவிகளுக்கு அப்பால் நிலையான பொருளாதாரச் சுயசார்பை நோக்கி’ என்ற கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவரது கருத்துக்கள், நுகேகொடை நூலகத்தில் நான் கண்டவற்றுக்கு மேலுமொரு பரிமாணத்தை வழங்கின.
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் வறுமைச் சுழற்சியை உடைப்பதற்கான மிகவும் வலுவான கருவிகளில் ஒன்றாகக் கல்வி விளங்குகிறது என்பதை அவர் சரியாக வலியுறுத்தியுள்ளார்.
தற்காலிக நலன்புரி உதவிகள் அவசியமானவை என்றாலும், அவற்றால் மாத்திரம் பின்தங்கிய குடும்பங்களின் பொருளாதார நிலைமையை மாற்றியமைத்துவிட முடியாது என்பதே அவரது வாதமாகும்.
நிலையான முன்னேற்றத்தை அடைவதற்குக் கல்வி, தொழிற்திறன்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் உற்பத்தி வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அவசியமாகின்றன.
எமது கொள்கை வகுப்பாளர்களும் கல்வி அதிகாரிகளும் இந்த முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று நிதியுதவி பெறும் ஒரு சிறுவர் உடனடியான சிரமமொன்றிலிருந்து மீளக்கூடும். ஆனால், அர்த்தமுள்ள கல்வியைப் பெற்று, தொழில்சார் திறன்களை வளர்த்துக்கொண்டு, கண்ணியமான வேலைவாய்ப்பைப் பெறும் சிறுவர், தனது எதிர்காலத்தை மட்டுமன்றி, தனது முழுக் குடும்பத்தின் பொருளாதார நிலைமையையும் மாற்றியமைப்பதற்கான அதிக வாய்ப்பைப் பெறுகிறார்.
எனவே, கல்வியை வெறுமனே ஒரு சமூக சேவையாகக் கருதக்கூடாது. அது மனித மூலதனத்திற்கான நீண்டகால தேசிய முதலீடாகவும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடிப்படைக் கருவியாகவும் விளங்குகிறது.
பின்தங்கிய மாணவர்கள் எதிர்கொள்ளும் மறைமுகத் தடைகள்:
பொருளாதார வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவருக்குத் தேவையான புத்தகங்கள், எழுதுகருவிகள், காலணிகள், டிஜிட்டல் வசதிகள் மற்றும் போதுமான ஊட்டச்சத்துடன் பாடசாலைக்குச் செல்வது இயல்பானதொரு விடயமாக இருக்கலாம்.
ஆனால், விளிம்புநிலைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இந்தச் சாதாரணத் தேவைகளே மிகப்பெரிய தடைகளாக மாறுகின்றன.
சில பெற்றோர் பாடப்புத்தகங்களையும் பாடசாலைச் சீருடைகளையும் கொள்வனவு செய்வதற்குச் சிரமப்படுகின்றனர். வேறு சிலர் போக்குவரத்துச் செலவுகளைச் சமாளிப்பதற்கும், போதுமான உணவை வழங்குவதற்கும் அல்லது டிஜிட்டல் கல்வி வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் போராடுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில், மூத்த சிறுவர்கள் தமது கல்வியைத் தியாகம் செய்துவிட்டு வீட்டுப் பொறுப்புகளை ஏற்கவோ, வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
வறுமையில் வாடும் விளிம்புநிலைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், மாதவிடாய்க் காலத்தில் தேவையான சுகாதாரத் துவாய்களைக் கொள்வனவு செய்ய முடியாத காரணத்தால் அடிக்கடி பாடசாலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதை அண்மைக்கால அறிக்கைகள் விரிவாகப் பதிவு செய்துள்ளன.
இதன் விளைவுகள் மிகவும் ஆழமானவை.
கல்வியில் ஏற்படும் இடையூறுகள், மோசமான கல்விப் பெறுபேறுகள், இடைநடுவில் பாடசாலையை விட்டு விலகுதல் மற்றும் பொருத்தமான தொழில் வழிகாட்டல் இல்லாமை ஆகியவை இறுதியில் அவர்களது வேலைவாய்ப்புகளைக் கட்டுப்படுத்துகின்றன.
இதன் பின்னர் அதே வறுமைச் சுழற்சி மீண்டும் தொடர்கிறது.
போதுமான கல்வி வாய்ப்புகளைப் பெற்றிராத பெற்றோரால், தங்களது பிள்ளைகள் அதே சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்குத் தேவையான வளங்களை வழங்க முடியாமல் போகலாம்.
இவ்வாறுதான் வறுமை ஒரு தற்காலிகப் பொருளாதார நிலையாக இல்லாமல், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் பாதகமான நிலையாக மாறுகின்றது.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட வேண்டிய பாராட்டத்தக்க சமூக முயற்சி:
பின்தங்கிய மாணவிகளின் கல்வித் தேவைகளை நேரடியாகப் பூர்த்திசெய்யும் நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்பாடு செய்த நுகேகொடை பொது நூலகத்தின் வாசகர் கழகம் பாராட்டுக்குரியது.
உதவி பெறத் தகுதியான மாணவிகளை அடையாளம் காண்பதில் அயலிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் வழங்கிய பங்களிப்பும் அதேபோன்று பாராட்டத்தக்கதாகும்.
இத்தகைய அணுகுமுறை நடைமுறையில் பெரும் பயனளிக்கக்கூடியது. பாடசாலை அதிபர்கள் பெரும்பாலும் தமது மாணவர்களின் சமூக மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருப்பதால், உண்மையான தேவைகளை அடையாளம் காண்பதற்கான சிறந்த நிலையில் இருக்கின்றனர்.
எனினும், இந்த முயற்சியின் முக்கியத்துவம் ஒரேயொரு பொருட்கள் வழங்கும் நிகழ்வுடன் முடிவடைந்துவிடக்கூடாது.
பொது நூலகங்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள், தொழில்சார் சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் நாடு முழுவதிலும் இதுபோன்ற கூட்டாண்மைகளை உருவாக்க முடியும்.
தனித்தனியான தொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தொடர்ச்சியான கல்வி உதவித் திட்டங்களை உருவாக்கலாம்.
குறிப்பாக, பெருநிறுவனங்கள் தமது நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் கீழ் பாடசாலைகளைப் பொறுப்பேற்று ஆதரவளிப்பது அல்லது அடையாளம் காணப்பட்ட பின்தங்கிய மாணவர் குழுக்களுக்கு உதவுவது குறித்து பரிசீலிக்கலாம்.
இந்த உதவிகள் பாடசாலைப் பைகள் மற்றும் பாடப்புத்தகங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை.
புலமைப்பரிசில்கள், ஊட்டச்சத்து உதவிகள், போக்குவரத்து வசதிகள், கணினிகள், இணைய வசதி, தொழில் வழிகாட்டல் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் திட்டங்கள் என்பன நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை.
இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது.
இத்தகைய திட்டங்கள் பயனாளிகளின் வறுமை நிலையைப் பகிரங்கப்படுத்தாமலும், அவர்களைச் சங்கடத்திற்குள்ளாக்காமலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
சிறுவர்களின் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் பாதுகாக்கும் வகையில், அவர்கள் கண்ணியத்துடன் உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கல்வி உதவியிலிருந்து பொருளாதாரச் சுயசார்பை நோக்கி:
அத்தியாவசியக் கல்வி உபகரணங்களை வழங்குவது உடனடியான தேவையாக இருந்தாலும், வறுமையை ஒழிப்பதற்கான உண்மையான கருவியாகக் கல்வி விளங்க வேண்டுமாயின், மேலும் விரிவான அணுகுமுறையொன்று அவசியமாகின்றது.
இடைநிலைக் கல்வியை நிறைவுசெய்யும் தருவாயிலுள்ள மாணவர்களுக்குப் பொருத்தமான தொழில் வழிகாட்டலும், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஊடாகக் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கப்போவதில்லை. பல்கலைக்கழக அனுமதியை மாத்திரமே கல்விச் சாதனையின் அளவுகோலாகவும் கருதக்கூடாது.
மின் மற்றும் இயந்திரப் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உலோகப் பற்றவைப்பு (Welding), நிர்மாணத்துறை, விருந்தோம்பல் துறை, நவீன விவசாயம் மற்றும் வளர்ந்துவரும் ஏனைய தொழிற்துறைகளில் பெறுமதியான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மாணவிகளைப் பெரும்பாலும் அழகுக்கலை மற்றும் வெதுப்பகத் தொழில் சார்ந்த பாடநெறிகளுக்கு வழிநடத்தும் போக்கிலிருந்து விலக வேண்டும்.
அதற்குப் பதிலாக, நீண்டகால வேலைவாய்ப்புகளையும் நிலையான வாழ்வாதாரத்தையும் வழங்கக்கூடிய துறைகளில் பயிற்சிபெற அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
திறமையான தொழில்நுட்பவியலாளர்கள், உலோகப் பற்றவைப்புத் தொழிலாளர்கள், உலோகக் கட்டமைப்பு தயாரிப்பாளர்கள், கைவினைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர்.
பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் இளைஞர்களுக்கும் இந்த வாய்ப்புகளைச் சமமாகப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
மேற்கு ஆசிய நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று, மாதாந்தம் வெறும் 250 அமெரிக்க டொலர்களைச் சம்பாதிக்கும் ஓர் இளம் பெண்ணுக்கு, அதற்குப் பதிலாக உலோகப் பற்றவைப்பு போன்ற அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அத்தகைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில், மாதாந்தம் 3,500 முதல் 4,500 அமெரிக்க டொலர்கள் வரை சம்பாதிப்பதற்கான வாய்ப்பை அவர் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கட்டுரையாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
பாடசாலைகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினருக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு, மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.
இத்தகைய கூட்டாண்மைகள், தொழிலாளர் சந்தையின் மாறிவரும் தேவைகளுக்குப் பொருத்தமான நடைமுறைத் திறன்களை இளைஞர்கள் பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும்.
குறிப்பாக, மாணவிகள் மீது விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பொருளாதார மற்றும் சமூகச் சூழ்நிலைகள் இளம் பெண்கள் தொழில்நுட்பத் தொழில்களில் பிரவேசிப்பதற்கோ, தொழில்சார் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கோ அல்லது பொருளாதாரச் சுயசார்பை அடைவதற்கோ தடையாக அமைந்துவிடக்கூடாது.
தொழிற்கல்விக்குப் பொறுப்பான துடிப்புமிக்க இளம் அமைச்சர், இந்த மாற்றத்தைத் துரிதப்படுத்தும் சக்தியாகச் செயற்பட வேண்டும்.
ஒருங்கிணைந்த தேசியப் பொறுப்பு:
கல்விச் சமத்துவமின்மைக்குத் தீர்வு காணும் பொறுப்பை பாடசாலை அதிபர்களிடமோ அல்லது தொண்டு நிறுவனங்களிடமோ மாத்திரம் ஒப்படைத்துவிட முடியாது.
குடும்ப வறுமை காரணமாகக் கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ள சிறுவர்களை அடையாளம் கண்டு உதவுவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து கல்வி அமைச்சு, மாகாணக் கல்வி அதிகாரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சமூக நலன்புரி அமைப்புகள் பரிசீலிக்க வேண்டும்.
கப்பல் கட்டுமானம், நிர்மாணம் மற்றும் பழுதுபார்ப்புத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் கொழும்பு டொக்யார்ட் பிஎல்சி (Colombo Dockyard PLC), பெண்களுக்கு உலோகப் பற்றவைப்புப் பயிற்சியை வழங்கவும், பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் தற்போதைய சந்தைச் சம்பளத்தைவிடக் கணிசமாக அதிகமான சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளை வழங்கவும் முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
கடந்த வார இறுதியில் ‘லங்காதீப’ பத்திரிகையில் வெளியான கட்டுரையொன்று, உலோகப் பற்றவைப்புத் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவர் எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும் என்பதை வெளிப்படுத்தியிருந்தது.
இதுதொடர்பாக, உலோகப் பற்றவைப்புத் தொழிற்துறையின் முன்னோடியான கலாநிதி சரத் ஒபேசேகர, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பரீட்சார்த்தத் திட்டமொன்றின் கீழ் பயிற்சியளிப்பதற்காக சமுர்த்தி அமைச்சரின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
இந்த முயற்சிக்கு அவசர கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பயனுள்ள தேசியக் கண்ணோட்டமொன்றை முன்வைத்த கட்டுவன தேசியப் பாடசாலை அதிபர் ஜயந்த கே. பத்திரணவையும், கல்விச் சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதில் சமூகப் பங்களிப்புக்கான நடைமுறை உதாரணத்தை வெளிப்படுத்திய பிரதம நூலகர் நிர்மித பெரேராவையும் விசேடமாகக் குறிப்பிடத் தவறுவது நியாயமற்றதாகும்.
இதேபோன்று, புலமைப்பரிசில்கள், உள்ளகத் தொழிற்பயிற்சிகள், வழிகாட்டுதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்ட கல்வித் திட்டங்கள் ஊடாகத் தனியார் துறையும் பங்களிப்புச் செய்யலாம்.
பாரம்பரியமாக அறிவு மற்றும் கற்றல் நிலையங்களாக விளங்கும் பொது நூலகங்கள், வாசிப்புப் பொருட்கள், டிஜிட்டல் கல்வி மற்றும் தொழில்சார் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் கல்விச் சமத்துவத்தை மேம்படுத்துவதில் மேலும் தீவிரமான பங்களிப்பை வழங்க முடியும்.
இத்தகைய முயற்சிகள் தனித்தனியான தொண்டு நடவடிக்கைகளாகக் கருதப்படக்கூடாது.
மனித வளங்களை மேம்படுத்துவதற்கும், மக்கள் தங்களது சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்குமான பரந்த தேசிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அவை அமைய வேண்டும்.
மாணவர்களுக்கு ஒரு செய்தி:
அதிகாரிகளிடமும் பரந்த சமூகத்திடமும் வேண்டுகோள் விடுக்கும் அதேவேளை, பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டிருக்கக்கூடிய இளம் மாணவர்களிடமும் சில விடயங்களைக் கூற விரும்புகின்றேன்.
உங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைமை, உங்கள் இலட்சியங்களின் எல்லையை ஒருபோதும் தீர்மானிக்கக்கூடாது.
வறுமை என்பது உங்களது அறிவாற்றலையோ, தனிப்பட்ட பெறுமதியையோ அல்லது எதிர்கால ஆற்றலையோ பிரதிபலிப்பதல்ல.
மற்றவர்களின் தாராள மனப்பான்மையால் உங்களுக்குக் கிடைத்த பாடசாலைப் பை, பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகள் வெறுமனே பொருட்கள் அல்ல.
அவை உங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகவும், உங்களது திறமைகளின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் விளங்குகின்றன.
உங்களுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒழுக்கம், அறிந்துகொள்ளும் ஆர்வம், தொடர்பாடல் திறன்கள் மற்றும் கற்றுக்கொள்வதற்கான விருப்பம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள்.
உங்களது ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். வகுப்பறைக்கு அப்பால் காணப்படும் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை ஆராய்வதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள்.
எல்லாவற்றையும்விட முக்கியமாக, தற்காலிகப் பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக உங்களது இலட்சியங்கள் எட்ட முடியாதவை என்று நம்பிவிடாதீர்கள்.
இன்று உங்களுக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு, என்றாவது ஒருநாள் உங்கள் சொந்தக் குடும்பத்தின் நிலைமையை மாற்றியமைக்கவும், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும், பொறுப்புமிக்க பிரஜையாக உருவெடுக்கவும் உங்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
சிறுவர்களுக்கான முதலீடு நாட்டுக்கான முதலீடாகும்:
நுகேகொடை பொது நூலகத்தில் நான் கலந்துகொண்ட நிகழ்வு ஒரு பாரிய தேசிய அபிவிருத்தித் திட்டமாக இருக்கவில்லை. அதற்குப் பெருமளவிலான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
எனினும், அதன் முக்கியத்துவம் அங்கு விநியோகிக்கப்பட்ட பொருட்களின் பெறுமதியையும் கடந்து சென்றது.
பாடசாலை அதிபர்களுடனும் சமூக அக்கறையுள்ள பிரஜைகளுடனும் இணைந்து செயற்படும் ஒரு சமூக நிறுவனம், கல்விச் சமத்துவத்திற்கு எவ்வாறு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்பதை அந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.
தற்காலிக நலன்புரி உதவிகளுக்கு அப்பால் நிலையான பொருளாதாரச் சுயசார்பை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை பத்திரணவின் கருத்துக்கள் மேலும் வலுப்படுத்துகின்றன.
கிராமியக் கல்விச் சூழலிலிருந்து அவர் முன்வைத்த அவதானிப்புகளும், நுகேகொடையில் நடைபெற்ற சமூக நிகழ்வில் நான் பெற்ற அனுபவமும் ஒரே தேசியப் பொறுப்பையே சுட்டிக்காட்டுகின்றன.
வறுமை காரணமாக இளம் தலைமுறையினரில் கணிசமான பகுதியினரின் கல்விசார் ஆற்றல்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க அனுமதித்துக்கொண்டு, இலங்கையால் நிலையான பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியாது.
ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றத்தைப் பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி அல்லது நிதிசார் குறிகாட்டிகள் ஆகியவற்றை மாத்திரம் கொண்டு அளவிடக்கூடாது.
பின்தங்கிய சூழ்நிலைகளில் பிறக்கும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளின் அடிப்படையிலும் அந்த முன்னேற்றம் அளவிடப்பட வேண்டும்.
ஒரு பாடசாலைப் பை மிகவும் சாதாரணமானதொரு பரிசாகத் தோன்றலாம்.
ஆனால், அதனுடன் தரமான கல்வி, வழிகாட்டல், ஊக்குவிப்பு மற்றும் சமமான வாய்ப்புகள் இணைந்துகொள்ளும்போது, அது பொருளாதாரச் சுயசார்பையும் மனித கண்ணியத்தையும் நோக்கிய மிகப்பெரிய பயணத்தின் ஒரு பகுதியாக மாறக்கூடும்.
எனவே, எமது அதிகாரிகளுக்கும் சமூகத்திற்கும் முன்னாலுள்ள சவால் மிகவும் தெளிவானது.
வறுமையில் வாழும் சிறுவர்களுக்கு வெறுமனே உதவிகளை விநியோகிப்பதுடன் நின்றுவிட வேண்டாம்.
அவர்களது திறன்களில் முதலீடு செய்வோம். அவர்களது கல்வி வாய்ப்புகளைப் பாதுகாப்போம். உற்பத்தித்திறன்மிக்க, பொறுப்பான பிரஜைகளாக அவர்கள் உருவெடுப்பதற்கு அவர்களை வலுப்படுத்துவோம்.
இந்தப் பொறுப்பை இன்று நாம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கின்றோம் என்பதிலேயே எமது நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கக்கூடும்.
மூலம்: தி ஐலண்ட்
