~அனுஸ்ரீ பி.வி./ நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்
போரினால் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் மீளச் சரிசெய்ய முடியாதவையாகவும் நீண்டகாலம் நீடிப்பவையாகவும் இருக்கின்றன. தொலைந்துபோன சிறுபராயம், பிரிந்துபோன குடும்பங்கள், இடப்பெயர்வு, பிரிவின் துயரம், சொந்தமென்ற உணர்வின்மை எனப் பல வேதனைகளைப் போர் விட்டுச் செல்கின்றது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் போதிலும், இன்னமும் தங்களை அந்நியர்களாக உணரும் பல இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையிலும் இதுவே யதார்த்தமாக உள்ளது.
சிறுவர்களாக இந்தியாவுக்கு வந்தவர்களின் மனங்களில் சிறுபராய நினைவுகளின் எச்சங்கள் இன்னமும் நிலைத்திருக்கின்றன. பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்த பின்னரும், குறிப்பாகக் குடியுரிமை தொடர்பான நிச்சயமற்ற நிலையினால் அவர்கள் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கின்றனர். மறுபுறம், இந்தியாவிலேயே பிறந்தவர்கள் தங்களது கனவுகளை நனவாக்கும் நம்பிக்கையுடன் வாழ்கின்றனர்.
கல்வியே கண்ணியமான வாழ்க்கைக்கான வழி:
எட்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைச் சுமந்துகொண்டு இராமநாதபுரத்திலுள்ள மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்த சாயீசன் எஸ். (Saieesan S), யாழ்ப்பாணத்தில் வசதியாக வாழ்ந்த தனது குடும்பத்தின் வாழ்க்கை தலைகீழாக மாறிய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதிலேயே ஆரம்ப ஆண்டுகளைக் கழித்தார்.
“இலங்கையில் அரச பாடசாலை ஆசிரியையாகப் பணியாற்றிய எனது தாய், கட்டுமானத் தளங்களிலும் மீன்பிடித் தொழில் சார்ந்த இடங்களிலும் கடினமான வேலைகளைச் செய்வதைப் பார்ப்பது இதயத்தை நொறுக்குவதாக இருந்தது. நாளொன்றுக்கு 100 முதல் 150 ரூபா வரைதான் அவர் சம்பாதித்தார். நல்ல உணவு சாப்பிடுவதுகூட எங்களுக்கு ஓர் ஆடம்பரமாக இருந்தது” என்கிறார் அவர்.
சிறந்த கல்வி மட்டுமே தனது குடும்பத்திற்குக் கண்ணியமான வாழ்க்கையைப் பெற்றுத்தரும் என்பதை இந்தப் போராட்டங்கள் அவருக்கு தொடர்ந்து நினைவூட்டின.
பாடசாலைக் கல்வியைப் பெறுவதில் அவருக்குப் பெரிய தடைகள் இருக்கவில்லை. ஆனால், கல்லூரியில் இடம் பெறுவது பெரும் சவாலாக அமைந்தது.
12ஆம் வகுப்புப் பொதுப் பரீட்சையில் தனது மாவட்டத்திலுள்ள அரச பாடசாலை மாணவர்களிடையே இரண்டாவது அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்றிருந்தபோதிலும், கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புக்கான இடத்தை அவரால் பெற முடியவில்லை.
“மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியும் எனக்கு இருக்கவில்லை” என்கிறார் அவர்.
உயர்கல்வியைத் தொடர்வதற்காகப் புலமைப்பரிசில் வாய்ப்புகளைத் தேட வேண்டியிருந்தது. STARS திட்டத்தின் மூலம் வேலூரிலுள்ள VIT கல்வி நிறுவனத்தில் B.Tech படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார். பின்னர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் அவருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது.
“ஆனால், நான் ஓர் அகதி என்பதையும், என்னிடம் வேலை அனுமதிப்பத்திரமோ கடவுச்சீட்டோ இல்லை என்பதையும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாது என்பதையும் குறிப்பிட்டு சுய உறுதிமொழிப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது” என்கிறார் அவர்.
திறமை இருந்தும் குடியுரிமையால் மறுக்கப்படும் வாய்ப்புகள்:
பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற ஷர்மிலன் விபோகனும் (Sharmilan Vipokan), தனது நாட்டுரிமை காரணமாகப் பணியில் இணையும் நடைமுறைகளின்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறுகின்றார்.
கடவுச்சீட்டோ முறையான வேலை அனுமதிப்பத்திரமோ இல்லாததால், வட்டாட்சியர் அலுவலகத்தையும் எழிலகத்திலுள்ள மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையரகத்தையும் அணுகி, பரிந்துரைக் கடிதங்கள் மற்றும் பிற ஆதார ஆவணங்களைப் பெற வேண்டியிருந்தது.
ஒவ்வொரு முறையும் வேலையை மாற்ற நினைக்கும்போது, இதே சிரமங்களை மீண்டும் எதிர்கொண்டு புதிய அனுமதிக் கடிதத்தைப் பெற வேண்டியுள்ளது. இது இனிமையான அனுபவமல்ல என்கிறார் அவர்.
“வேலைக்கான நேர்முகத் தேர்வுகளின் இறுதிக்கட்டம் வரை சென்ற பின்னரும், ஆவணச் சரிபார்ப்பின்போது எனது விண்ணப்பம் நிறுத்திவைக்கப்படும். எனது நாட்டுரிமையை மட்டுமே காரணமாகக் கொண்டு பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறேன்” என்கிறார் ஷர்மிலன்.
2006ஆம் ஆண்டு தனது ஆறாவது பிறந்தநாளன்று அவர் தமிழகத்திற்கு வந்தார். புதிய சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்வதற்காக, தமிழின் வேறுபட்ட பேச்சுவழக்கைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
காலப்போக்கில் புழல் அகதிகள் முகாமும் அதன் சுற்றுப்புறமுமே அவரது முழு உலகமாக மாறின.
கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகள் நிச்சயமற்றதாக இருந்த நிலையில், அகதி மாணவர்களுக்கான சேர்க்கை ஏற்பாடுகளையும் கட்டணச் சலுகைகளையும் கொண்டிருந்த லயோலா கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்தது. அங்கு கணினி அறிவியலில் B.Sc. பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
ஆனால், கல்லூரி அவருக்கு வேறொரு யதார்த்தத்தை அறிமுகப்படுத்தியது.
கல்லூரியின் முதல்நாள் அறிமுக நிகழ்வு வரை எந்தவிதமான ஒதுக்குதலையும் அவர் அனுபவித்திருக்கவில்லை.
“நான் ஓர் இலங்கைத் தமிழ் அகதி என்று என்னை அறிமுகப்படுத்தியதும், ஏதேனும் பிரச்சினையில் ஈடுபட்டால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவேன் என முழு வகுப்பின் முன்னிலையிலும் எனது பேராசிரியர் கூறினார்.”
அந்த வார்த்தைகள் அவரது கல்லூரி வாழ்க்கை முழுவதும் மனதில் பதிந்திருந்தன.
தாயகத்தில் விட்டுவந்த வாழ்க்கையையும் அவர் நினைவுகூருகின்றார்.
“எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அம்மாவுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது போர் தொடர்பான அறிவிப்புகளைக் கேட்டேன். அதைத் தொடர்ந்து எங்கள் வீட்டின் பின்புறத்திலிருந்து பலத்த துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன.”
தாத்தா, பாட்டியுடன் வெளியே சென்ற தருணங்களும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கழித்த பொழுதுகளும் இலங்கை தொடர்பான அவரது இனிமையான நினைவுகளாக இன்னமும் உள்ளன.
இலங்கையைப் பார்த்ததில்லை; இந்தியாவில் பொலிஸ் அதிகாரியாகும் கனவு!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்பள்ளிப்பட்டு அகதிகள் முகாமில் பிறந்த நன்சிகாவுக்கு (Nansika), இலங்கை எப்படியிருக்கும் என்பதுகூடத் தெரியாது.
எனினும், இலங்கையில் தங்களுக்குச் சொந்தமாக இருந்த பரந்த நிலப்பரப்பைப் பற்றித் தனது பெற்றோர் அடிக்கடி பேசுவதைக் கேட்டிருக்கின்றார். தாய்வழி உறவினர்களின் வருகை மட்டுமே இலங்கையுடனான அவரது நேரடித் தொடர்பாக உள்ளது.
21 வயதான நன்சிகா, விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவர். தேசிய மட்டக் கராத்தே வீராங்கனையான அவர், சிறுவயது முதலே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
பட்டப்படிப்பை நிறைவுசெய்த பின்னர் பாடசாலைகளில் கராத்தே பயிற்றுவித்த அவர், பின்னர் பிரபல ஆடை விற்பனை நிறுவனமொன்றின் மனிதவளத் துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றார்.
“எனது குடியுரிமை தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்பட்டாலும், இந்திய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) பரீட்சைகளை எழுதி, இந்தியப் பொலிஸ் சேவை (IPS) அதிகாரியாக வேண்டும் என்பதே எனது கனவு. எனது தொடர்ச்சியான விளையாட்டுப் பயிற்சியும் அந்தக் கனவுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாகும்” என்கிறார் அவர்.
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடைபெறும் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்காக அவர் அகதிகள் முகாமுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
ஊட்டியில் வர்ணப்பூச்சு ஒப்பந்ததாரராகப் பணிபுரியும் அவரது தந்தையும், தர்மபுரியில் பராமரிப்புப் பணியாளராகப் பணிபுரியும் அவரது தாயும் இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்காக முகாமுக்குத் திரும்புகின்றனர்.
அவ்வாறு செல்லத் தவறினால், முகாமின் பதிவேட்டிலிருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டுவிடலாம் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும்.
இங்கேயே பிறந்தோம்; ஆனால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன!
நன்சிகாவைப் போலவே, வி. நிகிதாவும் தென்பள்ளிப்பட்டு அகதிகள் முகாமிலேயே பிறந்தவர்.
“நாங்கள் இங்கேயே பிறந்தோம். ஆனால், பல வாய்ப்புகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன” என்கிறார் 17 வயதான நிகிதா.
தற்போது VELS பல்கலைக்கழகத்தில் B.Com. பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் அவர், புலமைப்பரிசில் மூலமாகவே கல்லூரியில் இடம் பெற்றதாகக் கூறுகின்றார்.
ஆனால், அனைவருக்கும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக் கிடைப்பதில்லை. அகதிகள் முகாம்களைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பலர் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.
தாயை இழந்த, மதுப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையைக் கொண்ட தனது வகுப்புத் தோழர் ஒருவரின் நிலையை அவர் நினைவுகூருகின்றார்.
இரண்டு சகோதரர்களைப் பராமரிக்க வேண்டியிருந்ததால், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் வேலை தேட வேண்டியிருந்தது. இறுதியில் வர்ணப்பூச்சுத் தொழிலில் ஈடுபட்ட அவர், தற்போது வாழ்க்கையை நடத்துவதற்காக எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்கின்றார்.
அவரைப் போன்ற பல இளைஞர்களுக்கு முறைசாராத் தொழில்துறையில் இணைந்துகொள்வதே வாழ்க்கையை நடத்துவதற்கான எளிதான வழியாகத் தோன்றுகின்றது.
பத்துக்குப் பத்து அடி வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் கனவுகள்:
தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்த பின்னர் ஆடை வடிவமைப்புத் துறையில் கல்வியைத் தொடர்ந்து, சொந்தமாக ஆடை விற்பனை நிலையமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதே நிகிதாவின் கனவாகும்.
அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட 10 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட சிறிய வீட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் அவர், அகதிகள் முகாமிலிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று கனவு காண்கின்றார்.
“நாங்கள் வாழும் வீடுகளில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே தங்க முடியும். சுதந்திரமாக வாழ வேண்டுமென்றால் நாங்கள் முகாம்களிலிருந்து வெளியேற வேண்டும். ஒருமுறை வெளியேறிவிட்டால், மீண்டும் திரும்பிவர வேண்டிய நிலை ஏற்படக்கூடாது” என்கிறார் நிகிதா.
மூலம்: தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் | அனுஸ்ரீ பி.வி.
