(கவுண்டர்பொயிண்ட்)
– இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) ஊடாகப் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், வினைத்திறன் மிக்கதாக மாற்றவும் இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு நேரடிப் பயன்களை வழங்கும் வகையில், ஏற்கெனவே இணக்கம் காணப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
புதுடில்லியில் நேற்று (27) வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் 25ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில், சங்கத்தின் முன்னாள் தலைமை நாடு மற்றும் முத்தரப்புக் குழுவின் (IORA Troika) உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றிய விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
கடல்சார் பாதுகாப்பு, கடற்றொழில், நீலக் கார்பன், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் நடைமுறைசார்ந்த ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய ஒத்துழைப்புகள் கடலோர சமூகங்களுக்கு நேரடிப் பயன்களை வழங்க வேண்டும். காலநிலை மாற்றம், கடல் மாசுபாடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு, தனிப்பட்ட நாடுகளின் தலைமைத்துவக் காலங்களுக்கு அப்பாற்பட்ட தொடர்ச்சியான கூட்டுச் செயற்பாடுகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்திற்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவளிப்பதுடன், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சங்கத்தினால் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும் என விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையின் தலைமைத்துவம் வழங்கிய மூன்று பாடங்கள்:
2023 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இலங்கை இச்சங்கத்தின் தலைமைத்துவத்தை வகித்தபோது பெற்றுக்கொண்ட மூன்று முக்கிய அனுபவங்களையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
- கூட்டாண்மைகளின் முக்கியத்துவம்.
- மக்களுக்கு நேரடிப் பயன்களை வழங்கக்கூடிய ஒத்துழைப்பின் அவசியம்.
- இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்குத் தொடர்ச்சியான கூட்டுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம்.
இலங்கையின் தலைமைத்துவக் காலத்தில் அடையப்பட்ட சாதனைகளில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சங்கத்தின் 12ஆவது உரையாடல் பங்காளியாக இணைத்துக்கொண்டமை, பிம்ஸ்டெக் (BIMSTEC) உள்ளிட்ட பிராந்திய அமைப்புகளுடனான உறவுகளை வலுப்படுத்தியமை, நீலக் கார்பன் மையத்தின் ஆறாவது சிந்தனைக் குழு அமர்வு மற்றும் 2025 மே மாதம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் கொழும்புப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டமை ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் தலைமைத்துவத்திற்கு இலங்கை ஆதரவு:
“இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புத்தாக்கம், வெளிப்படைத்தன்மை, மீண்டெழும் திறன் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப இசைவாக்கம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்தியா தற்போது இச்சங்கத்தின் தலைமைத்துவத்தை வகித்து வருகின்றது.
இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், சங்கத்தின் கூட்டுக் குரலை வலுப்படுத்துவதற்கும், இணக்கம் காணப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களைச் செயல்வடிவத்திற்குக் கொண்டுவருவதற்கும் இலங்கை தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
2027 மார்ச் மாதத்தில் இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கம் தனது 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில், மூன்று தசாப்த காலப் பயணத்தைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி, மக்கள் கண்கூடாகக் காணக்கூடிய பெறுபேறுகளை ஏற்படுத்துவதே என விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்புப் பிரகடனத்தை அடித்தளமாகக் கொண்டு டில்லிப் பிரகடனம் அமையும் என்றும், உறுப்பு நாடுகளால் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை அது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் முத்தரப்புக் குழு உறுப்பினர் என்ற வகையில் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய விஜித ஹேரத்,
“நீங்கள் எங்களை நம்பலாம்” எனத் தெரிவித்தார்.
ஆதாரம்: கவுண்டர்பொயிண்ட்
