திருப்பரங்குன்றம் தீபச் சர்ச்சை: மதச்சார்பின்மையை முஸ்லிம்கள் ஒருவழிப் பாதையாகக் கருதுகிறார்களா?

திருப்பரங்குன்றம் தீபச் சர்ச்சை: மதச்சார்பின்மையை முஸ்லிம்கள் ஒருவழிப் பாதையாகக் கருதுகிறார்களா?

~ அமானா பேகம் / தி பிரிண்ட்

இந்தியா முழுவதும் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் பொன்னிழைகளாகப் பண்டிகைகள் நீண்டகாலமாக விளங்கிவருகின்றன. வீடுகளுக்கு இடையே இனிப்புகள் பரிமாறப்படுவதும், கொண்டாட்டங்களின் ஒளி மத எல்லைகளைக் கடந்து பரவுவதும் இத்தகைய தருணங்களில்தான் நிகழ்கின்றன.

ஆனால், இத்தகைய பண்டிகைகளே சமூகப் பிளவுகளுக்கான காரணங்களாக மாறுவது வருத்தமளிக்கின்றது.

மதுரையின் பழைமையான திருப்பரங்குன்றம் மலைச்சரிவில், அமைதியான பக்தியுணர்வுடன் மாலை இருளைப் போக்க வேண்டிய கார்த்திகை தீபத்தின் சுடர், இன்று நீதிமன்றத் தீர்ப்புகள், நில எல்லைகள் மற்றும் அயலவர்களுக்கு இடையிலான கனத்த மௌனம் ஆகியவற்றுக்குள் சிக்கியுள்ளது.

கார்த்திகை தீபம் என்பது விளக்குகளை ஏற்றிக் கொண்டாடப்படும் பழைமையான தமிழ் இந்துப் பண்டிகையாகும்.

கடந்த சில தசாப்தங்களாக உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் புனித தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது. எனினும், மலையின் உயரமான பகுதியில், ஹஸ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ‘தீபத்தூண்’ எனப்படும் கல் தூணிலும் தீபம் ஏற்ற அனுமதி கோரி சில இந்து பக்தர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

2025ஆம் ஆண்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இரண்டு இடங்களிலும் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். 2026 ஜனவரியில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த உத்தரவை உறுதிப்படுத்தியதுடன், குறித்த கல் தூண் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தது.

எனினும், சர்ச்சைக்குரிய அந்தத் தூண் நில அளவைக் கல் எனக் கூறிய தர்கா நிர்வாகம், அங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

தீபம் ஏற்றப்படாத அந்த மலைத் தூணைச் சுற்றி, பண்டிகையின் அமைதியான பக்தியுணர்வை அதிகாரம், அரசியல் மற்றும் சட்டம் சார்ந்த பெரும் விவாதங்கள் ஆக்கிரமித்துள்ளன.

இந்தப் பழைமையான கல் தூண் அரசியல் அபிலாஷைகளுக்கான புதிய பிளவுக் கோடாக மாறப்போகின்றதா? அல்லது மதச்சார்பின்மை என்ற நுட்பமான உறுதிப்பாட்டைச் சோதிக்கும் களமாக அமையப்போகின்றதா?

நில எல்லைகள் மற்றும் மத நம்பிக்கைகள் தொடர்பான விவாதங்களுக்கு அப்பால் இன்னும் ஆழமான கேள்வியொன்று எழுகின்றது.

தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் எந்த அடிப்படையில் மறுப்புத் தெரிவிக்க முடியும்?

இந்துக்கள் மட்டுமே மதச்சார்பின்மையைப் பேண வேண்டுமா?

ஒரு எளிமையான கேள்வியைப் பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

தர்காவிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுவதில் முஸ்லிம் தர்கா நிர்வாகத்திற்கு என்ன பிரச்சினை இருக்கின்றது?

தர்காவின் வளாகத்திற்குள் இந்து பக்தர்கள் சமயச் சடங்குகளை நடத்துவதற்கு உரிமை கோரும் விடயம் பற்றி நாம் இங்கு பேசவில்லை.

மலையிலுள்ள நிலத்தின் உரிமை தொடர்பான விவகாரம் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்தே நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைய நீதிமன்றத் தீர்ப்பும் சர்ச்சைக்குரிய கல் தூண் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலேயே அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்து பக்தர்கள் எங்கு தமது புனித தீபத்தை ஏற்ற வேண்டும் அல்லது சமயச் சடங்குகளை நடத்த வேண்டும் என்பதில் தர்கா நிர்வாகம் ஆட்சேபனை தெரிவிப்பது அபத்தமானது.

அடுத்ததாக மதச்சார்பின்மை தொடர்பான வாதம் முன்வைக்கப்படுகின்றது.

ஒரு மதச் சமூகத்தினர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தமது சமயச் சடங்குகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது எவ்வாறு மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலாக அமையும்?

இன்னும் துல்லியமாகக் கூறுவதானால், ஒரு தர்காவின் நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது என்பதற்காக, எமது இந்து சகோதரர்கள் தாங்கள் விரும்பும் வகையில் மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை மறுப்பதுதான் மதச்சார்பின்மையா?

மதச்சார்பின்மை, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான முழுப் பொறுப்பும் இந்து சமூகத்தின் மீது மட்டுமே சுமத்தப்படுவதாகத் தோன்றுகின்றது. ஏனைய சமூகங்களிடமிருந்து அதே பொறுப்புணர்வு எதிர்பார்க்கப்படுவதில்லை.

முஸ்லிம் சமூகத்தினர் தமது வழிபாட்டு உரிமைகளுக்கான இடத்தையும் மத உணர்வுகளுக்கான மரியாதையையும் எவ்வளவு தீவிரமாகக் கோருகின்றார்கள் என்பதையும், அதே பெருந்தன்மையை எமது இந்து அயலவர்களிடம் வெளிப்படுத்துவதற்கு நாம் எவ்வளவு தயக்கம் காட்டுகின்றோம் என்பதையும் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

சகோதரத்துவம் என்பது ஒருவழிப் பாதையில் நிலைத்திருக்க முடியாது. மற்றவர்கள் எமக்கு இடமளிக்க வேண்டும் என எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டு, பதிலுக்கு நாம் எந்த அன்பையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.

சகவாழ்வு என்பது அவ்வாறு அமைவதில்லை. இத்தகைய அணுகுமுறை ஏமாற்றமளிப்பது மட்டுமன்றி, குறுகிய நோக்குடையதாகவும் இருக்கின்றது.

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தத் தவறிய வாய்ப்பு:

தர்காவைச் சேர்ந்தவர்கள் நட்புறவுடன் முன்வந்து, சற்றுத் தொலைவில் அமைந்துள்ள அந்தத் தீபத்தை ஏற்றுவதற்கு உதவியிருந்தால், இந்த நிகழ்வு எவ்வளவு வித்தியாசமாக அமைந்திருக்கும் என்று நான் சிந்திக்கின்றேன்.

அது சகோதரத்துவத்தின் உயிரோட்டமிக்க வெளிப்பாடாக அமைந்திருக்கும்.

நீண்டகால நீதிமன்றப் போராட்டங்களுக்குச் செல்லாமல், நல்லிணக்கம், கலந்துரையாடல் மற்றும் சிவில் சமூகத்திற்குள்ளேயே தீர்வொன்றைக் கண்டறிவதற்கான வாய்ப்பாகவும் அது அமைந்திருக்கலாம்.

ஆனால், அதற்குப் பதிலாக, ஏற்கெனவே நிலவுகின்ற சமூகப் பிளவுகளில் மேலும் ஒரு வேதனையான அத்தியாயமாக இவ்விவகாரம் மாறியுள்ளது.

இந்நிலைமையை மாற்றுவதற்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.

தமது சொந்தச் சமூகத்திற்குள்ளேயே விவேகத்துடன் செயற்படுமாறு கோரும் குரல்களுக்குத் தர்கா நிர்வாகத்தினர் செவிசாய்க்க வேண்டும். தமது எதிர்ப்பைக் கைவிட்டு, இந்தக் கசப்பான மோதலை அனைவரும் இணைந்து கொண்டாடும் ஒளித் திருவிழாவாக மாற்ற வேண்டும்.

அயலவரின் பிரார்த்தனையைத் தடுத்து நிறுத்துமாறு எந்த மதத்தின் உண்மையான கொள்கையும் வலியுறுத்துவதில்லை.

தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து வெளிப்படும் இந்த எதிர்ப்பு, மத மேலாதிக்கம் தொடர்பான ஆழமான, இறுக்கமான மனப்பான்மையைப் பிரதிபலிக்கின்றது.

ஹாகியா சோபியா போன்ற இடங்களை மீட்டெடுப்பதைக் கொண்டாடுகின்ற அதே மனப்பான்மை, சொந்த நாட்டில் ஏனைய மதத்தினருக்கு அதே உரிமையை வழங்க மறுக்கின்றது.

இத்தகைய மனப்பான்மையைப் பொறுத்தவரையில், மதச்சார்பின்மை என்பது அதிகாரத்தில் இல்லாதபோது சுதந்திரத்தைக் கோருவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வசதியாக மட்டுமே இருக்கின்றது. அந்தச் சுதந்திரத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கொள்கையாக அது கருதப்படுவதில்லை.

ஆனால், உண்மையான இறைநம்பிக்கை ஒருபோதும் மற்றொருவரின் பக்தியால் அச்சுறுத்தப்படுவதில்லை.

எமது சொந்த மதக் கொண்டாட்டங்களின் புனித மகிழ்ச்சியை எவ்வளவு ஆழமாக நேசிக்கின்றோமோ, அதே அளவுக்கு எமது அயலவர்களின் புனித மகிழ்ச்சியையும் மதிக்கக் கற்றுக்கொள்ளாதவரை, நாம் தேடும் ஒளி எமக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கும்.

கட்டுரையாளர்: அமானா பேகம் அன்சாரி, பத்தி எழுத்தாளர், படைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி செய்தி விவாதங்களில் பங்கேற்பவர். ‘India This Week by Amana and Khalid’ என்ற வாராந்த YouTube நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றார்.

தொகுப்பு: ரத்தன் பிரியா.

குறிப்பு: இது ஒரு கருத்துக் கட்டுரை. இதில் முன்வைக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான விமர்சனங்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். தர்கா நிர்வாகத்தின் நிலைப்பாட்டை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடாகக் கருத முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *